Sunday, December 23, 2012

கேள்விகள் ஆயிரம்...பதில் ஒன்றே..

பொதுவாக கண்டனத்திற்குரிய விஷயங்கள் நடைபெறும்போது அதை எதிர்த்து பலர் பதிவுகள் போடும்போதும் என்னுடைய எதிர்ப்பையும் கண்டனத்தையும் அவர்களது பதிவில் பின்னுட்டமாகவே தெரிவிக்கும் பழக்கம் இருந்தது. உதாரணமாக முஹம்மது நபி சம்பந்தப்பட்ட படம் வெளிவந்தபோது கூட என்னுடைய கோபமும் ஆத்திரமும் என் தனிப்பட்ட துஆவிலேயே வெளிப்படுத்தினேன். சமீபத்திய டெல்லி விஷயம் கேள்விப்பட்டு என் கோபத்தையும் ஆறாமையையும் மட்டுமல்ல என் அழுகையையும் கட்டுப்படுத்தவே முடியவில்லை.


4069. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்.
(உஹுத் போரில் காயம் ஏற்பட்டதற்குப் பிறகு) ஃபஜ்ருத் தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, 'சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹு - ரப்பனா வல(க்)கல் ஹம்து' என்று கூறியதற்குப் பின்னால், நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! இன்னான், இன்னான், இன்னானை உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!" என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், 'அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, (நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை" என்னும் (திருக்குர்ஆன் 03: 128-வது) வசனத்தை இறக்கியருளினான்.
Volume :4 Book :64


17:11. மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். 
 
கடுங்கோபத்திலும் விரக்தியிலும் இறைவனிடம் இறைஞ்சினாலும்  மேற்கண்ட ஹதீஸை நினைவில் வைத்தே துஆ செய்ய முயல்கிறேன்.


பெண்கள் மென்மையானவர்கள் எனத் தெரிந்தும் ஏன் இப்படி இக்கயவர்களால் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ள முடிகிறது? அன்னியப் பெண்களை மட்டுமின்றி தாய், சகோதரி, உறவுக்காரப் பெண்கள், பிள்ளைகள் ஸ்தானத்திலுள்ள மாணவர்களிடமும், சக   ஊழியர்களிடமும் என்று தொடங்கிய உங்களது கயமை இந்நாட்களில் பெற்ற மகளிடமே வந்து சேர்ந்துவிட்டதே.... பிறந்து ஆறு மாதமேயான குழந்தைகளும் உங்களின் காமவெறியிலிருந்து தப்பிக்கவில்லையே....ஏன் ..... பெண்கள் எந்த அளவிற்கு மென்மையானவர்களொ நீங்கள் அந்த அளவிற்கு மோசமானவர்களா? வெளியிடங்களில் தான் சந்தித்த, தன்னிடம் அவமரியாதைக்குரிய முறையில் நடந்து கொண்ட ஆண்களைப் பற்றித தங்களது சகோதரர்களிடம் தந்தைகளிடமும் வந்து அழுகையினூடே  பகிரும்போது ஒரு வித ஆறுதல் கிடைத்த காலங்கள் போய் வீட்டிலேயே அந்த கொடுமைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். ஏன்?

இவ்வுலகை உங்களைப் போன்ற எல்லைக்குட்பட்ட உணர்வுகளுடன் உங்களைப் போன்ற எல்லைக்குட்பட்ட மகிழ்ச்சியுடன் ரசிக்க நினைப்பது ஒரு பெரும்தவறா? வெளியில் செல்ல வேண்டுமென்றாலே      ஏன் பெண்களுக்கு அச்சத்தையும் தவிப்பையும் தர்மசங்கடங்களையும் உருவாக்குகிறீர்கள்?  ஏன் பெண்களை  போகப்பொருளாகவே பார்க்கிறீர்கள்? இன்னும் எத்தனை நாட்களுக்கு ஆரம்பகாலங்களில் பெண்களை அடிமைப்படுத்திய உங்கள் மூட முன்னோர்களையே காரணம் சொல்லப்போகிறீர்கள்? அவர்களைப் போல நீங்களும் அறிவீனர்கள் தானா? சுய அறிவைப் பயன்படுத்தி முன்னேறமாட்டீர்களா? உலகை முன்னேற்றமாட்டீர்களா? உங்கள் கேவலமான தாழ்ந்த எண்ணங்களுக்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு பெண்களின் உடைகளையே காரணம் சொல்லப்பொகிறீர்கள்?  சாதாரணமாக உங்கள் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தாலும் அப்பக்கம் ஒரு பெண் வந்தால் உங்கள் பேச்சு தடைபடுவது ஏன்? அரைகுறை ஆடை தான் காரணம் என்கிறீர்களா .... சாதாரணமான சுடிதார் உடையணிந்து வரும் பெண்களையும் உங்கள் கேவலமான பார்வையால் துளைத்து கூனிக்குறுக வைக்கிறீர்களே..... விபரமறியா விளையாட்டுக் குணமுள்ள சின்னஞ்சிறுமிகளையும் விடுவதில்லையே... ஏன்?

உங்களது இக்கீழ்த்தரமான  செயல்களுக்குப் பயந்து எத்தனைஎத்தனை பெண்கள்  தங்களது அத்தியாவசியப் படிப்புகளைக்  கூடத் தவிர்த்து வீட்டில் அடைந்துகிடக்கின்றனர்? அவர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக மிகவும் சமீபகாலமாகத்தானே சிறிது துணிச்சலோடு மேற்படிப்புகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்?! இந்த மாதிரி கொடூரமான ஒவ்வொரு சம்பவங்களும் எத்தனையெத்தனை பெண்களின் படிப்புகள் அவர்களது பெற்றோர்களால் பாதியில் நிறுத்தப்பட காரணமாகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?

இரவில் தனியாக வரப் பயந்துதானே ஒரு ஆண் துணையுடன் வந்திருக்கிறாள் அப்பெண்... அது நண்பராக இராமல் உறவினராக இருந்திருந்தாலும் அவருக்கும் இதே கதிதானே நிகழ்ந்திருக்கும்? அவள் செய்த குற்றம் தானென்ன? பெண்ணாகப் பிறந்ததா? அவர் சினிமாவுக்குச் சென்றதுதான் குற்றமா? அப்படியே வைத்துக்கொள்வோம்.... வேறொரு நியாயமான காரணமாகயிருந்து இதே இரவுநேரப் பயணம் மேற்கொள்ளத தகுந்த சுழல் உள்ளதா இவ்வுலகில்? இறைவனுக்கு அடுத்தபடியாக இக்கால மக்களின் நம்பிக்கையைச் சம்பாதித்த மருத்துவத்துறையில் சேவையாற்ற வரவிருந்த ஒரு பெண்ணை இப்படி அலங்கோலப்படுத்திவிட்டீர்களே???இது போல் கொடுமைகளைச் சந்தித்த கற்பழிக்கப்பட்ட பெண்ணை இதுவரை பார்த்ததேயில்லை என சப்தார்ஜங் மருத்துவமனையின் மருத்துவர்களே வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார்களே...  ஈரம் என்பதை கண்ணில் கூட காணாதவர்களா நீங்கள்?  அன்னியப் பெண்களிடம் உங்கள் கண்ணியத்தைக் காட்டமுடியாத நீங்கள் உங்கள் தாய், சகோதரிகளிடம் பந்த பாசத்துடன் நடந்துகொள்வீர்கள் என எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம்?? உங்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் அவமானத்தை உண்டாகிய நீங்கள் உயிருடன் இருந்து சாதிக்கப்போவது தான் என்ன????

அய்யா, கனவான்களே..... மரணதண்டனையை எதிர்ப்போம் எனும் உங்கள் கொள்கைகளைச் சிறிது ஓரங்கட்டிவைத்துவிட்டு இக்கொடுற மிருகங்களைத் தயவுசெய்து தூக்கிலிட்டு மனிதகுலத்திற்குப பெருமை சேருங்கள்.

அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;” எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே! 5:45

வரும் மூன்று காரணங்களால், பழிக்குப்பழி வாங்குவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அதனை ஒரு வன்முறை மதமாக கருதுவது  ஆதாரமற்றதாகிறது.

1. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கிடைக்கிறது. அவர்களுடைய கோபம் மட்டுப்படுகிறது. இதனால் கட்டுப்படுத்திய கோபம் ஒருனாள் வெடித்துச் சிதறி இன்னும் அதிகமான இழப்பிலிருந்து பாதுகாக்கிறது.
2. தவறு செய்பவர்களுக்கு ஒரு படிப்பினை கிடைக்கும்
3. மக்களைப பாவம் செய்வதிலிருந்தும் தடுக்கிறது.

இத்தகைய சம்பவம் இந்தியாவில் நடந்ததால் இந்தியர்கள் மட்டுமே கற்பழிப்புக் குற்றத்தை அலட்சியம் செய்கிறார்கள் என்றில்லை. உலகளவில் அனைத்து நாட்டின் அரசாங்கங்களும் இவ்விஷயத்தில் எந்த வித கடுமையான சட்டதிருத்தங்களுமின்றி  தான் இருக்கின்றன. சமீபத்தில் கருச்சிதைவு தடைசெய்யப்பெற்ற அயர்லாந்தில் இந்தியப் பெண்  மருத்துவர்  ஒருவரது கருவே அவருக்கு எமனாகி அவரது உயிரைப் பறித்துவிட இப்பொழுது சட்டத்தை மறுபரிசீலனை செய்து, தவிர்க்கமுடியாத சமயங்களில் கருச்சிதைவு செய்யப்படலாம் எனு சட்டம் கொண்டுவர இருக்கின்றனர். இது நல்ல விஷயம்தானே என்கிறீர்களா?  ஒரு சின்ன ப்ளாஷ்பேக்... 14 வயது சிறுமி ஒருவர் அந்நாட்டில் சில நாட்கள் முன் கற்பழிக்கப்பட, அவர் கருவுற்றிருக்கிறார். அச்சிறுமியோ கருச்சிதைவைக் கோரி வழக்குத் தொடுக்க  கருச்சிதைவு அவருக்கு மறுக்கப்பட்டது. இப்பொழுது செய்த மறுபரிசீலனை இச்சிறுமியின் வழக்கின்போதே செய்திருந்தால் இந்நேரம் அம்மருத்துவர் உயிர் பிழைத்திருப்பார். ஆக கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்  செய்த அயர்லாந்தைப் போல் இந்தியாவும் ஆகிவிடாமலிருக்க இப்பொழுதே சட்டதிருத்தம் கொண்டுவரப்பட  வேண்டும்.. கற்பழிப்பு குற்றத்திற்கு மரணதண்டனையைக் கட்டாயச்  சட்டமாக்க வேண்டும். குற்றவாளி எத்தனை மேல்முறையீடு செய்தாலும் மரணம் நிச்சயம் எனும் சூழல் வேண்டும்.

சட்டம் கொண்டுவந்தால் நாளையே இத்தகைய குற்றங்கள் ஒழிந்துவிடுமா... இல்லைதான்.... சில நாட்கள் இல்லையென்றாலும் சிலவருடங்க்களிலாவது பெண்கள் நிம்மதி பெருமுச்சு விட  முடியும். இதுவரை பெண்கள் பட்ட துயரங்கள் போதும் ... இனிவரும் சந்ததியினராவது இக்கொடுமைகளிலிருந்து தப்பிக்கும் பாக்கியம் பெறட்டுமே...

பஸ்களில் பெண்களுக்கெதிராக நடக்கும் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனில் பஸ்ஸினுள்ளே கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். இச்சம்பவத்தில்  உபயோகப்படுத்தப்பட்ட பஸ் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகனமாகும். பொதுமக்களை ஏற்றிக்கொள்ள அனுமதி கிடையாது. இந்த சம்பவத்தைப் பார்த்தால் அந்த டிரைவர் உள்பட மற்றவர்கள் அவ்வாகனத்தில் வரும் குழந்தைகள் வாழ்க்கையிலும்  பாதிப்பு ஏற்படுத்தியிருப்பார்களொ என்ற அச்சம் வருகிறது. அவ்வாறு நடந்திருக்கக்கூடாது என மனதார வேண்டுகிறேன்..

ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களே,, பெண்களை ஆபாசமாகக் காட்டுவதை விடுத்து  அழகாகக் காட்டுவதில்  எந்தத் தவறுமில்லை.. இதன்  மூலமே நீங்கள் சம்பாதித்த புகழ் மக்கள் மனதிலும் பொருள் உங்கள் கைகளிலும் நிலைத்து நிற்கும் என்பதனை மறக்காதீர்கள்.சகோதரர்களே... தாய், மகள், மனைவி, சகோதரி எனும் நிலைகளைக் கடக்கும் பெண்கள் அந்ததந்த நிலைகளுகேற்ப அவர்களது கடமையைச் செவ்வனே நிறைவேற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்..   ஆனால்   தந்தையாக நீங்கள் உங்கள் மகள்களுக்கு தங்க நகைச் சேர்க்கவில்லையென்றாலும் பரவாயில்லை... சகோதரனாக நிங்கள் தாய்மாமன் முறை சீர் செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை... மகனாக உங்கள் தாய்க்குச் சேவை செய்யாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்தாலும் பரவாயில்லை.... கணவனாக உங்கள் மனைவிக்கு மூன்றவேளை உணவு,உடை தந்து சீராட்டவில்லையென்றாலும் பரவாயில்லை.... இவ்வனைத்து நிலைகளிலும் ஒரு நல்ல நண்பனாக மட்டுமிருந்தாலே போதும்... பெண்களது சுகதுக்கங்களில் ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் கூறினாலும் போதும்.... அன்னியப்பெண்களைப் பார்க்க நேர்ந்தால் மனதார இறைவனிடம் பாதுகாவல் தேடுங்கள் (அவள் காட்டுகிறாள்... நான் பார்க்கிறேன் என்பவரா நீங்கள்? அவள் நரகத்திற்குச் சென்றால் நீங்களும் துணை செல்லத் தயாரா?). பெண்களின் சதையைப் பாராமல், அவர்களும் உங்களைப் போன்றே உணர்வுகளும் ஏக்கங்களும் கனவுகளும் கொண்டவர்கள்  எனும் அடிப்படையை மனதில் பதியுங்கள் போதும்.

ஆண்களே... வெளியே தனியாகச் செல்லுவதற்கு பெண்களுக்கு அசாத்திய மனதைரியம் தேவை  எனும் சூழல் இருந்தால் அது ஆண் இனத்திற்கே அவமானமில்லையா? உங்களோடு சேர்ந்து உலகை முன்னேற்ற பெண்கள் தயாராக இருக்கிறார்கள். உங்களோடு கருத்து வேறுபாடின்றி உங்களுக்குத் தெரிந்த அதே உலக அறிவோடு  உங்களுக்கிருக்கும் அதே உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும்  நாட்டில் நடக்கும் பாலியல் கொடுமைகள், திருட்டு, கொலை, ஊழல், வரதட்சணை, வன்முறை,  சட்டமீறல் ஆகிய அனைத்து குற்றங்களையும் எதிர்த்து போரிட தயாராயிருக்கிறார்கள். நீங்கள் தயாரா?


(இந்தப் பதிவு பெண்களைத்  தமது மனசாட்சியின்படி பெருமைப்படுத்தும்  ஆண்களுக்கு அல்ல)

Saturday, December 22, 2012

தோசையம்மா தோசை...

வெளிநாடுகளில் குடும்பத்துடன்  இருப்பவர்களை விட தனியாக இருக்கும் அநேக மக்கள், என்னைப் பொறுத்தவரை, ஹோட்டல்களுக்கு அதிகம் செல்வதில்லை.


அதிகம் பார்த்தால் பேச்சிலர்ஸ் குழம்பு வீட்டில் செய்து கொண்டு குபூஸ், பரோட்டா, நாண் போன்றவற்றை கடையில் வாங்கிக் கொள்வர். மைதாவில் செய்யப்படும் இவ்வுணவுகளை ஓரளவிற்கு குறைத்துக் கொள்ளலாம் - கோதுமை, அரிசிமாவு தோசை போன்ற எளிய உணவுகளைச் செய்யப் பழகிக் கொண்டால்.


அரிசிமாவு தோசைக்கு மாவையும் கடைகளில் தான் வாங்கிக் கொள்ள வேண்டிய நிலையிலிருக்கின்றனர். ஆனால் கோதுமை தோசை எளிமையாக வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.

கோதுமை மாவில் உள்ள சத்துக்கள்:

கார்போஹைட்ரேட், நார்ச் சத்து, மெக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், ஃபோலிக் அமிலம், தைமின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. ரிபோஃப்ளோவின், புரதம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம் ஆகியவை ஓரளவும்... குரோமியம், கால்சியம் மிகக் குறைந்த அளவும் இருக்கின்றன. கோதுமை மாவில் செய்யப்படும் உணவுகள் மெதுவாகத்தான் ஜீரணமாகும் என்பதால், சர்க்கரை நோயாளிகள் எண்ணெய் சேர்க்காமல் சுக்கா ரொட்டியாகச் சுட்டுச் சாப்பிடலாம். சாப்பிட்டதும் நன்றாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் (http://balajipriyan.blogspot.com/2012/05/blog-post.html)

ஓக்கே...இனி தேவையான பொருட்கள்:


கோதுமை மாவு - 2 டம்ளர் (கிட்டத்தட்ட 400கி)
தண்ணீர் - 1 1/2 டம்ளர் 
உப்பு - 1 ஸ்பூன் 

தாளிக்க:

வெங்காயம் - 1 (மீடியம்)
தக்காளி - 1 (மீடியம்)
மிளகாய் - 1
கருவேப்பிலை, கொத்தமல்லியிலை - சிறிது


செய்முறை:
கோதுமை தோசை செய்ய மாவில் ஒன்றரை டம்ளர் தண்ணீரை முதலிலேயே சடாரென்று ஊற்றிவிடவும். சிறிது சிறிதாக ஊற்றினால் கட்டிகள் ஆகிவிடும். உப்பையும் போட்டு நன்றாக கலக்கி விடவும். இப்போது தேவைக்கு மீதி தண்ணீரையும் ஊற்றி வைக்கவும்.


கடுகு,உளுந்து தாளித்து வெங்காயம்,தக்காளியைப் போட்டு வதக்கவும். வதங்கியதும் பொடியாக நறுக்கிய மிளகாய், கருவேப்பிலை, மல்லியிலை போட்டு சிறிது வதக்கவும்.  மாவில் சேர்த்து கலக்கி இப்படி மொறுமொறுவென சுட்டெடுத்தால் பரோட்டா தோற்றுவிடும். சத்துக்கு சத்துமாச்சு. வீட்டிலேயே செய்ததுமாச்சு.தொட்டுக்கொள்ள கறிகுழம்பானாலும் சரி.... தேங்க்காய்ச் சட்னியானாலும் சரி... சுவை அருமையாகயிருக்கும். அரிசிமாவு தோசை போல் அல்லாமல் கணக்கின்றி தாராளமாகச் சாப்பிடலாம்.


இதை ஜலிலாக்காவின் பேச்சிலர்ஸ் ஃ பீஸ்ட் ஈவெண்ட்டிற்காக அனுப்புகிறேன்.

Wednesday, December 19, 2012

ஈஸி இறால் குழம்பு

தலைப்பில் ஈஸியானதுன்னு எழுதியிருக்கேனே தவிர, இது மிக மிக மிக ஈஸியான செய்முறை... இறால் சுத்தம் செய்யும் நேரம் போக அரைமணிநேரத்தில் முடிந்துவிடும்.

இறாலில் உள்ள சத்துக்கள்:

இறாலில் அதிகமாக கல்சியம், அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. இறால்களில் அதிகப்படியான கொழுப்பு காணப்படுகிறது. இந்த கொழுப்பானது நல்ல கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்பு வகையைச் சேர்ந்ததால், இதனை உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் (விக்கி ) .     செலெனியம், புரதம் நிறைந்த மற்றும் விட்டமின் B12,D, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்,இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தனாகம்,தாமிரம் நிறைந்த நல்ல சத்தான உணவாகும். (http://aarokyam.blogspot.com)


ஓக்கே...இனி தேவையான பொருட்கள்:

இறால் - 25 - 30

வெங்காயம் - 2

தக்காளி - 2

மிளகாய் - 1

எலுமிச்சை - பாதி

மிளகாய்த்தூள் - 1 டே.ஸ்பூன்

இஞ்சிபூண்டு விழுது - 1 டே.ஸ்பூன்

கருவேப்பிலை, கொத்தமல்லியிலை - சிறிது

தேங்காய் - கால் முறி அரைத்தது

உப்பு - தேவைக்கு 

செய்முறை:

1. பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய் மற்றும் கருவேப்பிலை போட்டு வதக்கவும்.

2. வெங்காயம் பாதி வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

3. தக்காளியும் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

4. தக்காளி நன்கு குழைந்ததும் மிளகாய்த்தூள் சேர்க்கவும். அனைத்தையும் ஒரு நிமிடம் நன்கு வேக விடவும்.

5. பிறகு பாதி எலுமிச்சை பிழியவும். உப்பு இரண்டு ஸ்பூன் சேர்க்கவும்.

6. ஒரு நிமிடம் கழிந்ததும் இறாலைச் சேர்க்கவும். 15 - 20 நிமிடங்களில் இறால் வெந்துவிடும்.


7. பிறகு தேங்காய் விழுது சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

8. பிறகென்ன சாதம், ரசத்துடன் சேர்த்து ஒரு பிடி பிடிக்க வேண்டியதுதான்.
இது வரை சமையல் குறிப்புகளைப் படிக்க மட்டுமே செய்திருக்கிறேன்...  முதல் குறிப்பிது..... எதொவொண்ணு மிஸ் ஆகற மாதிரியே ஃபீலிங்...... ஆனா எதுன்னுதான் தெரியல.....(குறிப்பில் உப்பு சேர்த்துட்டேன்..நன்றி ஹுஸைனம்மா) ஒக்கே..இனி ஜலீலாக்கா பாடு...ஏன்னா இதை ஜலிலாக்காவின் பேச்சிலர்ஸ் ஃ பீஸ்ட் ஈவெண்ட்டிற்காக அனுப்புகிறேன்.

Thursday, November 29, 2012

போட்டி......போட்டி ........ போட்டா போட்டி!!!

ப்ளாக் ஆரம்பிக்க ஆசைப்பட்டு ஒரு ப்ளாக்கையும் ஆரம்பிச்சுட்டு அதுல பதிவுன்றதே அத்தி பூத்த மாதிரி இருக்கு...மைண்ட்ல நிறைய உருப்படியான சப்ஜக்ட் இருந்தும் அதை முறைப்படி கொஞ்சம் நெட்டில் ரெஃபர் செய்து ஆற அமர எழுத நேரமின்மையால் ஏதோ மொக்கை பதிவா போட்டு காலத்தை ஓட்டிக்கிட்டுருக்கேன்.... :((...


அதான் எல்லாருக்கும் தெரிஞ்ச கதை தானே....வேற மேட்டர் கிடைக்காததானால பதிவு போட முடியாததையே ஒரு பதிவா எழுதப் போறியான்னு கேட்டு எனக்கிருக்கிற கொஞ்ச நஞ்ச மானத்தையும் காற்றில் பறக்க விட்டுடாதீங்க.... அது உங்களால் முடியாது...ஏன்.... ஏன்னா நானே அதை கொஞ்ச நாள் முன்னாடிதான் ஒரு பதிவு போட்டு என் மானத்தை நாடு கடத்திட்டேன் ஹி..ஹி..ஹி..


இப்படியாக பொய்க்கிட்டுருந்த வேளையில் இஸ்லாமிய பெண்மணியில் ஒரு கட்டுரைப் போட்டி ஒன்று அறிவித்தார்கள். சரி.. நம்ம ப்ளாகில் தான் ஒண்ணும் உருப்படியாக எழுத முடியல... தானாக வந்த வாய்ப்பையாவது கொஞ்சம் உபயோகப்படுத்திக் கொண்டு வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுப்போம்னு ஒரு ஆர்வம் வந்தது. பரிசு வாங்கிற பேராசையெல்லாம் இல்லை (ஹி..ஹி..).. நமக்கு எப்பவும் மத்தவங்களுக்கு ....(அக்கா, தங்கை, கணவர் தவிர) விட்டுக்கொடுத்து தான் பழக்கம்..... ஏதாவது வேலையில் இருக்கும்போது இந்த கட்டுரை சம்பந்தமா சில பாயிண்ட்ஸ் தோன்றும்... அதற்கு எப்படி அழுத்து வடிவம் கொடுக்கறதுன்னு தெரியாம முழிச்சிட்டுருக்கறது வேற விஷயம்.


ஒக்கே..கமின் டு தி பாயின்ட்... இந்த கட்டுரையில் முக்கியமான அம்சம் என்னவென்றால் இஸ்லாமிய தளத்தில் இக்கட்டுரையை ஒரு முஸ்லிம் தான் எழுத வேண்டும் என்றில்லை..யார் வேண்டுமானாலும் எழுதலாம்.... பரிசுகளை வெல்லலாம். யாராயினும் கட்டுரையின் விவாதத்தில் பாசிட்டிவான விஷயங்கள் மட்டுமல்ல உண்மையான நெகடிவ் விஷயங்களையும் பகிரலாம். அவை கல்வித்துறையில் பின்தங்கியிருக்கும் முஸ்லிம்  சமுதாயத்தைக்  கொஞ்சம் முன்னேற்றப் பாதையில்  இட்டுச் செல்ல உதவும்.
இது தான்  அப்பரிசுப் போட்டிக்கான  தலைப்பு..... பங்கு பெறுங்கள்... வெல்லலாம்..., இன் ஷா அல்லாஹ் :-)

                          ஒன்றரை மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.  வழக்கம்போல் மெதுவாக தூசு தட்டி எழுத ஆரம்பித்தால் நம்ம ஜலிலாக்கா ஒரு சமையல் போட்டி அறிவிச்சாங்க....  சரி...பெரிய சமையல் கலை வல்லுனர்கள் பங்கேற்கப்போற போட்டி... நாம போய் 'ஆஹா... சூப்பர் அக்கா...  போட்டியை வெற்றிகரமா நடத்த வாழ்த்துக்கள்' னு ஒரு வார்த்தை சொல்லிட்டு வரலாம்னு பார்த்தா இடையில என் பேரைப பார்த்ததும் ஷாக்காகிட்டேன்...


அக்காவோட கையில கால்ல விழுந்தாவது இந்தப் போட்டியில இருந்து எஸ்கேப்பாகலாம்னு கமண்ட் பாக்ஸ் போனா அங்க ஏற்கனவே நான் சொல்ல நினைத்ததையெல்லாம் ஹுசைனம்மா ஜலிலாக்காகிட்ட சொல்லி நல்லா டோஸ் வாங்கி கட்டியிருந்தாங்க.. ஆனானப்பட்ட ஹுசைனம்மாவுக்கே இந்த கதின்னா நமக்கு எதுக்கு வம்புன்னு சத்தம் காட்டாமல் வந்தாச்சு.. :-((


யாராவது கொஞ்சம் குண்டான ஆண்களைப் பார்த்தால் நான் நினைத்துக் கொள்வேன்..... நல்லா சமைக்கத் தெரிந்த மனைவி அமையப் பெற்ற இவர் ரொம்ப அதிர்ஷ்டக்காரர்தான்னு..... அதே சமயம் வத்தலும் தொத்தலுமாயிருக்கிற எங்க ஐயாத்துரையைப பார்த்துக் கொஞ்சம் பரிதாபமாகவும் இருக்கும்... இவர் கொடுத்து வச்சது அவ்வளவுதான்.... நம்ம மேல எந்தத் தப்புமில்லன்ற  உண்மையை நினைத்துக்  கொஞ்சம் சமாதானப்படுத்திக்குவேன். ;-))


இந்த நிலைமையில இருக்கிற என்னை... இந்த உண்மையெல்லாம் தெரியாத அப்பாவி ஜலிலாக்கா என்னையும் ரொம்ம்ம்ப நல்ல்ல்ல்லவன்னு நினச்சு அழைப்பு கொடுத்துட்டாங்க....  நமக்குத் தெரிந்த ரசம் ரெசிப்பியையும்  உப்புமா போடுற ரெசிப்பியையும்   அனுப்பி வைக்கிற முடிவுல இருக்கிறேன்.... அக்கா கோச்சிக்கக்கூடாது, ப்ளிஸ்....
ஆக, எப்பவும் போட்டியும் நினைவுமாக  ஒரு மாதிரி யோசனையிலயே கழிந்து கொண்டிருக்க (ஒண்ணும் செயல்வடிவம் பெறவில்லை ...அது வேற விஷயம்)... அப்புறம் கொஞ்ச நாட்கள்ல என் இனிய இல்லம் பாயிஸாவின் தளத்தில் மற்றொரு போட்டி...... இதில் நிறைய விஷயங்கள் புதுமையாக இருந்தது எனக்கு.... ரொம்ப யோசித்து குழந்தைகளுக்குப போட்டி வைத்திருக்காங்க...  ஆனா... பெற்றோருக்கும் பங்கு உண்டு....  அதாவது, பெற்றோர், இப்போட்டியினைப் பற்றி அவங்க தளத்தில் ஷேர் செய்தால் சுளையாக 20 மார்க்குகள் நோகாமல் கிடைக்கும்ன்ற மாதிரி நிறைய புது விதிகள் சொல்லியிருந்தாங்க....
இந்தப்  போட்டிக்கு முழுதாக ஒரு மாதம் அவகாசமுண்டு. அவங்க ப்ளாக்கில் பின்தொடர்பவர்களுக்கு   மட்டுமே அழைப்பு.... மற்றவர்கள் பங்கு பெற விருப்பப்பட்டால் பாலோவராகிக் கொள்ளுங்கள்னு அவங்க சொல்லியிருந்த டெக்னிக் எனக்கு ரொம்பப்  பிடிச்சிருக்கு....;))


ஆக மொத்தத்தில் இந்த டிசம்பர் மாதம் போட்டி மாஆஆஆதம்..... வெற்றி பெறுவதை விட, பங்கு பெறுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இதன் முலம் பதிவர்களுக்கிடையே நல்ல அறிமுகமும் பழக்கமும் வாழ்க்கையில் ஒரு மாற்றமும் கிடைக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. 


வாழ்க பதிவர்கள்...... வாழ்க போட்டிகள்..... வளர்க தோழமை.... !!!! போட்டிகளில் பங்கு பெறுபவர்களுக்கு வாழ்த்துக்கள்..... வெற்றி பெறுபவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :-)))

Monday, November 19, 2012

கேளுங்க சகோதரிகளே!!

எத்தனையோ விதமான நூதன திருட்டுக்களை கேள்விப்பட்டிருக்கோம்.  சேல்ஸ் ஆட்களாக வீட்டில் நுழைந்து திருடுவது, வீட்டில் உள்ளவர்களின் நம்பிக்கையை சம்பாதித்தபின் அவர்களுக்குத்  துரோகம் இழைப்பது, ரோட்டில் நடக்கும்போது நகைகளை அறுத்துவிடுவது, இப்படி நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் திருடர்கள் ரூம் போட்டு யோசித்து தினுசு தினுசான முறையில் கொள்ளையடிக்கின்றனர்.


ஒகே..... எந்த வகையான திருட்டானாலும் நாம் முதலில் மனக்கவலையில் இறைவனின் மீது பாரத்தைப் போட்டாலும் அவனே திருட்டுப் போனவைகளை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவான் என சும்மா இருந்து விடுவதில்லை. அல்லல்பட்டு சம்பாதித்த நகை, பணத்தை மீட்க நம்மாலான நடவடிக்கைகளை எடுக்கத்தான் செய்கிறோம்.... நாமே சுயமாக திருடனைப் பிடிக்க நிச்சயமாக முயல்வோம்.....காவல்துறையிடம் புகாரளிப்போம்....


ஆனால் அந்த காவல்துறையினரே நேரங்கெட்ட நேரத்திலோ, பெண்கள் தனியாக வீட்டிலிருக்கும் நேரங்களிலோ வீட்டுக் கதவைத் தட்டினால் திறக்கக்கூடாது என்ற அதிர்ச்சி தரும் உண்மையை உணர்த்தும், சமீபத்தில் (18-10-12 அன்று) துபாயில் நடந்த ஒரு திருட்டு சம்பவத்தைச் சொன்னால்  உங்களுக்கே புரியும்..


கணவன் அலுவலகம் சென்ற பின் தன இரண்டு வயது குழந்தையுடன் வீட்டில் இருந்திருக்கிறார் கேரளவைஸ் சேர்ந்த என்பவர். அழைப்புமணி ஓசைக் கேட்கவே 'அந்நியர் யார் வந்தாலும் கதவைத்  திறக்கக்கூடது' என்ற முடிவுடன் வாசலுக்கு சென்றவர் இரண்டு பேர் காவல்துரைஸ் சீருடையில் நின்றிருக்கவே திறக்கவா வேண்டாமா எனக் குழம்பியிருக்கிறார்..... அவரது அந்த குழப்ப மனநிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவரது வீட்டை சோதனையிட வந்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர் அவ்விருவர்.

டேய்.. நாந்தான்டா உன் கூட்டாளி...ஓடாதடா.....


போலீஸ் என்றதும் வேறு வழியின்றி கதவை திறந்தவர் 'எங்கும் போலீஸ் இது போன்று செய்ய மாட்டார்கள்' என்று கூறி  தடுத்து நிறுத்த முயற்சித்திருக்கிறார். (நானாகயிருந்தால் கொத்துச்சாவியை அவங்ககிட்ட கொடுத்துட்டு அவங்களுக்கு டி போட்டு  கொடுத்திருப்பேன்...ஹி .... ஹி )


அவர் சொல்வதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வீட்டிலிருக்கும் நகையனைத்தையும் தங்களிடம் கொடுத்து விடுமாறு கத்தி முனையில் மிரட்டியிருக்கிறார்கள். உயிர் பிழைத்தால் போதும் என்று அவரும் தன்னிடமிருந்த நகையனைத்தையும் அவர்களிடம் கொடுத்திருக்கிறார். அத்தோடு போக வேண்டியதுதானே ..... குழந்தை அணிந்திருக்கும் நகையையும் கேட்டு மிரட்டியிருக்கின்றனர்.


ஆனால் குழந்தையின் வளையல்கள் கழட்ட முடியாதபடி இறுக்கமாக இருந்ததால் அவளுடைய கைகளையே வெட்டுமளவுக்குத துணிந்திருக்கின்றனர். பதறிய அப்பெண், சோப் போட்டு கழுவிக் கழட்டி கொடுத்திருக்கிறார்.  அந்த பிஞ்சுக் கைகளை வெட்டுமளவிற்கு கேவலம் அந்த நகை அவன் கண்களை மறைத்துவிட்டது :-((.. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன கதையாக உயிருக்கு எந்த பாதிப்புமின்றி தாயும் மகளும் தப்பித்தனர். 'எங்கே தம்மைக் காட்டிக் கொடுத்து விடுவாளோ' என நினைத்து அவர்களுக்கு வேறு எந்த வித சேதமும் விளைவிக்காமல் கிளம்பிவிட்டனர். (இறைவன்தான் அந்த எண்ணத்தை அவர்களுக்குக் கொடுக்காமல் தடுத்திருக்க வேண்டும்.... அல்ஹம்துலில்லாஹ் )


போலீசுக்குத் தகவல் தெரிவித்த அப்பெண்ணை  இரு பெண் போலீசார் வீட்டில் வந்து சந்தித்துத் தைரியமாக இருக்கும்படி ஆறுதலளித்துள்ளனர். அவரளித்த விவரங்களையும் அருகிலிருக்கும் கடைகளிலுள்ளவர்களின் தகவல்களின் அடிப்படையிலும் விசாரித்து பாகிஸ்தானைச் சேர்ந்த அவ்விரு திருடர்களையும் போலீசார் கைது செய்துவிட்டனர்; திருடிய      நகைகளையும் மீட்டனர்.அவர்கள் வேலை செய்த கம்பனி இழுத்து மூடப்பட்டு இவர்கள் வேறு வேலை தேடி கொள்வதற்காக விசா கேன்சல் செய்யப்படாமல் விடப்பட்டுள்ளனர். நல்ல வேலையின்மை தானே  திருடர்கள் உருவாவதற்கு முதன்மையான காரணம்?!


இந்த சம்பவத்தில் மனதிற்கு பெரும் நிம்மதி தரும் விஷயம் அவர் உயிர் தப்பியதுதான். ஏனென்றால் இச்சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன்தான் துபாயில் கிட்டத்தட்ட இதே முறையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் செயினைத் திருடியவன் அப்பெண்ணின் உயிரையும் பறித்துவிட்டான் :((((((....... நமது திருச்சியைச் சேர்ந்த அவரது நான்கு வயது குழந்தை இப்பொழுது தாயை இழந்து தவிக்கிறது.  இச்சம்பவத்தில் கைது செய்யப்பட அக்குற்றவாளி சொன்னான் பாருங்க ஒரு காரணம் "அந்தம்மா அன்னிக்கு நகை போட்டு வந்ததைப் பார்த்த பிறகுதான் அவரிடம் திருட நினைத்தேன்". அவனுடைய வாக்குமுலத்தைப் பார்த்ததும், இறைவன் நமக்கு கொடுத்திருக்கும் கொடைகளில் ஒன்றான, பெண்களைப் பலவிதங்களில் பாதுகாக்கும் புர்காதான் நினைவிற்கு வந்தது.


அந்த பெண்ணும் புர்கா அணிந்திருக்கவில்லை என்றாலும்.... குறைந்த பட்சம் அவருடைய அலங்காரத்தை மறைக்கும் விதமாக உடையணிந்து வெளியே சென்றிருந்தால் இந்நேரம் அவரது குழந்தை தாயில்லாக் குழந்தை ஆகியிருக்காது... :-((((((


வீட்டில் இருக்கும்போது உங்கள் விருப்பப்படி இருந்து கொள்ளுங்கள் சகோதரிகளே.....வெளியிடங்களுக்குச் செல்லும்போது உங்கள் ஆடையலங்கரங்களை மறைத்துக் கொள்ளுங்கள்...அது உங்களுக்கு மட்டுமல்ல...உங்கள் குடும்பத்தினருக்கே நன்மையை மட்டுமே கொண்டு வரும். புரிந்து கொள்ளுங்கள் சகோதரிகளே!!! 

Monday, November 5, 2012

முற்பகல் செய்யின்....
தலை வலிக்கு ஏதாவது மரபொந்தில் தலையை வைத்தால் போய்டும்னாங்க..தலையா தலைவலி யான்னு கேக்கலியே.....அவ்வ்வ்வவ்...யாராவது காப்பாத்துங்களேன்..


என்ன ஆச்சு உனக்கு ....

நேத்து கொஞ்சம் வைக்கோல் அதிகமா சாப்பிட்டேன்றதுக்காக என் எஜமான் இன்னிக்கு  இத என் வாயில மாட்டிட்டாருடா... அவ்வ்வ்வ்....இத கொஞ்சம் கழட்டி விடேன்....


ஆஹா... அந்த பச்ச கலர் வீட்டுல கறி சமைக்கிரங்க... அந்த சிகப்பு கலர் வீட்டுல கிளி வளர்க்கிறாங்க.... இன்னிக்கு ஒரு கை பாத்துட வேண்டியதுதான்....

தூரத்தில் பார்த்தா நல்லாருக்கு... பக்கத்துல பார்த்தா தலை சுத்துதே.... யாராவது வந்து காப்பாத்துற வரை இங்கேயே நிக்க வேண்டியதுதான் ..... அவ்வ்வ்வவ்.......


ஆஹா.. புதுசா வந்த எதிர்த்த வீட்டு ரோஸி நாய்கிட்ட கொஞ்சம் ஸ்டன்ட் பண்ண நினைச்சு கண்ணு மண்ணு தெரியாம இப்படி வந்து மாட்டிக்கிட்டமே... ஏ..... அய்யா.... சீக்கிரமா என்னை காப்பாத்துங்க......


வானத்தில இருந்து நமக்கு மாலை விழுதுன்னு நினைத்து கழுத்த நீட்டுனா... என்னது இது.... எந்த பாவிப்பய எங்கிருந்து வீசுனான்னு தெரியலையே..


டேய்.... உன் மகனுக்கு 'யானைக்கும் அடி சறுக்கும்' சொல்லி புரியவைக்க முடியலன்னு என்னை இப்படி குழிக்குள தள்ளி விட்டுத்தான் புரியவைக்கனுமா...அவ்வவ்..... அம்ம்ம்மா ....


வாயில்லா ஜீவன்கள  கஷ்டப்படுத்துற அந்த பாவமெல்லாம் ஒண்ணா சேர்ந்து தான் உலகத்துல இந்த மாதிரி கொடுமையெல்லாம் நடக்குது..... அவ்வ்வ்வ்....

Thursday, October 18, 2012

நாம எல்லாரும் விஞ்ஞானிதான்!!

நாம எல்லாருமே குடும்பம், குழந்தைன்னு ஆனத்துக்கப்புறம் நம் வாழ்வில் ஏங்குறதுனு ஒண்ணு இருந்ததுன்னா அது நம்முடைய இளமைப்பருவம்...அதுவும் நம் குழந்தைப்பருவம் என்பது ஒவ்வொருவரும் நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்வோம். நம் கணவரிடமும் நம் குழந்தைகளிடமும் நம் குழந்தைப்பருவத்தைப் பகிர்ந்து கொள்வோம். (நானெல்லாம் குழந்தையா இருக்கறச்சே.. அப்படீன்னு ஆரம்பித்தாலே அவங்க ஓடிடுவாங்க...அது வேற கதை :))

அப்படிப்பட்ட என் சிறுவயது காலங்களில் உலகில் நடக்கும் சில விஷயங்களை அது எப்படி நடக்கிறது என்று புரியாத பருவத்தில் அது பற்றி நானே கற்பனை செய்து நம்பிக் கொண்டிருந்ததை உங்களிடம் பகிர்ந்து உங்க பாராட்டை அள்ளிக்கலாம் என்று முடிவு செய்ததன் விளைவுதான் இந்தப்பதிவு. ஹி..ஹி..ஹி...

அந்தக் காலத்திலும் சரி இந்தக் காலத்திலும் சரி... குழந்தைகளை ஈர்க்க இந்த மீடியாக்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம்... விளம்பரங்கள். அந்த காலத்தில எங்க வீட்டில் தூர்தர்ஷன் மட்டுந்தான். சன் டீவி, கேபிள் டீவி எல்லாம வந்ததுக்கப்புறமும் தூர்தர்ஷனிலேயே மூழ்கி முத்தெடுத்துக்கிட்டு இருந்தோம் எங்க வீட்டில மட்டும். ஆங்... சொல்ல வந்த மேட்டர் இதுதான்.... இந்த விளம்பரத்தை எல்லாம் பார்த்து நான் முடிவு செய்தது..... இதுதான்... அட...நாம் டீவி ஆன் செய்யும்போதெல்லாம் இந்த விளம்பரத்தில் நடிக்கிறவங்க தயாராகி நேத்து நடிச்ச மாதிரியே இன்னிக்கும் நடிக்கிறாங்களே.... அதே மாதிரி கப்பை உடைக்கிறாங்க... அதே மாதிரி ஒட்ட வைக்கிறாங்க...  அதே மாதிரி காயம் ஏற்படுது.... அதே இடத்தில் பேன்ட்-எய்ட் ஒட்டறாங்க...அதே மாதிரி.... இதே மாதிரின்னு பலப்பல கற்பனைகள்....
 
 
அதுக்கப்புறம் ஒரு நாள் எங்க அம்மாக்கிட்ட ஒரு பிட்டை போட்டேன்..... "ஏம்மா, நிஜமாவே இந்த வீட்டுக்கு பெயின்ட் அடிபாங்களா" என்று... அம்மாவும் 'ஆமா... இதெல்லாம் ரெக்கார்ட் பண்ணதுதானே" அப்படீன்ற மாதிரி ஏதோ ஒண்ணு சொல்லீட்டு அவங்க வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.... அப்பத்தான் வீடியோ கேஸட் ஒண்ணு இர்க்கறதே ஞாபகம் வந்தது.... எனக்கு நானே பல்பு கொடுத்துட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பிச்சேன்.... அதான் அடுத்த கற்பனை.....
 
இப்ப உதாரணத்திற்கு ஹமாம் சோப்பை எடுத்திட்டிங்கன்னா அந்த விளம்பரத்தில் நடிக்கிறவங்க நிஜமாவே அந்த சோப்பை மட்டும் தான் பயன்படுத்துவாங்க.... வேற சோப் உபயோகப்படுத்தமாட்டாங்கன்னு நினைத்தேன்.... ஏன்னா அந்த சோப் தான் மிக உயர்ந்ததுன்னு அவங்க தானே அந்த விளம்பரத்தில் சொல்றாங்க.... சரி.... இவங்க ஹமாம் சோப் தான் யூஸ் பண்ணுறாங்கன்னு விளம்பரம் எடுக்கிறவங்களுக்கு எப்படி தெரியும்னு ஒரே யோசனை... அப்பத்தான் என் மூளைக்கு தோணுச்சு... (அடிக்க வராதீங்க.... கோபப்படாம வாசிக்கணும் :))) அதாவது அந்த விளம்பர கம்பனி வாசலில் ஒரு போர்டு மாட்டுவாங்கன்னு முடிவு பண்ணேன்... அந்த போர்டில் "ஹமாம் சோப் உபயோகப்படுத்துபவர்கள் தொடர்பு கொள்ளவும்" ன்னு எழுதியிருக்கும்னு நான் முடிவு பண்ணேன்....ஹி...ஹி.. அப்புறமாத்தேன் தெரிஞ்சுது... காசு கொடுத்த யார் வேணா என்ன வேணா சொல்லுவாங்கன்னு..... (ஆனாலும் ரொம்ப வெள்ளந்திங்க நான் :)))
 
அடுத்த ஆராய்ச்சி என்னன்னு பார்த்தீங்கன்னா....
 

சினிமாவில் நடிக்கிறாங்களே ஹீரோவும் ஹீரோயினும்.... அவங்க குரலுக்கு நான் அப்படியே அசந்து போய்ட்டேன்... (உண்மையான வாய்ஸுக்கு இல்ல....)... அதுவும் சினிமாவில் அழகான குரலில் பாட்டு படிக்கிறாங்களே... அதுவும் என்னமா கவிதையா பொழியுறாங்க.... கொஞ்சங்கூட யோசிக்காம அழகான வரிகளா போட்டு படிக்கீறாங்களேன்னு ஒரே ஆச்சரியம்தான் போங்க.... இந்த மாதிரி ஆச்சரியத்தில் வாய் பிளந்துட்டிருக்கிற ஸ்டேஜில் தான் ஒரு நாள் அந்த பேட்டியைப் பார்க்தேன்...
 
எஸ்.பி.பி. அப்ப்டீன்றவரோட பேட்டியை பார்த்தேன்... (இப்பத்தான ஒரு படத்துக்கு டைட்டில் வச்சவுடனேயே அந்த படத்தோட ஹீரோ,ஹிரோயின், டைரக்டர், ப்ரொட்யூஸர், கேமராமேன், லைட் பாய்னு எல்லாரையும் அழைத்து வந்து பேட்டி எடுக்கிறாங்க.... அவங்க என்னமோ நாட்டுக்காக போரில் பங்கெடுத்த மாதிரி அவங்க அனுபவத்தை எடுத்து விடுறாங்க.... இதுல தொகுப்பாளரோட கேள்வி வேற தாங்க முடியாது... அந்த பாட்டுல நடிச்ச உங்க அனுபவம் எப்படி இருந்தது.... இந்த படத்துக்காக, இந்த நாட்டு மக்களுக்காக அந்த கிராமத்தில போய்த் தங்கி கஷ்டப்பட்டு நடித்த உங்க அனுபவத்த கொஞ்சம் சொல்லுங்க'ன்னு இப்படியெல்லாம் சொல்லி அந்த ஹிரோவை அப்படியே தேசிய வீரர் ரேஞ்சுக்கு ஆக்கிவிடுறதே இவங்கதான்... இதெல்லாம் நமக்கு எழுத வராது...ஆமினாதான் இது பத்தி நல்லா விலாசித்தள்ளுவாங்க... :)))
 
ஓக்கே.. மேட்டருக்கு வர்றேன்... எஸ்.பி.பியின் பேட்டியைப் பார்த்தேன்... அவரும் ஏதோ ஒரு படத்தில் ஒரு டூயட் சாங்கில் ஹீரோவுக்காக படித்த பாட்டை படித்துக் காட்டி கொண்டிருந்தார்....அப்பத்தான் புரிந்தது.... அடப்பாவி மக்கா... அப்ப அந்த ஹீரோவும் ஹீரோயினும் படத்தில் பாட்டு படிக்கிறதில்லையா... வெறும் உப்புக்குச் சப்பாணிதானா....சரி...சரி.... இப்பவாவது தெரிய வந்ததேன்னு எனக்கு நானே சமாதானப்படுத்திக்கிட்டேன் :((.... அப்ப எனக்கு ஒரு டவுட்டு.... அப்ப அந்த ஹீரோயினுக்கு பதில் யார் பாட்டு படிச்சிருப்பாங்கன்னு.... பக்கத்தில் இருந்த அக்காகிட்ட கேட்டேன்... ' அப்ப அவளுக்கு பதில் யார் வாய்ஸ் கொடுத்தாங்கன்னு எதுவும் சொன்னாங்களா"ன்னு கேட்டதுதான் தாமதம்... "அத தெரிஞ்சு நீ என்ன பண்ண போறே"ன்னு ஒரே வரியில ஒரு இளம் விஞ்ஞானியை, அவளோட ஆராய்ச்சிகளை வார்த்தை கங்குளால் எரித்து சாம்பலாக்கிட்டா எங்க அக்கா... அவளுக்கு அந்த நேரத்தில் என்ன கவலையோ....:((
 
சரி... நம்மள சுத்தி இருக்கிறவங்களுக்கு நம்ம ஆராய்ச்சியைப் பார்த்து ரொம்ப பொறாமை... வழக்கம்போல இதையும் நாமளே முடிவு பண்ணுவோம்னு களத்தில் குதிச்சாச்சு.... அதாவது எஸ்.பி.பி.யே ஹீரோயினுக்காகவும் கீச்சு குரலில் பிண்ணனி குரல் கொடுத்திருக்கார்னு (எஸ்.பி.பி.க்கு தெரிந்தால்...நொந்து போய்டுவார்) ரிஸர்ச் ரிப்போர்ட் ரெடி பண்ணிட்டு நிம்மதியா தூங்கியாச்சு.... பின்னாளில் ஒரு நாள் ஃபீமேல் ப்ளேபேக் சிங்கர்ஸ் பற்றி வேறொரு ஆராய்ச்சியில் அறியப்பெற்று ரிஸர்ச் ரிப்போர்ட்டை மாற்றி எழுதினது தனி கதை.
 
 
இப்படியாக நிறைய சொல்லிக்கிட்டே போகலாம்.... இதுவரை நான் சொன்ன ரிஸர்ச் பற்றியும் அதன் ரிப்போர்ட் பற்றியும் உங்க குழந்தைகளுக்கு சொல்லி அவங்க அறிவை வளர்த்து விடுங்க... அல்லது அவர்களையே நேரில் இந்த தளத்தைப் படித்து உலகத்தை புரிந்து கொள்ளச் சொல்லுங்க... ஏதோ என்னால் ஆனது....
 
என்ன இவ... இவ மானத்தை இவளே கப்பலேத்தி விடுறாளேன்னு நீங்க நினைக்கலாம்... என்ன பண்றது... எனக்கு ஒரு ஆளுக்காக கப்பல் கிளம்பாதாம்.... அதனால் உங்களையும் துணைக்கு அழைக்கிறேன்... ஃப்ரீ டிக்கட்.... இந்தப் பதிவைத் தொடர்ந்து எழுதி உங்க அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கப்பலில் ஏறிக்கோங்க...:))))
 
இந்த பதிவைத் தொடர நான் இவர்களை அழைக்கிறேன்....;))
 
1. ஆமினா (இந்த பதிவை நீங்க எழுதியே ஆகணும்னு உங்கள மிரட்டறேன்....:)))
2. சிட்டுக்குருவி
 

Wednesday, October 10, 2012

எங்கிருந்தாலும் வாழ்க!!


இப்பல்லாம் எங்க பார்த்தாலும் புரட்சி...கலவரம்.... தடியடி... எல்லாவற்றுக்கும் காரணமானவர்கள் பாதுகாப்பா இருந்துக்கறாங்க... ஆனா பொதுமக்கள் தான் பாதிப்படையறாங்க... கடையடைப்பினால் சரியான சாப்பாடு கிடைக்காது.... பள்ளிக்குச் செல்ல முடியாது... பணிக்கும் செல்ல முடியாது.... தேவைக்கு மருத்துவமனைக்கும் போக முடியாது.... இப்படி பொதுமக்களாகிய நாம் படுற அவதி தாங்க முடியாது.....

அதிலயும் அரபு நாடுகள்ல நடந்த, நடந்து கொண்டிருக்கும் Arab  Uprising  எனப்படும் அரேபிய கலகம் என்ற வார்த்தையைக் கேட்டாலே பொது மக்களுக்கும் பீதியாகுது.... பதிவியில் இருக்கிறவங்களுக்கும் ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கு. டுனீஷியா எனும் சிறிய நாட்டில் 17 டிசம்பர் 2010 அன்று அப்போதைய அதிபர் ஜைனுல் ஆபிதீன் பென் அலியின் 23 வருட கொடுங்கோலாட்சியை எதிர்த்து  முஹம்மது பூஅஸீஸி என்பவரின் உயிரிழப்பினால் ஆரம்பித்தது இந்த அரேபிய கலகம். 14 ஜனவரி 2011 அன்று பென் அலி பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதால் நல்லவேளையாக (?) இருபத்தட்டே நாட்களில்  கலகம் முடிவடைந்தது. ஒரு வேளை அரேபிய கலகத்தின் ஆரம்பமாகயிருந்ததால் அவர் சரியான  ப்ப்ப்ப்ளான் பண்ணலையோ என்னவோ?! அந்த 28 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்பு 338 , 2147 பேர் காயமடைந்தனர்.
----------------------------
எகிப்தின் நவீன பிர் அவ்ன் என்று அழைக்கப்பட்ட ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி கவிழ துனிஷிய கலகம் முன்மாதிரியாக இருந்தது. முபாரக்கின் ஆட்சியை கவிழ்க்க சதி தீட்டுவதில் சமூக வலைத்தளமான ட்விட்டர் பெரும்பங்கு வகித்தது. இப்படியாக முபாரக்கின் முப்ப்ப்ப்ப்ப்பது ஆண்டுகால கொடுங்கோலாட்சியை எதிர்க்க முக்கிய காரணமாக இருந்தவை அவர் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஆதரித்தது தான். .

25 ஜனவரி 2011 அன்று வெடித்த புரட்சியினால் சரியாக 18வது நாளில் 11 .02.2011  அன்று அதிபர் முபாரக் பதவி விலகினார். இந்த 18 நாட்களில் உயிரிழந்தவர்கள் 846, காயமடந்தவர்கள் - 6467.
-----------------------
கிட்டத்தட்ட தெற்கு ஏமனிலும் இதே கதை தான். தனது முப்பத்து மூஊஊஊன்று ஆண்டு கால பதவியிலிருந்து விலகினார் அலி அப்துல்லாஹ் சாலஹ். 27 ஜனவரி 2011ல் ஆரம்பித்த ஏமனிய புரட்சி ஒரு வருட காலம் நீடித்தது. அப்துல்லாஹ்வின் ஆட்சியை கடுமையாக எதிர்த்து, அதே வருடம் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, தவக்குல் கர்மன் எனும் பெண்மணி நடத்திய புரட்சி ஏமனிய புரட்சியில் பெரும்பங்கு வகித்தது. இந்த ஓராண்டு கால புரட்சியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000, காயமடைந்தோர் 22000.
-----------------
ஏமனுக்குப் பிறகு தொடங்கிய லிபிய கலகம்தான் ஏதோ சினிமா மாதிரி இருந்தது. 15 பிப்ரவரி 2011 அன்று அந்நாட்டு அதிபர் முஅம்மர் கடாஃபிக்கு எதிராக வெடித்த புரட்சியால் 20 அக்டோபர் 2011 அன்று நாட்டை விட்டு தப்ப முயன்ற கடாஃபி  சுட்டு கொல்லப்பட்டார். அவரது மகன் சிறையில் அடைக்கப்பட்டார்.  8 மாதங்கள் நீடித்த இக்கலகத்தில் 30000 உயிரிழந்தனர், 50000 காயமடைந்தனர். (முந்நாள் அதிபர் கடாஃபியைப் பற்றி நிறைய எழுதலாம். தன் சொந்த எண்ணங்களையே சட்டங்களாக்கி தன் நாட்டில் நாஆஆஆற்பத்தியிரண்டு ஆண்டுகள் ராணுவ ஆட்சி நடத்தியவர். அவருடைய வாரிசாக யாரையும் யாரும் கைகாட்டிவிடாதபடி அனைவரையும், தன் மகன்கள் உள்பட, தன் கட்டுக்குள் வைத்திருந்தார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்)
--------------------------
மேற்சொன்ன நாடுகளில் கலகங்கள் வெடித்ததன் தொடர்ச்சியாக 15 மார்ச் 2011ல் சிரியாவிலும் கலம் வெடித்தது. இன்னும் நடந்துகிட்டேயிருக்கு.... அந்த படுபாவி பஷார் அல் ஆஸாத் பதவிய விட்டு இறங்கவும் மாட்டேங்கறார்.... தன்னோட அமைச்சரவையில இருந்தே எத்தனையோ பேர் தனக்கெதிரா திரும்பினதுக்கப்புறமும் அவரோட பதவி வெறி அடங்கவில்லை.... தன் மக்களைத் தானே கொன்று குவிக்கிற தவறும் புரியவில்லை... உலகம் பூரா இருந்தும் எதிர்ப்பு வந்தும் சிறிய சிரிய நாட்டோடு தோழமையா பழகிட்டிருந்த எத்தனையோ நாடுகள் அவரோட எதிராளிகளுக்கே ஆதரவு மட்டுமல்ல ஆயுதமும் வழங்குவோம்னு பகிரங்கமா தெரிவித்த பின்பும் மண்டையில உறைக்க மாட்டேங்குது.... நானும் இந்த பதிவு எழுத இவ்ளோ நாளாகுதே.... நாம எழுதறதுக்குள்ள கலகம் முடிந்த நல்ல செய்தியோடு பதிவு போடலாம்னு காத்திட்டிருந்தேன்.(அப்பாடா... பதிவு போட தாமதமானதை சமாளிச்சாச்சு ;)))...
 
இந்த ஒன்றரை வருடங்களில் சுமர் 40,000 பேர் உயிரிழந்துள்ளனர்.:(((((
 
என்ன இவ, அடுத்த பதிவில் இஸ்ராவைப் பற்றி சொல்றேன்னுட்டு இப்ப இவ இஷ்டத்துக்கு ஏதோ எழுதறாளேன்னு நினைக்கிறீங்களா.... இதோ மேட்டருக்கு வந்துட்டேன் (அப்பாடா)...'உன்னோட தாய் நாடு எது' என அவளிடம் நான் கேட்டதுக்கு அவளோட பதில் 'சிரியா'. (இத முதல்லயே சொல்ல வேண்டியது தானே...)... பின் ஒரு நாள் அவளது வீட்டிற்குச் சென்று அவளுக்குப் பிரியாவிடையளித்து வந்தேன். அப்பொழுது தன் மேற்படிப்பு பற்றி என்ன்னிடமும் ஆலோசனை கேட்டாள் (இதிலேயே தெரிஞ்சிருக்குமே...அவள் எவ்ளோ அப்பாஆஆஆவின்னு :))). நானும் எனக்குத் தெரிந்ததை(?) எடுத்துச் சொல்லிவிட்டு, நினைவுப் பரிசு ஒன்றையும் கொடுத்துவிட்டு வந்தேன்.
 
மற்ற நாடுகளில் போர் முடிந்து தேர்தலும் நடந்து ஏதோ ஒரு வழியா கலகமெல்லாம் ஓரளவிற்கு முடிந்து விட்டது. ஆனால் என் இனிய இஸ்ராவின் நாட்டில் மட்டும் இன்னும் போர் முடியல...:(((  மற்ற நாடுகளில் நடந்தப்போ இருந்தத விட இப்ப ரொம்ப கவலையாக இருக்கு..... இஸ்ரா எங்க இருக்கிறாளோ....அவள் குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்களோ...எங்கே இருக்கிறார்களோ....செய்திதாளைப் பார்க்கும் போதெல்லாம் அவள் நினைவு தான்.... சிரிய நாட்டுப் போர் விரைவில் முடிவு பெற நீங்கள் செய்யும் துஆவில் இஸ்ராவிற்காகவும் அவள் குடும்பத்தினருக்காகவும் ஒரு வரி சேர்த்துக் கொள்ளுங்கள்.

நானும் இன்று முடியும்...நாளை முடியும் என்று எதிர்பார்க்கிறேன்... ஆனால் ஹிட்லர் சாகவில்லை.... இதோ இருக்கிறேன் என்று சொல்வது போல் ஆஸாத் நடத்தும் ஈவிரக்கமில்லாத போரின் பாதிப்பால் தம் சொந்த நாட்டை,வீட்டை விட்டு அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள 1.5 மில்லியன் மக்களில் ஒருத்தியாக அவள் இருப்பாளா... அப்படியாவது அவள் உயிரோடு இருக்க வேண்டும்...

யா அல்லாஹ்.... நீ அதிகம் விரும்பும் தொழுகையாளிகளின், இமாமாக வாழ்க்கை நடத்தும் அம்மனிதரின் குடும்பத்தினரை எல்லா வளமும் பெற்று வாழ செய்வாயாக..... அவர்கள் நாட்டில் நடந்தேறும் குழப்பங்கள் அனைத்திற்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பாயாக! ஆமீன்.

ஆதாரங்களனைத்திற்கும் விக்கிக்கு நன்றி. பதிவில் தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்க சகோஸ்!!

Sunday, September 23, 2012

இஸ்ரா !!

தலைப்பைப் பார்த்ததும இது இஸ்ராவா இஸ்ரோவா .... இஸ்ரோ பற்றி இவுக  என்ன எழுதப் போறாக ன்னெல்லாம் யோசிக்காதீங்க ... அது பத்தி எழுத -ஹுசைனம்மா இருக்காங்க.... ஆக்கப்பூர்வமா என்ன எழுதன்னு தலைப்பு யோசிக்கிறாங்களே ... நம்ம சிராஜன்னே இருக்காக.. ஏன் நீங்களும் எழுதலாம்...ஆனா என் தோழி  இஸ்ராவைப் பற்றி நான் மட்டுமே எழுத முடியும்.... (ஹி ..ஹி ... இத மட்டும் தான் நான் எழுத முடியும் ;))


பெயரைச   சொல்லும்போதே மனதின் மகிழ்ச்சி  முகத்தில் புன்னகையாக வெளிப்படும்... அவளுடன் பேசிய தருணங்கள் ஒவ்வொன்றாக ஆழ்  மனதிலிருந்து நினைவில் எட்டிப்பார்க்கும்...  அந்த சிறிய பெண்ணின் கள்ளங்கபடமற்ற பேச்சுக்கள் என் கவலையைப் போக்கும்  ... அவளை நினைத்தாலே 'smiling beauty' என்று சொல்வார்களே அச்சொல்லாடல் தான் நினைவிற்கு வரும். அவளுடன் பேசுபவருக்குத் தவிர மற்றவருக்கு அவள் பேசுவது கேட்காது. அவ்வப்போது நாளை பரீட்சை இருக்கிறது என்று  சொன்னாலும் அவளது படிப்பு சம்பந்தமான எந்த வித அழுத்தத்தையும் முகத்தில் காட்டிவிட மாட்டாள். தன சந்தோஷத்தை மட்டுமே மற்றவருடன்  பகிர்ந்து தன கவலைகளை மறைக்கும் ம்ன்முதிர்ச்சியை இந்த வயதிலேயே பெற்றவள். அவள் தான் எனதருமைத் தோழி இஸ்ரா...

முதன் முதலில் அவளை சந்தித்த தருணம் இப்பொழுதும் என் நினைவில் இருக்கிறது.... வெள்ளிகிழமை தொழுகை முடிந்ததும் பள்ளியில் ஒரு அறிவிப்பு வர அதகுண்டான விளக்கத்தை என் அருகில் இருந்த பெண்ணிடம் கேட்டேன். பொறுமையாக தாழ்ந்த குரலில் விளக்கியவளின் முகத்தை அதுவரை பார்த்திராததால் ' புதிதாக அருகில் குடி வந்திருக்கிறிர்களா இதுவரை உங்களை இங்கு நான் பார்த்ததில்லையே' என்ற என் கேள்விக்கு 'நான் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதால் அடிக்கடி வர முடியவில்லை' எனத தெரிவித்தாள். அதன் பிறகு தான் அப்பள்ளி வாசலின் இமாமின் (தொழுகை நடத்துபவரின்) மகள் எனவும் தெரிவித்தாள் .  அவ்வறிமுகத்திற்குப் பிறகு அடிக்கடி சந்திப்பு தொடர்ந்தது. அங்கு நடத்தப்படும் வெள்ளிக்கிழமை குத்பா (உரை) பற்றிய விளக்கங்கள் பலவற்றை என்னிடம் விவரித்தாள். இதற்காக தொழுகை முடிந்த பின்பும் எனக்காக நேரம் ஒதுக்கி எனக்கு உதவினாள். இஸ்லாத்தைப் பற்றி அவளிடமிருந்து நானும் என்னிடமிருந்து அவளும் பகிர்ந்து கொண்டோம்.


இச்சந்திப்பிற்காகவே மதிய உணவு தயாரிப்பை  பள்ளிக்கு வரும் முன்பே ஓரளவு முடித்துவிட்டு கிளம்புவதற்காக காலையில் கொஞ்சம் சீக்கிரம் :(( எழும்ப வேண்டியிருந்தது .. பின்பு அதுவே நல்ல பழக்கமாக மாறிவிட்டிருந்தது (அதாவது இப்ப இல்லை....ஹி ஹி )...ஆனா ..... நல்ல வேளை ..சாப்பாடு....சாப்பாடுன்னு கிச்சனிலேயே  கிடக்காமல் இஸ்லாத்திற்காக நேரம் ஒதுக்க இறைவன் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தியதை நினைத்து இப்ப மனதிற்கு திருப்தியாக இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ் !


நான் பள்ளிக்கு செல்ல முடியாத போதும் அவள் எனக்காக வந்து காத்திருந்ததை என்னிடம் தெரிவித்தபோது மனம் வருந்தினேன். அவள் சொல்லும்போது சிறிதேனும் கோபப்பட்டிருந்தால் வருத்தப்பட்டிருக்கமாட்டேன். ஆனா வருத்தத்துடன்  சொன்னபோது என் தலையில் 'நங் நங்' நு கொட்டனும்போல இருந்துச்சு... ( உங்களுக்கு சந்தோஷமா இருக்குமே?!) ஆனா செய்யலை.... (எப்பூடி ?)அதன் பிறகு நான் செல்லாத நாட்களில் அவளுக்கு sms அனுப்பிவிடுவேன்.


கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆன பின் அவள் அந்த தகவலை  சொன்னாள் . அவளது தந்தைக்கு பணி ஒப்பந்தம் முடிந்துவிட்டதாகவும் அதனால் அவள் குடும்பத்தினர் அனைவரும் அவளது தாய் நாட்டிற்குத திரும்பி செல்லவிருப்பதாகவும் தெரிவித்தாள். அதைக் கேட்டதும் மனதிற்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. நெடுநாள் தொடர்ந்த நட்பில் பிரிவேற்படப்போவதை எண்ணி இருவருக்கும் மனம் கனத்து விட்டது. 


இந்த பிரிவு அவள் ஏற்கனவே எதிர்பார்த்து இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு உடனே நம்பமுடிவதாக இல்லை. சொல்லப்போனால் இந்நாட்பில் பிரிவு ஒன்று இருக்குமானால் அது நாங்கள் இந்தியா திரும்பும்போதுதான் அமையும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் என்றேனும் ஒருநாள் நான் சொல்லவிருந்த  அவ்வார்த்தைகள் அவளிடமிருந்து வந்தது எனக்கு ஏற்றுக்கொள்ள சிரமமாக இருந்தது ஏனெனில் அவள் வேற்று நாட்டை சேர்ந்தவள் என்பதே எனக்கு அப்போதுதான் தெரியவந்தது.   சிறிது நேரம் என்ன பேசுவது என்றே எனக்குத் தோன்றவில்லை. பிறகு சுதாரித்து உனது தாய் நாடு எது எனக் கேட்டேன்.. அது....


இன்ஷாஅல்லாஹ், அடுத்த பதிவில்....

படங்கள்  கஊகிளில் கிடைத்தவை 

Tuesday, July 31, 2012

சுட்டி...சுட்டி....


ஐடி கார்ட் of பெரியத்துரை:

பள்ளியிலிருந்து வரும்போது பெரியத்துரை அன்னிக்கு புது ஐடி கார்ட் மாட்டியிருந்தான்.

நான்: அட...ஐடி கார்ட் நல்லாருக்கே....

அவன்: ம்மா..... இத ஸ்கூல் ஆஃபீஸ்ல கொடுக்கணுமாம்....

நான்: ஐடி கார்டுக்கு காசு வாங்கி மூணு மாசம் கழிச்சுத்தான் தந்துருக்காங்க... அத ஏன் அங்க குடுக்கணுமாம்?!

அவன்: இங்க பாரு... இதுல போட்டிருக்கு.... If found, please return to school office.


----------------------------------------------------------------------------------------------------

இதயத்தை திருடவில்லை..வில்லை...வில்லை...

தலைப்பைப் பார்த்து என்ன திடீர்னு கவிதை மாதிரி ஏதோ எழுதறாளேன்னு கனவிலயும் நினைக்காதிங்க. இப்போதைக்கு  அப்படியெல்லாம் பண்ற மாதிரி ஐடியா எதுவும் இல்ல....  :-(..... நம்புங்க இது ஒரு உண்மையான சம்பவம்... இதயம் காணாமல் போன நிகழ்வு...காலத்தின் முன்னேற்றத்தைப் பாருங்க... ஒரு ஆஸ்பத்திரியிலிருந்து ஒருவருடைய இதயத்தை எடுத்து இன்னொரு ஆஸ்பத்திரிக்குக்  கொண்டு போகும் வழியில் இதயம் கீழே  (?) விழுந்து விட்டது... அதை மறுபடியும் வந்து எடுத்துச  செல்லும் காட்சி இதோ  உங்கள் பார்வைக்கு...  நல்ல வேளை யாரும் சைக்கிள் கேப்பில் அந்த இதயத்தைத் திருடிச  செல்லவில்லை. ;))


------------------------------------------------------------------------------------------------

 பெட்ரோலின் நிறம் பிங்க்

ஒரு முறை காரில் வெளியே போய்விட்டு வரும் வழியில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட காத்திருந்தோம் (பெட்ரோல் பங்கிற்கு எல்லாரும் பெட்ரோல் போடத்தான் போறோம்னு  யாரோட மைன்ட் வாய்ஸோ கேட்குது  .... அது வந்து...... குறுக்க பேசினா சொல்ல வந்தது மறந்து போயிடுதுல்ல..... என்ன சொல்ல வந்தேன்.....அப்பாடா ஞாபகம் வந்துடுச்சு....) அப்ப நம்ம பெரியத்துரை:

ம்மா... பெட்ரோல் எங்கிருந்து வருது?

எர்த்துக்கு அடியிலிருந்து வ.....

நாம பாத்ரூம் போறதிலருந்தா ?

இல்லடா  அது வந் ......

அப்ப நாம எல்லாரும் பீட்ருட் சாப்பிட்டா பெட்ரோல் பிங்க் கலர்ல வருமா

டேஏஏஏஏ....

இனிமே பெட்ரோலைப் பார்த்து பீட்ருட் ஞாபகம் வந்தாலோ  இல்ல பீற்றுட்டைப் பார்த்து பெட்ரோல் ஞாபகம் வந்தாலோ   நான் பொறுப்பில்ல.... பெரியத்துரைதான் காரணம். என்னைக் கேட்கக்கூடாது...ஆமா .....


-------------------------------------------------------------------------------------------------
உலகம் உங்கள் கண்சிமிட்டலில்!!

முன்னொரு காலத்தில் கம்ப்யுட்டர் வந்த காலத்தில் அதை வாய்பிளந்து பார்க்காதவர் இல்லை.... ஆனால் பார்வை இல்லாதோருக்கு அது ஒரு எட்டாக்கனியாகவே  இருந்து வந்தது. விரைவில் அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்கள். கணினியில் பதியப்பட்ட குரல் மூலம் அவர்கள் கைகளால்  டைப் செய்வதையும்  க்ளிக் செய்வதையும்  அவர்களால் தெரிந்து கொள்ள முடிந்தது. 

அப்படீன்னா, கண்களைத்  தவிர மற்ற அனைத்து உறுப்புகளும் பக்கவாதத்தால் (லாக்ட்-இன் சின்றோம் ) பாதிக்கப்பட்டவர்கள்  மட்டும் என்ன தவறு செய்தார்கள்? அவர்களும் கணினி உபயோகப்படுத்துவது ஏன் இந்த ஒரு(?) காரணத்தால் தடுக்கப்பட வேண்டும்?! என்ன சொன்னீங்க.... கண்கள் செயல்படுகின்றனவா? அது போதுமே என்கின்றனர் லண்டனைச  சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். அவர்களுடைய கருவிழி தான் மௌஸ்..... விருப்பத்தைத் தேர்வு செய்த பின் க்ளிக் பண்ணவேண்டுமா? கண்ணைச்சிமிட்டுங்கள்.  அவ்வளவுதான். அதாவது நினைத்ததைப் பார்த்தால் போதும் என்கின்றனர் இக்கணிணியைக் கண்டுபிடித்தவர்கள்.

இதே  லாக்ட்-இன் சின்றோமால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் கணினியில்லாத காலத்திலேயே  சாதனைகள் பல புரிந்திருக்கின்றனர். தன நினைவுகளைப் புத்தகமாகப் பதிவுசெய்ய ஜீன் டொமினிக் பாபருக்குத தன கண்களே போதுமானதாகயிருன்தது.

பின்குறிப்பு:  
லாக்ட்-இன் சின்றோமால் பாதிக்கப்பட்டவர்களுக்குகே குரல் தசைகள் பாதிப்புக்குள்ளகாது என்றாலும் குரலுக்கும் மூச்சிற்கும்  இடையே தொடர்பு பாதிக்கப்படுவதால் அவர்களால் சரியாக பேசமுடியாது.

(இவ்வனைத்து நோய்களிலிருந்தும் என்னையும் என் உற்றார்,உறவினர்களையும் பாதுகாத்த இறைவா உனக்கே புகழ் அனைத்தும். பாதிக்கப்பட்டவர்களையும் விரைவில் குணப்படுத்தித்தருவாயாக!!)

Sunday, May 27, 2012

தி ஃபர்ஸ்ட் ஸ்ட்ரெஸ்


(இப்பதிவுக்கும் ஹுஸைனம்மாவின் டென்த் டென்ஷன் பதிவுக்கும் சம்பந்தமில்லை ஹி..ஹி... ;-)))
வாங்க..வாங்க... என்னை யாருன்னு தெரியுதா? நாந்தான் என்றென்றும்16 அப்டீன்ற பேர்ல ப்ளாக் நடத்திட்டிருக்கிற (?) பானு...அப்பப்ப இப்டி எனக்கு நானே இன்ட்ரொ கொடுக்கவேண்டியதாயிருக்கு...:(...


கிட்டத்தட்ட ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு போயிட்டு வந்து பார்த்தா நம்ம பெரியதுரைக்கு விடுபட்ட பாடங்கிறாங்க... வீட்டுப்பாடங்கிறாங்க... தினமொரு வகுப்புத்தேர்வுங்கிறாங்க... ப்ராஜக்ட்டுங்கிறாங்க... அஸ்ஸெஸ்மென்டுங்கிறாங்க.... முடீல... பெரியதுரைன்ன உடனே ரொம்ப பெரிய்ய்ய்யதுரைன்னு நினச்சிடாதீங்க..... ஜஸ்ட் ஒண்ணாங்கிளாஸ் தான்.... ஹ்..ம்... மண்டை காயுது... பெண்டு நிமிருது.... கண்ணு இருளுது...இப்டி எல்லா டயலாக்ஸுமே இப்ப என் நிலமைக்கு பொருந்துது... :-((...ஓ..கே...ஸ்டாப்பிங் தெ பொலம்பல்ஸ்.......


ஊர்ல இருக்கும்போது நம்ம அய்யாதுரைக்கு கண் செக் பண்ணிட்டு லென்ஸ் மாத்திட்டு அப்படியே ஃப்ரேமையும் மாத்தலான்னு ஒவ்வொரு ஃப்ரேமா போட்டு பாத்து இது நல்லாருக்கா...இது நல்லாருக்கான்னு கேட்டுக்கிட்டிருந்தார் (கடையில் செலக்ஷனுக்கு வச்சிருக்கிற ஃப்ரேம்களில் சாதா லென்ஸ்தான மாட்டியிருக்கும்)..... நானும் ரெண்டு மூணு தடவை பொறுமையா பார்த்து பதில் சொல்லிட்டுருந்தேன்.... அடுத்த ஃப்ரேமுக்கு "ஏங்க அதான் முகம் பார்க்கிற கண்ணாடி இருக்குல்ல...அதுல பார்த்து செலக்ட் பண்ணுங்களேன்... ஏன் என்னையே தொந்தரவு பண்றீங்க..."ன்னு ஒரு ரைடு விட்டேன்.... அவரும் பாவமா "எனக்குத் தெரியல.... எனக்குத் தெரிஞ்சா நான் ஏன் உன்னைக் கேட்கிறேன்"னு சொன்னார்.... நானும் ஒரு ஃப்ரேம் கூட செலக்ட் பண்ணத் தெரியல....என்னத்த குடும்பத்தலைவனோன்னு ஒரு பொலம்பல் (மனசுக்குள்ள தான்) .....

அடுத்த ஃப்ரேமுக்கும் அதே கேள்வி,  அதே பதில் ... ....."எனக்குத் தெரியல.... எனக்குத் தெரிஞ்சா நான் ஏன் உன்னைக் கேட்கிறேன்" ...அதே புலம்பல்...

அப்பத்தான், நம்ம அய்யாதுரை தூங்கி முழிக்கும்போதே கண்ணாடி எடுத்து மட்டிக்கிற வரை தட்டி துழாவி ஒரு குத்துமதிப்பா நடமாடுறது ஞாபகம் வந்துச்சு.... "ஏங்க நீங்க தெரியல தெரியல்ன்னு சொன்னது அந்தத் தெரியலயா"ன்னு கேட்டா அவரும் பாவமா "ஹ்..-ம்... உனக்கு அது இப்பத்தான் புரியுதா"ன்னு கேட்க, கடைக்காரன் சிரிப்ப அடக்க முடியாம வாயை மூடிக்கிட்டு சிரிக்க. .... ச்ச... நம்ம பொழப்பு இப்டி சிரிப்பா சிரிச்சு போச்சு போங்க...

விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்... அநேகமா இன்ட்ரொ தேவைப்படுற அளவுக்கு இடைவெளி வராதுன்னு சொல்லி விடைபெறுவது என்றென்றும்16 பானு. வஸ்ஸலாம். நன்றி.

Sunday, April 15, 2012

என்றென்றும் வற்றாக் கிணறு - 2

என்றென்றும் வற்றாக் கிணறு - 1

(புஹாரி 3364) இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறை ஆணையின் படி தமது இரண்டாவது மனைவி ஹாஜரையும் சிலமாதங்களேயான கைக்குழந்தை இஸ்மாயீலையும் தனியே ஆளரவமற்ற பாலைவனத்தில் கஃபாவின் அருகே ஓரிடத்தில் விட்டுவிட்டுச் செல்கிறார். இறைவனின் உத்தரவென்பதால் இப்ராஹீம் (அ.ஸ) அவர்களும் வேறுவழியின்றி திரும்பிப் பார்க்காமல் சென்றுவிடுகிறார். ஹாஜர் (அ.ஸ) அவர்களும் இறை உத்தரவை மனதார ஏற்றுக்கொள்கிறார். குழந்தை பசியில் அழும்போது தான் கையில் கொண்டுவந்த தண்ணீரைக் குடித்து குடித்து குழந்தைக்கு பாலூட்டுகிறார். சிறிது நேரத்தில் அத்தண்ணீரும் தீர்ந்துவிடுகிறது. தண்ணீருக்காக இருபக்கங்களிலுமிருக்கும் மலைகுன்றுகளான சஃபா மற்றும் மர்வா ஆகியவற்றின் மீதேறி யாரும் தென்படுகிறார்களா என்று நடந்தும் ஓடியும் தேடுகிறார். இடையிடையில் குழந்தையின் நிலையையும் ஒரு எட்டு பார்த்துச் செல்கிறார்.(இரு குன்றுகளின் தூரம் 450மீ. அப்படிப் பார்த்தால் மொத்தம் 3.15 கி.மீ. அவர் கடந்திருக்கிறார். மாஷா அல்லாஹ்... இறைவன் தான் அவருக்கு அந்த உறுதியைத் தந்திருக்க வேண்டும்.) இதையே ஹஜ்/உம்ரா செய்யும்போது இவ்விரு மலைக்குன்றுகளினிடையே நடந்தும் ஓடியும் செல்ல கடமையாக்கப்பட்டுள்ளது.

சஃபா மலைக்குன்று

மர்வா மலைக்குன்று


               
(ஏன் ஓடவும் நடக்கவும் செய்யவேண்டும்? ஏனென்றால் ஹாஜர் (அ.ஸ). மலைகுன்றின்மீதேறும்போது குழந்தையின் நிலையை அவர்களால் காணமுடிந்தது. நிலத்தில் செல்லும்போது குழந்தையைக் காண முடியவில்லை. அதனால் நிலத்தில் ஓடியும் மலைகுன்றுகலில் நடந்தும் தன் தேடுதலைத் தொடர்கிறார்.)

இவ்வாறு ஏழாவது முறை தேடிவிட்டு குழந்தையைப் பார்க்க குழந்தையின் அருகே வந்தவர் ஒரு குரலைக் கேட்கிறார்.அது வானவர் ஜிப்ரீல் (அ.ஸ.) அவர்களுடையதே. ஹாஜர் அ.ஸ. அவர்களுக்கு அல்லாஹ் தன்னைச் சார்ந்தோரைக் கைவிட மாட்டான் என்று நம்பிக்கையும் இக்குழந்தையும் இக்குழந்தையின் தந்தையும்  பின்னாளில் இறையில்லத்தை மேம்படுத்துவதில் ஆற்றவிருக்கும் பங்கு பற்றி நற்செய்தியும் தெரிவித்தவர் தம் இறக்கையால் மணலை தோண்ட நீர் தோன்றுகிறது. நீர் பெருக்கெடுத்து ஓடவே ஹாஜர்(அ.ஸ.) அவர்கள் தன்னையும் அறியாமல் நில் நில் (அரபியில் ஸம்ஸம்) எனக் கூறிக்கொண்டே தமது கையால் அதைச் சுற்றி ஒரு தடுப்பும் எழுப்புகிறார்.

(இதையே பிற்காலத்தில் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஹாஜர் (அ.ஸ.) அவர்கள் மட்டும் தடுப்பு எழுப்பவில்லையாயின் ஸம்ஸம் கிணறாக இல்லாமல் ஒரு ஓடுகிற நீரோடையாக நமக்குக் கிடைத்திருக்கும் என்று நவின்றுள்ளார்கள். (புஹாரி 2368).)

பின்னர் அத்தண்ணீரைக் குடித்த ஹாஜர் (அ.ஸ.) அவர்கள் குழந்தைக்கு அதன் வயிறு நிறைய பாலூட்டுகிறார். சில நாட்கள் கழித்து அவ்வழியில் வந்த ஜுர்ஹும் எனும் குழுவினர் அங்கே இருக்கும் கதா எனும் கணவாயினருகே தங்கலானார்கள். அந்த ஆளரவமற்ற பாலைவனத்திலும் தண்ணீரைச் சுற்றியே வட்டமடிக்கும் பறவைகள் பறப்பதைக் கண்டு அவ்விடத்தில் நீர்நிலை இருப்பதை அறிந்து கொள்கிறார்கள். ஸம்ஸம் கிணற்றையும் அருகில் ஹாஜர் (அ.ஸ.) அவர்களையும் காண்கிறார்கள். அவர்களிடம் வந்து அவ்விடத்தில் தங்கிக்கொள்ள அனுமதி கேட்கிறார்கள். அனுமதியளித்த ஹாஜர் (அ.ஸ.) அவர்கள் ஸம்ஸம் கிணற்றின் மீது உங்களுக்கு உரிமையில்லை என்று சொன்னதையும் ஏற்ற ஜுர்ஹும் கூட்டத்தினர் அவ்விடத்திலேயே தங்களது இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். (புஹாரி. 3364)

பின்னாளில் ஜுர்ஹும் கூட்டத்தினரினிடத்தில் ஏற்பட்ட நேர்மையற்ற தன்மையினால், ஸம்ஸம் கிணற்றின் அருமைகளையும் அவசியத்தையும் அறிந்தவர்களாகவே, அக்கிணற்றையே மூடிவிட்டார்கள். பின்னர் சில காலங்களாக ஸம்ஸம் கிணறு மறக்கப்பட்டதாகவே இருந்துள்ளது.

முஹம்மது (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களின் காலம் வரை அக்கிணற்றைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இறையில்லம் கஃபாவிற்கு புனிதப்பயணம் வரும் மக்களுக்கு தேவையான தண்ணிரை கொடுக்கும் பொறுப்பு மூதாதையர்களிடமிருந்து அப்துல் முத்தலிப் அவர்களிடம் வந்தது. அருகில் நீர்நிலை ஏதுமில்லாத நிலையில் அப்பணி மிகவும் சிரமமாகயிருந்தது. அச்சமயத்தில் அப்துல் முத்தலிப் அவர்கள் ஒரு கனவு கண்டார்கள். அக்கனவில் முதல் இரண்டு நாட்களுக்கு 'இனிமையானதைத் தோண்டு' எனவும் 'அருளுக்காகத் தோண்டு' எனவும் அறிவிக்கப்பட்டதே தவிர ஸம்ஸம் கிணற்றின் இடம் சரியாக அறிவிக்கப்படவில்லை. மூன்றாம் நாள் கனவில் அக்கிணற்றின் இடமும் பெயரும் தெளிவாக அறிவிக்கப்பட்டதும் மறுநாள் காலையில் தன் மகன் அல் ஹாரிதுடன் அக்கிணற்றை புணரமைத்தார்கள். இதையறிந்த மற்ற மக்காவாசிகள் ஸம்ஸம் கிணற்றின் மீது உரிமை கொண்டாடினார்கள். அதற்கு அப்துல் முத்தலிப் அவர்கள் மறுக்கவே தங்களிடையே நியாயமான தீர்ப்பு வழங்க ஒருவரைக் காண இரு குழுவினரும் பயணம் மேற்கொள்கின்றனர். அந்த காலத்தில் ஒட்டக பயணம் பல நாட்கள் நீளும். அப்படி செல்லும்போது அவர்களிடையே இருந்த தண்ணிர் தீர்ந்தது. கடுமையான தாகத்தால் மரணத்தை அவர்கள் அஞ்சிய அச்சமயம் அப்துல் முத்தலிப் அவர்களின் ஒட்டகத்தின் காலடியில் நீர்ரூற்று தோன்றவே இது இறைவனின் பக்கமிருந்து அப்துல் முத்தலிபிற்கு சாதகமான தீர்ப்பு வந்ததாக இரு குழுவினரும் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு ஸம்ஸம் கிணற்றின் பொறுப்பு, அதாவது புனித பயணமாக கஃபாவிற்கு வரும் மக்களுக்கு ஸம்ஸம் கிணற்றிலிருந்து நீர் புகட்டும் பொறுப்பு அப்துல் முத்தலிபிடமே ஒப்படைக்கப்பட்டது. மற்ற மக்கவாசிகளும் ஸம்ஸம் தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

பின்குறிப்புகள்:

1.  இப்ராஹிம் (அ.ஸ.) அவர்கள் தமது இரண்டாம் மனைவியையும் குழந்தையையும் பாலைவனத்தில் விட்டு வந்தாலும் அவர்கள் மனம் அவர்களைச் சுற்றியே வந்தது. அவர்களுக்காக மிகவும் கவலையுடன் இறைவனிடம் துஆ செய்தவர்களாகவே இருந்தார்கள். அத்துஆவானது:

14:37. “எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!”

2. ஸம்ஸம் கிணறு உருவான வரலாறு மட்டுமே புகாரியில் காணப்படுகிறது. அதன் பின்னர் வரும் வரலாறு இப்னு கதிரில் இடம்பெற்றுள்ளது.

3. ஸம்ஸம் தண்ணீரின் அதிசய குணங்களை அறிந்த எத்தனையோ முஸ்லிமல்லாத சகோதர,சகோதரிகளும் முஸ்லிம்களிடமிருந்து ஸம்ஸம் தண்ணீரைக் கேட்டு பெற்று குடிக்கிறார்கள். ஆனால், கபட வேஷமிடுபவர்களால் ஸம்ஸம் தண்ணீரை ஓரளவிற்கு மேல் அருந்தமுடிவதில்லை. (இப்னு மாஜா 1017)

4. சஹீஹ் முஸ்லிம் எண். 2473 யில் முஹம்மது (ஸல்) அவர்களிடம் கஃபாவின் அருகில் தொடர்ந்து தங்கியிருந்த அபு தர் என்பவர் முப்பது நாட்களுக்கு வேறு எந்த உணவுமின்றி ஸம்ஸம் தண்ணீரை மட்டுமே அருந்தியதாகத் தெரிவிக்கிறார்.

Thursday, April 5, 2012

என்றென்றும் வற்றாக் கிணறு

நாட்டின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும் அரை-வறண்ட பாலைவனமும் பரப்பளவில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே வேளாண்மைக்கு உகந்த நிலமாக காணப்படும் மற்றும் குளிகாலங்களில் 0 டிகிரிக்கும் குறைவாக வானிலை நிலவும் (ஆதாரம் - விக்கி) சவூதி அரேபியாவில் என்றுமே வற்றாத என்றுமே உறையாத கிணறு ஒன்று உண்டென்றால் அது இறைவனின் அற்புதமேயல்லாமல் வேறென்னவாக இருக்கும்?! ஆம்...அது ஸம்ஸம் கிணறேதான்.
ஸம்ஸம் கிணறு உற்பத்தியாகுமிடம்
வருடந்தோறும் மில்லியன் கணக்கில் மக்காவிற்கு புனித பயணம் வந்து செல்லும் உலக முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் அள்ள அள்ள குறையாமல் ஊறிக்கொண்டிருக்கும் அந்த கிணறுதான் எத்தனை உண்மைகளைச் சொல்கிறது?!

67:30. (நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்).

மழையும் இயற்கை குடிதண்ணீரும் இல்லாத பாலைவனத்தில் வற்றாத நீரூற்றைக் கொண்டு வர எல்லாம் வல்ல இறைவனைத் தவிர வேறு யாரால் முடியும்?!

ஸம்ஸம் கிணற்றின் ஆழம்

சுவையிலும் குணத்திலும் என்றும் மாறாத த்ண்ணீரைக் கொண்ட அக்கிணறு 98 அடி ஆழமுள்ளதாகவும் 3 அடி 7" லிருந்து 8 அடி 9" வரை அகலமுள்ளதாகவும் இருக்கிறது.

ஒரு நொடிக்கு பதினொன்றிலிருந்து 18 லிட்டர் வரை தண்ணீர் கிடைக்கிறது. சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 660 லிட்டரும் ஒரு நாளைக்கு 950,000 லிட்டரும் கிடைக்கும் கிடைத்துக் கொண்டேயிருக்கும் ஒரே கிணறும் ஸம்ஸம் கிணறு மட்டும்தான். அது மட்டுமல்ல, புனிதப்பயணத்திற்கு வருபவர்கள் தானும் குடித்து ஒவ்வொருவரும் அவரவர் இடத்திற்குத் திரும்பிச்செல்லுகையில் குறைந்தது 10 லிட்டராவது எடுத்துச்செல்லும் அதிசயமும் நடைபெறுகிறது.

பொதுவாக எந்த இடத்திலும் தண்ணீர் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் பாசி படிவது இயற்கையானதே. ஆனால் ஸம்ஸம் கிணற்றில் பாசியோ பாக்டீரியாவோ உருவாகவேயில்லை. சுத்தமான குடிதண்ணீராக விளங்கும் இக்கிணற்றின் தண்ணீர்  பலவித சத்துக்கள் நிறைந்ததாகவும் விளங்குகிறது. கால்ஷியமும் மக்னீஷியமும் அபரிமிதமாக இருக்கும் ஸம்ஸம் தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவல்லதாகவும் பலநாட்களுக்கு பசி தீர்க்கவல்லதாகவும் இறை நாடினால் நோய் தீர்க்க வல்லதாகவும்  நிரூபிக்கப்பட்டுள்ளது.

உலகில் கிடைக்கும் எந்த நிலத்தடி நீரை விடவும் ஸம்ஸம் கிணற்று நீருக்கு அதிக சோடியம், பொட்டாஷியம், ஐயோடின் சத்துக்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. உப்புத்தன்மையும் காரத்தன்மையும் அதிகமாக இருக்கிறது. பல ரசாயனங்கள் கலந்திருந்தாலும் இவ்வளவுகள் அனைத்தும் உலக நல அமைப்பு குடிநீருக்கென வகுத்து வைத்திருப்பதற்கும் குறைவாகவே இருக்கிறது.

பாதுகாப்பு கருதி இக்கிணறு கண்ணாடிக் கதவுகளால் மூடப்பட்டிருக்கிறது. இக்கிணற்றின் நீர் பம்ப் செய்யப்பட்டு ஆங்காங்கே மக்காவிற்கு வருபவர்கள் எடுத்துச் செல்லவும் உபயோகிக்கவும்  வசதியாக dispenserல் சேமிக்கப்படுகிறது. இக்கிணற்றில் பொருத்தப்பட்டிருக்கும் கருவியால் அதன் நீரினளவு, மின்சார கடத்துந்திறன், போன்ற பல தன்மைகளின் இலக்கமுறைத் தரவுகளை (அதொண்ணுமில்லை...digital values)நேரடியாக இணையத்தின் மூலமே அறிந்து கொள்ளலாம். இக்கிணற்றின் அடியில் இருக்கும் நீர்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.நிலத்தடி நீரை இதே அளவில் தொடர்ந்து பராமரிக்க, இக்கிணறு அமைந்திருக்கும் இப்ராஹிம் பள்ளத்தாக்கில் கிடைக்கப்பெறும், மழைநீரை வீணாக்காமல் சேமித்துவைப்பது, சுற்றத்தில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு கடுமையான விதிமுறைகள் வகுத்து பின்பற்றப்படுவது போன்ற நடவடிக்கைகளும் சீராக கடைப்பிடிக்கப்படுகின்றன.


எந்த ஒரு மத சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் அது அந்த குறிப்பிட்ட மதத்தவர்கள் மட்டுமே நம்பும்படியாகவும் மற்ற மதத்தவர்களுக்கு சந்தேகத்திற்குரியதாகவுமே இருக்கிறது. அது இஸ்லாத்தின் மற்ற எந்த நம்பிக்கையான சம்பவமுமேயானாலும் மற்ற மதத்தினருக்கு நாம் விளக்கினாலே அன்றி புரியவைக்க முடியாது.

ஆனால் ஸம்ஸம் கிணறும் அதன் தண்ணீரும் அப்படிப்பட்ட விவாதங்களுக்கு இடமளிக்காதவைகளில் ஒன்று. ஸம்ஸம் தண்ணீரின் நற்குணங்களை உலகின் அனைத்து மக்களும் சந்தேகத்திற்கிடமின்றி ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் மூலம் ஸம்ஸம் கிணறு உருவான இஸ்லாமிய வரலாறும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.

ஸம்ஸம் கிணறு உருவான விதம், அதைக் கண்டெடுத்த கனவு பற்றிய விபரங்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் காண்போம்.

Monday, March 5, 2012

ஹையா .... நினைத்தது நடக்கவில்லை!!

நாம் நினைப்பது சில சமயங்களில் அப்படியே நடக்கும்..சில சமயங்களில் நடக்கிறா மாதிரி இருந்து அப்புறம் ரூட் மாறிப்போய்விடும். நினைத்தது நடக்காத சமயங்களில் மனம் வெறுத்துவிடாமல் இருக்க நான் சில சமயங்களில் ஒரு உத்தியை மேற்கொள்வேன். (ரொம்ப கற்பனை பண்ணாம வாசிக்கணும்...ஆமா)

என்ன நடந்தா நம் மனது சந்தோஷப்படணும்னு ஆசைப்படுறோமோ அதுக்கு நேரெதிராக மனதில் நினைத்து கொள்வேன்..உதாரணத்திற்கு எங்க வீட்டு அய்யாதுரையிடம் எதையாவது வாங்கித்தர சொல்லணும்னு மனம் ஆசைப்படும்போது அதை அவர் வாங்கித்தரலேன்னா என்ன சொல்லி சண்ட போடலாம்னு மனசுல வாக்கியங்கள தேர்ந்தெடுத்து தயாராக்கி வச்சுப்பேன். ஆனா அதிசயம்..கேட்டவுடனே வாங்கித்தந்துடுவாங்க ... ( ;-) போடலாமா? :-( போடலாமா?) சரி ஒன்றை இழந்தாத்தானே இன்னொன்று கிடைக்கும்... சண்டையை இழந்து ஆசைப்பட்டது கிடைச்சிருக்குன்னு மனச சமாதானப்படுத்திக்குவேன்.( சில விஷயங்களில் தான் இப்படி..பல விஷயங்களில் தலைகீழா நின்னாலும் ஒண்ணும் தேறாது :-((... அட நம்புங்க...)

கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு சம்பவம்... நான் நினச்சது நடக்கல....அப்படி நடக்காததில் சந்தோஷப்பட்டாலும் வருத்தமும் ஒரு திருப்தியும் இருந்துச்சு....  என்ன... தலை சுத்தி கீழ விழுந்திடுச்சா.... சரி...சரி.. எடுத்து மாட்டிக்கிட்டு மேல ... அட... கீழ படியுங்க...


எங்க வீட்டுக்குப் பக்கத்தில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் எனக்கு தோழியாக கிடைத்தார். அவருடைய குடும்பமும் ரொம்ப இபாதத்தான (இறைபக்தி), இறையருளால் மகிழ்ச்சிகரமான குடும்பம். தோழியுடன் பிறந்தவர்கள் 5 பேர். ஒரு அண்ணன்...ஒரு தங்கை... மீதி 3 தம்பிங்க.. (கணக்கு சரியாகிடுச்சா?) அண்ணன் சவூதியிலயும் தங்கையும் ஒரு தம்பியும் அமெரிக்காவிலயும் ஒரு தம்பி பெங்களூருவிலயும் ஒரு தம்பி சிங்கை(ன்னு நினைக்கிறேன்)லயும் இருக்காங்க... அப்பா அம்மா ஊரில் தனியாக வசித்து வந்தார்கள். இதை அந்த அக்கா சொன்னதும் நான் நினச்சதுதான் இந்தப் பதிவுக்கே அடித்தளம்... அதாவது 'ஆசையாசையா பிள்ளைகள பெற்று வளர்த்தாங்க...இப்ப அவங்க தனியா ஊர்ல இருக்காங்களே.பிள்ளைகளும் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்காமல் அவர்களின் தாய் தந்தை நினைத்தாலும் இவர்களை ஒன்றாக சந்திக்க முடியாத தூரங்களில் இருக்கிறார்களே. ' அப்டீன்னெல்லாம் குதிரை அது பாட்டுக்கு ஒடிட்டு இருந்துச்சு....


இந்த சமயத்துல அவங்களோட தம்பியின் திருமணத்திற்கு எல்லாருமா ஊருக்கு போய்விட்டு வந்தார்கள். ஊரிலிருந்து திரும்பி வரவே மனசில்லை...  என்று அக்கா வருத்தப்பட்டார்கள். நானும் 'அக்கா..வருத்தப்படாதீங்க..கடைசி தம்பி திருமணமும் இது போல் விரைவில் மகிழ்ச்சிகரமானதாக அமையும்' னு சொல்லி வச்சேன். 'இன்ஷா அல்லாஹ் பானு' அவங்க சொன்னாங்க.

சில மாதங்களுக்குப் பிறகு அவங்க தங்கையின் பிரசவத்திற்கு அவரது பெற்றோர் அமெரிக்காவில் 6 மாதம் தங்கியிருந்தனர். பிறகு அக்காவுடைய பிரசவத்துக்கும் இங்கு வந்து 2 மாதங்கள் தங்கியிருந்தனர். நான் அப்பொழுது தற்செயலாக அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தேன். அன்றுதான் அவரது பெற்றோரின் பயணமும் அமைந்திருந்தது. தவிர்க்க முடியாத காரணத்தினால் 1 மாதம் முன்பே அவர்கள் கிளம்ப வேண்டியிருந்தது. அவரது அம்மா கையால் சமைத்த சுவையான மீன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு தொழுகைக்குச் சென்று திரும்பிய அவரது அப்பாவையும் சந்தித்து விட்டு கிளம்பினேன். அன்று அவர்கள் சவூதியில் இருக்கும் அவரது பேரக்குழந்தைகள் அவர்களை அழைத்ததால் அங்கு போய் சிறிது நாட்கள் தங்கிவிட்டு ஊருக்குச் செல்லவிருப்பதாக தெரிவித்தார்கள். ஹ்.ம். கொடுத்து வைத்தவர்கள்... பிள்ளைங்க நாலாப்பக்கமும் இருந்தா இது ஒரு வசதி... ஹாயாக ஊரைச் சுற்றலாம். அப்டீன்னு நினைச்சுக்கிட்டேன்.

சவூதிக்குச் சென்றவர்களுக்கு உம்ரா (சிறிய ஹஜ்) செய்ய விருப்பப்பட்டு மகனிடம் சொல்ல அவரது மகன்கள் அனைவரும் ஒரு வார விடுப்பு எடுத்துக் கொண்டு அவருடன் உம்ரா சென்றிருக்கிறார்கள். உம்ரா செய்துவிட்டு டேக்ஸிக்கு காத்திருக்கும் வேளையில் நெஞ்சு வலிக்கிறது என்று பிடித்துக் கொண்டு அமர்ந்தவரின் ரூஹ் பிரிந்திருக்கிறது..இன்னா லில்லாஹி.. (இறைவனிடமிருந்தே வருகிறோம்...மீன்டும் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது).

தமிழ்நாட்டில் எங்கோ இருந்தவர் அமெரிக்கா,அபுதாபி என்று இறையருளால் சிலகாலம் இருந்தவர் மக்காவில், உலகின் நான்கு திசைகளிலிருந்து வந்த மகன்கள் சூழ, மரணத்தைத் தழுவிய காட்சி மனதில் நிறைந்து ஆச்சரியம் பொங்குகிறது. இறைவனின் வாக்கு தான் எத்துனை உண்மையானது... இதோ அவ்வாகுகள்:

3:154  "“நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!” என்று (நபியே!) நீர் கூறும். (இவ்வாறு ஏற்பட்டது) உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை (அகற்றிச்) சுத்தப்படுத்துவதற்காகவும் ஆகும் - இன்னும், அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்."

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்.

Sunday, February 5, 2012

ஆஷா இருக்கிறா பேஷா..!

பூமியில் கிடைக்கும் அமுது என்ற தலைப்பில் தாய்ப்பாலின் அருமை பெருமை சிலவற்றை உங்களோடு பகிர்ந்திருந்தேன். சில மாதங்களுக்கு முன் விகடனில் இடம்பெற்ற உண்மைச் சம்பவத்தையும் உங்களோடு பகிர நினைத்தே இவ்விடுகை.

என்னதான் நம்ம அதை இதை பேசினாலும் ஊர்க்கதை ஓண்ணு சொன்னா அது மூலமா கிடைக்கிற படிப்பினையே வேறுதான்.

'தாய்ப் பாலுக்கு ஈடு இணையில்லை’ என்பது உலகறிந்த விஷயமே! அதற்கு மகுடம் சூட்டுவதுபோல... பல தாய்களிடம் இருந்து பெறப்பட்ட பால் மூலமாக... ஒரு குழந்தையை மறுபிறவி எடுக்க வைத்து, தாய்ப்பாலின் பெருமையை மேலும் ஒரு படி உயர்த்திப் பிடித்திருக்கின்றனர் திண்டுக்கல், அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவக் குழுவினர்!
 
திண்டுக்கல் மாவட்டம், தவசிமேடை கிராமத்தைச் சேர்ந்தவர் நீதிமேரி. கூலி வேலை செய்துவரும் இவருக்கு, கொசவபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. ஆஷா என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை, தாய்ப்பால் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளால் பிறந்ததிலிருந்தே நோய்களால் தாக்கப்பட்டு, சாவின் விளிம்புக்கே சென்றுவிட... கடைசிக் கட்டத்தில் ஆஷாவைக் காப்பாற்றியிருக்கிறது, தாய்(களின்) பால்!
 
ஏழு மாதக் குழந்தை ஆஷாவை கைகளுக்குள் அடைக்கலப்படுத்தியபடி   அமர்ந்திருந்த நீதிமேரி, ''தாய்ப்பால் போதாதால, ஆறாவது நாள்ல இருந்தே புட்டிப்பால் கொடுக்க ஆரம்பிச்சுட்டோம். நாப்பத்தி ரெண்டாவது நாள்ல வயித்துப் போக்கு ஆரம்பிக்க, திண்டுக்கல், கெவருமென்ட் ஆஸ்பத்திரியில சேர்த்தோம். ரத்தம், குளுகோஸ்னு ஏத்தியும் ஒண்ணும் சரியாகல. என்ன ஆகப்போகுதோனு தவியா தவிச்சுக்கிடந்தேன்.
 
என் நிலையைப் பார்த்து ரொம்பவும் பரிதாபப்பட்ட டாக்டர் ஜெயின்லால் பிரகாஷ், 'பக்கத்து பெட்கள்ல குழந்தை பெத்திருந்தவங்ககிட்ட இருந்து தாய்ப்பாலை வாங்கிக் கொடுக்கலாம்'னு சொன்னார். இப்போ குழந்தை உயிர் பிழைச்சுக் கிடக்கறதுக்கு அவர்தான் முக்கிய காரணம்! வெவரமெல்லாம் அவர்கிட்டயே கேட்டுக்கோங்க'' என்றார் கண்கள் கலங்கியபடி.
அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நல தலைமை மருத்துவர் ஜெயின்லால் பிரகாஷிடம் பேசினோம். ''நீதிமேரி, ரொம்ப கஷ்டப்படற குடும்பம். ஊட்டம் பத்தாததால அவங்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்கல. குழந்தைக்கு அடிக்கடி வயித்துப் போக்கும் ஏற்பட, குழந்தை பத்தின கவலையால தாய்ப்பால் ரொம்பவும் சுண்டிப் போச்சு. தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஆகவே... நோய்க்கிருமிகளோட தாக்கம் அதிகமாகி, ரத்தத்துல கலந்து 'செப்டிமீசியா ஸ்டேஜு'க்கு வந்துடுச்சு குழந்தை. இறுதியா, 'மராஸ்மிக் ஸ்டேஜ்'ல, உடம்புல உயிர் ஒட்டிக்கிட்டு இருந்ததுனுதான் சொல்லணும்.
 
குளுக்கோஸ், ரத்தம் எல்லாம் ஏத்தினோம்... ஏகப்பட்ட மருந்துகளையும் கொடுத்தோம். பொதுவா அரசு மருத்துவமனையில வெளியில இருந்து மருந்துகளை வாங்கிக் கொடுக்கக் கூடாது. இந்தக் குழந்தைக்காக மேலிடத்துல ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி, அரசு செலவுலேயே வெளியில இருந்து மருந்துகள வாங்கிக் கொடுத்தோம். ஆனாலும், குழந்தையோட உடம்புல முன்னேற்றம் இல்லை. இறுதியா, அந்த சிசுவை எப்படியும் காப்பாத்தியே ஆகணும்ங்கற பொறுப்போட ஜூனியர் டாக்டர்ஸ், ஸ்டாஃப் நர்ஸ்கள், டிரெய்னிங் நர்ஸ்கள்னு எங்க டீம் போட்ட மீட்டிங்லதன்... 'தாய்ப்பாலை இரவல் வாங்கிக் கொடுக்கலாம்'ங்கற முடிவுக்கு வந்தோம்.
வார்டுல குழந்தை பெற்றிருந்த எல்லா தாய்மார்கள்கிட்டயும் குழந்தை ஆஷாவோட நிலையையும், தாய்ப்பாலோட மகத்துவத்தையும் எடுத்துச் சொல்லி புரிய வெச்சோம். சிசேரியன் பண்ணினவங்க, குழந்தை சரியா பால் குடிக்காம இருக்கிற தாய்மார்கள், போதுமான அளவைவிட அதிகமா பால் சுரக்கிற தாய்மார்கள்னு எல்லாரும் சந்தோஷமா பாலை எடுத்துத் தர ஆரம்பிச்சாங்க. ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை தாய்ப்பாலை கொடுக்க ஆரம்பிச்சோம். நாலஞ்சு நாள்லயே குழந்தை தேறிடுச்சு! பல தாய்களோட பால் மூலமா... வைட்டமின், புரோட்டீன்னு எல்லாச் சத்தும் கிடைச்சதுல... இப்ப முழுசா குணமாகி நல்ல ஆரோக்கியமா இருக்கு குழந்தை'' என்று நிம்மதி பெருமூச்சு விட்டபடி சொன்ன டாக்டர் ஜெயின்லால் பிரகாஷ், நிறைவாகச் சொன்னது... ஒவ்வொரு பெண்ணும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம். அது...
''இந்தக் குழந்தை பிழைச்ச விஷயத்தை 'மிராக்கிள் ஆஃப் பிரெஸ்ட் மில்க்’னுதான் சொல்லணும். 'தாய்ப்பால், இத்தனை சக்தி வாய்ந்ததா!'னு மத்த தாய்மார்கள் எல்லாம் அதோட அற்புதத்தை நேரடியா பார்த்து முழுமையா உணர்ந்தாங்க. இப்போ இருக்கிற இளம் தாய்மார்களும், அமிர்தமா இருக்கற தாய்ப்பாலோட மகிமையைப் புரிஞ்சு, உயிர் காக்கும் அந்த விலையில்லாத மருந்தை வீணாக்காம கொடுத்து, குழந்தைகள நோயில்லாமலும், புத்திசாலியாவும் வளர்க்கணும்!''

Thursday, January 5, 2012

என்றென்றும்16 உருவான கதை

முன்பொரு காலத்தில் (ச்ச... நிலம இப்படி ஆகிடுச்சே :(..) பெயர்க்காரணம்னு ஒரு தொடர்பதிவுல கோர்த்துவிட்டது மஹி உங்களுக்காவது ஞாபகம் இருக்கும்னு (இல்லன்னாலும் பரவாயில்ல...ஹி..ஹி..)  நம்பி இந்த பதிவு போடுறேன்.

மஹி என் புனைப்பெயரைத் தேர்ந்தெடுத்ததுக்கான காரணத்தை சொல்லச் சொல்லியிருந்தாங்க... அது ஒண்ணும் பெரிய காரணமெல்லாம் இல்லீங்க... என் சொந்த பெயரில் எழுதாம வேறு பெயரில் எழுதலாமுன்னு யோசிச்சப்போ இந்த பெயர் தேர்ந்தெடுத்தேன்... விதவிதமான பெயர்கள் வலைப்பூக்களுக்கு இருந்ததப் பார்த்து ஆசப்பட்டு நமக்கும் அதாவது நம்ம வலைப்பூவுக்கும் என்ன பெயர் வைக்கலாமுன்னு கொஞ்சம் யோசிச்சப்ப ஒரு பழைய வரலாறு ஒண்ணு ஞாபகம் வந்துச்சு. நமக்குத்தான் ஒண்ணத் தொட்டா ஒண்ணு ஞாபகம் வருமே..ஹி..ஹி...

ஆறாம் வகுப்பு படிக்கும்போது (அப்படியெல்லாம் தலையில அடிச்சுக்கக்கூடாது... வலிக்கும்ல) தமிழ்ல ஒரு கதை வந்துச்சு. கதையின் பெயர் 'பெயரில் என்ன இருக்கிறது?'. அதாவது அந்த கதையின் ஹீரோ பெயர் மண்ணாங்கட்டி... அவனுக்கு அவன் பேரைப் பத்தி ரொம்ப கவலை. இப்டி ஒரு பேர் வச்சிட்டாங்களேன்னு... அப்ப இரண்டு கண்களையும் இழந்த கண்ணாயிரத்தையும் கோடீஸ்வரன் என்ற பிச்சைக்காரனையும் சந்திப்பான். அப்ப தான் நம்ம ஹீரோவுக்கு தெளிவு பிறக்கும் வெச்சுக்கிட்ட பெயர்ல ஒண்ணுமில்ல... வாங்குற பேர்ல இருக்கு வாழ்க்கை அப்ப்டீன்னு. அத மாதிரி ஏதாவது நம்ம வலைக்கு வக்கலாமான்னு யோசிசேன்... ம்ஹூம்... நம்ம பதிவ படிக்கிறவங்க வேற அப்படித்தான் திட்டப்போறாங்க... அத நாமளே ஏன் சொல்லிக்கொடுக்கணும். அதனால வச்சுக்கிர பேராவது உருப்படியான நல்ல பெயரா வப்போம்னு முடிவு பண்ணேன்.

அப்புறம் இன்னொரு ஃப்ளாஷ்பேக் (ஓடறதுதான் ஓடறீங்க.. முழுசா படிச்சுட்டு ஓடுங்க..ஹி..ஹி..):

உறவினர் வீட்டில் சில வருடங்களுக்கு முன்ன தங்கியிருந்தப்போ அந்த வீட்டம்மா அவங்க வீட்டு காலண்டரில் இன்னாருக்கு இன்னின்ன தேதியில் பிறந்த நாள், கல்யாண நாள்னு,குழந்தைக்கு பரீச்சை மாதிரி விஷயங்களை குறிச்சு வச்சிருந்தாங்க... அவங்க பிறந்ததேதி பக்கத்தில் என்றும்16ன்னு எழுதியிருந்தாங்க.... அதாவது Ever16 அப்டின்னு எழுதியிருந்தாங்க... நான் யாருக்கும் தெரியாம ஒரேயொரு N சேர்த்துவிட்டேன்.... EVER16  NEVER16 ஆகிடுச்சு.... அந்த நிகழ்வு ஞாபகம் வந்துடுச்சு.(நல்லவேளை.. இரண்டாவது ஃப்ளாஷ்பாக்லயாவது முடிவு பண்ணினாயே மகராசின்னு  நினச்சீங்கதானே?!)

அந்த என்றும்16-ஐ என்றென்றும்16 அப்டீன்னு கொஞ்சம் மாத்தி ரகசியமா நான் மட்டும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு நானே எனக்கு பெயர்சூட்டு விழா நடத்தியாச்சு. ரொம்ப பந்தாவா என்றென்றும்16 ஆக வலையுலகத்தில் நுழஞ்சாச்சு. ஆனா சில பதிவுகள் கொடுத்த பிறகு நம்ம வாசகர்களிடமிருந்து  ஒரு வேண்டுகோள் வந்துச்சு(கம்ப்ளெயின்ட்ட இப்டி வேற சொல்லலாமோ  ;-)) ). என்றென்றும்16 அப்டீன்னு டைப் பண்றதுக்குள்ள எழுத வந்த மேட்டரே மறந்துடுதுன்னு....  அவ்வ்வ்வ்வ்வ்வ்.... என்னடாது கஷ்டப்பட்டு யோசிச்சு வரலாறு, பொரியல்  ச்ச... புவியியல் எல்லாத்தையும் கிளறி கண்டுபிடிச்ச அழகான அர்த்தம் வாய்ந்த பேருக்கு இப்படி ஒரு சோதனையான்னு நொந்து போய் வேற வழியில்லாம என்னோட அழகுபெயரில் ஒரு பாதியைச் சொல்ல வேண்டியதாயிடுச்சு.... இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா அவ்வளவு கஷ்டப்பட்டு முளையை உபயோகப்படித்தி இருந்திருக்க வேண்டாமேன்னு இப்பவும் கொஞ்ச கவலையா இருக்கு.... (ஷ்ஷூ.....மூளையை யூஸ் பண்ண விடமாட்டேங்கிறாங்கப்பா)....

என் நல்ல நேரம் இந்த பெயரை இதுக்கு முன்ன யாரும் செலக்ட் பண்ணியிருக்கலை.... நம்மள மாதிரி அறிவுஜீவி இன்னும் பிறக்கலன்னு ஒரு அல்ப சந்தோஷம் வேற.... ஹி..ஹி...

மஹி சொன்னது //உங்க புனைப்பெயருக்கான காரணத்தை சொல்லுங்க,அப்படியே உங்க சொந்தப்பேரையும் சொல்லிடுங்க.;)
நன்றி!//
என்ன... உண்மையான பேரை சொல்லணுமா.... அஸ்கு புஸ்கு.... அவ்வளவு சீக்கிரத்தில் சொல்லிட மாடோம்ல... பதிவெழுத மேட்டர் கிடைக்கலன்னா சொந்தப் பெயர் உருவான கதைன்னு ஒரு பதிவு தேத்திடலாம்ல...... ம்ம்ம்.... அது அடுத்த பதிவா கூட இருக்கலாம்...ஹி...ஹி...ஹி...
-----------------------------------------------------------------------------------------------


நம்ம சின்னத்துரை கட்டிலோட ஓரத்தில் தவழ்ந்து வந்துட்டிருக்கான்.... நான் பயத்தில் பெரியத்துரையிடம் " டேய்... அவன் ஓரத்துக்கு வந்துட்டான் பாரு...அவன புடீ" கத்துறேன்.... அவன் சர்வசாதாரணமா "ம்மா...வெய்ட் பண்ணும்மா... அவன் கீழ விழுறானா இல்லையான்னு பார்ப்போம்"... அவ்வ்வ்வ்..... அவன் விழலன்னாலும் இவனே தள்ளிவிட்ருவான் போல... அண்ணனிடம் தம்பி படுற பாடு பார்த்தா........முடீல...

 -------------------------------------------------------------------------------------------------
 எங்கிருந்து
எந்நேரம்
வா
எனச்சொல்லி முடியும்முன்
என்னிடம் ஓடி வருபவன்
அன்று
பாதி தூரத்தில் நிற்கிறான்
என்னருகே வரத் தயங்குகிறான்
ஏன்?
ஓ..என் கையில் சாப்பாட்டு கிண்ணம்.


என் சின்னத்துரையைப் பத்திதான் சொல்றேன்... நம்ம எழுத்துக்கு நாமளே விளக்கம் கொடுத்துடறதுதான் நமக்கு safe. ஹி..ஹி..அப்புறம் த.பு., க.பு. ன்னு பின்னூட்டத்துக்கு படாத பாடு படவேண்டாம் பாருங்க... ஷ்.... அப்பா.. இதத்தான் அனுபவம்னு சொல்றாங்களோ?! ;))  அப்பப்ப இந்த மாதிரியெல்லாம் வரும்... உங்களுக்கு உடனே 'எங்கேயும் எப்போதும்' படத்தில் வர்ற மாதிரி வேப்பிலை அடிக்கணும்னு தோணுமே... யூ ஆர் மோஸ்ட் வெல்கம்...அதைப்பத்தியும் எழுதிடுவோம்ல... எப்பூடீ?