Friday, May 13, 2016

நான்கு பக்கங்களிலும் பாதுகாவல் - ஏன்?



சுப்ஹானல்லாஹ்... நான் கண்டு அதிசயித்த விஷயத்தை இங்கு மொழிபெயர்த்துள்ளேன்அப்துல்லாஹ் இப்னு உமர் ரழி அவர்கள் அறிவிப்பதாக அஹ்மதில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது. நபி ஸல் அவர்கள் அதிகமாகக் கேட்டதாக உள்ள ஒரு துஆ அது. //

//««اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي وَأَعُوذُ بِعَظَمتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي»

யா அல்லாஹ்! எனது தீனிலும் துன்யாவிலும், குடும்பத்திலும், பொருளிலும் மன்னிப்பையும் ஆரோக்கியத்தையும் தந்தருள உன்னை வேண்டுகிறேன். யா அல்லாஹ் எனது வெட்கத்தலங்களை மறைத்தருள்வாளாக! எனது பயங்களை விட்டும் என்னை நிர்ப்பயமான வனாக்குவாயாக! எனது முன்புறம் பின்புறம், வலப்புறம், இடப்புறம், மேல்புறம் கீழ்ப்புறம் எல்லா திசைகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக! எனது கீழ்பாகத்திலிருந்து நான் தாக்கப்படுவதை விட்டும் உன் வலுப்பத்தைக் கொண்டு காவல் தேடுகிறேன். //

பாதுகாப்பாயாக எனக் கூறிவிட்டால் முடிந்துவிடும்.. ஏன் ஒவ்வொரு பக்கத்தையும் குறிப்பிட்டு பாதுகாவல் கேட்குமாறு நபி ஸல் வழிகாட்டினார்கள்?

காரணம் இதுதான்.

7:16. (அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்என்று கூறினான்.

7:17. “பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்).

அனைத்து நான்கு பக்கங்களிலிருந்தும் ஷைத்தான் மனிதர்களைத் தடுப்பதாகச் சூளுரைக்கிறான்.

1. முன்பக்கம் - முன் வரவிருக்கும் மறுமையைக் குறித்து சந்தேகமடையச் செய்வான்.

2. பின்பக்கம் - இவ்வுலக வாழ்க்கையில் அதிக ஆசை கொள்ளச்செய்வான்.

3. வலப்பக்கம் - தீனைக் குறித்துத் துருவித்துருவி கேள்விகள் கேட்க வைப்பான்.

4. இடப்பக்கம் - பாவம் செய்யத் தூண்டுவான்.

நன்மையின் பாதையில் அமர்ந்து தடுத்து தீமையின் பக்கம் திசைதிருப்புவான்.

ஆனால், மேல்பக்கத்தை விட்டுவிட்டான்..ஏன்? அல்லாஹ்வின் அர்ஷ் நமக்கு மேலேயே இருப்பதால்... அர்ஷிலிருந்து வரும் அருட்கொடைகளைத் தடுக்கும் சக்தி ஷைத்தானுக்கில்லை. (கீழ்ப்பக்கம் என்பது பூகம்பத்தினால் ஏற்படும் தீங்கு).

- நபி ஸல் அவர்கள் கற்றுத்தந்த ஒவ்வொன்றின் பின்னும் நாம் அறிய இயலா பல தொலைநோக்குப் பார்வைகள் புதைந்திருக்கும் என்பதை மேலும் ஒருமுறை கண்டு வியந்தேன்... சுப்ஹானல்லாஹ்.

Thursday, February 18, 2016

முன்னெச்சரிக்கை (குட்டிக்கதை)

”ஏங்க... ஸ்கூல் பஸ் இன்னும் வரல.. ட்ரைவர் ஃபோன் நம்பர் தாங்க...நான் ஃபோன் செய்து கேட்கிறேன்.”

அலுவலகம் சென்றுவிட்டிருந்த கணவனிடம் ஃபோனில், கையில் குழந்தையுடனும் கால்களில் வலியுடனும், கேட்டாள்.

‘என்னது.. யார்னு தெரியாதவன் நம்பர் எல்லாம் மனைவியிடம் கொடுக்கிறதா.. அவசியமில்லை... இந்த காலத்தில் எவனையும் நம்ப முடியாது. பெண்ணின் நம்பர்னு தெரிஞ்சுது.... அப்புறம் தேவையில்லாத ஃபோன்கால்களும் மெசேஜ்களும் அனுப்புவானுங்க. தேவையில்லாத டென்ஷன்...நாமளே ட்ரைவருக்கு ஃபோன் செய்து கேட்டு இவளுக்குத் தகவல் சொல்வோம்’ என எண்ணியவனாய்

“கொஞ்சம் வெய்ட் பண்ணு.. நானே கேட்டு சொல்றேன்”

“நீங்க ட்ரைவர்கிட்ட பேசிட்டு அப்புறம் எனக்குத் தகவல் சொல்ற வரை நான் இங்க நிக்கணுமா? நம்பரைத் தாங்க.. நான் பேசிக்கறேன்”

“நீ ஃபோன் பண்ணா பேலன்ஸ் குறையும்.. நானே ஆஃபீஸ் நம்பரில் இருந்து கேட்டு சொல்றேன்... ரெண்டு நிமிஷம் வெய்ட் பண்ண முடியாதா உனக்கு?”

“ரொம்ப அறிவாளின்னு நினைப்பு..”

குரலைச் சிறிது உயர்த்தினால் மனைவி கொஞ்சம் இறங்குவாள் என இவன் போட்ட கணக்குத் தோற்றாலும் கவலையை வெளிக்காட்டாமல் ட்ரைவருக்கு ஃபோன் செய்தான்.

ம்ஹூம்..ட்ரைவர் எடுக்கவில்லை.

‘ம்ம்.. என்ன பண்றது.. இதை அவளிடம் சொன்னால் அதுக்கும் கத்துவா.. பேசாம ஸ்கூலுக்கே ஃபோன் செய்து கேட்போம்’

ஸ்கூல் ரிசப்ஷனிஸ்ட் ஃபோனை எடுத்தாள் “குட் மார்னிங்... --------- ஸ்கூல்.. ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ”

ட்ரைவர் இன்னும் வராததையும் ஃபோன் செய்தும் அவர் எடுக்காததையும் தெரிவித்து பதிலை எதிர்பார்த்தான். நல்ல வேளை.. ரிசப்ஷனிஸ்டின் கணவன் யாரென தெரியாதவர்களிடம் அவசியமிருந்தும் பேசக்கூடாது என்று கண்டிஷன் போடாததால் பொறுப்பான தெளிவான பதில் அவனுக்குக் கிடைத்தது.

Saturday, February 6, 2016

மீண்டும் மீண்டும் அதே பல்லவி

பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் நெய்மர் வருமானவரி கட்டாமல் ஏமாற்றிய செய்தி காண நேர்ந்தது. இதுதான் நேரம் என்று ஷாகிருக்கு லெக்சர் கொடுத்தாச்சு.

நானும் ஒரு காலத்தில் அனைத்து கிரிக்கெட் டீம் மெம்பர்ஸ் பெயர்களும் இதோ இந்த விரல் நுனியில் தான் வைத்திருந்தேன்.. ஃபிக்சிங் என்ற பெயரை என்று கேள்விப்பட்டேனோ... அன்று உதறித்தள்ளிவிட்டேன். இன்று ஷாகிர், கிரிக்கெட், ஃபுட்பால் வீரர்களைக் கொண்டாடும்போது கடும் கோபம் வருகிறது. எவ்வளவு சொல்லியும் அவனது ஆர்வம் குறையவில்லை. அவர்களது விளையாட்டைக் காண்பதும் கற்றுக்கொள்வதும் தவறில்லை. அதற்காக... குறிப்பிட்ட வீரர்களுக்காக உற்சாகப்படுவதைக் கண்டால் பொறுக்க முடியவில்லை. 

“நீங்கள்லாம் இப்படி அளவுக்கதிகமாகக் கொண்டாடுவதால் தான் இவன் போன்ற ப்ளேயர்ஸ் ஃபேமஸ் ஆகிறார்கள். அவர்களுக்குக் காசும் கூடுகிறது. இவ்வளவு கூச்சல் போடுக்றீர்களே.. அவர்களுக்குக் கிடைக்கும் பணத்தில் புகழில் கிஞ்சித்து லாபமாவது உனக்குக் கிடைக்குமா? அவன் விளையாடுகிறான். அவனுக்குக் காசு கிடைக்கிறது. நீ ஏன் சந்தோஷப்படுகிறாய்? நீ யாரென்றாவது அவனுக்குத் தெரியுமா?

(சைக்கிள் கேப்பில்)  உன்னையும் என்னையும் பார்க்காமலே... உனக்காகவும், எனக்காகவும் அழுது துஆ கேட்ட நபியைப் பின்பற்று.. உன்னை யாரென்றே தெரியாத இவன் போன்றோரைப் பிரபலமாக்காதே.. 

அவனது விளையாட்டில் இருந்து டெக்னிக்ஸ் மட்டும் கற்றுக்கொள். “ என்று பலமுறை கூறியாகிவிட்டது. அந்த சமய்த்தில் சரி சரியென்பான். எல்லாம் குடிகாரன் பேச்சு ஆகிவிட்டது.



இன்று ஒரு பாயிண்ட் ஆதாரத்துடன் சொல்லியாகிவிட்டது. “நீங்கள் கொடுக்கும் வரவேற்பில் அவனுக்குக் கிடைத்த சொத்துகளில் கவர்ன்மெண்டுக்குக் கொடுக்க வேண்டிய இன்கம் டேக்ஸ் கட்டாமல் ஏமாற்றி இருக்கிறான். இவனைப் போன்ற ஏமாற்றுக்காரர்களையா உனக்குப் பிடிக்கிறது? அவன் ஒரு விளம்பரத்தில் வந்தால் கோடிக் கணக்கில் பணம் கேட்பான்.. ஏன் கேட்கிறான்? அவன் வந்தால் நீங்கள்லாம் வாய் பிளந்து அந்த விளம்பரத்தைப் பார்ப்பீர்கள்... எல்லாம் உங்களால் அவனுக்குக் கிடைத்த பணம்”

பதிலில்லை. கவர்ன்மெண்டை ஏமாற்றி விட்டானா? என்று மட்டும் கேட்டான். அதே நாளில் பூலோகம் என்ற படமும் பார்த்தோம்... ஏதாவது மாற்றம் வருமா?

ம்ம்/... என்ன சொல்லி என்ன கேட்டு என்ன பார்த்து என்ன பயன்... மீண்டும் நாளை நான் இதே பல்லவியைப் படிக்க வேண்டும்.  

http://www.gulf-times.com/story/477955/Neymar-fined-112-000-for-Brazil-tax-evasion

Wednesday, January 27, 2016

முஸ்லிம்கள் கோழைகளா?

சமீபத்தில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் பாக்தாதி ஐ.எஸ் அமைப்பு அதிகப்படியான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் எதிரிகள் அவ்வமைப்பைத் தகர்க்க முடிவெடுத்திருப்பதாகவும் தன் ஆடியோவில் தெரிவித்துள்ளார். ஆகையால் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அவ்வமைப்பில் சேர்ந்து பணிப்புரியுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன் பாதுகாப்பைப் பலப்படுத்த உதவுமாறு அழைத்திருந்தார்.

அந்தோ பரிதாபம்... எவ்வளவு பெரிய அமைப்பு... நியாயத்திற்காகப் போராடும் ஓர் அமைப்பிற்கு ஆபத்துகள் என்பவை நிச்சயம் தான். இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம்களுக்காகவும் அரும்பாடுபடும் மக்களுக்கு உலக முஸ்லிம்கள் நிச்சயம் உதவியே ஆக வேண்டும் என அவர் கேட்டதில் ஆச்சரியமேயில்லை. கருணை உள்ளம் கொண்டவர்கள் முஸ்லிம்கள் எனும் பெரும் நம்பிக்கையில் அவர் கேட்டுவிட்டார். 

ஆனால் இந்த முஸ்லிம்கள் செய்த காரியம்? கிஞ்சித்தும் கவலையின்றி.. அக்கறையின்றி ட்விட்டரில் பாக்தாதிக்கு அவர்கள் கூறிய பதில்களைப் பாருங்கள்.

1. என் பிள்ளைகளுக்கு அடுத்த வாரம் மேட்ச் உள்ளது. அதை என்னால் தவற விட முடியாது. மேலும் ஃபார்கோ காமெடி சீரியலை நான் பார்த்தேயாக வேண்டும்.

2. சமூக மேம்பாட்டுப் பணியில் தான் பிசியாக இருப்பதால் ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்பில் ஈடுபட முடியாதாம் அடுத்தவருக்கு.

3. ஜிம்மிற்குப் போக வேண்டும். ஹோட்டலுக்கு உணவருந்த செல்லவிருருப்பதாலும் இன்னொருவரால் முடியவில்லையாம்.

4. ஸ்டார் வார்ஸ் அடுத்த பகுதியை இவருக்குத் தவற விட விருப்பமில்லையாம்.

5. தன் தந்தை தன்னை 8 மணிக்குள் வீட்டுக்கு வர சொல்லியிருப்பதால் இவராலும் முடியாதாம்.


என்னே ஒரு கல்நெஞ்சம் இந்த முஸ்லிம்களுக்கு. 24 நிமிடங்கள் தொண்டை கிழிய கத்தி உதவி கேட்டவருக்கு இதுதான் நீங்கள் காண்பிக்கும் அக்கறையா? ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாடி முடித்து விட்டு பல் விளக்கும் வேலையைத் தியாகம் செய்தேனும் ஐ.எஸ். அமைப்பிற்குப் பாதுகாப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.