Thursday, November 19, 2015

உன் சோம்பேறித்தனம் – என் மூலதனம்


சூப்பர்மார்க்கெட், ஷாப்பிங் மால்களில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகப் பின்பற்றப்படும் சூட்சுமங்களில் சிலவற்றைக் கூறும் என்னுடைய பதிவு, அதிரை நிருபர் தளத்தில்.

//மால்களின் கட்டமைப்பு ஒவ்வொன்றுக்குப் பின்பும் வாடிக்கையாளர்களின் மனோதத்துவம் அலசி ஆராய்ந்த மெனக்கெடல்கள் பல நிறைந்துள்ளன என்பது வாடிக்கையாளர்களே அறியாத உண்மை.

மகளிர்க்கான, குழந்தைகளுக்கான பொருட்கள் நிறைந்த கடைகள் வரிசையாக ஒரே இடத்தில் அமைந்திருப்பதன் பிண்ணனி, ஒரு கடையில் வாங்க வேண்டாமென உறுதியுடன் கடந்துவிட்டாலும் அடுத்தடுத்த கடைகள் உங்கள் உறுதியைக் குலைத்துவிடுவதற்காகத்தான்.//

மேலும் படிக்க சுட்டுங்கள் இங்கு:



Tuesday, November 17, 2015

மாணவப்பருவம் கூறும் வாழ்க்கைப்பாடம்

மாணவர்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்துவிடலாம்.
முதல் வகையினர்:
பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மிகச்சரியான விடையை மட்டும் தெளிவாக, முக்கியமான பாயிண்டுகளை ஹைலைட் செய்து ஆசிரியரை இம்ப்ரஸ் செய்து மார்க் அள்ளிவிடுபவர்கள்.
இரண்டாம் வகையினர்:
கேட்கப்பட்ட வினாவிற்கான பதிலையும் எழுதி, அதைப் பற்றித் தனக்குத் தெரிந்த அதிகப்படியான விஷயங்களைையும் எழுதி இன்னும் அதிக மார்க் பெறுவார்கள்.
மூன்றாம் வகையினர்:
கேட்கப்பட்ட கேள்விக்கும் இவர்கள் எழுதும் பதிலுக்கும் சற்றும் சம்பந்தம் இருக்காது. ஆனால், முதல் இரண்டு வகையினர் அளிக்கும் பதிலைவிட அதிகப் பக்கங்களுக்கு எழுதியிருப்பார்கள். பேப்பர் திருத்தும் ஆசிரியர் மனநிலை பொறுத்து மதிப்பெண் கிடைக்கும். வாசிக்கவில்லையெனில் மார்க். வாசித்தால் அதோகதி தான்.

நீதி:
முதலிரண்டு வகையினர் வாழ்க்கையும் வாழ்க்கைத்துணையினரின் நிலையும் ஓரளவுக்கேனும் சீராக இருக்கும்.
ஆனால் இந்த மூன்றாம் வகையினரின் வாழ்க்கை.. அதுவும் வாழ்க்கைத்துணை பாடு ..... பெரும்பாடு தான். ஆழ்ந்த வாழ்த்துகள். :’(
(நேற்று ஹஸ் கூட பேசிட்டு இருக்கும்போது தோன்றியது.. அவ்வ்)

Friday, October 23, 2015

வாடகைத்தாய்- வரமா? சாபமா?

சமுதாயத்தில் இன்று பெருகிவரும் வாடகைத்தாய் முறை குறித்த என்னுடைய சிறு பதிவு, இஸ்லாமியப் பெண்மணி தளத்தில்.

//தன் கருமுட்டையினை மட்டும் வழங்கினால் தாய் அந்தஸ்தைப் பெறமுடியும் என்றால் பத்து மாதங்கள் சுகமான சுமையாகச் சுமந்து, சொல்லொணா துயருடனும் வலியுடனும் அக்குழந்தையைப் பெற்றெடுப்பவளுக்கு அதை விடவும் அதிக உரிமையும் தாயாகும் தகுதியும் உருவாகிறது. எனில், அக்குழந்தையின் தாய் யார்? கருத்தாய், கருவைச் சுமந்து, உயிரைப் பணயம் வைத்து மறு ஜென்மம் எடுத்து பெற்றெடுப்பவளா? கருமுட்டையையும்பணத்தைக் கொடுத்துப் பிள்ளையை வாங்கியவளா? //

மேலும் படிக்க:
http://www.islamiyapenmani.com/2015/10/blog-post_22.html

தமிழ்மண ஓட்டு லின்க்
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1386317

Thursday, October 22, 2015

அக்கறையை வென்ற வாக்கியம்

(சமீபத்தில் ஓர் உண்மைச்சம்பவம் படித்தேன். அதனைத் தழுவி எழுதப்பட்டது.)

ஒரு முஸ்லிமல்லாத பெண் என்னை நோக்கி வேகமாக வந்து “இந்த பர்தாவையும் முக்காடையும் ஏன் அணிகிறாய்?” என்றார். அவரது வார்த்தைகளில், இந்த பர்தா எனும் கட்டுப்பாடுகளில் இருந்து என்னைப் பாதுகாக்கும் அக்கறையும் என்னை அடிமைப்படுத்துவதாக அவர் நினைத்துக்கொண்டவர்கள் மீது கோபமும் எனக்குப் புரிந்தன.

என் மீதான அவரது அக்கறையும் யாரோ மீதான அவரது கோபமும் அவருக்குத் தேவையற்றது என்பதை நான் அறிவேன். அவர் கேட்டவுடன் இது என் மார்க்கம் எனக்குக் கட்டளையிட்டுள்ள ஒரு வழிமுறை; பாதுகாப்புக்கவசம்; என் இறைவனின் வார்த்தை; எனக்கான கண்ணியம் என்றெல்லாம் அவரிடம் கூறிவிட ஆசைதான். ஆனால் அதனை அவர் புரிந்துகொள்வார் என்று எனக்குத் தோன்றவில்லை.

அதனால் ஒரே வாக்கியத்தின் மூலம் இவ்வனைத்தையும் அவரிடம் தெரிவிக்கத் துடித்தேன். அந்த பதிலானது அவரிடம் இருந்து எந்த பதிலையும் எனக்குத் தரக்கூடாது. அந்த பதில் இவ்வனைத்தையும் அவருக்குப் புரியவைத்துவிட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வார்த்தையை அல்லாஹ் எனக்கு அச்சமயத்தில் கற்பித்தான்.

“இது எனக்குப் பிடித்திருக்கிறது”

அவ்வளவுதான்.. அவ்வளவுதான் என் பதிலாக இருந்தது. என் புன்னகையுடன் வெளிவந்த அந்த பதிலில் அவர் கட்டுண்டார். மறுவார்த்தை கூறாமல் வந்த வழியில் திரும்பிச்சென்றுவிட்டார். நிச்சயம் என் பதில் அவர் மனதை அசைத்திருக்கும். மேற்கூறிய அந்த அக்கறையும் கோபமும் தணிந்திருக்கும், இன்ஷா அல்லாஹ்.

Thursday, October 1, 2015

உண்மைப் படம்; குட்டிக் கற்பனைக்(?) கதை

அலுவலகம் வந்ததிலிலிருந்து பரபரப்பு அகிலாவிற்கு. பரபரப்பு என்பது அவளுக்குப் புதிதல்லதான். அன்று அகிலாவின் நிறுவனம், அந்த டெண்டரை ஏலத்தில்  எடுத்துவிட்டதில் வாழ்த்து மழை குவிந்துகொண்டிருந்தது, அகிலாவை மேலும் மேலும் பிசியாக்கியது. அவளுக்குப் புரியாமலில்லை.. இத்தனை வருடங்களில் இதே டிம்பர் துறையில் இளம் வயதிலேயே பழம் தின்று கொட்டை போட்டவளுக்கு, இதுவரை அவளுக்கு வந்த வாழ்த்துகளிலும் பூங்கொத்துகளிலும் எத்தனை உண்மை, எத்தனையெத்தனை வேஷம் என்பதை அவளது உதட்டுப் புன்னகையே அவளது செக்ரட்டரிக்கு விளக்கிக்காட்டியது. 

வாழ்த்துகள் வந்த வரிசையில் பத்தோடு பதினொன்றாக அந்த ஃபோன் காலும் வந்தது. 

“ஹலோ.. அகிலா ஹியர்”

“ஹலோ... அகிலா மேடம்... டெண்டர் கிடைத்ததில் மனமார்ந்த வாழ்த்துகள்”

“நன்றி... நீங்க... இந்த நம்பர் புதுசா இருக்கே”

“ஓ... என்னை உங்களுக்குத் தெரியாதுல்ல....”

வளவளவெனப் பேசுவது அகிலாவிற்கு சுத்தமாகப் பிடிக்காத ஒன்று. இந்த உரையாடலும் அந்த வகையறாவைச் சேர்ந்ததென தோன்றினாலும் தன்னை நன்கு தெரிந்த ஒருவர் என ஊர்ஜிதம் செய்தாள்.

பேசிக்கொண்டிருக்கும்போதே  தன் பெர்சனல் ஃபோனில் அவளது மகள் அனுப்பிய படம் அவளை அழைத்தது. சஞ்சனா, Mr.Bean போல் வேடமிட்ட ஒருவருடன் எடுத்த ஃபோட்டோ. “Haaaai.. mooooom.....It's cool naa?" என்று குதூகலமாக அனுப்பியதை ரசித்தவளிடம்,



”பட் எனக்கு உங்களை, உங்க மகளை.... ம்ம்ம் சஞ்சனா.. நைஸ் கேர்ள். Mr.Bean என்றால் ரொம்பப்பிடிக்குமோ.. எனிஹவ்.. அவளுடைய சமத்துவம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு”

தன் மகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பவன் இவனா? அதிர்ச்சி ஒரு நொடியில் உடல் முழுக்க வியர்க்க் வைத்தது; நாடித்துடிப்பை எகிற வைத்தது.

“ஹேய்.... ஹேய்... யார் நீ? எங்கே இருக்கே? என்ன வேணும் உனக்கு?” 

இவ்வளவு நேரமும் கொஞ்சிப் பேசிய குரல், அதிகபட்ச அதிகாரத்துடன்,

“Cancel the tender at any cost else your child will be lost”

இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Thursday, September 17, 2015

விதை!!!

அஸ்மா மளமளவென்று குக்கரில் சாம்பாருக்குக் காய் நறுக்கிப் போட்டுக்கொண்டிருந்தாள். இருக்கும் காய்களை எல்லாம் ஃப்ரிட்ஜில் இருந்து வைத்து நறுக்கி குக்கரை மூடும் சமயம் தான் தக்காளி போடாதது நினைவுக்கு வந்தது.... ”தக்காளி இல்லாம சாம்பார் வைக்கிறேன் பார் லூசு” என தன்னைத்தானே திட்டிக்கொண்டு மீண்டும் குக்கரைத் திறந்து தக்காளியை நறுக்கிப் போட்டு குக்கரை மூடினாள். சமையலில் ஒன்றும் தெரியாதவள் அல்ல அஸ்மா... பெரிய பெரிய விருந்திற்கெல்லாம் உறவினர்களும் பக்கத்துவீட்டினரும் அவளிடம் தான் ஆலோசனை பெறுவார்கள். இன்று அவள் மனம் முழுதும் பதட்டம்.. பக்கர் காக்காவைப் போய்ப் பார்க்க வேண்டிய அவசரம் அவளுக்கு. 

ஆபிம்மாக்கு வந்த வரன் விஷயமாக பக்கர் காக்கா தன்னை வந்து சந்திக்கச் சொல்லியிருந்தார். பத்து மணிக்கு டவுணுக்குப் போகணும்.. அதுக்குள்ள வர சொல்லியிருந்தாங்களே.... இன்னைக்குன்னு பார்த்து தண்ணீர் வர லேட்டாகணுமா? அண்டாவிலிருந்து டம்ளர் வரை எல்லாம் தண்ணீர் நிரப்பி, குளித்து கரண்ட் கட் ஆகறதுக்குள்ள சட்னி அரச்சு சமையலையும் முடித்து எட்டு மணிக்கெல்லாம் கிளம்பினாதான் சரியா வரும். பக்கர் காக்கா விசாரிச்சு சொன்னா எல்லாமே சரியா இருக்கும். வேறு யாரிடமும் விசாரிக்க வேண்டியதில்லை.

அதுக்குள்ள இவங்க வாப்பா வேற.. மலேசியால இருந்து 4 தடவை ஃபோன் பண்ணிட்டாங்க... இன்னும் கிளம்பலையா இன்னும் கிளம்பலையான்னு.... மூனு வருஷத்துக்கு முன்ன ஆசியாமாக்கு வரன் தேடினப்பவும் இப்படி தான் அங்க உக்காந்துகிட்டு நம்மள ஃபோன் போட்டு தினமும் டென்ஷனாக்கிட்டு இருந்தாங்க... ம்ம்.. சரி... அவங்களும் என்ன பண்ணுவாங்க....அவங்களையும் குறை சொல்ல முடியாது...

நாலு மாசம் முன்ன காலேஜ் முடிச்சாலும் பொறுப்பேயில்லாம தங்கச்சி கூட குறட்டை விடாத குறையா தூங்கிட்டு இருந்த ஆபிதாவை எழுப்பி “ஆபிம்மா... டிஃபன் எல்லாம் ரெடியா இருக்கு. ஆயிஷாம்மாவை எழுப்பு... அவளுக்கு டிஃபன் சாப்பிட கொடுத்து டப்பாவிலயும் வச்சு கொடுத்து விடு.. நான் பக்கர் காக்கா வீட்டுக்குப் போயிட்டு வரேன்... சொல்றது புரியுதா” என்ற தன் தாய்க்கு “ம்ம்.. புரியுதும்மா" என்று தூக்கக்கலக்கத்தில் கூறிய ஆபிதாவைப் பார்த்தால் கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. ’போகிற வீட்டில் எப்படி நடந்து கொள்வாளோ?? யா அல்லாஹ்.. என் பிள்ளைங்களுக்கு சந்தோஷமான வாழ்க்கையைக் கொடு...போகிற வீட்டில் என் பிள்ளைங்க நல்ல பெயர் எடுக்கணும். பெத்தவங்க பேரைக் காப்பாத்தணும்’. அன்றைக்கு மட்டும் இந்த துஆவை எத்தனையாவது முறை கேட்டாளோ அவளுக்கே தெரியாது.

பக்கர் காக்கா வீட்டுக்குப் போகும்போது மணி சரியாக ஒன்பது பத்து. ”அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா” எனக் கூறிக்கொண்டே நுழைந்தவளை, அப்பதான் டிஃபன் முடித்த பக்கர் காக்கா.... “வ அலைக்கும் சலாம். சாப்பிட வர்றியா அஸ்மா ” சம்பிரதாயமாக அல்லாமல் உரிமையுடன் கேட்டது புரிய, “இருக்கட்டும்... காக்கா..” என்று அதே உரிமையுடன் பதிலளித்தாள். ”நல்லா இருக்கியா அஸ்மா” என்ற ஃபரீதா மைனிக்கு ”அல்ஹம்துலில்லாஹ்... நல்லா இருக்கேன் மைனி” என்று புன்னகைத்தாள். 

ஆபிதாவின் பயோடேட்டாவை எடுத்துப் பார்த்த பக்கர் காக்கா, வந்த வரனின் பயோடேட்டாவை எடுத்து நீட்டிக்கொண்டே, “அஸ்மா! பையன் படிப்பு, வேலை எல்லாம் திருப்தியா இருக்குமா... நிறம் கொஞ்சம் கம்மிதான். ஆனாலும் ஆபிதாவுக்குப் பொருத்தமா இருக்கான்”. ஃபோட்டோவைப் பார்த்த அஸ்மாவுக்கு அப்படித்தான் தோன்றியது. அப்பாடா.. இந்த இடம் அமைஞ்சிட்டா நல்ல இருக்கும் எனத் தோன்றியது. அவள் கவலையெல்லாம் படிப்பு, வேலையை விடவும் வேறு விஷயம் தான் முக்கியமாகப் பட்டது. அந்த கேள்விக்கான விடையை எதிர்பார்த்தவளாக நிமிர்ந்தவளிடம், “நம்ம புதுவாசல் தெரு காஜா பாய்க்கு மச்சினன் தான் பையன். பையன் கூடப் பிறந்தவங்க 6 பேர். 2 அண்ணன், 2 அக்கா, 2 தம்பி. பையனோட வாப்பா கொஞ்சம் கண்டிப்பானவர். 1,2 தடவை பேசியிருக்கேன். 1 அக்கா பெங்களூருவில் இருக்கு. ஒரு அக்கா மாப்பிள்ளை பஹ்ரைன்ல இருக்கிறாராம். அந்த அக்கா, அண்ணன் தம்பி எல்லாரும் ஒரே வீட்ல தான் இருக்காங்க..பையன் உம்மாக்குக் கொஞ்சம் லேஏஏசா காது கேட்காது... பையனைப் பற்றியோ குடும்பத்தைப் பற்றியோ வேற எந்த பிரச்சினையும் நான் விசாரிச்ச வரையில் இல்ல” எனும்போதே அஸ்மாவுக்கு முகம் தொங்கிவிட்டது. 

அவ்ளோ பெரிய குடும்பமா? இரண்டு மைனிமார்களின் தொல்லை தாங்காமல் கல்யாணமாகி மூன்றே மாதத்தில் வாப்பா வீட்டுக்கு அழுது சிவந்த கண்களுடன் வந்த சாயிதா மக ஆரிஃபா தான் நினைவு வந்தாள். பகீரென்றது. 

“காதர் பாய்கிட்ட பேசிட்டு சொல்லு... விருப்பமில்லன்னா சொல்லு... மேலத்தெரு ஹசன் பாய் அவர் தங்கச்சி மகளுக்கு சொல்லிடறேன். நேத்தே ஃபோன் பண்ணிக்கேட்டார் இடம் எதுவும் வந்துச்சான்னு.. சொல்றேன்னு சொல்லியிருக்கேன்.”



“சரி காக்கா.. நான் அவர்கிட்ட பேசிட்டு விபரம் சொல்றேன். எனக்கு விருப்பமா தான் இருக்கு. அவர்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்கிறேன். “ என்று புக்கிங் போட்டு விட்டு வந்தாள். யோசித்து விட்டு பிடிக்கவில்லையெனில் பிறகு சமாளித்துவிடலாம் என்று ஒரு எண்ணம். புதுவாசல் தெரு காஜா பாயின் வாப்பா மௌத்துக்கு காஜா பாயின் மச்சினன் தான், “மச்சான், மச்சான்” என்று அவருக்கு உறுதுணையாக எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்த்துக் கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது. பேச்சு, நடை எல்லாம் நல்ல பொறுப்புள்ள பையனாகவே மனதில் பதிந்திருந்தான். 

வீட்டுக்குப் போகும் வழியெல்லாம் தான் திருமணமாகி வந்தபோது தன் கணவர் வீட்டில் நிகழ்ந்தவை எல்லாம் தோன்றின. கணவருக்கும் அவரது தம்பிக்கும் ஒரே நாளில் திருமணம் நிகழ்ந்தது. கொழுந்தன் தன் மனைவியுடன் திருமணமான இரண்டு மாதத்தில் மனைவியுடன் கோயம்புத்தூரில் செட்டில் ஆகிவிட்டார். மற்ற தம்பி, தங்கைகள் எல்லாம் பள்ளிக்கூடம் தாண்டாத பொடிசுகளாக இருந்தனர். அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் தன் தாய்மையையும் தள்ளிப் போட்டதாகவே தோன்றியது. 

ஆறு வருடங்களாகத் தாய்மை எட்டவில்லை என்று கவலைப் படுவதற்குக் கூட நேரமில்லாதவாறு வீட்டில் எப்போதும் வேலை வேலை... மாமியார் குணத்தில் மோசமில்லை என்றாலும் அவரிடம் வீட்டு வேலைகளில் ஒத்தாசை கேட்க முடியாது. என்ன வேலை யார் சொன்னாலும் மறுபேச்சு பேசாமல் தலையாட்டி செய்து முடிப்பாள் அஸ்மா. உதவிக்கு ஆள் வைத்துக் கொள்ள வசதியின்மை, தன்னை சம்பளமில்லா வேலைக்காரியாக மாற்றிவிட்டதோ என்ற ஆற்றாமை கோபத்தைத் தூண்டும் சமயம், “அஸ்மா! டவுனுக்குப் போன இடத்தில் உனக்கு ஒரு சேலை வாங்கி வந்தேன்.. நல்லாயிருக்கா பாரு..” என கணவர் சொல்லும் பொழுதும் ”அஸ்மா.. சாப்பிட்டியா... சாப்பிடாம ஏன் இன்னும் நிக்கிற? சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் தலையைக் கீழே வை (படு)” என்ற மாமியாரின் அதட்டலான கரிசனமும் வடித்த வேர்வைத்துளிகளைப் பனித்துளிகளாக மாற்றி உடலையும் உள்ளத்தையும் குளிர்விக்கச்செய்யும். அஸ்மாவைப் போலவே அவள் மீதும் அனைவருக்கும் பாசம் இருந்தது. ஆனாலும் வேலை வேலை என்று ஓடாகத் தேய்ந்து உடல்நலம் குறைந்தது. அல்லும் பகலும் தான் பட்ட கஷ்டங்கள் தன் பிள்ளைகள் ஒரு போதும் பட்டுவிடக் கூடாது என்று அக்கணமே முடிவெடுத்தாள். இறையருளால் நாத்தனார், கொழுந்தன்மார் திருமணங்கள் நிகழ்ந்து அவரவர் குடும்பத்துடன் தனியே சென்றுவிடவும் மாமியார் மௌத்தாகவும் காலம் மூத்தமகள் ஆசியாம்மாவின் திருமணத்திற்கு நாள் குறித்திருந்தது. 

ஆசியாவின் திருமணத்திற்குப் பிறகு சற்று ஆசுவாசமான வாழ்க்கை அஸ்மாவுக்குக் கையில் கிடைத்தது. ஓட்டம் போட்ட உடம்பு ஓய்வெடுக்க விரும்புமா? பக்கத்துவீட்டு மைமூன் குழந்தைப்பேற்றிற்காக டாக்டரிடம் நடையாய் நடந்தது முதல் பக்கத்துதெரு மரியம்பாத்து வாப்மா கீழே விழுந்தபோது டாக்டரிடம் அழைத்துச்சென்றது வரை அஸ்மா தான் எல்லாருக்கும். இதோ இப்பொழுது ஆபிதாவின் வரன் தேடல், ஒவ்வொரு நொடியும் இறையோனிடம் உதவி தேடலைத் தீவிரப்படுத்தியிருந்தது.

’அட.. தஸ்னீம் வந்திருக்காளா?’ வீட்டு வாசலில் கிடந்த தஸ்னீமின் செருப்பு அஸ்மாவை புன்னகைக்க வைத்த சமயம், உள்ளே ஆபிதாவின் பேச்சு உறுதியான குரலில் தொடர்ந்து கொண்டிருந்தது. 

“ஏன் சாச்சி... பெரிய்ய குடும்பம்னா அப்படி இருக்கும் இப்படி இருக்கும்னே எப்பவும் எல்லாரும் பயங்காட்டிட்டே இருக்கீங்க? எங்க உம்மா, இங்க கல்யாணம் பண்ணிட்டு இப்போ நல்லாதானே இருக்காங்க? உங்களுக்குத் தெரியாதா சாச்சி? விடிந்ததில் இருந்து ஜாமம் வரை உம்மா அடுப்படி விட்டு நகர முடியுமா? சின்னாப்பா, மாமிக்குப் பாடம் சொல்லிக்கொடுத்ததில் இருந்து எங்களுக்கும் எந்த குறையும் இல்லாம வளர்த்து ஆளாக்கி, அதையே தன் வாழ்க்கையாக மாற்றி வாழ்ந்தவங்க மக நான்... அடுப்படி வேலைக்கும் அனுசரிச்சு போறதுக்கும் அசந்துடுவேனா (தயங்கிடுவேனா) நான்?

உம்மா நினைச்சிருந்தா, வாப்பாகிட்ட அழுது பிடிச்சு தனிக்குடித்தனம் போக எவ்ளோ நேரம் ஆகியிருக்கும்? உம்மா ஏன் அப்படி போகல? தன் மாமியார், நாத்தனார், கொழுந்தன் என எல்லாருக்கும் உதவ யாருமில்லன்னு சூழ்நிலை புரிந்து அனுசரிச்சு வாழநினச்சதால் தானே? தான் எல்லாருடனும் நல்லவிதமா பழகினா, அவங்க நல்ல மனசு கேட்கும் துஆ தனக்கும் தன் சந்ததிக்கும் கிடைக்கும்ன்ற நோக்கம் தானே? நான் போகிற இடம் சின்ன குடும்பமோ பெரிய குடும்பமோ, நல்லவங்களோ இல்லையோ... என் எண்ணம் எல்லாம் அவங்க எல்லார்கிட்டயும் நல்ல பெயர் எடுக்கணும். எங்க உம்மா, எல்லார் அன்பையும் சம்பாதிச்ச மாதிரி, நானும் அங்க எல்லாருடைய பாசத்திலும் பங்கெடுக்கணும். தவறி கூட யாரும் எனக்கு விரோதம் வளர்த்துக்காத விதமா நான் நடந்து, எங்க உம்மா, வாப்பா பெயரைக் காப்பாத்துவேன். உம்மா இவ்ளோ நாள் பட்ட கஷ்டத்துக்கு அவங்களுக்கு இதுதான் நான் கொடுக்கப்போகும் பரிசு”


தானறியாமல் தான் விதைத்த விதை வேறூன்றியிருப்பதையும் அது விரைவில் விருட்சமாக வளர்ந்து நிழல் கொடுக்கவிருப்பதையும் அறிந்தபோது அஸ்மா, தன் பிள்ளைகளுக்காகக் கேட்ட துஆவை இறையோன் ஏற்கனவே நிறைவேற்றியிருந்ததை உணர்ந்தாள்.


காக்கா:அண்ணன்
மைனி:அண்ணன் மனைவி
சாச்சி:சித்தி

படம்: இணையம்

Monday, July 13, 2015

என் வால்; என் உரிமை (My Wall; My Rights) - சரியா?

இன்று முகநூலில் சிலர் ஒரு தத்துவத்தைக் (?) கடைபிடிக்கின்றனர். அதாவது என் வால்’ என் உரிமை. என் முகநூல் பக்கத்தில் எதை வேண்டுமானாலும் எழுதுவேன்; பகிர்வேன். இது தவறு என்று யாரும் சொல்லக்கூடாது என்பதன் சுருக்கமே என் வால், என் உரிமை.

இத்தத்துவம் யாருக்குப் பொருந்துதோ இல்லையோ முஸ்லிம்களுக்குச் சற்றும் பொருந்தாது என்பது என் கருத்து.

உலகில் எந்த மூலைக்குச் சென்றாலும் எவ்வளவு வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்தாலும் நம் சொந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தவுடன் போடும் தூக்கம் தரும் நிம்மதி நமக்கு எந்த மூலையிலும் கிடைக்காது. அதுவரை சென்ற இடங்களில் சில கட்டுப்பாடுகள் நிச்சயம் நம் கைகளைச் சில விஷயங்களிலேனும் கட்டிப்போட்டிருக்கும். அவையனைத்தையும் “சரி… எல்லாம் நம் வீட்டிற்குச் செல்லும்வரை சில நாட்களுக்காகப் பொறுத்துக்கொள்வோம்” என்ற மனோபாவத்துடனேயே கழிப்போம்.

இந்த அளவில் சுதந்திரத்துடன் வாழும் நம் சொந்த வீட்டிற்கே இஸ்லாம் சில நிபந்தனைகளுடன் வாழுமாறு போதிக்கிறது.
(ஹதீஸ்)
75. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தமது அண்டைவீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம்.அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்.அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பியவர் ஒன்று நல்லதை பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 


ஆம். இஸ்லாத்தில் அண்டை வீட்டினருக்குத் தொல்லை தருவது மிகவும் வெறுக்கத்தக்க விஷயமாகும். அண்டை வீட்டினர் என்பவர்கள் நாமாக விரும்பி அமைத்துக்கொள்வதில்லை. தானாக அமைவது. அவர்களது குணநலன்கள், பழக்கவழக்கங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் இந்த ஹதீஸ் தான். இந்த ஹதீஸைத் தான் நாம் பின்பற்ற வேண்டும். தம் வீட்டிற்கருகே வீடுகள் கொண்டவர்கள் ஒவ்வொருவரும் இதனையே பின்பற்ற வேண்டும். இதுவே அவருக்கு நல்லது.
முகநூலில் ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் நமக்கு அனுப்பப்பட்டாலும் நாம் தேர்ந்தெடுத்த பின்பே நண்பர்களாகிறார்கள் ஆக, அண்டை வீட்டினருக்கே இந்த நிபந்தனை என்றால், நாமாகத் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள், மனவருத்தம் கொள்ளும் அல்லது முகஞ்சுழிக்கும் வகையில் உள்ள பதிவுகளைப் பதிவது ஒரு போதும் நியாயமாகாது. 

ஒவ்வொரு கருத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணத்தில் உள்ள பார்வைகளை ஆணித்தரமாக, நேர்மையான முறையில் பகிர்வதில் தவறில்லை. ஆரோக்கியமான கோணத்தில் சிந்தனையைத் தூண்டும் வித்தியாசமான கருத்துகளுக்கு வரும் எதிர்ப்பை இங்கு கூறவில்லை. ஆனால், அருவருப்பான, சிந்தனையைக் குலைக்கும் கருத்துகளை மீண்டும் மீண்டும் மீண்டும் எதிர்ப்புகளையும் மீறி தற்பெருமைக்காகவும் புகழுக்காகவும் பகிரும்போதுதான் அவ்விடத்தில் தொல்லை உருவாகிறது.

உங்கள் தொல்லை தாளாமல் உங்கள் அண்டை வீட்டினர் தம் வீட்டைக் காலி செய்வதற்கும் உங்கள் பதிவுகளின் நாகரீகக் குறைபாட்டால் உங்களை அன்ஃப்ரண்ட் செய்வதற்கும் அதிக வித்தியாசமில்லை.

என் வால் என் உரிமை என்பவர்கள், பிறர் வாலில் இருக்கும் குறைகளைக் கண்களை மூடிக்கொண்டு கடந்துவிடுவதைத் தவிர வேறு வழியில்லை. 

Wednesday, July 1, 2015

இப்பயமின்றி எப்பெண்ணுமில்லை!

காலையில் எழுந்து
குளிக்கச் செல்ல பயம் -
குளியறையில் கேமரா இருக்குமோ?!

வாசலில் தண்ணீர் தெளித்து
கோலமிட பயம் - 
ஈவ்டீசர்கள் நிற்பரோ?!

பள்ளி/கல்லூரிக்குச்
செல்ல பயம் -
உயிர்,மானத்துடன் வீடு திரும்புவேனா?

கிடைத்த வேலைக்குச் 
செல்ல பயம் - 
உடன் பணிபுரிபவரின்
சில்மிஷங்கள் இருக்குமோ?

குற்றவாளிகள் வீதிஉலாவிலும்
குற்றுயிர்ப் பெண்களோ
தானும் செத்து
உங்கள் பெண்களையும்
ஒடுக்கியும் புதைத்தும்
விட்டுச்செல்வதை
உணர்ந்தீர்களா ஆண்களே?

எங்கோ ஒரு சரிகா
எங்கோ ஒரு வித்தியா
எங்கோ ஓர் இசைப்ப்ரியா
எங்கோ ஒரு நிர்பயா
எங்கோ ஓர் அருணா
என்பதல்ல - 
எங்கே நானும் அருணா ஆகிவிடுவேனா
இங்கே நானும் சரிகா ஆகிவிடுவேனா
என்று ஒவ்வொரு வீட்டிலும்
ஒவ்வொரு பெண்ணும்
தெனாலி ஆகிவிட்டிருப்பது
யாருக்கேனும் புரிந்ததா?

உங்கள் தாயின்
உங்கள் சகோதரியின்
உங்கள் மனைவி மகள்களின்
தூக்கம் தொலைக்கும் துயர்
கண்களில் வழியும் அந்த பீதி
தொண்டைக்குழியை அடைக்கும் உருண்டை
வயிற்றில் கரைக்கும் கிலி
உங்கள் உள்ளத்திற்குள்
ஊடுருவியதுண்டா என்றேனும்?

அச்சம் களைந்து செயலில் நுழை
பலியாகும் பெண்ணிடம்
யாரிடமும் பேசாதே!
எங்கும் போகாதே!
எதையும் கற்காதே!
படி தாண்டா பத்தினியாயிரு!
என மூளையை மிஞ்சும் அறிவுரைகள்!

குளியலறைக்கும் செல்லாதே
என்றாலும் வியப்பில்லை;
இவர்கள் கூற்றைக் காதில்
போட நாம் முட்டாளுமில்லை

பலியிடும் ஆணுக்கோ
அடுத்த வேட்டைக்கான
அனுபவ அறிவு!

உங்கள் பெண்களின்
அச்சம் தீர்க்க நேரமில்லை - வீண்
அரட்டைகளிலும்
அடக்குமுறைகளிலும்
அறிவுரைகளிலும்
வாழ்க்கையைக் கழிக்கும்
உங்களது சொந்தங்களாய்
வாழ வெட்கின்றோம்.

எங்கள் வாழ்க்கைக்கான விளக்கை
நாங்களே சுமந்துகொண்டு......!!!

Thursday, June 11, 2015

எங்க வீட்டுக்கதை!

வீடு மாறும் வேலைகள் துவங்கியதில் இண்டர்நெட் கட் பண்ணியாச்சு.... எஃப்பி, வாட்சப், ப்ளாக் என்று வெளி உலகமே மறந்து வீடு மாறிய பிறகு ஐந்து நாட்கள் கழிந்து நெட் கனக்‌ஷன் கிடைத்தது. 

வாட்சப் திறந்தால் ஸ்ட்ரக் ஆகும் அளவிற்கு மெசேஜ் நிரம்பி வழிகிறது. 3 முறை திறந்தும் எந்த மெசேஜும் பார்க்க முடியவில்லை. ஹேங்க் ஆனதால், பொறுமை தொலைந்து ப்ளாக், எஃப்பி ஓபன் செய்தாச்சு. இனி மொக்கைகள் தொடரும். ஹி ஹி..

பல வாரங்கள் தேடி அலைந்து, பல வீடுகள் தேர்ந்தெடுத்து முடிவு செய்து, ஒரு வீட்டிற்கு அட்வான்ஸ் கூட கொடுத்த பின்பு கேன்சல் ஆனது. பல சமயங்களில் இருவரும் சேர்ந்தே வீடு தேடினோம். ஆனால் அந்த நாள் என் கணவர் மட்டும் வீடு பார்க்க சென்றார். மாலை பல வீடுகள் பார்த்து, ஒன்றுமே சரிவராமல், இரவு 12 மணிக்கு இந்த வீட்டைப் பார்த்து ஐந்தே நிமிடங்களில் முடிவு செய்து அட்வான்ஸ் கொடுத்தார் என் கணவர். அட்வான்ஸ் கொடுத்த பின் தான் எனக்கு வாட்சப்பில் வீட்டின் ஃபோட்டோக்கள் அனுப்பி வைத்தார். இரவு ஒரு மணிக்கு அந்த வீட்டில் அது சரியில்லை, இது சரியில்லை என்று சொன்னால் ரணகளம் ஆகிவிடும் என்பதால் வேறு வழியில்லாமல் நல்லாயிருக்கு என்று சொல்லியாச்சு. நான் வைத்த கோரிக்கைகள், பெரிய கிச்சன், கடைகள், பள்ளிக்கூடங்களின் அருகாமை என அனைத்தும் இந்த வீட்டில் இருப்பது உண்மை. எனினும் நான் உடன் சென்றிருந்தால் இந்த வீட்டை முடிவு செய்திருப்பேனா என்பது சந்தேகமே.  

பல வீடுகள் பார்த்து முடிவு செய்தும் அவையெல்லாம் தவறி, இறுதி 5 நிமிடங்களில் இந்த வீடு முடிவானதில் இறைவன் ஏதோ ஒரு பெரும் நன்மை வைத்திருக்கிறான் அல்லது முடிவு செய்துவிட்ட அந்த வீடுகளில் இருந்த ஏதோ ஒரு பெரும் ஆபத்தில் இருந்து பாதுகாத்து விட்டதாகப் பலத்த நம்பிக்கை இப்பொழுது எப்படி என்னுள் ஏற்பட்டது என்று என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. 

இதே ஏரியாவில் வீடு பார்ப்போம்; வேறு ஏரியாவில் வேண்டாம் என்று தினமும் அழுத பெரியத்துரை, அந்த வீட்டு வாசலில் இருந்த பூனைக்குட்டிகளிடம் தினமும் கதை பேசிய சின்னத்துரை வரை வீடு பிடித்துவிட்டது. 

பாதுகாப்பதிலும் உதவி புரிவதிலும் அவனே சிறந்தவன். அல்ஹம்துலில்லாஹ். 

வீடு மாறிய டென்ஷன்கள் பல இருந்தும் சமாளிக்க முடியாத கவலை என்னவென்றால் மகன், பழைய ஏரியா நண்பர்களை அதிகம் மிஸ் செய்வது. பார்ட்டி, அன்பளிப்புகள் என்று பிரியாவிடை கொடுத்து அனுப்பிவைத்துள்ளனர் அவனது நண்பர்கள் :). இவன் தான் வரைந்த ஓவியங்களைப் பரிசாகக் கொடுத்துவிட்டான்.

புதிய வீட்டிலிருந்து முதல் நாள் இந்த ஏரியாவிற்கான பஸ்ஸில் பள்ளிக்குச் சென்றவன், மதியம் வீட்டிற்கு வந்ததும், தொண்டைக்குழி அடைக்க, ஒரு கதை சொன்னான். கதை முடித்ததும் தான் புரிந்தது. அவன், பழைய பஸ் நண்பர்களை மிஸ் செய்வது. ஸ்ஸப்பா.... அவனுக்கு ஆறுதல் சொல்லியே நேரம் போகிறது.. முடீல...

(அப்ப எங்க பக்கத்து வீட்டு தோழிகளை நான் மிஸ் பண்ணலையான்னு தானே நினைக்கிறீங்க?? பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் அரபிகள்... சோ, அவர்களைப் பார்த்தால் சிரித்துக் கொள்வதோடு சரி... :) )



ஆனாலும், ஒரு கவலை மனசை ஆட்டிப்படைக்குது... ரமழான் வந்தால், ஹரீஸ், பிரியாணி, சமோசா, டம்ப்ளிங் என்று எண்ணற்ற உணவுவகைகள் தினமும் வந்து கொண்டேயிருக்கும். பக்கத்துப் பள்ளிவாசலில் பிரியாணி தினமும் வழங்குவதுண்டு. சில சமயங்களில் அதுவும் வாங்குவதுண்டு. அவற்றை எல்லாம் இந்த ரமழானில் நிச்சயம் மிஸ் பண்ணுவேன். பின்னே... அதை வைத்தே நோன்பு காலத்தில் அதிகம் சமைக்காமல் சமாளித்து வந்தேனே.. ஹ்ம்ம்ம்... :( 

ஆமா.. புது வீடு வந்ததும் பால் தான் காய்ச்சணுமோ? நான் இங்கு அடுப்பு பற்ற வைத்த நேரம், டின்னர் சமயமாதலால், முதலில் சாதம் தான் வைத்தேன்.. தெய்வக்குத்தம் இல்லையே??? :O

Thursday, June 4, 2015

God is Yummy...?????

எங்க வீட்டு சின்னத்துரை ஸ்கூல் போக ஆரம்பிச்சாச்சு... வீட்டில் இருக்கும்வரை எழுத்துகளும் எண்களும் எண்ணிக்கையும் மட்டுமே சொல்லிக்கொடுத்தேன். ரைம்ஸ் நெட்டில் பார்ப்பதோடு சரி. அவன் விரும்பும் நேரங்களில் தானாகப் படித்துக்கொண்டிருப்பான். ஸ்கூல் சேர்ந்த புதிதில் சில புதிய ரைம்ஸ் சொல்லிக்கொடுத்ததில் அவனுக்கு அதிக சந்தோஷம்... எப்பொழுதும் வாயில் ஏதேனும் ஒரு ரைம்ஸ்... நானே சில நேரங்களில் ரைம்ஸ் படிக்கும் அளவுக்கு... ... அதனைக் கண்ட பெரியத்துரை.... என்னை பேபி என்று கிண்டல் அடிக்கும் அளவிற்கு...அவ்வ்வ்...

ஒரு சமயம் ப்ளா ப்ளா ப்ளேக்‌ஷீப் என்று படிக்க... சிரிப்புடன் அது ப்ளா ப்ளா இல்லை.. பா பா என்றேன்... இல்லை .. அது ப்ளா ப்ளாதான் என்றான்.. முடீல. ஒகே என்று கூறி அத்தோடு விட்டாச்சு...

திடீரென்று ஒரு நாள் புது ரைம்ஸ் படித்தான். காட் இஸ் யம்மி.. காட் இஸ் யம்மி...என்று ஒரு ரைம்ஸ் படிக்க... அதிர்ந்து போய், அவனுடைய புக்கைத் திறந்தால்... அது காட் இஸ் நியர் மி.. காட் இஸ் நியர் மி...என்றிருந்தது... கிர்ர்ர்... இதையும் மாற்ற முடியாமல் தோற்றேன்... என்ன கொடுமை இது.. காட் இஸ் யம்மி... உண்மையிலேயே வீட்டில் நடக்கும் இந்த கொடுமையைக் கூட தட்டிக்கேட்க முடியவில்லை.... நாமெல்லாம் பர்மாஆஆவில் நடக்கும் கொடுமைகளுக்கெதிராகக் குரல் கொடுத்து... கஷ்டம் என்று தோன்றியது.



ஒரு நாள் அவனிடம் “நான் சொன்ன வேலையை நீ செய்யவில்லை.. நான் உன்னுடன் பேச மாட்டேன்” என்றேன்.

அவனது வாப்பாவும் “ம்மா.. இனி உன்னுடன் பேச மாட்டாங்க.. இனிமேல் நான் தான் உன் ஃப்ரெண்ட்” என்றார்.

சிறிது நேரம் மவுனம் காத்துவிட்டு, “ம்மா.. தண்ணீர் தா... தாகமா இருக்கு” என்றான்.

கொஞ்சமும் யோசிக்காமல், தண்ணீர் கொடுத்தேன். வாங்கிக் குடிக்கும் முன், “வாப்பா... ம்மா நான் சொன்னதைக் கேட்டு தண்ணி தந்துட்டாங்க.. ம்மா தான் என் ஃப்ரெண்ட்.. நீங்க இல்லை” என்றான்.

அம்மா... பசிக்குது என்றவுடன் அம்மாவுடன் போட்ட சண்டை முடிந்துவிடும் என்று ஃபேஸ்புக்கில் எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. மாஷா அல்லாஹ்... பிள்ளைகள் எப்படியெல்லாம் யோசித்து காய் நகர்த்துகிறார்கள். பாசத்தில் தோற்பது என்பது இதுதானோ?

ஒரு நாள் ஸ்கூலில் இருந்து வந்ததும்... “ம்மா.. இன்னைக்கு ஸ்கூலில் ஐஸ்கிரீம் பார்த்தேன்” என்றான்.

போச்சு.. ஸ்கூலில் ஐஸ்கிரீம் எல்லாம் விற்க ஆரம்பித்துவிட்டார்களா.. இனி ஐஸ்கிரீம் வாங்க காசு கேட்பானோ என்று படபடவென்று என்னவெல்லாமோ யோசனைகள்...

எங்க பார்த்தே... க்ளாசிலா.. க்ளாசிற்கு வெளியேவா..

வெளியே...

ஐஸ்கிரீம் கடையிலா... (காண்டீன் என்பதற்குப் பதில்.. கடையா என்று கேட்டேன்)

கடை எல்லாம் இல்லை...

அப்போ ஸ்கூலுக்கு வெளியே பார்த்தாயா..

இல்லை...

அப்போ ஃப்ரெண்ட் சாப்பிட்டுக்கொண்டிருந்தானா...

ஒட்டியிருப்பதை எல்லாம் சாப்பிட முடியாது...

அவ்வ்வ்... ஐஸ்கிரீம் படத்தை ஒட்டியிருப்பதைப் பார்த்தியா...

ஆமா...

(கிர்ர்ர்ர்....இதை முதல்லயே சொல்லியிருக்கலாமேடா.... ஷப்பா....முடீல...)

Tuesday, April 21, 2015

புகைப்பவர்களே.. இதோ உங்கள் முன்மாதிரி!

2009ல் முகேஷ் ஹரனே என்ற 24 வயதே ஆன இளைஞர் புகையிலை உபயோகத்தால் வாயில் புற்றுநோய் உருவாகி அவதிப்பட்டார். சிறு வயதிலேயே குடும்பத்திற்காக உழைப்பதற்காக நகரத்தினுள் வந்தவருக்குக் குட்கா சுவைக்கும் பழக்கம் ஏற்பட்டது. குட்கா முகேஷ் என்று அதிகம் அறியப்பட்டார். அதிகமில்லை. ஒரே ஒரு வருடப் புகைப்பழக்கம் வாய்ப்புற்றுநோயை அளித்தது. அறிந்தோ அறியாமலோ தான் செய்த ஒரு செயலால் தன் வாழ்வை அழித்த புற்றுநோய், தன் எதிரிக்குக்கூட நிகழக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், அறுவை சிகிச்சைக்குச் சிறிது நேரத்திற்கு முன் உலக மக்கள் நலனுக்காக, தொண்டையில் பொருத்தப்பட்ட உணவுக்குழாயுடன் புகையிலையால் தான் சந்தித்த இன்னல்களைத் திக்கித்திணறிக் கூறி முடித்தார். அறுவைசிகிச்சைக்குப் பிறகு அவரது குரலைத் தொடர்ந்து உயிரும் பறிபோனது.


இந்த விழிப்புணர்வு வீடியோவை இந்தியாவின் எதிர்காலம் (இளைஞர்கள்) அதிகம் சூழும் சினிமா தியேட்டர்களில் ஒளிபரப்பப்பட்டது. இன, மொழி பேதமின்றி மக்களின் கண்ணீர் சுரப்பிகளைத் தூண்டிவிடும் முகேஷின் அவ்வார்த்தைகளுக்கு அவர்கள் அளித்த பதில் என்ன தெரியுமா? விசிலடித்தது. முகேஷிற்கு இத்தகையவர்கள் மீதிருந்த அக்கறைக்கு, அவர்கள் அளித்த மதிப்பு இதுதான். ஓர் உயிர் மீது இவர்களுக்கு இருக்கும் கரிசனம் இதுதான். இவர்களிடம் மதிப்பையும் கரிசனத்தையும் எதிர்பார்த்தது முகேஷின் தவறுதான். 

தம் குடும்பத்தின் ஒரே வருமானத்தையும் இழந்த முகேஷ் குடும்பத்தினர், இந்திய சுகாதாரத்துறை தயாரித்த இந்த வீடியோவை உலகம் முழுவதும் ஒளிபரப்புவதற்கு எந்தப் பிரதிபலனும் பெற்றுக்கொள்ளாதது, அவரது குடும்பத்தினரின் பெருந்தன்மையையும் சமூக அக்கறையையும் பிரதிபலிக்கிறது.

புகையிலைப் பழக்கத்தால் வருடத்தில் மில்லியன் கணக்கில் இந்திய மக்கள் உயிரிழக்கின்றனர். அதிலும் 90% மரணங்கள் (புகை வராத) குட்கா, பான் போன்றவற்றால் ஏற்படுகின்றன. சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியர்கள் அதிகளவில் புகையிலையால் விளையும் மரணம் எய்துகின்றனர். 

புகையிலை கிடைக்கும் வடிவங்களில் சில

முகேஷைத் தொடர்ந்து, 22 வயதில் அதே புகையிலையின் அகோர வாயினுள் அகப்பட்டார் சுனிதா தோமார். 22 வயதில் புகையிலை புற்றுநோயை வரவழைக்குமென்று அவருக்கிருந்த அறியாமை, இந்திய அரசு மக்களுக்கு அளிக்கும் விழிப்புணர்வின் அளவைத் தான் எடுத்துக்காட்டுகிறது. நான்கு வருடங்களுக்குப் பிறகு வாய்ப் புற்றுநோயாளி ஆனார். தன் புகையிலைப் பழக்கம் இப்படி பூதாகாரமாகி நின்றதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். தன் ஒரு பக்கக் கன்னமும் தாடையும் நீக்கப்படவேண்டிய நிலைக்குக் காரணம், புகையிலைப் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை, மனிதக்கண்களுக்குப் புலப்படாத நிலையில் இருப்பது தான் என்று குரல் கொடுத்தார். 

அபாயகரமான வேதியியல் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகள் அளிக்கப்பட்டார். இரண்டே ரூபாயில் கிடைக்கும் புகையிலையின் பாதிப்புகள் கோடி ரூபாய் அளவில் இருப்பதைக் கண்டு வெதும்பினார்.

தான் அனுபவித்த வேதனைகள் இனியும் யாருக்கும் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற உயர் நோக்கில், தன் முகத்தையே இந்தியாவில் புகையிலைக்கான முகமாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார் சுனிதா. புகையிலைக்குப் பிறகான இவரது வாழ்க்கையைப் படமாக்கி இந்திய அரசு வெளியிட்டது. பார்ப்பதற்குப் பகீரென இருந்த இவரது முகம், புகையிலை உபயோகப்படுத்தும் ஒருவர் உள்ளதையேனும் அசைத்தாலே சுனிதா வெற்றியடைந்துவிடுவார். 

கடுமையான போராட்டங்களின் பிறகு, கடந்த ஏப்ரல் 1, 2015 அன்று உயிர் நீத்தார். அத்தனை உடல், மன வேதனைகளின் இடையிலும் மரணத்திற்கு ஒரு சில தினங்கள் முன்பு, மத்திய அமைச்சர் திலிப் காந்தி  வெளியிட்ட “புகையிலைக்கு புற்றுநோய்க்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை” என்ற அபத்தமான அறிக்கையினை எதிர்த்துத் தக்க பதிலடி கொடுத்து இந்தியப் பிரதமருக்குக் கடிதம் அனுப்பினார் சுனிதா.

புகையிலைப் பாக்கெட்டுகளில் இருக்கும் கண்ணுக்குப் புலப்படாத எச்சரிக்கை வாசகங்கள் இன்னும் பெரிதாகவும் வலிமை வாய்ந்ததாகவும் பொறிக்கப்பட நாடு முழுதும் 38, 740 கையெழுத்துகளைத் திரட்டினார் இச்சாதனைப் பெண்மணி. 

தன்னைப் பற்றி சிறிதும் வருந்தாமல் சுற்றி வாழ்பவர்களின் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு துணிச்சலுடன் தம்மை அடையாளப்படுத்தி சுனிதாவும் முகேஷும் குரல் கொடுத்தனர். தன்னை ஒருவரேனும் பின்பற்றினால் மனமகிழ்ந்து பேருவகைக் கொள்ளும் இவ்வுலகில் தன்னைப் போல் யாரும் வாழ்ந்திடக்கூடாது என்ற எண்ணம் கொண்டு மக்கள் நலத்தையே பெரிதாகக் கருதும் சுனிதாக்கள், முகேஷ்களின் இடையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

எந்த ஒரு துறையிலும் அதிகபட்ச எல்லையைத் தொட்டு சாதனை புரிந்த ஒரு முன்னோடி இருப்பார். அத்துறையைச் சார்ந்த பலருக்கும் அவர் பெற்ற இடமே குறிக்கோளாக இருக்கும். அதை நோக்கியே அவர்களது திட்டமிடுதல் இருக்கும். புகையிலையை (எந்த வடிவிலும்) புகைப்பவர்களுக்கு முன்னோடி யார்? அவர்களது குறிக்கோள் என்ன? அவர்கள் அடைய விரும்பும் இடம் என்ன? தம் சந்ததிகளுக்கு விட்டுச்செல்லும் சொத்து என்ன? நாடு எனக்கென்ன செய்தது என்று கேட்கும் இவர்கள் நாட்டு மக்களுக்கு அளிப்பது என்ன?

சிந்திப்போம்..மாறுவோம். மாற்றுவோம்.

முகேஷ் ஹரனே பிரச்சார வீடியோ
சுனிதா தோமர் பிரச்சார வீடியோ

தகவல்: இணையம்

Monday, March 9, 2015

நிர்பயா ஒத்துழைத்திருக்கலாம்:முகேஷ் சிங்

டெல்லியில் நிகழ்ந்த போராட்டம்
காந்தி, நேரு முதல்
இன்றைய சீமான் வரை
அவர்களது சிறைக்காலத்தில்
பூத்த புத்தகங்கள் பல.


போகட்டும்; புத்தகம் எழுத வேண்டாம்-
புத்தியைக் கொண்டு
தான் செய்த பிழைகளையேனும்
திருத்தியிருக்கலாம்; குறைந்தது
தனக்குள்ளேனும்
கூனிக்குறுகியிருக்கலாம்.


இது எதுவுமேயின்றி,
ஜனாதிபதியின் கருணை 
தன்னைக் காக்கும் என்று
திமிரெடுத்து வெறிபிடித்து
கல்லையே மனதாக்கி
வலிகளையும் மிதிகளையும் 
கதறலையும் கெஞ்சலையும்
ரசித்து அலறலையே 
அமிர்தமாக அருந்தி 
மனிதத்தையும் நிர்பயாவையும்
குற்றுயிருடன் சாலையில் வீசியெறிந்தது எதற்காக?


இதுவரை இப்படியொரு
கற்பழிப்பைக் கண்டதேயில்லையென
உலகின் மருத்துவர்களிடம்
சான்றிதழ் பெறுவதற்கா?


சிறையிலமர்ந்து
சிறிதும் ஈவிரக்கமின்றி
அவ்வப்பாவியின் மீதே
பழி போடுவதற்கா?


பெண்களின் ஆடையே 
ஆண்களின் பிழைகளுக்குக்
காரணம் என்று 
தத்துவத்தை உதிர்ப்பதற்கா?


பெண்கள் அனைவரும்
பர்தா அணிந்தால்
கற்பழிப்புகள் ஒழிந்துவிடுமா?


இரவில் பெண்ணுக்கு
வெளியே என்ன வேலை
என்போரே -
பகலில் மட்டும்
பாதுகாப்புண்டா
அவளுக்கு?


உடலில் வலியையும்
மனதில் தோல்வியையும்
மட்டுமின்றி
தான் சுமக்கவேண்டிய 
குற்றவுணர்ச்சியையும்
அவள் மீது சுமத்தி
பெருமையுடன் 
பேட்டியளிப்பவனைப்
பரிவோடும் பாதுகாப்போடும்
இன்றும் ஊட்டி வளர்க்கும்
பார் போற்றும் நாடு
நம் இந்திய நாடு.


பாதிக்கப்பட்டவர்களை விட
பாதிப்பேற்படுத்தியவர்கள் மீதே
அதிகக் கருணை காட்டும் நாடு
பார் போற்றும் நம் பாரத நாடு.

எழுத எழுத தீரவேயில்லை
அவர்களது வெறியும்
நமக்கு ஆற்றாமையும்..........................

Tuesday, February 17, 2015

நான் முஸ்லிமல்ல... ஆனால் குர் ஆனை நம்புகிறேன்: விஞ்ஞானி (1)


மாரீஸ் புகைல் ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு அறுவை சிகிச்சை மருத்துவராவார். புகழ்பெற்ற அறிஞரும் ஆவார். அவரது நாட்டினர், எகிப்திய அரசிடமிருந்து ’மம்மியாகப் பாதுகாக்கப்பட்ட ஃபிரவ்னின் உடலை பரிசோதனை செய்வதற்காகப் பெற்றனர்.


ஃபிரவ்னின் உடலில் மீது காணப்பட்ட மிகுதியான உப்பு அவன் மூழ்கி இறந்ததைத் தெளிவாக எடுத்துரைத்தது. ஆராய்ச்சிக்குழுவினர் மேற்கொண்டும் தமது பணியினை செய்துகொண்டிருக்க, அக்குழுவின் தலைவரான மருத்துவர் மாரீஸ் புகைலுக்கோ ஃபிரவ்ன் எப்படி மூழ்கினான் என்று வியப்பு மேலிட்டது. இது பற்றி இஸ்லாமியர்களின் வேதமான குர் ஆனில் இருப்பதாக அறிய வந்தார். 18ம் நூற்றாண்டில் தான்  ‘மம்மிகள்’ கண்டெடுக்கப்பட்டன. ஆனால் அவற்றைப் பற்றி 14ம் நூற்றாண்டிலேயே குர் ஆனில் குறிப்பிடப்பட்டதை அறிந்த மருத்துவர் குர் ஆனைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு தமது 50வது வயதில் அரபி கற்க சவூதி அரேபியா சென்றார்.


ஃபிரவ்ன் குறித்த குர் ஆனின் கீழ்வரும் வசனங்களைக் கண்டு ஸ்தம்பித்து நின்றார். ஏக இறைவனின் ஒரு எழுத்தைக் கூட மறுக்கவியலாதவராக ஏற்றுக்கொண்டார்.



10:90மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.

10:91“இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.

10:92எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது).





தான் கற்றுணர்ந்த குர் ஆனின் முதல் வசனம் அவரைப் பெரிதும் ஈர்க்க இன்னுமின்னும் தன் தேடலைத் துவங்கினார். இஸ்லாம் மீதிருந்த தமது தவறான கண்ணோட்டங்களைத் தம்மை மருத்துவத்திற்காகக் காணவந்த முஸ்லிம்கள் மூலம் அறிந்து களைய முயற்சிகளை மேற்கொண்டார். அவருக்கு அதுவரை தகவல் களஞ்சியமாக விளங்கியவை வானொலியும் தொலைக்காட்சியும் சில நூல்களுமேயாகும். அவற்றைத் தவிரவும் இஸ்லாம் மீதான தன் பார்வையை விரிவுபடுத்தினார். தாம் முன்பு கண்டெடுத்த, இஸ்லாம் என்பது முஹம்மது என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட மதம் என்னும், ஆராய்ச்சி முடிவுகளை மீளாய்வு செய்தார். இப்பொழுது அவருக்கு குர் ஆனைக் குறித்து கிடைத்திருந்த மேலதிக தகவல்களையும் விரிவான கண்ணோட்டங்களையும் கொண்டு தமது முன் முடிவுகள் தவறாக இருப்பதையும் முழுமையாக உணர்ந்தார்.


1976ல் Quran, Bible, and Science என்ற புத்தகம் எழுதி புகழடைந்தார் மருத்துவர். அதன் பின் குர் ஆனை நன்கு ஊன்றிப்படித்த மருத்துவர் (மனிதனின் தோற்றம்) The Origin of Man என்ற புத்தகம் எழுதி வெளியிட்டார். இப்புத்தகம் இஸ்லாத்தையும் மருத்துவரையும் உலகின் பலதரப்பட்ட மக்களுக்கும் அறிமுகப்படுத்தியது. அன்றைய தினம், உலகைக் குறித்த விடைகிடைக்காத பல கேள்விகளுக்கும் ஆதாரப்பூர்வமாகத் தம் விடைகளை குர் ஆனின் ஒளியில் பதிந்தார். அவரது ஆராய்ச்சிகளையும் முடிவுகளையும் தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருமனதுடன் ஏற்றுக்கொண்டனர். குர் ஆன் மீதான தமக்கிருந்த   ஆழ்ந்த அறிவால் பல அறிஞர்களுக்கும் உண்மையை எடுத்துரைத்தார். டார்வினின் தத்துவத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக்கொண்டார். ஒரு கட்டத்தில் குர் ஆன் ஏக இறைவன் த்னது தூதரின் வாயிலாக உலகுக்கு வழங்கிய இறைவேதமே என்று தான் ஆய்ந்தறிந்த முடிவினை வெளியிட்டார். 


இருப்பினும் ஒரு முஸ்லிமின் ஆராய்ச்சிகள் இஸ்லாத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்று பலரும் குற்றம் சுமத்தி அவரது கருத்துகளை உலகம் ஒதுக்கியபோது ஒரு சுயவிளக்கம் அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வாயடைக்கச் செய்தார். அந்த சுயவிளக்கம் இதுதான்:


”என் ஆராய்ச்சிகளின் முடிவுகள் அனைத்தும் இஸ்லாத்தையும் அதன் ஏக இறைவனையும் மெய்ப்படுத்துகின்றன என்பது முழுக்க முழுக்க உண்மையாகும். ஆனால் இதனை ஒரு முஸ்லிமாக நான் கூறவில்லை. அவ்வாறு இஸ்லாம் என்ற ஒரு வட்டத்தில் இருந்து கொண்டு என் ஆய்வறிக்கைகளை நான் வெளியிட்டால் உலகம் ஏற்கத்தயங்கும். நான் அந்த வட்டத்தை விட்டும் வெளியே இருந்தே இஸ்லாம் என்பது உண்மை; அதன் வேதம் மெய்யானது என்று ஒப்புக்கொள்கிறேன்” என்று அறிவித்தார்.


இவ்வாறு முஸ்லிம்களுக்கு ஆதரவாகத் தம் வாழ்வைக் கழித்த அவர் இஸ்லாத்தினை ஏற்றிருந்தால் அவருக்கும் நன்மையாக அமைந்திருக்கும்.


Reference:

http://www.islam.ru/

Wednesday, January 28, 2015

பர்தாவினுள் பழமைவாதி



சுஜாதாவின்
விஞ்ஞானக்கதைகளின்று
நனவாகிக்கொண்டிருக்க
இன்னும் தேங்காயினுள் பூவை
நம்பினால் அது
பழமைவாதம்


தாய்மதம்
திரும்புமாறு
தன் மக்களை
வலியுறுத்தும்
மதச்சார்பற்ற
இந்திய அரசு!
அந்தோ பரிதாபம்!!
அதுவன்றோ பழமைவாதம்.


முகநூலில் முகம்காட்டினால்
மட்டுமே
முற்போக்குவாதியென
முட்டாள்தனமாக
எண்ணி
சொல்லவந்த
கருத்துகளைப்
பின்னுக்குத்தள்ளினாலது
பழமைவாதம்


சுடிதாரில் அனைவரும்
தஞ்சம் புகுந்துவிட
மடிசாரில்
பவனி வந்தால் - அது
பழமைவாதம்


அனாதைக்குழந்தைகள்
அன்புக்குத் தவித்திருக்க
துணையிடம் குறையிருந்தால்
யாரோ ஒருவரது
விந்துவைச் சுமக்கும்
குலவெறி - அது
பழமைவாதம்



நடிகைகளின் உடை அணிந்தால் 
நன்மதிப்பை பெற்றுவிடலாம் என்ற 
மூளைச்சலவையில் 
மூழ்கி
டைட்ஸ் (tights) அணிந்து
பைக்கில் பறந்தால் - அது
பழமைவாதம்


இவை சரியாயிருக்க,
பர்தாவினுள் இருப்பது
ஒலிம்பிக்கை வென்ற
முஸ்லிம் பெண்ணல்ல...
பழமைவாதங்களைப்
பரப்பி அதனின்றும்
வெளிவரத்தயங்கும்
முட்டாள்களே!!

Thursday, January 22, 2015

தோல்விகளை யாரும் விரும்புவரா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு


இறையருளால் நாம் வழங்கப்பெற்றிருக்கும் அருட்கொடைகளை எண்ணியெண்ணி அவனுக்கே நன்றி  செலுத்துவதற்காகவும் அவனைத் தொழுவதற்காகவும் படைக்கப்பட்டுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ். ஆனால், மனிதமனம் அவனது அளவற்ற அருட்கொடைகளை விட, விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சோதனைகளையே நொடிக்கொருமுறை எண்ணி மருள்கிறது. நபிமார்களும் சஹாபாக்களும் கொடுக்கப்பட்ட சோதனைகளில் கடுகளவே நாம் கொடுக்கப்பட்டுள்ளோம் என்பதை நாம் நன்கறிவோம். 


நயவஞ்சகர்களாலும் நிராகரிப்பவர்களாலும் நித்தம் நித்தம் சித்ரவதை செய்யப்பட்டு சோதிக்கப்பட்டவர்கள் நமது சஹாபாக்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் வேதனைகள் என்றால், நமது நபிக்கோ சஹாபாக்கள் பெற்ற வலிகள், வேதனைகள், அனைத்தையும் ஒரு சேர தன்னுள்ளே உணர்ந்தார்கள்.  அவர்கள் படும் சோதனைகளை அறிய வரும்போதெல்லாம் மனதால் சொல்லி மாளாத கவலை அடைந்தார்கள். ஆனால் அதையெல்லாம் வெளிக்காட்டாமல் தமதருமை நண்பர்களுக்கு அழகிய ஆறுதலையும் அன்புமிக்க இறைவனது உதவியைக் கையேந்தி கேட்கும் துஆக்களையும் தொழுகைகளையும் கனிவோடு பகர்ந்தார்கள். அவ்வேதனைகளுக்குப் பகரமாக, மறுமையில் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் வெகுமதிகளை ஆதரவு வைத்தார்கள்.


இந்த வேதனைகள் ஒரு பக்கம் என்றால், தனிப்பட்ட முறையில் நபியவர்கள் இறைநிராகரிப்பாளர்களால்அடைந்த வேதனையோ அதிகமதிகமாகும். தங்களது தெய்வங்களை வணங்குவதை விட்டும் விலகியதோடு மட்டுமின்றி மற்றவரையும் விலக்குகிறார் என்ற ஆத்திரம், நபியவர்களை உடலளவிலும்  மனதளவிலும் கொடுமைப்படுத்தத் தூண்டியது. நாட்கள் செல்லச்செல்ல கொடுமைகள் அதிக பலம்  கொண்டு நபியவர்களைப் பலமிழக்க செய்தன. அப்போதும் இறைவனிடமே பொறுப்பை  ஒப்படைத்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஆறுதல் வழங்கினான்.


உதாரணத்திற்கு #தாயிஃப் நகரமக்களின் கல்லடி சொல்லடி வாங்கிய நிலையில் நபி (ஸல்) கேட்ட  பிரார்த்தனையைக் கேட்டால் பாறாங்கல்லும் கரைந்து விடும். இறைவன் தரும் சோதனைகள், காலில்  ஒரு முள் குத்தினாலும் அதற்கீடாகப் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று முழுமனதுடன் சோதனைகளை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பொருந்திய நபி ஸல் அவர்களே மனவேதனையில் கண்ணீர்  மல்க துஆ செய்திருக்கிறார்கள் எனில்  நபி ஸல் அவர்கள் எதிர்கொண்ட சோதனைகளுக்கு முன் நமக்கு வழங்கப்பட்டுள்ள சோதனைகள் தூசு அல்லவா?


“அல்லாஹ்வே! எனது ஆற்றல் குறைவையும் எனது திறமைக் குறைவையும் மனிதர்களிடம் நான் மதிப்பின்றி இருப்பதையும் உன்னிடமே முறையிடுகிறேன். 
கருணையாளர்களிலெல்லாம் மிகப்பெரியகருணையாளனே! நீதான் எளியோர்களைக் காப்பவன் நீதான் என்னைக் காப்பவன். 
நீ என்னை யாரிடம்  ஒப்படைக்கிறாய்? 
என்னைக் கண்டு முகம் கடுகடுக்கும் அந்நியனிடமா? அல்லது என்னுடைய காயத்தைநீ உரிமையாக்கிக் கொடுத்திடும் பகைவனிடமா? 
உனக்கு என்மீது கோபம் இல்லையானால் (இந்த  கஷ்டங்களையெல்லாம்) நான் பொருட்படுத்தவே மாட்டேன். 
எனினும், நீ வழங்கும் சுகத்தையே நான்  எதிர்பார்க்கிறேன். 
அதுவே எனக்கு மிக விசாலமானது. உனது திருமுகத்தின் ஒளியினால் இருள்கள்  அனைத்தும் பிரகாசம் அடைந்தன் இம்மை மறுமையின் காரியங்கள் சீர்பெற்றன. 
அத்தகைய உனது  தருமுகத்தின் ஒளியின் பொருட்டால் உனது கோபம் என்மீது இறங்குவதிலிருந்தும் அல்லது உனது  அதிருப்தி என்மீது இறங்குவதிலிருந்தும் நான் பாதுகாவல் கோருகிறேன். 
அல்லாஹ்வே! நீயே  பொருத்தத்திற்குரியவன். 
நீ  பொருந்திக் கொள்ளும்வரை உன் கோபத்திலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்.   
அல்லாஹ்வே!  பாவத்திலிருந்து தப்பிப்பதும், நன்மை செய்ய ஆற்றல் பெறுவதும் உனது அருள் இல்லாமல் முடியாது.”

இவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலும் அண்ணல் நபி ஸல் நிராகரிப்பாளர்களுக்காக, அவர்களுடையஅறியாமையை நினைத்து மனம் வருந்தினார்கள். அவர்களுக்காக துஆ செய்தார்கள். அவர்கள் நேர்வழி பெற வேண்டும் என்றும் மறுமையில் அவர்களும் சொர்க்கச்சோலையில் புக வேண்டும் என்று கவலைப்பட்டார்கள். எந்த அளவிற்கு என்றால், அல்லாஹ்வே நபியவர்களைக் கடிந்து கொள்ளும் அளவிற்கு  வேதனைப்பட்டார்கள்.


26:3. (நபியே!) அவர்கள் முஃமின்களாகாமல் இருப்பதற்காக (துக்கத்தால்) உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்!

சிந்தித்துப் பார்ப்போம் சகோதர, சகோதரிகளே…. சோதனைகள் அனைத்தும் நம் ஈமானை சோதிக்கவேயன்றி நம்மீது திணிக்கப்படும் அநீதியல்ல!!


4:40. நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்; (ஓர் அணுவளவு) நன்மை செய்யப்பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து, அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான்.

 

சுப்ஹானல்லாஹ்... அல்லாஹ்வின் உதவிகளின் போது மனமகிழ்ந்து நன்றி செலுத்தும் நாம், அவனது சோதனைகளின் போது, மனம் துவளாமல் ,வெற்றி பெற அவனிடமே உதவி கோருவோம் இன்ஷா அல்லாஹ். உதவி கேட்பவர்களின் கைகளை வெறுமனே திருப்பியனுப்ப வெட்கப்படுபவன் நமது அர்ரஹ்மான். 


நான் தொழுகிறேன்.. ஓதுகிறேன்.. தஹஜ்ஜத் தொழுகையைக் கடைபிடிக்கிறேன். இருப்பினும் சோதனைகள் குறைந்த பாடில்லையே… யாருக்கும் ஒரு தீங்கும் நான் நினைக்கவில்லையே…. என்னைத் தவிர எல்லோரும் சுகமாக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். என் குடும்பத்தில் மட்டும் ஏன் இத்துணை சோதனைகள்… இவற்றிலிருந்து மீள இன்னும் நான் என்ன தான் செய்ய வேண்டும் என்றே மீண்டும் மீண்டும் சிந்தித்து கவலையுறும் நாம், அச்சோதனைகளுக்கு ஈடாக மறுமையில் அல்லாஹ் நன்மைகளை நமக்காக ஏற்படுத்தி வைத்திருப்பதை ஏனோ மறந்துவிடுகிறோம்..அஸ்தஃஃபிருல்லாஹ்.


நாம் மறந்து விடும் லிஸ்டில் முக்கியமான மற்றொன்று, கஷ்டங்களும் வேதனைகளும் மட்டுமல்ல சோதனைகள்…. மகிழ்ச்சியும் சுகங்களும் சோதனைகள் தாம். கஷ்டங்களின் போது பொறுமையுடன் அவனிடமே உதவி கேட்பவர்களாகவும் இன்பங்களின் போது அவனுக்கு மட்டுமே நன்றி செலுத்துபவர்களாகவும் இருப்பதே நமக்கு அவன் வைக்கும் பரீட்சையாகும். அதற்கேற்ற மதிப்பெண்களே மறுமையில் நமக்குக் கிடைக்கவிருக்கும். வேதனைகளின் போது ஏன் எனக்கு மட்டும் இப்படி என்று மன்றாடும் நாம், சந்தோஷங்களின் போது பலருக்கும் தராத இன்பங்களை எனக்கு மட்டும் ஏன் தந்திருக்கிறான் என சிந்திக்க மறக்கிறோம்; புகழை, நன்றியை அல்லாஹ்வுக்கு சாட்டிவிட தவறுகிறோம். இவ்விரு நிலைகளுமே தவறானவை. சோதனைகளின் போது மட்டுமல்ல.. இன்பங்களின் போதும் அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூற வேண்டும்.


சஹாபாக்கள் எந்த அளவிற்குத் தமது இன்னல்களை மனமுவந்து ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்கு ஒரேயொரு உதாரணத்தை மட்டும் காண்போம்.


புகாரி 5652. அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார் 
இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் 
வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலம்) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். 

...அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார் 
நான் உம்மு ஸுஃபரைப் பார்த்தேன். அவர் தாம் கஅபாவின் திரை மீது (சாய்ந்த படி அமர்ந்து) உள்ள கறுப்பான உயரமான இப்பெண் ஆவார்.11 

Volume :6 Book :75

அல்லாஹு அக்பர். எந்த உடல் பிரச்சினையானாலும் இந்த காலத்தில் நவீன மருத்துவ சேவைகளால் எளிதில் குணப்படுத்த முடியும். இருப்பினும் எனக்கு அது செய்யுது.. இப்படி பண்ணுது என்று எந்நேரமும் புலம்புவர்களே நம்மில் அநேகராக இருக்கிறோம். இறையருளால் இந்த பெண்மணி நபி ஸல் அவர்களுக்கு வழங்கிய பதிலில் நல்ல படிப்பினை பெறுவோம். அல்லாஹ்வின் உதவிகளின் போது மனமகிழ்ந்து நன்றி செலுத்தும் நாம், அவனது சோதனைகளின் போது, மனம் துவளாமல் ,வெற்றி பெற அவனிடமே பொறுமையாக உதவி கோருவோம் இன்ஷா அல்லாஹ். உதவி கேட்பவர்களின் கைகளை வெறுமனே திருப்பியனுப்ப வெட்கப்படுபவன் நமது அர்ரஹ்மான் என்பதை என்றும் மனதில் நிறுத்தியவர்களாக ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக. ஆமீன்.

hadees, quran verses : tamililquran.com
pictures: google