Thursday, September 17, 2015

விதை!!!

அஸ்மா மளமளவென்று குக்கரில் சாம்பாருக்குக் காய் நறுக்கிப் போட்டுக்கொண்டிருந்தாள். இருக்கும் காய்களை எல்லாம் ஃப்ரிட்ஜில் இருந்து வைத்து நறுக்கி குக்கரை மூடும் சமயம் தான் தக்காளி போடாதது நினைவுக்கு வந்தது.... ”தக்காளி இல்லாம சாம்பார் வைக்கிறேன் பார் லூசு” என தன்னைத்தானே திட்டிக்கொண்டு மீண்டும் குக்கரைத் திறந்து தக்காளியை நறுக்கிப் போட்டு குக்கரை மூடினாள். சமையலில் ஒன்றும் தெரியாதவள் அல்ல அஸ்மா... பெரிய பெரிய விருந்திற்கெல்லாம் உறவினர்களும் பக்கத்துவீட்டினரும் அவளிடம் தான் ஆலோசனை பெறுவார்கள். இன்று அவள் மனம் முழுதும் பதட்டம்.. பக்கர் காக்காவைப் போய்ப் பார்க்க வேண்டிய அவசரம் அவளுக்கு. 

ஆபிம்மாக்கு வந்த வரன் விஷயமாக பக்கர் காக்கா தன்னை வந்து சந்திக்கச் சொல்லியிருந்தார். பத்து மணிக்கு டவுணுக்குப் போகணும்.. அதுக்குள்ள வர சொல்லியிருந்தாங்களே.... இன்னைக்குன்னு பார்த்து தண்ணீர் வர லேட்டாகணுமா? அண்டாவிலிருந்து டம்ளர் வரை எல்லாம் தண்ணீர் நிரப்பி, குளித்து கரண்ட் கட் ஆகறதுக்குள்ள சட்னி அரச்சு சமையலையும் முடித்து எட்டு மணிக்கெல்லாம் கிளம்பினாதான் சரியா வரும். பக்கர் காக்கா விசாரிச்சு சொன்னா எல்லாமே சரியா இருக்கும். வேறு யாரிடமும் விசாரிக்க வேண்டியதில்லை.

அதுக்குள்ள இவங்க வாப்பா வேற.. மலேசியால இருந்து 4 தடவை ஃபோன் பண்ணிட்டாங்க... இன்னும் கிளம்பலையா இன்னும் கிளம்பலையான்னு.... மூனு வருஷத்துக்கு முன்ன ஆசியாமாக்கு வரன் தேடினப்பவும் இப்படி தான் அங்க உக்காந்துகிட்டு நம்மள ஃபோன் போட்டு தினமும் டென்ஷனாக்கிட்டு இருந்தாங்க... ம்ம்.. சரி... அவங்களும் என்ன பண்ணுவாங்க....அவங்களையும் குறை சொல்ல முடியாது...

நாலு மாசம் முன்ன காலேஜ் முடிச்சாலும் பொறுப்பேயில்லாம தங்கச்சி கூட குறட்டை விடாத குறையா தூங்கிட்டு இருந்த ஆபிதாவை எழுப்பி “ஆபிம்மா... டிஃபன் எல்லாம் ரெடியா இருக்கு. ஆயிஷாம்மாவை எழுப்பு... அவளுக்கு டிஃபன் சாப்பிட கொடுத்து டப்பாவிலயும் வச்சு கொடுத்து விடு.. நான் பக்கர் காக்கா வீட்டுக்குப் போயிட்டு வரேன்... சொல்றது புரியுதா” என்ற தன் தாய்க்கு “ம்ம்.. புரியுதும்மா" என்று தூக்கக்கலக்கத்தில் கூறிய ஆபிதாவைப் பார்த்தால் கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. ’போகிற வீட்டில் எப்படி நடந்து கொள்வாளோ?? யா அல்லாஹ்.. என் பிள்ளைங்களுக்கு சந்தோஷமான வாழ்க்கையைக் கொடு...போகிற வீட்டில் என் பிள்ளைங்க நல்ல பெயர் எடுக்கணும். பெத்தவங்க பேரைக் காப்பாத்தணும்’. அன்றைக்கு மட்டும் இந்த துஆவை எத்தனையாவது முறை கேட்டாளோ அவளுக்கே தெரியாது.

பக்கர் காக்கா வீட்டுக்குப் போகும்போது மணி சரியாக ஒன்பது பத்து. ”அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா” எனக் கூறிக்கொண்டே நுழைந்தவளை, அப்பதான் டிஃபன் முடித்த பக்கர் காக்கா.... “வ அலைக்கும் சலாம். சாப்பிட வர்றியா அஸ்மா ” சம்பிரதாயமாக அல்லாமல் உரிமையுடன் கேட்டது புரிய, “இருக்கட்டும்... காக்கா..” என்று அதே உரிமையுடன் பதிலளித்தாள். ”நல்லா இருக்கியா அஸ்மா” என்ற ஃபரீதா மைனிக்கு ”அல்ஹம்துலில்லாஹ்... நல்லா இருக்கேன் மைனி” என்று புன்னகைத்தாள். 

ஆபிதாவின் பயோடேட்டாவை எடுத்துப் பார்த்த பக்கர் காக்கா, வந்த வரனின் பயோடேட்டாவை எடுத்து நீட்டிக்கொண்டே, “அஸ்மா! பையன் படிப்பு, வேலை எல்லாம் திருப்தியா இருக்குமா... நிறம் கொஞ்சம் கம்மிதான். ஆனாலும் ஆபிதாவுக்குப் பொருத்தமா இருக்கான்”. ஃபோட்டோவைப் பார்த்த அஸ்மாவுக்கு அப்படித்தான் தோன்றியது. அப்பாடா.. இந்த இடம் அமைஞ்சிட்டா நல்ல இருக்கும் எனத் தோன்றியது. அவள் கவலையெல்லாம் படிப்பு, வேலையை விடவும் வேறு விஷயம் தான் முக்கியமாகப் பட்டது. அந்த கேள்விக்கான விடையை எதிர்பார்த்தவளாக நிமிர்ந்தவளிடம், “நம்ம புதுவாசல் தெரு காஜா பாய்க்கு மச்சினன் தான் பையன். பையன் கூடப் பிறந்தவங்க 6 பேர். 2 அண்ணன், 2 அக்கா, 2 தம்பி. பையனோட வாப்பா கொஞ்சம் கண்டிப்பானவர். 1,2 தடவை பேசியிருக்கேன். 1 அக்கா பெங்களூருவில் இருக்கு. ஒரு அக்கா மாப்பிள்ளை பஹ்ரைன்ல இருக்கிறாராம். அந்த அக்கா, அண்ணன் தம்பி எல்லாரும் ஒரே வீட்ல தான் இருக்காங்க..பையன் உம்மாக்குக் கொஞ்சம் லேஏஏசா காது கேட்காது... பையனைப் பற்றியோ குடும்பத்தைப் பற்றியோ வேற எந்த பிரச்சினையும் நான் விசாரிச்ச வரையில் இல்ல” எனும்போதே அஸ்மாவுக்கு முகம் தொங்கிவிட்டது. 

அவ்ளோ பெரிய குடும்பமா? இரண்டு மைனிமார்களின் தொல்லை தாங்காமல் கல்யாணமாகி மூன்றே மாதத்தில் வாப்பா வீட்டுக்கு அழுது சிவந்த கண்களுடன் வந்த சாயிதா மக ஆரிஃபா தான் நினைவு வந்தாள். பகீரென்றது. 

“காதர் பாய்கிட்ட பேசிட்டு சொல்லு... விருப்பமில்லன்னா சொல்லு... மேலத்தெரு ஹசன் பாய் அவர் தங்கச்சி மகளுக்கு சொல்லிடறேன். நேத்தே ஃபோன் பண்ணிக்கேட்டார் இடம் எதுவும் வந்துச்சான்னு.. சொல்றேன்னு சொல்லியிருக்கேன்.”“சரி காக்கா.. நான் அவர்கிட்ட பேசிட்டு விபரம் சொல்றேன். எனக்கு விருப்பமா தான் இருக்கு. அவர்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்கிறேன். “ என்று புக்கிங் போட்டு விட்டு வந்தாள். யோசித்து விட்டு பிடிக்கவில்லையெனில் பிறகு சமாளித்துவிடலாம் என்று ஒரு எண்ணம். புதுவாசல் தெரு காஜா பாயின் வாப்பா மௌத்துக்கு காஜா பாயின் மச்சினன் தான், “மச்சான், மச்சான்” என்று அவருக்கு உறுதுணையாக எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்த்துக் கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது. பேச்சு, நடை எல்லாம் நல்ல பொறுப்புள்ள பையனாகவே மனதில் பதிந்திருந்தான். 

வீட்டுக்குப் போகும் வழியெல்லாம் தான் திருமணமாகி வந்தபோது தன் கணவர் வீட்டில் நிகழ்ந்தவை எல்லாம் தோன்றின. கணவருக்கும் அவரது தம்பிக்கும் ஒரே நாளில் திருமணம் நிகழ்ந்தது. கொழுந்தன் தன் மனைவியுடன் திருமணமான இரண்டு மாதத்தில் மனைவியுடன் கோயம்புத்தூரில் செட்டில் ஆகிவிட்டார். மற்ற தம்பி, தங்கைகள் எல்லாம் பள்ளிக்கூடம் தாண்டாத பொடிசுகளாக இருந்தனர். அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் தன் தாய்மையையும் தள்ளிப் போட்டதாகவே தோன்றியது. 

ஆறு வருடங்களாகத் தாய்மை எட்டவில்லை என்று கவலைப் படுவதற்குக் கூட நேரமில்லாதவாறு வீட்டில் எப்போதும் வேலை வேலை... மாமியார் குணத்தில் மோசமில்லை என்றாலும் அவரிடம் வீட்டு வேலைகளில் ஒத்தாசை கேட்க முடியாது. என்ன வேலை யார் சொன்னாலும் மறுபேச்சு பேசாமல் தலையாட்டி செய்து முடிப்பாள் அஸ்மா. உதவிக்கு ஆள் வைத்துக் கொள்ள வசதியின்மை, தன்னை சம்பளமில்லா வேலைக்காரியாக மாற்றிவிட்டதோ என்ற ஆற்றாமை கோபத்தைத் தூண்டும் சமயம், “அஸ்மா! டவுனுக்குப் போன இடத்தில் உனக்கு ஒரு சேலை வாங்கி வந்தேன்.. நல்லாயிருக்கா பாரு..” என கணவர் சொல்லும் பொழுதும் ”அஸ்மா.. சாப்பிட்டியா... சாப்பிடாம ஏன் இன்னும் நிக்கிற? சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் தலையைக் கீழே வை (படு)” என்ற மாமியாரின் அதட்டலான கரிசனமும் வடித்த வேர்வைத்துளிகளைப் பனித்துளிகளாக மாற்றி உடலையும் உள்ளத்தையும் குளிர்விக்கச்செய்யும். அஸ்மாவைப் போலவே அவள் மீதும் அனைவருக்கும் பாசம் இருந்தது. ஆனாலும் வேலை வேலை என்று ஓடாகத் தேய்ந்து உடல்நலம் குறைந்தது. அல்லும் பகலும் தான் பட்ட கஷ்டங்கள் தன் பிள்ளைகள் ஒரு போதும் பட்டுவிடக் கூடாது என்று அக்கணமே முடிவெடுத்தாள். இறையருளால் நாத்தனார், கொழுந்தன்மார் திருமணங்கள் நிகழ்ந்து அவரவர் குடும்பத்துடன் தனியே சென்றுவிடவும் மாமியார் மௌத்தாகவும் காலம் மூத்தமகள் ஆசியாம்மாவின் திருமணத்திற்கு நாள் குறித்திருந்தது. 

ஆசியாவின் திருமணத்திற்குப் பிறகு சற்று ஆசுவாசமான வாழ்க்கை அஸ்மாவுக்குக் கையில் கிடைத்தது. ஓட்டம் போட்ட உடம்பு ஓய்வெடுக்க விரும்புமா? பக்கத்துவீட்டு மைமூன் குழந்தைப்பேற்றிற்காக டாக்டரிடம் நடையாய் நடந்தது முதல் பக்கத்துதெரு மரியம்பாத்து வாப்மா கீழே விழுந்தபோது டாக்டரிடம் அழைத்துச்சென்றது வரை அஸ்மா தான் எல்லாருக்கும். இதோ இப்பொழுது ஆபிதாவின் வரன் தேடல், ஒவ்வொரு நொடியும் இறையோனிடம் உதவி தேடலைத் தீவிரப்படுத்தியிருந்தது.

’அட.. தஸ்னீம் வந்திருக்காளா?’ வீட்டு வாசலில் கிடந்த தஸ்னீமின் செருப்பு அஸ்மாவை புன்னகைக்க வைத்த சமயம், உள்ளே ஆபிதாவின் பேச்சு உறுதியான குரலில் தொடர்ந்து கொண்டிருந்தது. 

“ஏன் சாச்சி... பெரிய்ய குடும்பம்னா அப்படி இருக்கும் இப்படி இருக்கும்னே எப்பவும் எல்லாரும் பயங்காட்டிட்டே இருக்கீங்க? எங்க உம்மா, இங்க கல்யாணம் பண்ணிட்டு இப்போ நல்லாதானே இருக்காங்க? உங்களுக்குத் தெரியாதா சாச்சி? விடிந்ததில் இருந்து ஜாமம் வரை உம்மா அடுப்படி விட்டு நகர முடியுமா? சின்னாப்பா, மாமிக்குப் பாடம் சொல்லிக்கொடுத்ததில் இருந்து எங்களுக்கும் எந்த குறையும் இல்லாம வளர்த்து ஆளாக்கி, அதையே தன் வாழ்க்கையாக மாற்றி வாழ்ந்தவங்க மக நான்... அடுப்படி வேலைக்கும் அனுசரிச்சு போறதுக்கும் அசந்துடுவேனா (தயங்கிடுவேனா) நான்?

உம்மா நினைச்சிருந்தா, வாப்பாகிட்ட அழுது பிடிச்சு தனிக்குடித்தனம் போக எவ்ளோ நேரம் ஆகியிருக்கும்? உம்மா ஏன் அப்படி போகல? தன் மாமியார், நாத்தனார், கொழுந்தன் என எல்லாருக்கும் உதவ யாருமில்லன்னு சூழ்நிலை புரிந்து அனுசரிச்சு வாழநினச்சதால் தானே? தான் எல்லாருடனும் நல்லவிதமா பழகினா, அவங்க நல்ல மனசு கேட்கும் துஆ தனக்கும் தன் சந்ததிக்கும் கிடைக்கும்ன்ற நோக்கம் தானே? நான் போகிற இடம் சின்ன குடும்பமோ பெரிய குடும்பமோ, நல்லவங்களோ இல்லையோ... என் எண்ணம் எல்லாம் அவங்க எல்லார்கிட்டயும் நல்ல பெயர் எடுக்கணும். எங்க உம்மா, எல்லார் அன்பையும் சம்பாதிச்ச மாதிரி, நானும் அங்க எல்லாருடைய பாசத்திலும் பங்கெடுக்கணும். தவறி கூட யாரும் எனக்கு விரோதம் வளர்த்துக்காத விதமா நான் நடந்து, எங்க உம்மா, வாப்பா பெயரைக் காப்பாத்துவேன். உம்மா இவ்ளோ நாள் பட்ட கஷ்டத்துக்கு அவங்களுக்கு இதுதான் நான் கொடுக்கப்போகும் பரிசு”


தானறியாமல் தான் விதைத்த விதை வேறூன்றியிருப்பதையும் அது விரைவில் விருட்சமாக வளர்ந்து நிழல் கொடுக்கவிருப்பதையும் அறிந்தபோது அஸ்மா, தன் பிள்ளைகளுக்காகக் கேட்ட துஆவை இறையோன் ஏற்கனவே நிறைவேற்றியிருந்ததை உணர்ந்தாள்.


காக்கா:அண்ணன்
மைனி:அண்ணன் மனைவி
சாச்சி:சித்தி

படம்: இணையம்

10 comments:

apsara-illam said...

மிகவும் அருமை.....
அருமையான எழுத்து நடை

Anonymous said...

நல்ல கருத்து. சொன்ன விதம் அருமை
~~~KSB

பானு said...

வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழிகளே அப்சரா & KSB :)

Anonymous said...

Kadhaiya nalla eduthutu poyirukka....amma character oda flashback thirumbi veetuku nadanthu varum pothu ninachu pakira mathiri solli irunthathu iyalba(real) irunthathu...slangs um nalla use pannirukka...goodone ----nithya

Abidha Sulaiman said...

இயல்பான அருமையான எழுத்து. மொழி ஆளுமை அபாரம். இன்னமும் அதிக அதிகமாக எழுத வாழ்த்துக்கள்

Abidha Sulaiman said...

இயல்பான அருமையான எழுத்து. மொழி ஆளுமை அபாரம். இன்னமும் அதிக அதிகமாக எழுத வாழ்த்துக்கள்

பானு said...

Thanks for your appreciation nithya. Very happy to see your have enjoyed the slangs too. :)

பானு said...

உள்ளார்ந்த பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஆபிதா.... :)

kasim mohamed gani said...

story is o.k. but minor mistake. 2 sister+2 brother+ 2 younger brother + maapilai = 7.

பானு said...

//பையன் கூடப் பிறந்தவங்க 6 பேர். 2 அண்ணன், 2 அக்கா, 2 தம்பி. //

பையன் கூடப் பிறந்தவங்க தான் 6 பேர். அவரையும் சேர்த்தால் 7.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ப்ரதர்.