Tuesday, February 17, 2015

நான் முஸ்லிமல்ல... ஆனால் குர் ஆனை நம்புகிறேன்: விஞ்ஞானி (1)


மாரீஸ் புகைல் ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு அறுவை சிகிச்சை மருத்துவராவார். புகழ்பெற்ற அறிஞரும் ஆவார். அவரது நாட்டினர், எகிப்திய அரசிடமிருந்து ’மம்மியாகப் பாதுகாக்கப்பட்ட ஃபிரவ்னின் உடலை பரிசோதனை செய்வதற்காகப் பெற்றனர்.


ஃபிரவ்னின் உடலில் மீது காணப்பட்ட மிகுதியான உப்பு அவன் மூழ்கி இறந்ததைத் தெளிவாக எடுத்துரைத்தது. ஆராய்ச்சிக்குழுவினர் மேற்கொண்டும் தமது பணியினை செய்துகொண்டிருக்க, அக்குழுவின் தலைவரான மருத்துவர் மாரீஸ் புகைலுக்கோ ஃபிரவ்ன் எப்படி மூழ்கினான் என்று வியப்பு மேலிட்டது. இது பற்றி இஸ்லாமியர்களின் வேதமான குர் ஆனில் இருப்பதாக அறிய வந்தார். 18ம் நூற்றாண்டில் தான்  ‘மம்மிகள்’ கண்டெடுக்கப்பட்டன. ஆனால் அவற்றைப் பற்றி 14ம் நூற்றாண்டிலேயே குர் ஆனில் குறிப்பிடப்பட்டதை அறிந்த மருத்துவர் குர் ஆனைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு தமது 50வது வயதில் அரபி கற்க சவூதி அரேபியா சென்றார்.


ஃபிரவ்ன் குறித்த குர் ஆனின் கீழ்வரும் வசனங்களைக் கண்டு ஸ்தம்பித்து நின்றார். ஏக இறைவனின் ஒரு எழுத்தைக் கூட மறுக்கவியலாதவராக ஏற்றுக்கொண்டார்.10:90மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.

10:91“இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.

10:92எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது).

தான் கற்றுணர்ந்த குர் ஆனின் முதல் வசனம் அவரைப் பெரிதும் ஈர்க்க இன்னுமின்னும் தன் தேடலைத் துவங்கினார். இஸ்லாம் மீதிருந்த தமது தவறான கண்ணோட்டங்களைத் தம்மை மருத்துவத்திற்காகக் காணவந்த முஸ்லிம்கள் மூலம் அறிந்து களைய முயற்சிகளை மேற்கொண்டார். அவருக்கு அதுவரை தகவல் களஞ்சியமாக விளங்கியவை வானொலியும் தொலைக்காட்சியும் சில நூல்களுமேயாகும். அவற்றைத் தவிரவும் இஸ்லாம் மீதான தன் பார்வையை விரிவுபடுத்தினார். தாம் முன்பு கண்டெடுத்த, இஸ்லாம் என்பது முஹம்மது என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட மதம் என்னும், ஆராய்ச்சி முடிவுகளை மீளாய்வு செய்தார். இப்பொழுது அவருக்கு குர் ஆனைக் குறித்து கிடைத்திருந்த மேலதிக தகவல்களையும் விரிவான கண்ணோட்டங்களையும் கொண்டு தமது முன் முடிவுகள் தவறாக இருப்பதையும் முழுமையாக உணர்ந்தார்.


1976ல் Quran, Bible, and Science என்ற புத்தகம் எழுதி புகழடைந்தார் மருத்துவர். அதன் பின் குர் ஆனை நன்கு ஊன்றிப்படித்த மருத்துவர் (மனிதனின் தோற்றம்) The Origin of Man என்ற புத்தகம் எழுதி வெளியிட்டார். இப்புத்தகம் இஸ்லாத்தையும் மருத்துவரையும் உலகின் பலதரப்பட்ட மக்களுக்கும் அறிமுகப்படுத்தியது. அன்றைய தினம், உலகைக் குறித்த விடைகிடைக்காத பல கேள்விகளுக்கும் ஆதாரப்பூர்வமாகத் தம் விடைகளை குர் ஆனின் ஒளியில் பதிந்தார். அவரது ஆராய்ச்சிகளையும் முடிவுகளையும் தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருமனதுடன் ஏற்றுக்கொண்டனர். குர் ஆன் மீதான தமக்கிருந்த   ஆழ்ந்த அறிவால் பல அறிஞர்களுக்கும் உண்மையை எடுத்துரைத்தார். டார்வினின் தத்துவத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக்கொண்டார். ஒரு கட்டத்தில் குர் ஆன் ஏக இறைவன் த்னது தூதரின் வாயிலாக உலகுக்கு வழங்கிய இறைவேதமே என்று தான் ஆய்ந்தறிந்த முடிவினை வெளியிட்டார். 


இருப்பினும் ஒரு முஸ்லிமின் ஆராய்ச்சிகள் இஸ்லாத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்று பலரும் குற்றம் சுமத்தி அவரது கருத்துகளை உலகம் ஒதுக்கியபோது ஒரு சுயவிளக்கம் அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வாயடைக்கச் செய்தார். அந்த சுயவிளக்கம் இதுதான்:


”என் ஆராய்ச்சிகளின் முடிவுகள் அனைத்தும் இஸ்லாத்தையும் அதன் ஏக இறைவனையும் மெய்ப்படுத்துகின்றன என்பது முழுக்க முழுக்க உண்மையாகும். ஆனால் இதனை ஒரு முஸ்லிமாக நான் கூறவில்லை. அவ்வாறு இஸ்லாம் என்ற ஒரு வட்டத்தில் இருந்து கொண்டு என் ஆய்வறிக்கைகளை நான் வெளியிட்டால் உலகம் ஏற்கத்தயங்கும். நான் அந்த வட்டத்தை விட்டும் வெளியே இருந்தே இஸ்லாம் என்பது உண்மை; அதன் வேதம் மெய்யானது என்று ஒப்புக்கொள்கிறேன்” என்று அறிவித்தார்.


இவ்வாறு முஸ்லிம்களுக்கு ஆதரவாகத் தம் வாழ்வைக் கழித்த அவர் இஸ்லாத்தினை ஏற்றிருந்தால் அவருக்கும் நன்மையாக அமைந்திருக்கும்.


Reference:

http://www.islam.ru/

No comments: