Showing posts with label குர் ஆன். Show all posts
Showing posts with label குர் ஆன். Show all posts

Tuesday, February 17, 2015

நான் முஸ்லிமல்ல... ஆனால் குர் ஆனை நம்புகிறேன்: விஞ்ஞானி (1)


மாரீஸ் புகைல் ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு அறுவை சிகிச்சை மருத்துவராவார். புகழ்பெற்ற அறிஞரும் ஆவார். அவரது நாட்டினர், எகிப்திய அரசிடமிருந்து ’மம்மியாகப் பாதுகாக்கப்பட்ட ஃபிரவ்னின் உடலை பரிசோதனை செய்வதற்காகப் பெற்றனர்.


ஃபிரவ்னின் உடலில் மீது காணப்பட்ட மிகுதியான உப்பு அவன் மூழ்கி இறந்ததைத் தெளிவாக எடுத்துரைத்தது. ஆராய்ச்சிக்குழுவினர் மேற்கொண்டும் தமது பணியினை செய்துகொண்டிருக்க, அக்குழுவின் தலைவரான மருத்துவர் மாரீஸ் புகைலுக்கோ ஃபிரவ்ன் எப்படி மூழ்கினான் என்று வியப்பு மேலிட்டது. இது பற்றி இஸ்லாமியர்களின் வேதமான குர் ஆனில் இருப்பதாக அறிய வந்தார். 18ம் நூற்றாண்டில் தான்  ‘மம்மிகள்’ கண்டெடுக்கப்பட்டன. ஆனால் அவற்றைப் பற்றி 14ம் நூற்றாண்டிலேயே குர் ஆனில் குறிப்பிடப்பட்டதை அறிந்த மருத்துவர் குர் ஆனைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு தமது 50வது வயதில் அரபி கற்க சவூதி அரேபியா சென்றார்.


ஃபிரவ்ன் குறித்த குர் ஆனின் கீழ்வரும் வசனங்களைக் கண்டு ஸ்தம்பித்து நின்றார். ஏக இறைவனின் ஒரு எழுத்தைக் கூட மறுக்கவியலாதவராக ஏற்றுக்கொண்டார்.



10:90. மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.

10:91. “இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.

10:92. எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது).





தான் கற்றுணர்ந்த குர் ஆனின் முதல் வசனம் அவரைப் பெரிதும் ஈர்க்க இன்னுமின்னும் தன் தேடலைத் துவங்கினார். இஸ்லாம் மீதிருந்த தமது தவறான கண்ணோட்டங்களைத் தம்மை மருத்துவத்திற்காகக் காணவந்த முஸ்லிம்கள் மூலம் அறிந்து களைய முயற்சிகளை மேற்கொண்டார். அவருக்கு அதுவரை தகவல் களஞ்சியமாக விளங்கியவை வானொலியும் தொலைக்காட்சியும் சில நூல்களுமேயாகும். அவற்றைத் தவிரவும் இஸ்லாம் மீதான தன் பார்வையை விரிவுபடுத்தினார். தாம் முன்பு கண்டெடுத்த, இஸ்லாம் என்பது முஹம்மது என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட மதம் என்னும், ஆராய்ச்சி முடிவுகளை மீளாய்வு செய்தார். இப்பொழுது அவருக்கு குர் ஆனைக் குறித்து கிடைத்திருந்த மேலதிக தகவல்களையும் விரிவான கண்ணோட்டங்களையும் கொண்டு தமது முன் முடிவுகள் தவறாக இருப்பதையும் முழுமையாக உணர்ந்தார்.


1976ல் Quran, Bible, and Science என்ற புத்தகம் எழுதி புகழடைந்தார் மருத்துவர். அதன் பின் குர் ஆனை நன்கு ஊன்றிப்படித்த மருத்துவர் (மனிதனின் தோற்றம்) The Origin of Man என்ற புத்தகம் எழுதி வெளியிட்டார். இப்புத்தகம் இஸ்லாத்தையும் மருத்துவரையும் உலகின் பலதரப்பட்ட மக்களுக்கும் அறிமுகப்படுத்தியது. அன்றைய தினம், உலகைக் குறித்த விடைகிடைக்காத பல கேள்விகளுக்கும் ஆதாரப்பூர்வமாகத் தம் விடைகளை குர் ஆனின் ஒளியில் பதிந்தார். அவரது ஆராய்ச்சிகளையும் முடிவுகளையும் தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருமனதுடன் ஏற்றுக்கொண்டனர். குர் ஆன் மீதான தமக்கிருந்த   ஆழ்ந்த அறிவால் பல அறிஞர்களுக்கும் உண்மையை எடுத்துரைத்தார். டார்வினின் தத்துவத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக்கொண்டார். ஒரு கட்டத்தில் குர் ஆன் ஏக இறைவன் த்னது தூதரின் வாயிலாக உலகுக்கு வழங்கிய இறைவேதமே என்று தான் ஆய்ந்தறிந்த முடிவினை வெளியிட்டார். 


இருப்பினும் ஒரு முஸ்லிமின் ஆராய்ச்சிகள் இஸ்லாத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்று பலரும் குற்றம் சுமத்தி அவரது கருத்துகளை உலகம் ஒதுக்கியபோது ஒரு சுயவிளக்கம் அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வாயடைக்கச் செய்தார். அந்த சுயவிளக்கம் இதுதான்:


”என் ஆராய்ச்சிகளின் முடிவுகள் அனைத்தும் இஸ்லாத்தையும் அதன் ஏக இறைவனையும் மெய்ப்படுத்துகின்றன என்பது முழுக்க முழுக்க உண்மையாகும். ஆனால் இதனை ஒரு முஸ்லிமாக நான் கூறவில்லை. அவ்வாறு இஸ்லாம் என்ற ஒரு வட்டத்தில் இருந்து கொண்டு என் ஆய்வறிக்கைகளை நான் வெளியிட்டால் உலகம் ஏற்கத்தயங்கும். நான் அந்த வட்டத்தை விட்டும் வெளியே இருந்தே இஸ்லாம் என்பது உண்மை; அதன் வேதம் மெய்யானது என்று ஒப்புக்கொள்கிறேன்” என்று அறிவித்தார்.


இவ்வாறு முஸ்லிம்களுக்கு ஆதரவாகத் தம் வாழ்வைக் கழித்த அவர் இஸ்லாத்தினை ஏற்றிருந்தால் அவருக்கும் நன்மையாக அமைந்திருக்கும்.


Reference:

http://www.islam.ru/

Monday, May 27, 2013

மனிதன் என்பவன் ............... ஆகலாம்??

சமீபத்தில் (என் பாஷையில் 7 - 8 மாதங்களுக்கு முன்..ஹி..ஹி.. ) ஒரு தளத்தில் அதன் (மாற்றுமத) உரிமையாளர் இஸ்லாத்தில் தனக்கிருக்கும் சந்தேகங்களைக் கேட்டிருந்தார்.  அத்தளத்தின் முகவரி மறந்துவிட்டது. ஆகையினால் அக்கேள்விக்கான விளக்கத்தையே ஒரு பதிவாக போட்டால் என்ன என்று என் ஏழாவது அறிவு கூறியதால் நீங்க மாட்டிக்கிட்டீங்க...

அந்த நிகழ்வும் அந்த சந்தேகமும் இதுதான்:

உமர் (ரலி) அவர்கள் அறிவித்ததாகக் கூறப்பட்டுள்ள அந்த ஹதீஸ்:

நான் தொழுதுகொண்டிருக்கையில் நான் செய்ய வேண்டிய பிற பணிகள் என் நினைவிற்கு வரும். தொழுகையை நிறைவேற்றியதும் நான் அவற்றை நிறைவேற்றுவேன்.

அதாவது முஸ்லிம்களின் இறுதித்தூதரின் உற்ற நண்பரும் அவருக்குப் பிறகு இரண்டாவது கலீஃபாவாகப் பதவியேற்கும் அளவிற்கு தகுதியும் அறிவும் புகழும் வாய்ந்த ஒருவர் தன் தொழுகையில் இப்படி கவனக் குறைவாக இருக்கிறாரே.... இறைவனுக்காக இறைவனை மட்டுமே தொழுவதாகச் சொல்லிக்கொள்பவர்கள் தொழும்போது இறைவனை நினைக்காமல் வேறு விஷயங்களைப் பற்றி நினைக்கிறாரே.... இப்படிப்பட்டவர் தன் சொந்த வாழ்க்கையில் எப்படி இறைநம்பிக்கையுடைவராக இருக்க முடியும்.... ஒரு சஹாபாகவும் ஒரு கலீஃபாவாகவும் மக்களுக்கு அறிவுரை வழங்க இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? ஊருக்கு மட்டும் உபதேசம் செய்கிறாரோ... இவருடைய அறிவுரையைப் பின்பற்றும் மக்களின் இறைநம்பிக்கை எந்த அளவில் இருக்கும் என மேலோட்டமாகப் பார்க்கும் மக்களுக்குத் தோன்றும் வகையில் தான் இந்த ஹதீஸ் அமைந்திருக்கிறது. 

இந்த ஹதீஸை வலை வீசி தேடி பார்த்து விட்டேன். சகோதரர்கள் சிலரையும் தேடச் சொல்லி சிரமப்படுத்தியும் ம்ஹூம்... கிடைக்கவேயில்லை.... கிடைக்காத ஹதீஸிற்கு எதுக்கு பதிவுன்னு நீங்க யோசிக்கலாம்.... இதே கருத்தைக் கொண்ட வேறு சில ஹதீஸ்கள் கிடைத்தன... அந்த ஹதீஸ்களை வைத்து அதே சந்தேகம் மேற்கண்ட நபர் போல் பலருக்கும் தோன்றும் (?).. அட... என் அறிவுக்கு எட்டினது இவங்களுக்கு இல்லையேன்னு கொஞ்சம் பந்தா பண்ணிக்கலாம் எனும் ஒரு நல்லெண்ணத்தில் இந்தப் பதிவு.....அவ்வ்வ்......

இவ்வளவு ஏன்.... மனிதர்களுக்கு இறைத்தூதராக அனுப்பப்பட்டவராகிய முஹம்மது (ஸல்) அவர்களே தொழுகையின் போது சில சமயங்களில் மறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

1229. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
தொழுகைகளில் ஒரு தொழுகையை நடத்திய நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்திலேயே ஸலாம் கொடுத்துவிட்டார்கள். (அநேகமாக அது அஸர்த் தொழுகை என்றே நினைக்கிறேன் என முஹம்மது இப்னு ஸிரீன் கூறுகிறார்.) பின்பு எழுந்து பள்ளிவாசலின் முற்பகுதியிலிருக்கும் மரக்கட்டையின் பக்கம் சென்று அதன்மேல் தம் கையை ஊன்றி நின்றார்கள். அங்கே இருந்தவர்களில் அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி) இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் அது பற்றிப் பேசப் பயந்து கொண்டிருந்தபோது பள்ளியிலிருந்து வேகமாக வெளியேறி மக்கள், 'தொழுகை சுருக்கப்பட்டுவிட்டதோ' எனப் பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களால் துல்யதைன் என அழைக்கப்படும் ஒருவர் 'நீங்கள் மறந்து விட்டீர்களா அல்லது தொழுகை சுருக்கப்பட்டுவிட்டதா?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் மறக்கவும் இல்லை. (தொழுகை) சுருக்கப்படவும் இல்லை" என்றவுடன் 'இல்லை நிச்சயமாக நீங்கள் மறழ்ழ்ந்து விட்டீர்கள்' என அவர் கூறினார். நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்திவிட்டு ஸலாம் கொடுத்தார்கள். பின்பு தக்பீர் கூறித் தம் வழக்கமான ஸஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட நீண்டதாகவோ ஸஜ்தாச் செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தித் தக்பீர் கூறினார்கள். மீண்டும் தலையை (பூமியில்) வைத்துத் தக்பீர் கூறினார்கள். தம் வழக்கமான ஸஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட நீண்டதாகவோ ஸஜ்தாச் செய்து, பின்பு தம் தலையை உயர்த்தியாவாறே தக்பீர் கூறினார்கள்.
Volume :2 Book :22

என்ன... இறைவனால் மனிதர்களுக்கெல்லாம் தூதராக அனுப்பப்பட்டவரே தமது தொழுகையில் கவனக்குறைபாட்டுடன் இருந்திருக்கிறாரா...  அவரையும் பின்பற்ற இத்தனை கோடி மக்களா... எனக் கேட்பவர்களும் இருக்கலாம்... இறைவனாலும் நபி(ஸல்) அவர்களாலும் மீண்டும் மீண்டும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று...” நபி(ஸல்) அவர்களும் மனிதர் தான்”... மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய மறதி, கோபம் போன்ற தவிர்க்கப்பட வேண்டிய எண்ணங்களிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடியவர்களாகவே இறுதிவரை வாழ்ந்தார்கள். தம்மைத் தூதராக இறைவன் தேர்ந்தெடுத்த காரணத்தினால் தமக்கு சொர்க்கம் நிச்சயம் எனும் சிறு எண்ணமும் தமக்கு இல்லாததை இறைவனிடம் பாவமன்னிப்பு கோரியவர்களாக இருந்து காண்பித்து நம்மை நேர்வழிக்கு அழைத்தார்கள். சக மனிதர்கள் தம்மைக் கிஞ்சித்தும் புகழ் பாடுவதைச் அறவே விரும்பாதவர்களாக வாழ்ந்து நமக்கு முன்னுதாரணமானார்கள். இறைவனுடைய கேள்வி கணக்கிற்கு நாம் எல்லாம் அஞ்சுவதை விட அதிகமாகத் தம்மை விடவும் தமது சமுதாயத்தினைரையே இறுதி நாளிலும் கூட எண்ணி வருந்தியவர்களாகவே தம் இன்னுயிர் நீத்தார்கள்.

மனிதனைப் பற்றி இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

4:28. அன்றியும், அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்; ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.

மனிதனின் குணநலன்கள் பலவற்றைப் பற்றிக் விவரித்துள்ள இறைவன் அம்மனிதனை பலஹீனமானவனாகத் தான் படைத்துள்ளதையும் கூறுகிறான். உடலளவில் மட்டுமல்ல மனதளவிலும் மனிதன் பலஹீனமானவன் தான். ஒரு விஷயத்தில் மனிதன் முழு ஈடுபாட்டுடன், உலகை மறந்து தனை மறந்து ஆழ்ந்திருப்பது மிக மிக அபூர்வமாகும். இத்தகைய காரணங்களினால் தான் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேலைகளைத் திறம்பட எந்தக் குறைவுமின்றி செய்து முடிப்பவர்கள் மிகவும் திற்மைவாய்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

இத்தகைய பலஹீனமான மனிதர்கள் தமது வணக்கங்களின் போது ஷைத்தானின் திசைதிருப்புதல்களிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளும்படி அறிவுரை சொல்லும் பல ஹதீஸ்கள் இடம்பெற்றிருக்கின்றன.

1231. 'தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடி விடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பி வந்து இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் மீண்டும் வந்து தொழுபவரின் உள்ளத்தில் ஊடுருவி 'இதை இதையெல்லாம் நினைத்துப்பார்' எனக் கூறி, அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டி அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை மறக்கடிக்கிறான். உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்களில் மூன்றா அல்லது நான்கா என்று தெரியவிட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு ஸஜ்தாச் செய்து கொள்ளட்டும்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :22

ஷைத்தானின் திசைதிருப்புதல் என்பது நபி(ஸல்) அவர்களாலேயே உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று... அது நடந்தே தீரும்.. அதில் எந்த மறுப்புமில்லை. ஆனால் இந்த ஹதீஸ் தரும் அறிவுரை என்ன? தொழுகையின்போது ஷைத்தானின் தீண்டுதல் இருக்கும்... அந்தத் தீண்டுதல்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுஙள். தொழுகையின் போது இந்த ஹதீஸை நினைவில் நிறுத்திக்கொண்டால் ஷைத்தானின் தீங்குகளை இறைவனின் உதவியோடு வெற்றிக்கொள்ளலாம் என்பதாகும்.

50:16. மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.

பிடரி நரம்பை விட அருகில் இருப்பவனும் மனிதர்கள் வெளிப்படுத்துபவற்றையும் உள்ளத்தில் மறைத்துவைத்தவற்றையும்  அறிந்தவனுமாகிய இறைவனுக்குத் தெரியாதா.... ஒரு மனிதர் இறைவனுக்காகத் தொழுகின்றாரா அல்லது பிறருக்குக் காண்பிக்க தொழுகிறாரா என்பது.... தொழுகைக்காக உடல் சுத்தம் மேற்கொண்டு உலகின் அத்தனை கவனச்சிதறல்களிலிருந்தும் தவிர்ந்து தன் கவனத்தைத் தொழுகையின்பால் கொண்டுவந்து இறையச்சத்துடன் நிற்கும் தன் அடியானை இறைவன் நன்கு அறிவான். ஷைத்தானின் ஊசலாட்டங்களிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடும் அடியானைப் பாதுகாக்க இறைவனே போதுமானவன்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ”யா ரசூலே! நான் என் ஒட்டகத்தைக் கட்டிவைத்துவிட்டு இறைவன் மீது நம்பிக்கையை வைக்கவா அல்லது அதனைக் கட்டாமல் விட்டுவிட்டு இறைவன் மீது நம்பிக்கை வைக்கலாமா” எனக் கேட்டார். அதற்குத் தூதர் (ஸல்) அவர்கள் “உன் ஒட்டகத்தைக் கட்டிவைத்து விட்டு இறைவனிடம் ஒப்படைத்துவிடு” என்றார்கள். (திர்மிதி 2517, 1981).

தொழுகைக்கும் இந்த அறிவுரை பொருந்தும் சூழலில்: இறைவனால் மனிதர்களுக்குக் கட்டளையிடப்பட்டிருக்கும் தொழுகையைத் தானே நிறைவேற்றுகிறோம்... அதனால் (வெளிப்பரப்பில் தொழும்போது) தமது ஒட்டகத்தைக் கூட கட்டாமல் இறைவன் அதனைப் பார்த்துக்கொள்வான் என நினைத்துப் பலர் தொழுகையில் ஈடுபட நினைத்தாலும் அதனைக் கட்டி வைத்த பின்னரே இறைவனின் மீது நம்பிக்கையை வைக்க வேண்டும். ஏனெனில், கட்டிவைக்கப்படாத ஒட்டகம் எங்கும் செல்லாமல் நிறுத்திய இடத்திலேயே நின்றாலும் நிற்கும்; ஆனால் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் அதன் உரிமையாளர் அது தன்  இடத்தை விட்டு சென்றுவிடுமோ அல்லது எவரேனும் திருடிச் சென்றுவிடுவார்களோ என ஷைத்தான் அவரது மனதினை அலைபாயச் செய்வான். நாம் தொழுகையில் ஈடுபடும்போது எவ்வளவுக்கெவ்வளவு நம் மனதினை முழுமையாக ஈடுபட வைக்க முடியுமோ அதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்து கொள்ளவே மேற்கண்ட ஹதீஸ்கள் அறிவுறுத்துகின்றன.
41:6. “நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான் - ஆனால் எனக்கு வஹீ அறிவிக்கப்படுகிறது; நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனேதான், ஆகவே அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நிற்பீர்களாக; இன்னும், அவனிடம் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள் - அன்றியும் (அவனுக்கு) இணை வைப்போருக்குக் கேடுதான்” என்று (நபியே!) நீர் கூறும்.

மனித சமுதாயத்தினருக்கே தூதராக அனுப்பப்பட்டவராக இருந்தாலும் அவர்களிடமும் மனிதப் பண்புகளையே இறைவன் அமையச் செய்தான். அப்படி இருந்ததால்தானே ஒவ்வொரு மனிதனும் நபி(ஸல்) அவர்களைப் போல் நடக்க முயற்சி செய்ய முடியும். இதனாலேயே இறைவன் நபி(ஸல்) அவர்களை மனிதராகவே படைத்து மனிதக்குணங்களிலேயே வாழச் செய்து மனிதன் எந்தெந்த சமயங்களில் தவறிழைக்கும் சாத்தியங்கள் ஏற்படுமோ அச்சூழ்நிலைகளில் தூதர் அவர்களுக்கும் ஏற்படுத்தித்தந்து அவர்களின் பக்குவமான நடத்தைகளை/பேச்சுக்களை உலக மனிதர்கள் அனைவருக்கும் படிப்பினையாக வெளிப்படச் செய்தான்.

இறைக்குணம் என்பது இறைவனிடம் மட்டுமே இருக்கிறது; இருக்கும்; அவற்றில் ஒன்றிரண்டு அங்குமிங்கும் ஓரிருவரிடம் அமையப்பெற்றிருக்கலாம். ஆனால் அவர்களால் இறைவனாக முடியவே முடியாது. இந்த உண்மையை மக்கள் உறுதியாக நம்பும் காலம் வந்தால்மட்டுமே இன்றைய காலங்களில் பெருகிவரும் போலிஜோசியர்கள், போலிச்சாமியார்கள் அடியோடு ஒழிந்து போவார்கள். இவ்வுண்மையினை உணர்ந்ததினால் தான் அடிப்படைக் கல்வியறிவு இல்லாதவர்களாயினும், முஸ்லிம்கள் போலிச்சாமியார்களிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஆனால் பிற மக்களிடம் இதனைத் தெளிவாக எடுத்துச் சொல்லவும் வழியில்லை. பாமர மக்களாயினும் மெத்தப்படித்த மேதாவிகளாயினும் இத்தகைய சாமியார்களின் தத்துபித்துவங்களுக்கு இரையாகிப்போகிறார்கள். இவ்விஷயத்தில் இஸ்லாத்தைப் போன்று எந்தவொரு உறுதியான கொள்கை இல்லாத காரணத்தினால் இந்திய அரசினாலும் இத்தகைய போலிச்சாமியார்கள் விஷயத்தில் கடுமையான சட்டங்கள் இயற்ற இயலாமலும் அதன் மூலம் பிற மக்களைக் காப்பாற்ற முடியாமலும் போய்விடுகிறது; அரபு நாடுகளில் பல முறை BLACK MAGIC எனப்படும் சூனியம், தாயத்து, தகடு போன்றவற்றை ரகசியமாக உபயோகிப்பவர்கள் காவல் துறையினால் தண்டனைக்குள்ளாக்கப்படுகிறார்கள். இதன் மூலம் விளைவுகளைப் பற்றி விபரமில்லாமல் அச்சூனியக்காரர்களை நாடிச் செல்லும் பலரின் வாழ்க்கையும் செல்வமும் நிம்மதியும் பாதுகாக்கப்பட்டுள்ளன. நரபலி, வாழைப்பழச் சாமியார் போன்ற எண்ணற்ற கதைகள் தொடர்கதைகளாகி வருவதை எப்போது, எப்படி தடுக்கும் நம் அரசாங்கம்??

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறைவனால் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கும் கோபம் வந்திருக்கிறது; சில போர்களில் தோல்வி அடைந்திருக்கிறார்கள்; மறதி ஏற்பட்டிருக்கிறது; உடல் நோவினை வந்து அவதியுற்றிருக்கிறார்கள்; எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை அஞ்சிக்கொள்ளுமாறு இறைவேதத்தில் பல இடங்களில் இறைவனால் கண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது; தோல்விகளை எங்ஙனம் எதிர்கொள்வது; மறதியின் விளைவுகளை எப்படி சரிசெய்வது; உடல்நோய் ஏற்பட்டால் எவ்வாறு பொறுமையோடு ஏற்றுக்கொள்வது போன்ற படிப்பினைகள் பெற்று நம் வாழ்வில் தொடர்புபடுத்தி வெற்றி கொள்ள ஒரு பாதையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிசயக்கத்தக்க, நம்மைக் கவர்ந்த, சமூக ஆர்வங்கொண்ட குணங்களோ செயல்களோ ஒருவரிடம் காணப்பெற்றால் அவரது அத்தகைய பண்புகளை நமக்கு வழிகாட்டியாக / முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளவேண்டுமே தவிர, அவரையே தெய்வமாகக் கொண்டால் அவரைப் படைத்து அவருக்கு அத்தகைய உயர்வைக் கொடுத்த இறைவனை நிராகரிப்பதற்குச் சமம். மனிதர்களைப் படைத்து அவர்களுக்கு நற்குணங்களை வழங்கிய இறைவனால் அந்த மனிதர்கள் செய்யும் காரியங்களை சமூகத்திற்குச் செய்ய இயலாதா அல்லது தன் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுத்துக்கொள்ள தேவைப்படுபவனா இறைவன் அல்லது உலகினைப் படைத்து பரிபாலிக்கும் இறைவனை விட்டுவிட்டு முழுக்க முழுக்க அவன் விருப்பப்படியே செயலாற்றும் மனிதர்கள் எனும் அம்பைக் கொண்டாடும் அளவிற்கு நாம் முட்டாள்களா?? இல்லை... ஆட்டுவிபப்வன் அங்கு இருக்க, அவனுக்குச் சேர வேண்டிய பெருமைகளைத் தனக்கே தேடிக்கொள்ளும் பேராசைகொண்டவர்களை நாம் வணங்கினால் அது நமக்கல்லவா அவமானம்!!!

ஆகையினால் தான் உலக மனிதர்கள் அனைவருக்கும் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ’என்னை வணங்குங்கள்.... இவர் கூறியவற்றைப் பின்பற்றுங்கள்’ என்று இறைவனால் உயரிய அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தாலும் அவரது அறிவுரைகளினால் எந்த ஒரு முஸ்லிமுக்கும் எப்பேர்பட்ட வெற்றி கிடைத்தாலும் அதற்கு முழு முதற்காரணமாகிய இறைவனுக்கே அனைத்துப் புகழையும் பெருமையையும் பறைசாற்றுகின்றனர் முஸ்லிம்கள். எப்பேர்பட்ட ஆற்றல் இறைவனால் அளிக்கப்பட்டிருந்தாலும் இறைவனின் கொடையாகிய இறுதித்தூதர் மக்களுக்கான ஒரு அழகிய முன்மாதிரி -

33:21. அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.


ஆக, மனிதன் என்பவன் மனிதனாக மட்டுமே ஆகலாம்.

Wednesday, April 3, 2013

முஸ்லிம்களின் சுயநலம்


சிறு வயதில் அம்மா கைப்பிடித்து நடக்கும்போது வழியில் சிறிய கல்லையோ முள்ளையோ கண்டால் என்ன ஒரு அவசர வேலையாக இருந்தாலும் அம்மா அதைக் கவனமாக ஓரமாக எடுத்துப் போட்டுவிட்டுதான் அடுத்த அடி வைப்பார்கள். அப்போது நினைத்தேன். அம்மா ஒரு மனிதாபிமானத்தில் இப்படி செய்கிறார்கள் என்று. பிறகு தான் இந்த குர் ஆன் வசனங்கள் அறிந்தேன்.

99:7. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.

4:40 (ஓர் அணுவளவு) நன்மை செய்யப்பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து, அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான்.

இங்கு தான் தரவிருக்கும் கூலியாக இறைவன் கூறியுள்ளதெல்லாம் இந்த உலகில் மட்டுமல்ல.... மறு உலகிலும் தான்... இந்த உலகில் உள்ள இன்பங்கள், வாழ்க்கைதரங்களைத் தான் மனிதன் கண்டுகொண்டானே.... இவ்வுலகில் கிடைக்கும் அதிகபட்ச சந்தோஷம் என்ன என்பதையும் மனிதன் அறிந்தவையாக இருக்கும்பட்சத்தில் அதனையே அவன் மீண்டும் மீண்டும் தருவதாக்க் கூறியிருந்தால் இன்னும் அதிகமதிக நன்மைகள் செய்ய மனிதனுக்கு எங்கிருந்து ஆர்வம் வரும்?? அவன் காணாத, நினைத்துப் பார்க்க முடியாத நற்கூலிகளைத் தருவதாக இறைவன் வாக்களித்திருப்பது தானே நம்மை மேலும் மேலும் நன்மைகள் செய்யத் தூண்டுகின்றன. ஆக, யார் காலிலும் குத்திவிடக்கூடாது என கல்லை அகற்றியது பிறர்நலத்திற்காகச் செய்த்து போல் தோன்றினாலும் இறைவனின் நன்மைகளை எதிர்பார்த்து செய்ததினால் அது முழுக்க முழுக்க சுயநலம்தான்.
========================================================================

தமது பிள்ளைகளின் படிப்பு/திருமண செலவுகளுக்குப் பணம் கேட்டு வரும் உறவினர்களுக்கு/மக்களுக்கு அம்மா  அவர்களை வெறுங்கையோடு அனுப்பியதேயில்லை. அப்போ நினைத்திருக்கிறேன். அம்மா ஒரு மனிதாபிமானத்தில் அவர்களுக்கு உதவுகிறார்கள் என்று. பிறகுதான் இந்த குர் ஆன் வசனம் அறிந்தேன்.

33:35. .......... தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.

அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் தன் நிழலை ஏழு பேருக்கு அளிக்கிறான். அவர்களின் ஒருவர் தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 660

ஆக, அம்மா,அப்பா செய்த தான, தர்மங்கள் பிறருக்கு உதவி செய்வதற்காகச் செய்திருந்தாலும் இறைவனின் நன்மைகளை எதிர்பார்த்து அவர்கள் செய்த்தினால் சுயநலத்தின் அடிப்படையில் தான்.
========================================================================

கல்லூரியில் படிக்கும்போது முதன்முதலாகப் பர்தா அணிந்த போது பவர்கட் சமயங்களில் “ஸ்ஸப்பா ..... வேர்வை தாங்க முடியலையே”  என வேதனையில் இருந்த போது நினைத்திருக்கிறேன்.... அந்த சமயம் மாணவிகளாகிய நாங்கள் வேர்வையில் நெளிவதைக் கண்ட எங்கள் ஆங்கில வாத்தியார் மாண்புமிகு Y. செய்யது முஹம்மது அவர்கள் “கவலைப்படாதீர்கள் மாணவிகளே.... நீங்கள் இம்மையில் படும் வேதனைகளுக்கு மறுமையில் இறைவன் நற்கூலி வழங்குவான்” என்ற உண்மையினை  ஆறுதலாகக் கூறியது மறக்கவே முடியாது. அப்பொழுது இந்தக் குர் ஆன் வசனம் நினைவில் வந்து இருந்த கொஞ்ச நொஞ்ச  மன,உடல் வருத்தங்களை மறைத்தன; 

94:5. ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
94:6. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
7:42.  ....- எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்குமீறி நாம் சிரமப்படுத்த மாட்டோம்; அவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள் -....
பர்தாவை பெண்களுக்கு மட்டுமே நன்மைகளை அள்ளித்தரும் மற்றுமொரு வாய்ப்பாக உணர்ந்தேன்; மகிழ்கிறேன். பிறர் பார்வையையும் எண்ணங்களையும் தீயவழியிலிருந்து பாதுகாப்பதற்காக நான் பர்தா அணிந்து கஷ்டப்பட்ட்து போல் தோன்றினாலும் என் உடலை பிறர் பார்வையிலிருந்து மறைப்பதற்காகவும் அதற்காக இறைவன் வாக்களித்திருக்கும் நன்மைகளுக்காகவும் சுயநலத்தோடுதான் நான் பர்தா அணிகிறேன்.
========================================================================

சில வருடங்கள் முன்பு, என் மாமி என் மாமாவிடம் “மரம் வளர்க்கச் சொல்லி எத்தனையோ நோட்டிஸ், விலம்பரமெல்லாம் பார்க்கிறோமே... நம் வீட்டு முன்னாடியும் ஒரு மரம் வைப்போமா” எனக் கேட்டவுடன் ஆகா... நம் மாமிக்குத் தான் எத்தனை சமூகப்பற்று....தேசப்பற்று... என நினைத்துப் பெருமிதம் கொண்டேன். பிறகுதான் இந்த ஹதீஸ் அறியப்பெற்றேன்.

6012. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

மரம் நட முனைந்தவுடன் அதை முருங்கை மரமாகத் தேர்வு செய்து இறைவனின் நற்கூலிகளைப் பெறுவதற்காகவும் செய்த சுயநல செயலேயின்றி வேறில்லை என்பதைப் பிறகு தெரிந்து கொண்டேன்.
========================================================================

உலகின் எந்த மூலையில் அநீதி இழைக்கப்பட்டாலும் உலகின் அனைத்து மூலைகளிலிருக்கும் முஸ்லிம்களிடமிருந்து பலத்த எதிர்ப்பும் கண்டன்ங்கள் வருவதை நாம் கண்கூடாக்க் காண்கிறோம். அநீதமிழைக்கப்பட்டவர்களுக்க்த் தம் ஆதரவையும் அனுதாபங்களையும் அக்கறையையும் இவர்கள் தெரிவிக்கிறார்கள் என நினைத்தேன். ஆம்...அதேதான்... பிறகுதான் இந்த ஹதீஸ் தெரிந்துகொண்டேன்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”உங்களில் ஒருவர் வெறுக்கத் தகுந்ததைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அதற்கு சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும். அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து விடட்டும். இது ஈமானின் பலவீனமான நிலையாகும்.” (அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆதாரம்: முஸ்லிம் ஹதீஸ் இலக்கம்:78)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”மனிதரைப் பற்றிய அச்சம் நீங்கள் சத்தியத்தைக் கூறுவதிலிருந்தோ, மகத்தானதை (அல்லாஹ், மறுமை நாளை) நினைவுபடுத்துவதிலிருந்தோ உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவ்வாறு செய்வது நிச்சயமாக உங்களது ஆயுளைக் குறைத்துவிடவோ, உணவை தூரமாக்கிவிடவோ முடியாது.” (ஸுனனுத் திர்மிதி)

அவ்வாறு கண்டன்ங்களைத் தெரிவிக்காதவர்கள் எல்லாம் கோழை எனவும் மனிதர்களின் பிரதி செயல்களுக்கு அஞ்சுபவர்கள் எனவும் நினைத்திருந்தேன். இவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சாமல் அநீதம் செய்யும் மக்களுக்குப் பயந்து தான் தமது கோபத்தை அடக்கி வெளிப்படுத்தாமலும் எந்த எதிர்ப்பும் காட்டாமலும் சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்கிறார்கள் எனவும் நினைத்திருக்கிறேன். பிறகுதான் இந்த குர் ஆன் வசனம் அறியப்பெற்றேன்.

3:134 (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்

ஆக, இவர்கள் கோபத்தைக் காண்பிப்பதும் அல்லது பொறுமையுடன் செல்வதற்கும் இவர்கள் முதற்முக்கியக் காரணமாக்க் கருதுவது இறைவனிடம் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் நன்மைகளைத்தானேயன்றி மற்ற இரக்கம், அக்கறை, பச்சாதாபம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
========================================================================

முன்பு நான் வழக்கமாகப் பங்கெடுத்த குர் ஆன் வகுப்பில் “மரம் நடுதல் போன்ற நாம் செய்யும் நற்செயல்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் மனிதாபிமான அடிப்படையில் இருக்கவேண்டுமா அல்லது இறைவன் அளிக்கவிருக்கும் அந்நன்மைகளுக்கான நற்கூலிகளை எதிர்பார்த்து செய்ய வேண்டுமா” என்ற கேள்வி எழுந்த்து. அதாவது ஒரு செயலின் அடிப்படை பிறர்நலம் நோக்குதலா அல்லது (இறைவன் தனக்குக் கொடுக்கவிருக்கும் நன்மைகளை எதிர்பார்க்கும்) சுயநலமா என்பதே கேள்வி.

பதில் இவ்வாறு கூறப்பட்ட்து: “கண்டிப்பாக மேற்கூறப்பட்ட சுயநலத்தோடு தான் ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும்”.

பதிலை இன்னும் ஆழ்ந்து சிந்தித்தால் இன்னொரு உண்மையும் புலப்படும். தொடர்ந்து பிறர்நலத்தோடு செய்யப்படும் செயல்கள் சில நேரங்களில் சலிப்பைத் தரக்கூடும். ஏன் நமக்காக மட்டும் வாழக் கூடாது என்ற எண்ணம் தோன்ற வாய்ப்புண்டு. இதையே... இறைவனுடைய பொருத்தத்திற்காகவும் அவன் தரும் நற்கூலிக்காகவும் நம்முடைய சுயதேவைக்காகச் செய்தால் கூட அச்செயலை அவன் அனைவருக்கும் நலமாக்கி வைக்க வல்லவன்.

ஆக, இஸ்லாம் மனிதர்கள் செய்யும் ஒரு செயலை நியாயப்படுத்தி அச்செயலுக்காக அவர்களுக்கு மறுமையில் நன்மைகளைக் கூலியாக வாக்களிக்கிறது என்றால் அச்செயல் இவ்வுலகத்திற்கும் அதன் ஜீவன்களுக்கும் நல்வித பாதிப்புகளையே உருவாக்கவல்லவை எனவும் இவ்வனைத்திலிருந்தும் தெளிவாகிறது. முஸ்லிம்கள் செய்வதை வைத்து இஸ்லாத்தை எடை போடுவதைத்தவிர்த்து இஸ்லாம் கூறுவதை வைத்து அதனை ஆராய வேண்டும். 

ஆமா... பழிக்குப் பழி வாங்கச் சொல்லும் மதம், நான்கு மனைவிகள் வைத்துக் கொள்ளச் சொல்லும் மதம், இதையெல்லாம் எப்படித்தான் ஏத்துக்கிட்டு ஜால்ரா போடுறீங்களோ தெரியலைன்னு பல இடங்களில் பலர் சொல்லிட்டு இருக்கிறதுதானே நினைவிற்கு வருகிறது. ஒரேயொரு விஷயம்... சினிமாவில் ஹீரோ தனக்கு அநீதி இழைத்தவனை க்ளைமாக்ஸில் கொன்று பழி தீர்த்தால் கைதட்டி, விசிலடித்து, அந்த ஹீரோவிற்கு கட்-அவுட் வைத்து, அவருக்கு நிஜ வாழ்வில் உடம்பு முடியலேன்னா அவருக்காக ப்ரார்த்தனை எல்லாம் செய்யப்படுகின்றன... அதே நியாத்தை நிஜ வாழ்வில் சொன்னா கசக்குது.... அந்த நியாயத்தைச் செயல்படுத்தும் முஸ்லிம்களை ‘தீவிரவாதி’ன்னு சொல்வது எந்த வித்த்தில் நியாயமாகும்??! தனக்கு ஏற்பட்ட பேரிழப்பினால் அநீதம் இழைக்கப்பட்டவர் தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்தவே பழி வாங்குவது போல் தோன்றினாலும் இனி அடுத்து தவறு/அநீதி இழைப்பவரைத் தான் இப்பழி வாங்கும் நடவடிக்கை தடுக்கும் என்பது புலப்படும். ஆக இதிலும் சமூகநலத்திற்கு இட்டுச்செல்லும் சுயநலம்.

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும்.
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.
(அல் குர் ஆன் 5:45)
  
========================================================================

நான்கு மனைவிகளிடமும் நீதமாக நடந்து கொண்டால் யாருக்கு என்ன குறைந்து விடப் போகிறது??! இது குறித்து பலர் பக்கம் பக்கமாக பலருக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள். அதில் சில உங்கள் பார்வைக்கு இந்த விளக்கமும்...இந்த விளக்கமும்.... கண்டிப்பாக, தெளிவு கிடைக்கும்.

இறைவனுக்காகவும் அவன் தரவிருக்கும் நற்கூலிகளுக்காகவும் செய்யும் எந்தச் செயலாயினும், அது பக்கா சுயநலமாக இருந்தாலும், எந்த நிலையிலும் பிறர் நலம் பேணுவதாகவே அமைகின்றன. நன்மைகளை எதிர்பார்க்கும் சுயநலமின்றி பிறர்நலம் இல்லை... பிறர்நலமின்றி (சுவனம் செல்லுதல் எனும்) சுயநலம் இல்லை. இறைவனது அடிமைகளாய் இருந்து அவன் தரும் கூலிக்காக செய்யும் எச்செயல்களும் நற்செயல்களே...இது போல், இஸ்லாம் கூறும் ஒவ்வொன்றிலும் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டுமெனும் உத்வேகத்தில் மட்டும் ஆராய்ந்தால் பதில் நிச்சயம் கிடைக்கும்.
========================================================================