Monday, May 27, 2013

மனிதன் என்பவன் ............... ஆகலாம்??

சமீபத்தில் (என் பாஷையில் 7 - 8 மாதங்களுக்கு முன்..ஹி..ஹி.. ) ஒரு தளத்தில் அதன் (மாற்றுமத) உரிமையாளர் இஸ்லாத்தில் தனக்கிருக்கும் சந்தேகங்களைக் கேட்டிருந்தார்.  அத்தளத்தின் முகவரி மறந்துவிட்டது. ஆகையினால் அக்கேள்விக்கான விளக்கத்தையே ஒரு பதிவாக போட்டால் என்ன என்று என் ஏழாவது அறிவு கூறியதால் நீங்க மாட்டிக்கிட்டீங்க...

அந்த நிகழ்வும் அந்த சந்தேகமும் இதுதான்:

உமர் (ரலி) அவர்கள் அறிவித்ததாகக் கூறப்பட்டுள்ள அந்த ஹதீஸ்:

நான் தொழுதுகொண்டிருக்கையில் நான் செய்ய வேண்டிய பிற பணிகள் என் நினைவிற்கு வரும். தொழுகையை நிறைவேற்றியதும் நான் அவற்றை நிறைவேற்றுவேன்.

அதாவது முஸ்லிம்களின் இறுதித்தூதரின் உற்ற நண்பரும் அவருக்குப் பிறகு இரண்டாவது கலீஃபாவாகப் பதவியேற்கும் அளவிற்கு தகுதியும் அறிவும் புகழும் வாய்ந்த ஒருவர் தன் தொழுகையில் இப்படி கவனக் குறைவாக இருக்கிறாரே.... இறைவனுக்காக இறைவனை மட்டுமே தொழுவதாகச் சொல்லிக்கொள்பவர்கள் தொழும்போது இறைவனை நினைக்காமல் வேறு விஷயங்களைப் பற்றி நினைக்கிறாரே.... இப்படிப்பட்டவர் தன் சொந்த வாழ்க்கையில் எப்படி இறைநம்பிக்கையுடைவராக இருக்க முடியும்.... ஒரு சஹாபாகவும் ஒரு கலீஃபாவாகவும் மக்களுக்கு அறிவுரை வழங்க இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? ஊருக்கு மட்டும் உபதேசம் செய்கிறாரோ... இவருடைய அறிவுரையைப் பின்பற்றும் மக்களின் இறைநம்பிக்கை எந்த அளவில் இருக்கும் என மேலோட்டமாகப் பார்க்கும் மக்களுக்குத் தோன்றும் வகையில் தான் இந்த ஹதீஸ் அமைந்திருக்கிறது. 

இந்த ஹதீஸை வலை வீசி தேடி பார்த்து விட்டேன். சகோதரர்கள் சிலரையும் தேடச் சொல்லி சிரமப்படுத்தியும் ம்ஹூம்... கிடைக்கவேயில்லை.... கிடைக்காத ஹதீஸிற்கு எதுக்கு பதிவுன்னு நீங்க யோசிக்கலாம்.... இதே கருத்தைக் கொண்ட வேறு சில ஹதீஸ்கள் கிடைத்தன... அந்த ஹதீஸ்களை வைத்து அதே சந்தேகம் மேற்கண்ட நபர் போல் பலருக்கும் தோன்றும் (?).. அட... என் அறிவுக்கு எட்டினது இவங்களுக்கு இல்லையேன்னு கொஞ்சம் பந்தா பண்ணிக்கலாம் எனும் ஒரு நல்லெண்ணத்தில் இந்தப் பதிவு.....அவ்வ்வ்......

இவ்வளவு ஏன்.... மனிதர்களுக்கு இறைத்தூதராக அனுப்பப்பட்டவராகிய முஹம்மது (ஸல்) அவர்களே தொழுகையின் போது சில சமயங்களில் மறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

1229. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
தொழுகைகளில் ஒரு தொழுகையை நடத்திய நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்திலேயே ஸலாம் கொடுத்துவிட்டார்கள். (அநேகமாக அது அஸர்த் தொழுகை என்றே நினைக்கிறேன் என முஹம்மது இப்னு ஸிரீன் கூறுகிறார்.) பின்பு எழுந்து பள்ளிவாசலின் முற்பகுதியிலிருக்கும் மரக்கட்டையின் பக்கம் சென்று அதன்மேல் தம் கையை ஊன்றி நின்றார்கள். அங்கே இருந்தவர்களில் அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி) இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் அது பற்றிப் பேசப் பயந்து கொண்டிருந்தபோது பள்ளியிலிருந்து வேகமாக வெளியேறி மக்கள், 'தொழுகை சுருக்கப்பட்டுவிட்டதோ' எனப் பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களால் துல்யதைன் என அழைக்கப்படும் ஒருவர் 'நீங்கள் மறந்து விட்டீர்களா அல்லது தொழுகை சுருக்கப்பட்டுவிட்டதா?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் மறக்கவும் இல்லை. (தொழுகை) சுருக்கப்படவும் இல்லை" என்றவுடன் 'இல்லை நிச்சயமாக நீங்கள் மறழ்ழ்ந்து விட்டீர்கள்' என அவர் கூறினார். நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்திவிட்டு ஸலாம் கொடுத்தார்கள். பின்பு தக்பீர் கூறித் தம் வழக்கமான ஸஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட நீண்டதாகவோ ஸஜ்தாச் செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தித் தக்பீர் கூறினார்கள். மீண்டும் தலையை (பூமியில்) வைத்துத் தக்பீர் கூறினார்கள். தம் வழக்கமான ஸஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட நீண்டதாகவோ ஸஜ்தாச் செய்து, பின்பு தம் தலையை உயர்த்தியாவாறே தக்பீர் கூறினார்கள்.
Volume :2 Book :22

என்ன... இறைவனால் மனிதர்களுக்கெல்லாம் தூதராக அனுப்பப்பட்டவரே தமது தொழுகையில் கவனக்குறைபாட்டுடன் இருந்திருக்கிறாரா...  அவரையும் பின்பற்ற இத்தனை கோடி மக்களா... எனக் கேட்பவர்களும் இருக்கலாம்... இறைவனாலும் நபி(ஸல்) அவர்களாலும் மீண்டும் மீண்டும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று...” நபி(ஸல்) அவர்களும் மனிதர் தான்”... மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய மறதி, கோபம் போன்ற தவிர்க்கப்பட வேண்டிய எண்ணங்களிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடியவர்களாகவே இறுதிவரை வாழ்ந்தார்கள். தம்மைத் தூதராக இறைவன் தேர்ந்தெடுத்த காரணத்தினால் தமக்கு சொர்க்கம் நிச்சயம் எனும் சிறு எண்ணமும் தமக்கு இல்லாததை இறைவனிடம் பாவமன்னிப்பு கோரியவர்களாக இருந்து காண்பித்து நம்மை நேர்வழிக்கு அழைத்தார்கள். சக மனிதர்கள் தம்மைக் கிஞ்சித்தும் புகழ் பாடுவதைச் அறவே விரும்பாதவர்களாக வாழ்ந்து நமக்கு முன்னுதாரணமானார்கள். இறைவனுடைய கேள்வி கணக்கிற்கு நாம் எல்லாம் அஞ்சுவதை விட அதிகமாகத் தம்மை விடவும் தமது சமுதாயத்தினைரையே இறுதி நாளிலும் கூட எண்ணி வருந்தியவர்களாகவே தம் இன்னுயிர் நீத்தார்கள்.

மனிதனைப் பற்றி இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

4:28. அன்றியும், அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்; ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.

மனிதனின் குணநலன்கள் பலவற்றைப் பற்றிக் விவரித்துள்ள இறைவன் அம்மனிதனை பலஹீனமானவனாகத் தான் படைத்துள்ளதையும் கூறுகிறான். உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் மனிதன் பலஹீனமானவன் தான். ஒரு விஷயத்தில் மனிதன் முழு ஈடுபாட்டுடன், உலகை மறந்து தனை மறந்து ஆழ்ந்திருப்பது மிக மிக அபூர்வமாகும். இத்தகைய காரணங்களினால் தான் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேலைகளைத் திறம்பட எந்தக் குறைவுமின்றி செய்து முடிப்பவர்கள் மிகவும் திற்மைவாய்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

இத்தகைய பலஹீனமான மனிதர்கள் தமது வணக்கங்களின் போது ஷைத்தானின் திசைதிருப்புதல்களிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளும்படி அறிவுரை சொல்லும் பல ஹதீஸ்கள் இடம்பெற்றிருக்கின்றன.

1231. 'தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடி விடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பி வந்து இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் மீண்டும் வந்து தொழுபவரின் உள்ளத்தில் ஊடுருவி 'இதை இதையெல்லாம் நினைத்துப்பார்' எனக் கூறி, அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டி அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை மறக்கடிக்கிறான். உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்களில் மூன்றா அல்லது நான்கா என்று தெரியவிட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு ஸஜ்தாச் செய்து கொள்ளட்டும்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :22

ஷைத்தானின் திசைதிருப்புதல் என்பது நபி(ஸல்) அவர்களாலேயே உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று... அது நடந்தே தீரும்.. அதில் எந்த மறுப்புமில்லை. ஆனால் இந்த ஹதீஸ் தரும் அறிவுரை என்ன? தொழுகையின்போது ஷைத்தானின் தீண்டுதல் இருக்கும்... அந்தத் தீண்டுதல்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுஙள். தொழுகையின் போது இந்த ஹதீஸை நினைவில் நிறுத்திக்கொண்டால் ஷைத்தானின் தீங்குகளை இறைவனின் உதவியோடு வெற்றிக்கொள்ளலாம் என்பதாகும்.

50:16. மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.

பிடரி நரம்பை விட அருகில் இருப்பவனும் மனிதர்கள் வெளிப்படுத்துபவற்றையும் உள்ளத்தில் மறைத்துவைத்தவற்றையும்  அறிந்தவனுமாகிய இறைவனுக்குத் தெரியாதா.... ஒரு மனிதர் இறைவனுக்காகத் தொழுகின்றாரா அல்லது பிறருக்குக் காண்பிக்க தொழுகிறாரா என்பது.... தொழுகைக்காக உடல் சுத்தம் மேற்கொண்டு உலகின் அத்தனை கவனச்சிதறல்களிலிருந்தும் தவிர்ந்து தன் கவனத்தைத் தொழுகையின்பால் கொண்டுவந்து இறையச்சத்துடன் நிற்கும் தன் அடியானை இறைவன் நன்கு அறிவான். ஷைத்தானின் ஊசலாட்டங்களிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடும் அடியானைப் பாதுகாக்க இறைவனே போதுமானவன்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ”யா ரசூலே! நான் என் ஒட்டகத்தைக் கட்டிவைத்துவிட்டு இறைவன் மீது நம்பிக்கையை வைக்கவா அல்லது அதனைக் கட்டாமல் விட்டுவிட்டு இறைவன் மீது நம்பிக்கை வைக்கலாமா” எனக் கேட்டார். அதற்குத் தூதர் (ஸல்) அவர்கள் “உன் ஒட்டகத்தைக் கட்டிவைத்து விட்டு இறைவனிடம் ஒப்படைத்துவிடு” என்றார்கள். (திர்மிதி 2517, 1981).

தொழுகைக்கும் இந்த அறிவுரை பொருந்தும் சூழலில்: இறைவனால் மனிதர்களுக்குக் கட்டளையிடப்பட்டிருக்கும் தொழுகையைத் தானே நிறைவேற்றுகிறோம்... அதனால் (வெளிப்பரப்பில் தொழும்போது) தமது ஒட்டகத்தைக் கூட கட்டாமல் இறைவன் அதனைப் பார்த்துக்கொள்வான் என நினைத்துப் பலர் தொழுகையில் ஈடுபட நினைத்தாலும் அதனைக் கட்டி வைத்த பின்னரே இறைவனின் மீது நம்பிக்கையை வைக்க வேண்டும். ஏனெனில், கட்டிவைக்கப்படாத ஒட்டகம் எங்கும் செல்லாமல் நிறுத்திய இடத்திலேயே நின்றாலும் நிற்கும்; ஆனால் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் அதன் உரிமையாளர் அது தன்  இடத்தை விட்டு சென்றுவிடுமோ அல்லது எவரேனும் திருடிச் சென்றுவிடுவார்களோ என ஷைத்தான் அவரது மனதினை அலைபாயச் செய்வான். நாம் தொழுகையில் ஈடுபடும்போது எவ்வளவுக்கெவ்வளவு நம் மனதினை முழுமையாக ஈடுபட வைக்க முடியுமோ அதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்து கொள்ளவே மேற்கண்ட ஹதீஸ்கள் அறிவுறுத்துகின்றன.
41:6. “நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான் - ஆனால் எனக்கு வஹீ அறிவிக்கப்படுகிறது; நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனேதான், ஆகவே அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நிற்பீர்களாக; இன்னும், அவனிடம் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள் - அன்றியும் (அவனுக்கு) இணை வைப்போருக்குக் கேடுதான்” என்று (நபியே!) நீர் கூறும்.

மனித சமுதாயத்தினருக்கே தூதராக அனுப்பப்பட்டவராக இருந்தாலும் அவர்களிடமும் மனிதப் பண்புகளையே இறைவன் அமையச் செய்தான். அப்படி இருந்ததால்தானே ஒவ்வொரு மனிதனும் நபி(ஸல்) அவர்களைப் போல் நடக்க முயற்சி செய்ய முடியும். இதனாலேயே இறைவன் நபி(ஸல்) அவர்களை மனிதராகவே படைத்து மனிதக்குணங்களிலேயே வாழச் செய்து மனிதன் எந்தெந்த சமயங்களில் தவறிழைக்கும் சாத்தியங்கள் ஏற்படுமோ அச்சூழ்நிலைகளில் தூதர் அவர்களுக்கும் ஏற்படுத்தித்தந்து அவர்களின் பக்குவமான நடத்தைகளை/பேச்சுக்களை உலக மனிதர்கள் அனைவருக்கும் படிப்பினையாக வெளிப்படச் செய்தான்.

இறைக்குணம் என்பது இறைவனிடம் மட்டுமே இருக்கிறது; இருக்கும்; அவற்றில் ஒன்றிரண்டு அங்குமிங்கும் ஓரிருவரிடம் அமையப்பெற்றிருக்கலாம். ஆனால் அவர்களால் இறைவனாக முடியவே முடியாது. இந்த உண்மையை மக்கள் உறுதியாக நம்பும் காலம் வந்தால்மட்டுமே இன்றைய காலங்களில் பெருகிவரும் போலிஜோசியர்கள், போலிச்சாமியார்கள் அடியோடு ஒழிந்து போவார்கள். இவ்வுண்மையினை உணர்ந்ததினால் தான் அடிப்படைக் கல்வியறிவு இல்லாதவர்களாயினும், முஸ்லிம்கள் போலிச்சாமியார்களிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஆனால் பிற மக்களிடம் இதனைத் தெளிவாக எடுத்துச் சொல்லவும் வழியில்லை. பாமர மக்களாயினும் மெத்தப்படித்த மேதாவிகளாயினும் இத்தகைய சாமியார்களின் தத்துபித்துவங்களுக்கு இரையாகிப்போகிறார்கள். இவ்விஷயத்தில் இஸ்லாத்தைப் போன்று எந்தவொரு உறுதியான கொள்கை இல்லாத காரணத்தினால் இந்திய அரசினாலும் இத்தகைய போலிச்சாமியார்கள் விஷயத்தில் கடுமையான சட்டங்கள் இயற்ற இயலாமலும் அதன் மூலம் பிற மக்களைக் காப்பாற்ற முடியாமலும் போய்விடுகிறது; அரபு நாடுகளில் பல முறை BLACK MAGIC எனப்படும் சூனியம், தாயத்து, தகடு போன்றவற்றை ரகசியமாக உபயோகிப்பவர்கள் காவல் துறையினால் தண்டனைக்குள்ளாக்கப்படுகிறார்கள். இதன் மூலம் விளைவுகளைப் பற்றி விபரமில்லாமல் அச்சூனியக்காரர்களை நாடிச் செல்லும் பலரின் வாழ்க்கையும் செல்வமும் நிம்மதியும் பாதுகாக்கப்பட்டுள்ளன. நரபலி, வாழைப்பழச் சாமியார் போன்ற எண்ணற்ற கதைகள் தொடர்கதைகளாகி வருவதை எப்போது, எப்படி தடுக்கும் நம் அரசாங்கம்??

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறைவனால் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கும் கோபம் வந்திருக்கிறது; சில போர்களில் தோல்வி அடைந்திருக்கிறார்கள்; மறதி ஏற்பட்டிருக்கிறது; உடல் நோவினை வந்து அவதியுற்றிருக்கிறார்கள்; எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை அஞ்சிக்கொள்ளுமாறு இறைவேதத்தில் பல இடங்களில் இறைவனால் கண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது; தோல்விகளை எங்ஙனம் எதிர்கொள்வது; மறதியின் விளைவுகளை எப்படி சரிசெய்வது; உடல்நோய் ஏற்பட்டால் எவ்வாறு பொறுமையோடு ஏற்றுக்கொள்வது போன்ற படிப்பினைகள் பெற்று நம் வாழ்வில் தொடர்புபடுத்தி வெற்றி கொள்ள ஒரு பாதையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிசயக்கத்தக்க, நம்மைக் கவர்ந்த, சமூக ஆர்வங்கொண்ட குணங்களோ செயல்களோ ஒருவரிடம் காணப்பெற்றால் அவரது அத்தகைய பண்புகளை நமக்கு வழிகாட்டியாக / முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளவேண்டுமே தவிர, அவரையே தெய்வமாகக் கொண்டால் அவரைப் படைத்து அவருக்கு அத்தகைய உயர்வைக் கொடுத்த இறைவனை நிராகரிப்பதற்குச் சமம். மனிதர்களைப் படைத்து அவர்களுக்கு நற்குணங்களை வழங்கிய இறைவனால் அந்த மனிதர்கள் செய்யும் காரியங்களை சமூகத்திற்குச் செய்ய இயலாதா அல்லது தன் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுத்துக்கொள்ள தேவைப்படுபவனா இறைவன் அல்லது உலகினைப் படைத்து பரிபாலிக்கும் இறைவனை விட்டுவிட்டு முழுக்க முழுக்க அவன் விருப்பப்படியே செயலாற்றும் மனிதர்கள் எனும் அம்பைக் கொண்டாடும் அளவிற்கு நாம் முட்டாள்களா?? இல்லை... ஆட்டுவிபப்வன் அங்கு இருக்க, அவனுக்குச் சேர வேண்டிய பெருமைகளைத் தனக்கே தேடிக்கொள்ளும் பேராசைகொண்டவர்களை நாம் வணங்கினால் அது நமக்கல்லவா அவமானம்!!!

ஆகையினால் தான் உலக மனிதர்கள் அனைவருக்கும் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ’என்னை வணங்குங்கள்.... இவர் கூறியவற்றைப் பின்பற்றுங்கள்’ என்று இறைவனால் உயரிய அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தாலும் அவரது அறிவுரைகளினால் எந்த ஒரு முஸ்லிமுக்கும் எப்பேர்பட்ட வெற்றி கிடைத்தாலும் அதற்கு முழு முதற்காரணமாகிய இறைவனுக்கே அனைத்துப் புகழையும் பெருமையையும் பறைசாற்றுகின்றனர் முஸ்லிம்கள். எப்பேர்பட்ட ஆற்றல் இறைவனால் அளிக்கப்பட்டிருந்தாலும் இறைவனின் கொடையாகிய இறுதித்தூதர் மக்களுக்கான ஒரு அழகிய முன்மாதிரி -

33:21. அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.


ஆக, மனிதன் என்பவன் மனிதனாக மட்டுமே ஆகலாம்.

Wednesday, April 3, 2013

முஸ்லிம்களின் சுயநலம்


சிறு வயதில் அம்மா கைப்பிடித்து நடக்கும்போது வழியில் சிறிய கல்லையோ முள்ளையோ கண்டால் என்ன ஒரு அவசர வேலையாக இருந்தாலும் அம்மா அதைக் கவனமாக ஓரமாக எடுத்துப் போட்டுவிட்டுதான் அடுத்த அடி வைப்பார்கள். அப்போது நினைத்தேன். அம்மா ஒரு மனிதாபிமானத்தில் இப்படி செய்கிறார்கள் என்று. பிறகு தான் இந்த குர் ஆன் வசனங்கள் அறிந்தேன்.

99:7. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.

4:40 (ஓர் அணுவளவு) நன்மை செய்யப்பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து, அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான்.

இங்கு தான் தரவிருக்கும் கூலியாக இறைவன் கூறியுள்ளதெல்லாம் இந்த உலகில் மட்டுமல்ல.... மறு உலகிலும் தான்... இந்த உலகில் உள்ள இன்பங்கள், வாழ்க்கைதரங்களைத் தான் மனிதன் கண்டுகொண்டானே.... இவ்வுலகில் கிடைக்கும் அதிகபட்ச சந்தோஷம் என்ன என்பதையும் மனிதன் அறிந்தவையாக இருக்கும்பட்சத்தில் அதனையே அவன் மீண்டும் மீண்டும் தருவதாக்க் கூறியிருந்தால் இன்னும் அதிகமதிக நன்மைகள் செய்ய மனிதனுக்கு எங்கிருந்து ஆர்வம் வரும்?? அவன் காணாத, நினைத்துப் பார்க்க முடியாத நற்கூலிகளைத் தருவதாக இறைவன் வாக்களித்திருப்பது தானே நம்மை மேலும் மேலும் நன்மைகள் செய்யத் தூண்டுகின்றன. ஆக, யார் காலிலும் குத்திவிடக்கூடாது என கல்லை அகற்றியது பிறர்நலத்திற்காகச் செய்த்து போல் தோன்றினாலும் இறைவனின் நன்மைகளை எதிர்பார்த்து செய்ததினால் அது முழுக்க முழுக்க சுயநலம்தான்.
========================================================================

தமது பிள்ளைகளின் படிப்பு/திருமண செலவுகளுக்குப் பணம் கேட்டு வரும் உறவினர்களுக்கு/மக்களுக்கு அம்மா  அவர்களை வெறுங்கையோடு அனுப்பியதேயில்லை. அப்போ நினைத்திருக்கிறேன். அம்மா ஒரு மனிதாபிமானத்தில் அவர்களுக்கு உதவுகிறார்கள் என்று. பிறகுதான் இந்த குர் ஆன் வசனம் அறிந்தேன்.

33:35. .......... தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.

அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் தன் நிழலை ஏழு பேருக்கு அளிக்கிறான். அவர்களின் ஒருவர் தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 660

ஆக, அம்மா,அப்பா செய்த தான, தர்மங்கள் பிறருக்கு உதவி செய்வதற்காகச் செய்திருந்தாலும் இறைவனின் நன்மைகளை எதிர்பார்த்து அவர்கள் செய்த்தினால் சுயநலத்தின் அடிப்படையில் தான்.
========================================================================

கல்லூரியில் படிக்கும்போது முதன்முதலாகப் பர்தா அணிந்த போது பவர்கட் சமயங்களில் ஸ்ஸப்பா ..... வேர்வை தாங்க முடியலையே”  என வேதனையில் இருந்த போது நினைத்திருக்கிறேன்.... அந்த சமயம் மாணவிகளாகிய நாங்கள் வேர்வையில் நெளிவதைக் கண்ட எங்கள் ஆங்கில வாத்தியார் மாண்புமிகு Y. செய்யது முஹம்மது அவர்கள் கவலைப்படாதீர்கள் மாணவிகளே.... நீங்கள் இம்மையில் படும் வேதனைகளுக்கு மறுமையில் இறைவன் நற்கூலி வழங்குவான்என்ற உண்மையினை  ஆறுதலாகக் கூறியது மறக்கவே முடியாது. அப்பொழுது இந்தக் குர் ஆன் வசனம் நினைவில் வந்து இருந்த கொஞ்ச நொஞ்ச  மன,உடல் வருத்தங்களை மறைத்தன

94:5. ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
94:6. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
7:42.  ....- எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்குமீறி நாம் சிரமப்படுத்த மாட்டோம்; அவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள் -....
பர்தாவை பெண்களுக்கு மட்டுமே நன்மைகளை அள்ளித்தரும் மற்றுமொரு வாய்ப்பாக உணர்ந்தேன்; மகிழ்கிறேன். பிறர் பார்வையையும் எண்ணங்களையும் தீயவழியிலிருந்து பாதுகாப்பதற்காக நான் பர்தா அணிந்து கஷ்டப்பட்ட்து போல் தோன்றினாலும் என் உடலை பிறர் பார்வையிலிருந்து மறைப்பதற்காகவும் அதற்காக இறைவன் வாக்களித்திருக்கும் நன்மைகளுக்காகவும் சுயநலத்தோடுதான் நான் பர்தா அணிகிறேன்.
========================================================================

சில வருடங்கள் முன்பு, என் மாமி என் மாமாவிடம் மரம் வளர்க்கச் சொல்லி எத்தனையோ நோட்டிஸ், விலம்பரமெல்லாம் பார்க்கிறோமே... நம் வீட்டு முன்னாடியும் ஒரு மரம் வைப்போமா எனக் கேட்டவுடன் ஆகா... நம் மாமிக்குத் தான் எத்தனை சமூகப்பற்று....தேசப்பற்று... என நினைத்துப் பெருமிதம் கொண்டேன். பிறகுதான் இந்த ஹதீஸ் அறியப்பெற்றேன்.

6012. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

மரம் நட முனைந்தவுடன் அதை முருங்கை மரமாகத் தேர்வு செய்து இறைவனின் நற்கூலிகளைப் பெறுவதற்காகவும் செய்த சுயநல செயலேயின்றி வேறில்லை என்பதைப் பிறகு தெரிந்து கொண்டேன்.
========================================================================

உலகின் எந்த மூலையில் அநீதி இழைக்கப்பட்டாலும் உலகின் அனைத்து மூலைகளிலிருக்கும் முஸ்லிம்களிடமிருந்து பலத்த எதிர்ப்பும் கண்டன்ங்கள் வருவதை நாம் கண்கூடாக்க் காண்கிறோம். அநீதமிழைக்கப்பட்டவர்களுக்க்த் தம் ஆதரவையும் அனுதாபங்களையும் அக்கறையையும் இவர்கள் தெரிவிக்கிறார்கள் என நினைத்தேன். ஆம்...அதேதான்... பிறகுதான் இந்த ஹதீஸ் தெரிந்துகொண்டேன்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் வெறுக்கத் தகுந்ததைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அதற்கு சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும். அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து விடட்டும். இது ஈமானின் பலவீனமான நிலையாகும்.” (அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆதாரம்: முஸ்லிம் ஹதீஸ் இலக்கம்:78)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதரைப் பற்றிய அச்சம் நீங்கள் சத்தியத்தைக் கூறுவதிலிருந்தோ, மகத்தானதை (அல்லாஹ், மறுமை நாளை) நினைவுபடுத்துவதிலிருந்தோ உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவ்வாறு செய்வது நிச்சயமாக உங்களது ஆயுளைக் குறைத்துவிடவோ, உணவை தூரமாக்கிவிடவோ முடியாது.” (ஸுனனுத் திர்மிதி)

அவ்வாறு கண்டன்ங்களைத் தெரிவிக்காதவர்கள் எல்லாம் கோழை எனவும் மனிதர்களின் பிரதி செயல்களுக்கு அஞ்சுபவர்கள் எனவும் நினைத்திருந்தேன். இவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சாமல் அநீதம் செய்யும் மக்களுக்குப் பயந்து தான் தமது கோபத்தை அடக்கி வெளிப்படுத்தாமலும் எந்த எதிர்ப்பும் காட்டாமலும் சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்கிறார்கள் எனவும் நினைத்திருக்கிறேன். பிறகுதான் இந்த குர் ஆன் வசனம் அறியப்பெற்றேன்.

3:134 (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்

ஆக, இவர்கள் கோபத்தைக் காண்பிப்பதும் அல்லது பொறுமையுடன் செல்வதற்கும் இவர்கள் முதற்முக்கியக் காரணமாக்க் கருதுவது இறைவனிடம் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் நன்மைகளைத்தானேயன்றி மற்ற இரக்கம், அக்கறை, பச்சாதாபம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
========================================================================

முன்பு நான் வழக்கமாகப் பங்கெடுத்த குர் ஆன் வகுப்பில் மரம் நடுதல் போன்ற நாம் செய்யும் நற்செயல்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் மனிதாபிமான அடிப்படையில் இருக்கவேண்டுமா அல்லது இறைவன் அளிக்கவிருக்கும் அந்நன்மைகளுக்கான நற்கூலிகளை எதிர்பார்த்து செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுந்த்து. அதாவது ஒரு செயலின் அடிப்படை பிறர்நலம் நோக்குதலா அல்லது (இறைவன் தனக்குக் கொடுக்கவிருக்கும் நன்மைகளை எதிர்பார்க்கும்) சுயநலமா என்பதே கேள்வி.

பதில் இவ்வாறு கூறப்பட்ட்து: கண்டிப்பாக மேற்கூறப்பட்ட சுயநலத்தோடு தான் ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும்”.

பதிலை இன்னும் ஆழ்ந்து சிந்தித்தால் இன்னொரு உண்மையும் புலப்படும். தொடர்ந்து பிறர்நலத்தோடு செய்யப்படும் செயல்கள் சில நேரங்களில் சலிப்பைத் தரக்கூடும். ஏன் நமக்காக மட்டும் வாழக் கூடாது என்ற எண்ணம் தோன்ற வாய்ப்புண்டு. இதையே... இறைவனுடைய பொருத்தத்திற்காகவும் அவன் தரும் நற்கூலிக்காகவும் நம்முடைய சுயதேவைக்காகச் செய்தால் கூட அச்செயலை அவன் அனைவருக்கும் நலமாக்கி வைக்க வல்லவன்.

ஆக, இஸ்லாம் மனிதர்கள் செய்யும் ஒரு செயலை நியாயப்படுத்தி அச்செயலுக்காக அவர்களுக்கு மறுமையில் நன்மைகளைக் கூலியாக வாக்களிக்கிறது என்றால் அச்செயல் இவ்வுலகத்திற்கும் அதன் ஜீவன்களுக்கும் நல்வித பாதிப்புகளையே உருவாக்கவல்லவை எனவும் இவ்வனைத்திலிருந்தும் தெளிவாகிறது. முஸ்லிம்கள் செய்வதை வைத்து இஸ்லாத்தை எடை போடுவதைத்தவிர்த்து இஸ்லாம் கூறுவதை வைத்து அதனை ஆராய வேண்டும். 

ஆமா... பழிக்குப் பழி வாங்கச் சொல்லும் மதம், நான்கு மனைவிகள் வைத்துக் கொள்ளச் சொல்லும் மதம், இதையெல்லாம் எப்படித்தான் ஏத்துக்கிட்டு ஜால்ரா போடுறீங்களோ தெரியலைன்னு பல இடங்களில் பலர் சொல்லிட்டு இருக்கிறதுதானே நினைவிற்கு வருகிறது. ஒரேயொரு விஷயம்... சினிமாவில் ஹீரோ தனக்கு அநீதி இழைத்தவனை க்ளைமாக்ஸில் கொன்று பழி தீர்த்தால் கைதட்டி, விசிலடித்து, அந்த ஹீரோவிற்கு கட்-அவுட் வைத்து, அவருக்கு நிஜ வாழ்வில் உடம்பு முடியலேன்னா அவருக்காக ப்ரார்த்தனை எல்லாம் செய்யப்படுகின்றன... அதே நியாத்தை நிஜ வாழ்வில் சொன்னா கசக்குது.... அந்த நியாயத்தைச் செயல்படுத்தும் முஸ்லிம்களை தீவிரவாதின்னு சொல்வது எந்த வித்த்தில் நியாயமாகும்??! தனக்கு ஏற்பட்ட பேரிழப்பினால் அநீதம் இழைக்கப்பட்டவர் தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்தவே பழி வாங்குவது போல் தோன்றினாலும் இனி அடுத்து தவறு/அநீதி இழைப்பவரைத் தான் இப்பழி வாங்கும் நடவடிக்கை தடுக்கும் என்பது புலப்படும். ஆக இதிலும் சமூகநலத்திற்கு இட்டுச்செல்லும் சுயநலம்.

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும்.
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.
(அல் குர் ஆன் 5:45)
  
========================================================================

நான்கு மனைவிகளிடமும் நீதமாக நடந்து கொண்டால் யாருக்கு என்ன குறைந்து விடப் போகிறது??! இது குறித்து பலர் பக்கம் பக்கமாக பலருக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள். அதில் சில உங்கள் பார்வைக்கு இந்த விளக்கமும்...இந்த விளக்கமும்.... கண்டிப்பாக, தெளிவு கிடைக்கும்.

இறைவனுக்காகவும் அவன் தரவிருக்கும் நற்கூலிகளுக்காகவும் செய்யும் எந்தச் செயலாயினும், அது பக்கா சுயநலமாக இருந்தாலும், எந்த நிலையிலும் பிறர் நலம் பேணுவதாகவே அமைகின்றன. நன்மைகளை எதிர்பார்க்கும் சுயநலமின்றி பிறர்நலம் இல்லை... பிறர்நலமின்றி (சுவனம் செல்லுதல் எனும்) சுயநலம் இல்லை. இறைவனது அடிமைகளாய் இருந்து அவன் தரும் கூலிக்காக செய்யும் எச்செயல்களும் நற்செயல்களே...இது போல், இஸ்லாம் கூறும் ஒவ்வொன்றிலும் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டுமெனும் உத்வேகத்தில் மட்டும் ஆராய்ந்தால் பதில் நிச்சயம் கிடைக்கும்.
========================================================================

Friday, March 8, 2013

அன்று 3... இன்று 30

உலகில் ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்வில் ஒவ்வொரு வித இழப்பு,வருத்தம் நிச்சயமாக இடம்பெற்றிருக்கும்.... அப்படி ஒருவருக்கு இல்லையெனில் ஒன்று அவர் கடக்க வேண்டிய பாதை இன்னும் நிறைய இருக்கிறது அல்லது இறைவன் அவருக்கு விதித்தவைகளை அவர் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார் என அர்த்தம் கொள்ளலாம். பொதுவாக மனிதர்களின் எந்த சொத்துக்களை அவர்கள் இழந்தாலும் சொந்த உறவுகளை இழந்தால் பிறர் கூறும் ஆறுதல்களை விட காலமே சிறந்த மருத்தாக அமையும். (இறைவன் நம்மைப் பாதுகாப்பானாக!)இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் இழப்புகளை ஓரளவு நாம் ஏற்றுக்கொண்டாலும் மனிதர்களின் முட்டாள்தனத்தினால் ஏற்படும் இழப்புகளை மனம் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதும் ஆத்திரப்படுவதும் இயல்பே. பலர் அந்த இழப்பிலேயே முடங்கி வாழ்வில் எந்த பிடிப்பும் இல்லாமல் நடைப்பிணமாக ஆகிவிடுகிறவர்களும் உண்டு. தமக்கேற்பட்ட இழப்புகளை முதலீடாகக் கொண்டு வாழ்வில் முன்னேறியவர்களுமுண்டு.சுனாமிக்குப் பிறகு நாகை ....


கடந்த டிசம்பர் 26 2004 உலகை உலுக்கியெடுத்த சுனாமி பேரழிவை யாரும் மறக்க முடியாது. கடல் அலையோசையைச் சங்கீதமாக மட்டுமே அறிந்திருந்த நம் மக்களுக்கு அதன் மறுபக்கத்தை உணர வைத்த அத்தினத்தில் சொந்தங்களை, சொத்துக்களை இழந்தவர்கள் மெல்ல மெல்ல தமது இழப்பை உணர்ந்துக்கொண்டிருக்கும் இச்சமயத்தில் அதே சுனாமியில் தமது மூன்று குழந்தைகளையும், ஏழு உறவினர்களையும் ஒரு சேர பறிகொடுத்த நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கரிபீரன் - சூடாமணி தம்பதியினரை நாம் லேசில் மறந்துவிட முடியாது. (நாகை மாவட்டத்தில் மட்டும் 6000 பேர் உயிரிழந்தனர்)


“பாலும் நெய்யும் ஊட்டி வளர்த்த குழந்தைகளை கல்லும் முள்ளும் குத்திக்கிழித்திருப்பதைப் பார்க்கும் நிலை எந்தத்தாய்க்கும் வரக்கூடாது” என அந்த இழப்பைக் குறித்து பத்திரிக்கைகளுக்கு அவர் கொடுத்த பேட்டி அவருக்கு ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ.. எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. (அப்ப கூழும் கஞ்சியும் ஊட்டியிருந்தா பரவாயில்லையான்னெல்லாம் குதர்க்கமா கேக்கக்கூடாது).


நீங்கா நினைவுகளாக...

 “அப்பா..என்னைக் காப்பாத்துப்பா... என்னை விட்டு போகாதப்பா” என்ற எனது ஐந்து வயது மகனை கடல் பேரலை என் பிடியிலிருந்தும் பிடுங்கிச் சென்றதை என் ஆயுள் வரை மறக்க முடியாது எனவும் ஒரு மரத்தின் மீதேறிய அவர் அலை ஓய்ந்த பிறகு தன் குழந்தைகளைத் தேடி பைத்தியம் போல் ஓடினேன் எனவும் அத்தந்தை கூறுவதிலிருந்தும்  தன் வாழ்க்கையை வேரோடு அறுத்துச் சென்ற அவ்வலையை ஒன்றும் செய்ய முடியாத அவரது இயலாமையால், குற்ற உணர்ச்சியால் இன்று வரை அவர் தவிப்பது நன்கு புலப்படும்.அன்று 12 வயது மகள் ரக்‌ஷன்யா, 9 வயது காருண்யா மற்றும் 5 வயது மகன் கிருபாசன் ஆகிய மூன்று குழந்தைகளைக் கண்முன்னே இழந்து விரக்தியின் உச்சத்திற்குச் சென்றவர்கள் இன்று முப்பது குழந்தைகளுக்கு ஆதரவளித்து வருகிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா?? பிறரிடமிருந்து எந்த உதவியுமின்றி தமது நேரம், சுயசம்பாத்தியம் அனைத்தையும் அந்தக் குழந்தைகளுக்காகவே செலவிட்டு வாழ்வைக கழிக்கவும் மிகவும் பரந்த மனம் வேண்டும்.

சுனாமியில் குழந்தைகளைப் பறிகொடுத்த அச்சமயத்தில் அவரது மனைவி சூடாமணியின் கனவில் அவரது குழந்தைகள் ஆறுதல் கூறுவது போலவும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும்படி கூறுவது போலவும் கண்டார். அதனைச் சிறிதும் யோசிக்காமல் செயல்படுத்தினர் இருவரும். அதே சுனாமியில் தங்களது தாயைப் பறிகொடுத்துத் தவித்த மூன்று குழந்தைகளை முறைப்படி தமது பாதுகாப்பில் கொண்டுவந்தனர். அவர்களது வாழ்விற்கு வெளிச்சம் கொண்டு வந்த அக்குழந்தைகளின் அன்பில் மேலும் சில குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும்  வழியைக் கண்டனர்.


இல்லக் குழந்தைகளுடன்


தற்போது பல ஆதரவற்ற குழந்தைகளைத் தம்முடைய இல்லத்திற்கு அழைத்து வந்து பராமரித்து வருகின்றனர். மூன்று வேலையாட்களுடன் அவர்களுடைய படிப்பு, உடை, உணவு என அனைத்தையும் சமாளிக்கும் அளவில் அவர்களுடைய வருமானம் போதுமானதாயிருக்கிறது எனவும் தெரிவிக்கிறார்கள். 4 முதல்14 வயதிலான இக்குழந்தைகளில் சிலர் தம்மை அம்மா-அப்பா எனவும் அத்தை-மாமா (ஆண்டி-அங்கிள்) எனவும் விளிப்பதாகத் தெரிவிக்கிறார்கள். இப்பொழுது இவர்களுக்குப் பிறந்த, ஆறு மற்றும் நான்கு வயது, இரு குழந்தைகளையும் மற்ற குழந்தைகளிடம் இருந்துப் வேறுபடுத்திப் பார்க்காமல் அதே அளவு பாசத்துடன் வளர்க்கிறார்கள்.


தமது குழந்தைகளுடன்
சுனாமிக்குப் பிறகு தமிழகத்திற்கு வந்த முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தம்மை நேரில் சந்தித்ததை மிகவும் பெருமையுடன் நினைவு கூறும் இவர்களைப் பல அமைப்புகள் தமது விழாக்களுக்கு முக்கிய விருந்தினர்களாக அழைத்து கவுரவப்படுத்துகிறார்கள். CNN - IBN மற்றும் ரிலையன்ஸ் இணைந்து வழங்கி வரும் ‘ரியல் ஹீரோஸ்’ எனும் விருதினை கடந்த வருடம் இத்தம்பதியினரின் சேவையைப் பாராட்டி வழங்கப்பட்டது. எனினும் இவ்விருதுகளுக்காவோ, பிறரின் பாராட்டுக்களுக்காகவோ தாம் இச்சேவையைச் செய்யவில்லை எனவும் தமது ஆத்மதிருப்திக்காகவே தம்மால் இயன்ற உதவிகளைப் புரிந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். சில சமயங்களில் தமக்கு இதுவரை உதவிய மனங்களை நன்றியுடன் நினைவு கூறும் இவர்கள் இன்னும் அதிக குழந்தைகளுக்கு இது போல் ஆதரவும் அளிப்பதற்காகப் புதிதாக ஒரு கட்டிடம் எழுப்பி வருகின்றனர். இவர்களது முயற்சிகள் வெற்றியடைய நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவிப்போம்.


Tuesday, February 19, 2013

அண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 4 (நிறைவுப்பகுதி)

அண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 3
அண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 2
அண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 1

நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் யார் கலீஃபாவாகப் பொறுப்பேற்பது குறித்து ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது, முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் இடையில். இஸ்லாத்தின் ஆரம்பம் முதல் இறைவனுக்காகவும் அவனது தூதருக்காகவும் அனைத்துக் கஷ்டங்களையும் எதிரிகளிடம் சொல்லொணா துயரங்களையும் அனுபவித்த காரணத்தினால் முஹாஜிர்களுள் ஒருவருக்கே கலீஃபா பதவி அளிக்கப்பட வேண்டுமென்ற முஹாஜிர்களின் வாதமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் , மக்காவிலிருந்து முற்றும் துறந்தவர்களாக மதீனாவிற்குள் தஞ்சம் புகுந்தவர்களுக்கு அவர்களே எதிர்பாராவண்ணம் அனைத்து உதவிகளையும் புரிந்து நபி(ஸல்) அவர்களின் வியப்பையும் இறைவனின் மகிழ்வையும் பெற்றுக்கொண்ட மதீனத்து அன்சாரிகள் தம்மில் ஒருவர் கலீஃபாவாக வர விரும்பியதும் மறுப்பதற்கிடமின்றி அமைந்திருந்தன.

நபி(ஸல்) அவர்கள் தமக்குப்பிறகு கலீஃபாவாக இன்னார்தான் வர வேண்டும் என  யாரிடமும் உறுதியான முடிவேதும் சொல்லியிருக்கவில்லை.  ஆகையினால் இந்த விவாதம் நெடுநேரம் தொடர்ந்த வண்ணம் அமைந்திருந்து. முஹாஜிர்களில் முக்கியமாக அபூபக்ர், உமர் மற்றும் அபூ உபைதா (ரலியல்லாஹூ அன்ஹுமா) மற்றும் அன்சாரிகளில் ஸாயித் இப்னு தாபித், அன்சாரிகளின் தலைவர் ஸ’அத் இப்னு உபாதா மற்றும் பலர்  இடம்பெற்றிருந்தனர். கலீபாவாகப் பதவியேற்க அவரவர் தத்தமது நியாயங்களை எடுத்துரைத்த வண்ணம் நெடுநேரம் இருந்தனர். முடிவாக, “நபி(ஸல்) அவர்கள் ஒரு முஹாஜிர். எனவே முஹாஜிர்களுள் ஒருவரே நமக்குத் தலைவராகப் பதவி ஏற்க வேண்டும். அன்சாரி என்பதன் பொருளே உதவுபவர்கள். அதனால் அன்சாரிகள் என்றும் பிறருக்கு உதவுபவர்களாக இருப்பதே சிறந்தது” என ஒரு முஹாஜிர் ஒருவர் கூறுவதை விட ஸாயித் இப்னு தாயித் (ரலி) எனும் அன்சாரி ஒருவரைக் கூற வைத்து சுமுகமான முடிவைக் கொடுத்தான் இறைவன். இதன்மூலம் அன்சாரிகள் இதுவரை முஹாஜிர்களுக்குச் செய்து வந்த உதவிகள் பிரதிபலன் எதிர்பாராதவையாகவும் இறைவன் ஒருவனுக்காகவே செய்தவை எனவும் நிரூபிக்கப்பட்டது.

முஹாஜிர்களுள் உமர் (ரலி) மற்றும் அபூ உபைதா (ரலி) ஆகியோரை வழிமொழிந்தார்கள் அபூபக்ர்(ரலி) அவர்கள். ஆனால் இறைவனால் குர் ஆனிலும் நபி(ஸல்) அவர்களால் உயர்ந்த விதத்தில் பல இடங்களில் பாராட்டப்பட்டவர்களாகவும் பெயர் பெற்ற அபூபக்ர்(ரலி) அவர்களைத் தவிர தம்மில் அடுத்த தலைவராக வர யாருக்கும் தகுதியில்லை என அவர்கள் இருவரும் கூற, அபூபக்ர்(ரலி) அவர்கள் மறுக்க இயலாதவர்களாக முதல் கலீபாவாகத் தலைமையேற்றார்கள். அதன்பின் அங்கிருந்த அனைவரும் அபூபக்ர்(ரலி) அவர்களிடம் பைஅத் செய்துகொண்டார்கள். பதவியேற்றதும் அபூபக்ர்(ரலி) அவர்களது உரை அவர்களது வரலாற்றில் பெரும்பங்கு வகிக்கிறது. அதாவது:

“ஆட்சிகு வர வேண்டும் என நான் கனவிலும் எதிர்பார்த்ததில்லை. இதற்காக எந்த வித முயற்சியும் நான் இதுவரை செய்ததுமில்லை. மார்க்கப்படி எடுக்கப்படும் என் அனைத்து முடிவிற்கும் ஆதரவு தாருங்கள். மார்க்கத்தில் இல்லாத எந்த புதிய விஷயத்திற்கும் எதிர்ப்பு தெரிவியுங்கள். உங்களில் பலவீனமானவர்கள் என் மீது கடுமை காட்டுங்கள்;பலம் வாய்ந்தவர்கள்  என்மீது இரக்கம் காட்டுங்கள்." என்று தமது உரையை அமைத்திருந்தார்கள்.

நபி(ஸல்) அவர்களின் காலத்தின் பிறகு தலைமைப் பொறுபேற்ற பிறகு அபூபக்ர்(ரலி) அவர்கள் பல சமுதாய சீர்கேடுகளையும் பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. அவற்றுள் சிலவற்றையும் அவற்றில் அவர்கள் வெற்றிகரமான முடிவைக் கண்ட விதங்களும்:

1. மக்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறுதல்

நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் முஸ்லிம்கள் சிலர் இஸ்லாத்திற்கே முடிவு ஏற்பட்டதாக எண்ணம் கொண்டனர். தமது முந்தைய இணைவைப்பு வணக்கத்திற்கே மாறலாயினர். இது அவர்களது பலகீனமான ஈமான் (இறைபக்தியினால்) உண்டானதாகும். அவர்களுக்கு நேர்வழி காட்டும் பணிகளை அபூபக்ர்(ரலி) அவர்கள் ஒருபுறம் வெற்றிகரமாக நிகழ்த்தி வந்தார்கள்.

2. பொய்த்தூதர்களின் பிரச்சாரங்கள் முறியடிப்பு

இறைத்தூதரின் காலத்திலேயே பல பொய்யர்கள் தாமும் இறைத்தூதர்களென பிரகடப்படுத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர்(ரலி) அவர்களின் காலத்திலும் இவர்களின் பொய்ப்பிரச்சாரங்கள் முறியடிக்கப்பட்டன; இவர்களில் முக்கியமானவர்கள் அஸ்வத் அல் அனஸி, முஸைலமா மற்றும் துலைஹா ஆவர். அஸ்வத் அல் அனஸீ நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே கொல்லப்பட்டான். துலைஹாவுடன் நடந்த போரில் அவன் சிரியாவுக்குத் தப்பிவிட்டான். (பின்பு அங்கேயே முஸ்லிமாகிவிட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது).

நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே பொய்யன் முஸைலமாவின் கடிதத்திற்குத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இவனுடைய செயல்பாடுகள் அனைத்தும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தன. தன்னுடைய சொந்த கற்பனைச் சட்டங்கள் மூலம் சிறிது சிறிதாக மக்களிடையே பிரபலமடைந்த முஸைலமா, நபி(ஸல்) அவர்களின் மரணத்தின் பிறகு தன் பகுதியான யமாமாவை முழுதும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தான். அபூபக்ர்(ரலி) அவர்களின் காலத்தில், மது அருந்துவதையும் விபச்சாரத்தையும் ஆகுமானதாக்கிய, முஸைலமாவுடன் ஏற்பட்ட கடும்போர் பேரிழப்புகளையும் சிறந்த வெற்றியையும் தந்தது. போரின் ஆரம்பத்தில் தோல்வியைச் சந்தித்த முஸ்லிம்கள் புறமுதுகிட்டு ஓடலானார்கள்.அவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க சக வீரர்கள் வீரமுழக்கங்களைக் கூறி நம்பிக்கையூட்டினார்கள். முஸைலமாவைக் கொன்றவர்களில் வஹ்ஷி என்பவரும் ஒருவர். (இவர் நபி(ஸல்) அவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா(ரலி) அவர்களை உஹதுப் போரில் கொன்றவராவார். பிற்காலத்தில் இஸ்லாத்தைத் தழுவி நபி(ஸல்) அவர்களிடம் மன்னிப்பும் கோரினார்.) இப்போரில் பல்வேறு தலைமைகளுடன் படைகளை வெவ்வேறு இடங்களிலிருந்து தாக்கும்படி உத்தரவிட்ட அபூபக்ர்(ரலி) அவர்களின் போர்த்தந்திரமும் காலித் பின் வலீத் அவர்களின் போர்த்திறமைகளும் இவ்வெற்றிக்குப் பெரிதும் உதவின.இந்த போர்களின் மூலம் பொய்யான இறைத்தூதுவர்கள் அனைவரின் செயல்களும் முறீயடிக்கப்பட்டன. இறுதியாக ஹிஜிரி 11லிருந்து அரபுலகம் முழுமையாக முஸ்லிம்களின் ஆட்சிக்குக் கீழ் வந்தது.

3. உஸாமா (ரலி) அவர்களின் படையெடுப்பு

முஅத்தா போரில் ரோம அரசனால் கொல்லப்பட்ட தம் தந்தைக்காகப் பழிவாங்கும் நோக்கில் உஸாமா (ரலி) அவர்கள் தலைமையில் படை தயாராக்கப்பட்டு இருந்தது. இறைத்தூதரின்  உடல்நலக் குறைவினால் படை புறப்படுவது தாமதாமாகிக் கொண்டே வந்தது. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் உஸாமா(ரலி) அவர்களின் தலைமையிலான இப்படை புறப்படும் உத்தரவை அபூபக்ர்(ரலி) அவர்கள் பிறப்பித்தபோது பிறரிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது.                       

  •   நபி(ஸல்) அவர்களின் மரணத்தினால் மிகப்பெரும் கவலை மக்களை       ஆட்கொண்டிருந்த நேரத்தில் இப்போரில் வெற்றியடைவது என்பது கேள்விக்குறியாக இருப்பதாகப் பலர் தெரிவித்தனர்.
  • இறைத்தூதரை இழந்த மதீனாவின் மீது பல எதிரிகள் போர்த்தொடுக்கலாம். இச்சமயத்தில் போர்வீரர்கள் மதீனாவில் இருப்பது அவசியமாகிறது.
  • உஸாமா (ரலி) அவர்கள் மிக இளவயதினராக இருப்பதால் அவருக்குப் பதில் வேறொருவரைத் தலைவராக நியமிக்க வேண்டும்.
என்பன போன்ற பல மாற்றுக்கருத்துக்கள் அபூபக்ர்(ரலி) அவர்களிடையே எடுத்துரைக்கப்பட்டன.  இப்படை முழுக்க இறைத்தூதரால் உருவாக்கப்பட்டது. இதில் எவ்வித மாற்றமும் செய்ய விரும்பவில்லை என அபூபக்ர்(ரலி) அவர்கள் மிகவும் மனதைரியத்துடன் இப்படையை வழியனுப்பிவைத்தார்கள். இவ்வாறு செய்ததினால் ஏற்பட்ட விளைவுகளோ யாரும் எதிர்பாராவண்ணம் அமைந்தன. அதாவது:
  • தமது இறைத்தூதரை இழந்து நிற்கும் இம்முஸ்லிம்கள் மனவருத்தத்தில் இருப்பார்கள் எனவும் முன்பிருந்த போர்த்தைரியம் இவர்களிடையே இனி காணப்படாது என்ற எதிரிகளின் கனவு தீயிட்டுக் கொளுத்தப்ப்ட்டது.
  • நபி(ஸல்) அவர்கள் அறிவுரைகள் முஸ்லிம்களால் இனி பின்பற்றப்படாமல் போகும் என்ற எதிரிகளின் ஆசையும் கானல் நீராகியது.
  • முஸ்லிம்களின் இந்த அதிரடி நடவடிக்கையினால் அவர்களின் மீது போர்த்தொடுக்கும் தமது எண்ணத்திலிருந்து எதிரிகள் சற்று பின்வாங்கலானார்கள்.
நபி(ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட இப்படை,அபூபக்ர்(ரலி) அவர்களின் மன உறுதியால் பெரும் வெற்றியுடன் உஸாமா(ரலி) அவர்கள் தலைமையில் போரிலிருந்து மதீனாவிற்குத் திரும்பி வந்தது. இறைவனுக்கே புகழனைத்தும்.

4.ஸகாத்

இஸ்லாத்தின் அனைத்துக் கடமைகளையும் செய்தாலும் எளியவர்களின் கஷ்டம் போக்கும் ஸகாத்தைக் கொடுக்கச் சில கோத்திரத்தில் இருந்த வலியவர்கள் பலரும் முன்வரவில்லை. எளியவர்களின் உரிமையான ஸகாத்தை மக்கள்  கடைபிடிப்பதில் எக்காரணத்தைக் கொண்டும் பராமுகமாக இருக்க அபூபக்ர்(ரலி) அவர்கள் தயாராக இருக்கவில்லை. அதனை மக்கள் பெறும் விஷயத்திலும் கொடுக்கும் விஷயத்திலும் கடுமையான நடவடிக்கைகளையே மேற்கொண்டார்கள். இறைவனின் கட்டளையை நிறைவேற்ற எதனையும் தடையாக அவர்கள் நினைக்கவுமில்லை. பல குலத்தினர் ஸகாத்தை நீக்கினால் இஸ்லாத்தில் தாம் நீடிப்போம் என மறைமுகமாகச் சொல்லிப் பார்த்தார்கள். இது போன்ற அச்சுறுத்தல்களுக்குச் சிறிதும் அஞ்சாமல் தமது நிலையிலிருந்து சிறிதும் பின்வாங்காமல் இருந்ததால் ஸகாத்தை எதிர்த்த அப்ஸ், ஸப்யான், அஸத் மற்றும் தோய் ஆகிய குலத்தவர்கள் போர் மூட்டினார்கள்.இப்போரினை அபூபக்ர்(ரலி) அவர்கள் முன்பே எதிர்பார்த்துத் தயாராக இருந்ததால் போரில் வெற்றி அபூபக்ர்(ரலி) அவர்களின் படைக்குக் கிடைத்தது. இதன் மூலம் நபி(ஸல்) அவர்கள் கற்பித்துத் தந்த அல்லாஹ்வின் சட்டங்களில் எந்தவொரு குறைவோ மாற்றமோ செய்பவர்களிடம் அபூபக்ர்(ரலி) அவர்கள் எந்த தயவுதாட்சண்யமும் காட்டவில்லை என்பது நிரூபணமானது.

5. அரபு நாட்டின் எல்லைப்பகுதியில்  பாதுகாப்புப் பலப்படுத்தல்

ஈராக், பைஸாந்தியம் (தற்போதைய சிரியா, ஜோர்டான், இஸ்ரேல்,பாலஸ்தீன், லெபனான் மற்றும் துருக்கி) ஆகிய அரபு எல்லையில் இருந்த இந்நாடுகளிலிருந்த முஸ்லிம்களுக்கு அவர்களது அன்றைய ஆட்சியாளர்களால் பெரும் தொல்லைகளும் அச்சுறுத்தல்களும் ஏற்பட்டன. அதிகப்படியான வரி ஏய்ப்புகளுக்கும் இம்மக்கள் ஆளாயினர். ஆகையினால் இந்நாடுகளை எதிர்த்து போர்த்தொடுத்து அதில் வெற்றியும் அடைந்தனர்.இப்போர்கள் நடைபெற்றிருக்கும்போதே மதீனாவில் அபூபக்ர்(ரலி) அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

ஹிஜ்ரி 13ல் அபூபக்ர்(ரலி) அவர்களின் உடல்நிலை காய்ச்சலால் மிகவும் பாதிக்கப்ப்ட்டது. தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்த அபூபக்ர்(ரலி) அவர்கள் தமக்குப் பிறகு ஆட்சிப்பொறுப்பினை உமர்(ரலி) அவர்களிடம் ஒப்படைக்க விரும்பினார்கள். உமர்(ரலி) அவர்களின் கண்டிப்பும் கோபமும் மக்களிடையே கவலையை உண்டாக்கியது. இஸ்லாமியச் சட்டங்களைக் கடுமையாகப் பின்பற்றுபவரே தன் மக்களுக்கு ஒரு நல்ல தலைவனாக அமைய முடியும் என மக்களுக்கு அறிவுறுத்தினார்கள். தன் நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல கலீஃபாவைத் தாம் தேர்ந்தெடுத்ததில் மிகவும் திருப்தியுற்றார்கள். உமர்(ரலி) அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் பலவற்றை எடுத்துரைத்தார்கள். அவர்களின் தேர்வு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றது.

நபி(ஸல்) அவர்களைக் கபனிட (இறந்தவர் மீது போர்த்தப்பட) உபயோகப்படுத்தியதைப் போலவே மூன்று துணிகளைத் தம் மரணத்திற்கு முன்னதாகவே தயாராக்கினார்கள். அபூபக்ர்(ரலி) அவர்களின் மகளான ஆயிஷா(ரலி) அவர்கள் அத்துணி மிகவும் பழையதாக இருப்பதாகவும் புதுத்துணி ஏற்பாடு செய்யுமாறும் கூறினார்கள். அதற்கு ‘உயிருடன் இருப்பவரே புதுத்துணி உடுத்த தகுதியானவர்கள்’ என்று பதிலளித்தார்கள்.இவ்வாறாகத் தம் மரணத்தைத் தாம் எதிர்பார்த்த வண்ணம் தன் நாட்களைக் கழித்த அபூபக்ர்(ரலி) அவர்கள் தமது 63ம் வயதில் தம் இன்னுயிர் நீத்தார்கள் (இன்னாலில்லாஹி...).

இரண்டு வருடங்கள் கலீஃபாவாக ஆட்சி செய்த அபூபக்ர்(ரலி) அவர்கள் தமது சமுதாயத்தில் நிலவிய இஸ்லாத்திற்கு எதிரான எந்தவொரு நிலையையும் எதற்காகவும் ஈடு செய்துகொள்ளத் தயாராக இருந்ததில்லை. இறைவனின் சட்டங்களையும் மார்க்கத்தையும் தம்மால் இயன்றவரை உறுதியான நிலையில் எத்திவைத்தார்கள். நபி(ஸல்) அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் உடன் இருந்ததால், இஸ்லாம் மக்களை அடைவதற்கு இறைத்தூதர் எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையையும் அவர்கள் நன்கு உணர்ந்திருந்ததால், தம் ஆட்சியில் அதற்கு எதிராக எந்தவொரு நிலையையும் அவர்கள் ஏற்படாதவாறு அதிக கண்டிப்பு என்பதைவிட அதிகமான அச்சத்தில் இருந்ததை அவர்கள் பதவியேற்ற பின் ஆற்றிய உரையிலேயே புரிந்து கொள்ளலாம்.

ஆட்சியாளராக இருந்தும் தமது வியாபாரத் தொழிலைத் தொடர்ந்து செய்துவந்தார்கள். தமது வணிகத்தின் மூலம் கிடைத்த வருமானத்தை மட்டுமே தமக்காகவும் தமது குடும்பத்தினருக்காகவும் செலவு செய்து வந்தார்கள். மற்ற சஹாபாக்களின் வற்புறுத்தலினால் தமது தொழிலை விட்டுவிட்டு ஓர் அரசு ஊழியருக்கான வருமானத்தைத் தாம் பெற்று அதில் வாழ்க்கை நடத்தினார்கள். எந்தவொரு சிக்கலான சூழ்நிலையிலும் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளைச் சிந்தித்து அதன்படி, அவ்வழிகாட்டுதலின் மூலமாகவே தம் ஆட்சியிலும் தீர்வுகளைக் கண்டார்கள். இறைவனின் மீதும் அவனது தூதரின் மீதும் அவர்களுக்கிருந்த அளவிலா இணக்கமும் அன்பும் இருந்ததே அவருடைய ஆட்சி மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் அமைந்ததற்குக் காரணமாகும்.

இனிதே நிறைவுற்றது.

முஹாஜிர் - மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தவர்கள்
கலீஃபா - இறைத்தூதரின் பிரதிநிதி (இஸ்லாத்தின் சட்டங்களுக்கு உட்பட்டு ஆட்சி செய்பவர்)
பைஅத் - உறுதிப்பிரமாணம்

Thursday, January 31, 2013

அண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 3

அண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 2
அண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 1

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது நபி(ஸல்) அவர்கள் குறைஷிகளின் விருப்பங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்கள். அவ்வாறே ஒப்பந்தமும் தயாரானது. இதனைக் கண்ட சஹாபாக்கள் பலருக்கும் "நாம் ஏன் இந்த அளவிற்குக் குறைஷிகளிடம்  தாழ்ந்து போக வேண்டும்" என வருத்தமடைந்தார்கள். இதனைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டும் திருப்தியடையாத வீரத்திற்கும் கோபத்திற்கும் விவேகத்திற்கும் பெயர் பெற்ற உமர்(ரலி) அவர்கள் கூறுவதாக இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள கருத்தாவது:


புகாரி 2731 - பிறகு நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்று, அபூ பக்ரே, இவர்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் துதரல்லவா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்; இறைத்தூதர் தான்" என்று சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்" என்றார்கள். நான், 'அப்படியென்றால் இதை ஒப்புக் கொண்டு நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நண்பரே! இறைத்தூதர், தம் இறைவனுக்கு மாறு செய்ய முடியாது. அவனே அவர்களுக்கு உதவக் கூடியவன். அவர்களின் சுவட்டையே நீங்கள் பின்பற்றுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் சத்திய வழியில் தான் இருக்கிறார்கள்" என்று கூறினார்கள். நான், 'அவர்கள் நம்மிடம், 'நாம் இறையில்லத்திற்குச் சென்று அதை வலம்வந்தோம்" என்று சொல்லவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்; (சொன்னார்கள்.) ஆனால், 'நீங்கள் இந்த ஆண்டே அங்கு செல்வீர்கள்' என்று உங்களிடம் சொன்னார்களா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை (அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை)" என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'நீங்கள் நிச்சயம் அங்கு சென்று இறையில்லத்தை வலம்வரத்தான் போகிறீர்கள்" என்று கூறினார்கள்.
(ஸுஹ்ரீ(ரஹ்) உமர்(ரலி) தொடர்ந்து சொன்னதாகக் கூறுகிறார்கள்:)
..நான் இப்படி (அதிருப்தியுடன் நபி(ஸல்) அவர்களிடம்) பேசியதற்குப் பரிகாரமாக பல வணக்கங்களைப் புரிந்தேன். ....


சுபுஹானல்லாஹ்..... குறைஷிகள் மேலிருந்த கோபத்தையும் அவர்களிடம் தாழ்த்து போய்விட்டதாகக் கருதிய சஹாபாக்களின் விரக்தியையும் சாந்தமான சில வார்த்தைகளால் அமைதிப்படுத்திவிட்டார்கள் அபூபக்ர்(ரலி). நபி(ஸல்) அவர்களின் எந்தவொரு செயலையும் காரணமின்றி இறைவன் நிறைவேற்றமாட்டான் எனும் அபார நம்பிக்கையில் நன்கு ஊன்றியிருந்ததாலேயே இத்தகைய தெளிவு அபூபக்ர்(ரலி) அவர்களிடம் அமையப்பெற்றிருந்தது.

ரோமப் பேரரசன் ஹிராக்ளியஸ் மதீனாவின் மீது போர்த்தொடுக்கத் தயாரான போது மதீனாவின் நிலைமையோ மிகவும் பலகீனமாக இருந்தது; பஞ்சத்தினால் மக்கள் மிகவும் வருந்திய சமயத்தில் போரில் பங்கு பெற இயலாதவர்களாக இருந்தனர். இந்நிலையிலும் ஸஹாபாக்கள் தமது இறையச்சத்தை நிலைநாட்டியவர்களாக இருந்தனர். பொருள் வசதி படைத்தவர்கள் தம்மாலான செல்வங்களைப் போருக்காகக் கொடுக்க முன்வந்தார்கள். பல சமயம் இத்தகைய அன்பளிப்புகள் வழங்குவதில் அபூ பக்ர்(ரலி) அவர்களே முன்னோடியாக இருந்திருக்கிறார்கள். இம்முறை அவர்களை மிஞ்சிவிட எண்ணிய உமர்(ரலி) அவர்கள் தமது சொத்தில் பாதியினை நபி(ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் முறை வந்த போது அவர்களது அன்பளிப்பைப் பெற்றுக்கொண்ட நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் செல்வமனைத்தையும் கொடுத்து விட்டீர்களே.... உமது குடும்பத்தினருக்காக எதை விட்டு வந்திருக்கிறீர்கள்’ என வினவினார்கள். ‘அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விட்டு வந்திருக்கிறேன்’ என்றார்கள். இதனைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள் ‘இனி எப்போதும் அபூ பக்ர்(ரலி) அவர்களை நான் மிஞ்சவே முடியாது’ என்றார்கள். (இப்போர் உஸ்ராப்போர் எனவும் தபூக் போர் எனவும் அழைக்கப்படுகிறது. இப்போர் சமாதானப் பேச்சுவார்த்தையினால் தவிர்க்கப்பட்டது.)
ஹுதைபிய்யா உடன்படிக்கை நிறைவேறிய அடுத்த வருடம் முதல் ஹஜ் நிறைவேற்றப்பட்டது. நபிகளாரின் உடல்நலக்குறைவினால் அபு பகர்(ரழி) அவர்கள் இம்முதல் ஹஜ்ஜுக்கு தலைமை தாங்கினார்கள்.இஸ்லாமிய வரலாற்றில் இப்புனித பயணம் ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்) என இறைவனால் அடையாளம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹஜ்ஜின்போது அபூபக்ர்(ரலி) அவர்களுடைய உரையின் முக்கிய அம்சங்களாவன பின்வருமாறு :

1.இணைவைப்பாளர்களுடன் ஏற்படுத்திய ஒப்பந்தங்களை (நான்கு மாதங்களுக்குப் பிறகு)  முறித்தல் (9:3)
2. இணை வைப்பவர்கள் ஹஜ் செய்வதை விட்டும் தடுத்தல்
3.இஸ்லாத்திற்கு முன் செய்ததைப் போல் நிர்வாணமாக இறையில்லத்தை வலம் வருவதை தடை செய்தல்
(புகாரி 4657, 369 )

ஒரு நாள் நபியவர்கள் உடல் மிகவும் பலவீனமடைந்த நிலையில் தன தோழர்களுடன் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். "இறைவன் தன அடியான் ஒருவனிடம் இவ்வுலகம் வேண்டுமா அல்லது தன்னிடம் உள்ளது வேண்டுமா எனக் கேட்டபோது இறைவனிடம் உள்ளதையே அவ்வடியான் தேர்ந்தெடுத்துக் கொண்டான்" என அவர்கள் சொன்னபோது அபூபக்ர் அவர்கள் துக்கத்தினால் அழலானார்கள். அவ்வடியான் முஹம்மது நபிஎன்பதையும் அவர்கள் விரும்பிக்கேட்டது மரணத்தை என்பதையும் மற்ற சஹாபாக்கள் பின்னர்தான் தெரிந்து கொண்டார்கள். ஆனால் அபூபக்ர அவர்களோ அறிவில் சிறந்தவர்களாக விளங்கினார்கள்.(புகாரி 466). நபிகளாரின் வார்த்தைகளை எளிதில் புரிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களது நட்பு ஆழமாகயிருந்தது.

தமது நண்பரை ஆசுவாசப்படுத்திய நபி(ஸல்) அவர்கள் "அபூபக்ர அவர்களை விட  உதவிகரமாக இருந்த ஒருவரை நான் அறிய மாட்டேன்" என்றும் கூறினார்கள். இதன்பின் முஹாஜிர்களுக்கு அன்சாரிகள் செய்த உபகாரங்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காகத் துஆ செய்தார்கள்.

மதீனாவில் கட்டப்பட்ட மஸ்ஜிதுன் நபி என அழைக்கப்படும் நபியின் பள்ளியின் நபியவர்கள் மட்டுமே இமாமாக (தொழுகையைத் தலைமை தாங்கி நடத்துபவராக) இருந்து வந்தார்கள். நபியவர்கள் நோய்வாய்ப்பட்ட போது அபூபக்ர்(ரலி) அவர்கள் இமாமாக இருப்பதையே பெரிதும் விரும்பினார்கள். இச்சமயத்தில் நபி(ஸல்) அவர்களின் மனைவியும் அபூபக்ர்(ரலி) அவர்களது மகளுமாகிய ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் பின்வருமாறு கூறுவது புகாரி-712 ல் இடம்பெற்றுள்ளது. 

712. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் நோய்வாய்ப் பட்டிருந்தபோது பிலால்(ரலி) வந்து தொழுகை பற்றி அவர்களிடம் அறிவித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அபூ பக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்" என்றார்கள். அதற்கு நான் அவர் இளகிய மனம் படைத்தவர். உங்கள் இடத்தில் அவர் நின்றால அழுதுவிடுவார். அவரால் ஓத இயலாது என்று கூறினேன். 'அபூ பக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்" என்று மீண்டும் கூறினார்கள். நானும் முன் போன்றே கூறினேன். நானும் முன் போன்றே கூறினேன். மூன்றாவது அல்லது நான்காவது முறை 'நீங்கள் யூஸுஃப் நபியின்தோழியராக இருக்கிறீர்கள். அபூ பக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்" என்றனர். (அதன்பின்னர்) அபூ பக்ர் தொழுகை நடத்தினார். நபி(ஸல்) அவர்கள் கால்கள் தரையில் இழுபடுமாறு இரண்டு  மனிதர்களுக்கிடையே தொங்கியவ்ர்களாக (ப்பள்ளிக்குச்) சென்றனர். அவர்களைக் கண்ட அபூ பக்ர்(ரலி) பின்வாங்க முயன்றார்கள். தொழுகையை நடத்துமாறு அவருக்கு நபி(ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். அபூ பக்ர்(ரலி)யின் வலப்புறமாக நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்தனர். நபி(ஸல்) அவர்கள் கூறும் தக்பீரை அபூ பக்ர்(ரலி) மற்றவர்களுக்குக் கேட்கச் செய்தார்கள். 


அபூ பக்ர்(ரலி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற பல தொழுகைகளின் ஒன்றிற்குப் பின் நபியவர்கள் பலத்த குரலில் உரையாற்றுகையில்         "அனைவரையும் விட அதிகமாக அபூபக்ர்(ரலி) அவர்களுடைய செல்வத்திற்கும் நட்பிற்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். எவரேனும் ஒருவரை என்    நண்பராக ஆக்கிக்கொள்ள முடியுமென்றால் அபூபக்ரையே எடுத்துக்கொள்வேன். ஆனால் இஸ்லாத்தின் உறவே நம் நட்பிற்குப் போதுமானதாகும்" என கூறினார்கள்.

ஹிஜ்ரி 11 ரபியுல் அவ்வல் மாதத்தில் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையேயான அந்த அழகிய நட்பும் நபிகளாரின் மரணத்தினால்  முடிவுக்கு வந்தது. (இன்னாலில்லாஹி ....) இத்தருணத்தில் அபூபக்ர் (ரழி) அவர்கள் வெளியூரில் இருந்தார்கள். இச்செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அவர்கள் மனம் இதை நம்ப மறுத்தது. தாங்க முடியாத மனவேதனையுடன்  உடனடியாக நபியின் மனைவியும் தனது மகளுமாகிய ஆயிஷா(ரழி) அவர்களது வீட்டிற்குச் சென்று செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். கண்களில் நீர்ப்  பெருக்கெடுத்து ஓட செய்வதறியாது திகைத்து நின்றார்கள்.

‘இறைத்தூதர் (ஸல்) அவர்களே! என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும். உங்களது வாழ்வும் மரணமும் புனிதமானவை ஆகும்’ எனத் தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியவர்களாக வெளிவந்தார்கள்.

இச்செய்தியைக் கேள்விப்பட்ட உமர் (ரழி) அவர்கள் துக்கம் தாளாமல் மிகவும் கவலையடைந்தார்கள். அவர்களுக்கு எத்தனை சமாதானம் சொல்லியும் உமர்(ரழி) அவர்கள் இதை நம்ப மறுத்துக்கொண்டிருந்தார்கள் அப்பொழுது அபூபக்ர் (ரழி) அவர்கள் மனிதர்கள் அனைவரும், முஹம்மது நபி(ஸல் உள்பட, மரணத்தை சுவைத்தே தீருவார்கள் எனும் இறைவசனத்தை ஓதலானார்கள்:

3:144. முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.

‘இவ்வசனத்தை நேற்றுதான் நபியவர்கள் ஓதிக்காண்பித்தது போல் இருக்கிறது’ எனக் கருத்துத் தெரிவித்தவர்களாக உமர்(ரலி) அவர்கள் மற்றும் அனைவரும் நபியவர்களின் மரணச்செய்தியை ஏற்றுக்கொண்டார்கள்.

 அபூபக்ர்(ரழி) அவர்கள் கலீஃபாவாக ஆற்றிய சேவைகளை இன்ஷா அல்லாஹ் விரைவில் பார்ப்போம்.