Showing posts with label பெண்ணுரிமை. Show all posts
Showing posts with label பெண்ணுரிமை. Show all posts

Sunday, January 4, 2015

அழகிப்போட்டியும் அழகிப்போட்டியும்

1951வது வருடத்திலிருந்து நடைபெற்று வரும், பெண்மைக்கு இழுக்கை அழைக்கும், உலக அழகிப் போட்டிக்கு எதிராக உருவாக்கப்பட்ட போட்டியே உலக முஸ்லிமாஹ் அழகிப்போட்டி.


உலக அழகிப்போட்டியை எதிர்த்து பெண்கள் முன்னேற்றக்க்குழுக்கள் நடத்திய போராட்டத்தினால் 1970ல்  இப்போட்டியில் சில தடங்கல்கள் ஏற்பட்டன. பின்பு எவ்வித தடைகளுமின்றி நிகழ்த்தப்பட்டு வருகிறது. துவக்கப்பட்டு கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகே இப்போட்டியில் புத்திக்கூர்மைக்கென தனி சங்கேத முழக்கம் ஒன்று " Beauty With a Purpose" சேர்க்கப்பட்டது. அதுவரை, பெண்களுக்கு அறிவு என்ற ஒன்று இருப்பது புலப்படவில்லை போலும்.  2002ல் நைஜீரியாவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு நிகழ்ந்த போராட்ட்ங்களினாலும் அதன் விளைவாய் பல உயிரிழப்புகளாலும் லண்டனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு நடத்தப்பட்டது. 


ஆக, உலக அழகிப்போட்டியினால் உலகில் எந்த அளவு எதிர்ப்புகளும் இழப்புகளும் போராட்டங்களும் நிகழ்ந்தாலும் அவை கண்டுகொள்ளப்படாமல் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் இன்னும் உறுதி கொண்டு அதிக உத்வேதகத்துடனேயே நடத்தப்பட்டு வருகிறது இவ்வுலக அழகிப்போட்டி.  இந்த விவேகத்தையும் உற்சாகத்தையும் பெண்கள் அறிவுசார்ந்த போட்டிகளில் உட்படுத்தியிருந்தால் எண்ணற்ற நல்விளைவுகள் ஏற்பட்டிருக்கும். அவர்களைச் சிந்திப்பதிலிருந்தும் கட்டுப்படுத்தி அடக்கி ஒடுக்க விரிக்கப்பட்டது தானே இந்த போட்டி வலை. அதில் பெண்கள், பணத்திற்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு தாமாகப் போய் சிக்கிக் கொள்வது வேதனையிலும் வேதனை.


அழகுப்போட்டியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு துவங்கப்பட்டு பின்பு குழந்தைகளின் மேம்பாட்டினையும் போகிற போக்கில் தமது இலக்காகச் சேர்த்துக்கொண்டது. உண்மையிலேயே குழந்தைகளின் மேம்பாடு எனும் அதன் இலக்கில் உறுதியாக இருந்திருந்தால் இந்த அளவிற்கு ஆடம்பரம்.. அதுவும் இறுதிச்சுற்றிற்கு மட்டும் கோடிக் கோடியாகச் செலவழிக்க எந்த காரணமும் நிர்வாகத்தினருக்குக் கிடைத்திருக்காது.


உலக அழகிப்போட்டியில் உடல் அழகுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது நாம் அனைவரும் அறிவோம். இல்லை.. இல்லை... இறுதிச்சுற்றில் மிகவும் சிரமமான மூளைக்கு வேலை கொடுக்கும் கேள்வி கேட்கப்படுகிறது. அதில் கூறப்படும் பதிலை வைத்துத்தான் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்றெல்லாம் கூறினால் அதை விட பெரிய முட்டாள்தனமான கூற்று இருக்கமுடியாது. போட்டி துவங்கும் முன்பே எந்த நாட்டின் போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற முன் முடிவு கூட இல்லாமலா இவ்வளவு பிரம்மாண்டமான போட்டியை ஏற்பாடு செய்வார்கள்? இவர்கள் எடுத்த முடிவை யாரும் எதிர்த்து கேட்கவா போகிறார்கள்?

அவர்களால் முன்முடிவு செய்யப்பட்ட போட்டியாளர் இறுதிச்சுற்றில் எவ்வளவு மட்டமான பதிலைக்கூறினாலும் அவரே வெற்றியாளர். இடையிடையே அவர் தன் பதிலில் அன்னை தெரசா, இளவரசி டயானா, போன்றோரின் பெயர்களைச் சேர்த்துக் கொண்டால் போதுமானது. அவர் தான் உலக அழகி.. அவர்தான் உலகின் மிகச்சிறந்த அறிவாளி. 


வெறுமனே எதிர்ப்பு தெரிவிப்பதாலும் போராட்டங்கள் நடத்துவதாலும் இப்போட்டிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மக்களின் கவனத்தை இப்போட்டியை விட்டும் திருப்புவதற்கு ஒரே மாற்று வழி..... முள்ளை முள்ளால் அகற்றுவது. உலக அழகிப்போட்டிக்கு அந்த வகையில் உருவானது தான் உலக முஸ்லிமாஹ் போட்டி. பெண்கள் தம் அறிவீனத்தால் இழந்த கண்ணியத்தைப் பெண்களாலேயே மீட்டெடுக்கும் வழிகளுள் ஒன்றே உலக முஸ்லிமாஹ் போட்டி.  2011ல் இந்தோனேஷியாவில் துவங்கப்பட்டது. உலக அழகிப்போட்டியின் விதிமுறைகளுக்கு மாற்றாகவும் உலகிலுள்ள முஸ்லிம் பெண்களுக்கான மேம்பாட்டினை நோக்கமாகக் கொண்டும் உலக முஸ்லிமாஹ் அமைப்பு (World Muslimah Foundation) அமைக்கப்பட்டது. அழகிப்போட்டிகள் மூலமாக உலகம் முழுவதும் அறிவும் திறமையுமிருந்தும் வாய்ப்பின்றி தவிக்கும் பெண்களுக்கும், அவர்களது கல்விக்காகவும், திக்குத் தெரியாமல் அனாதரவாக நிற்கும் பெண்களுக்கும் வழிகாட்டியாகத் துவங்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

பாலஸ்தீனுக்காகவும் சிரியாவிற்காகவும் கண்ணீருடன் குரல் கொடுக்கும் 
2014 உலக முஸ்லிமாஹ்

முஸ்லிமாஹ் போட்டிகளில் உடல் அழகுக்கு வேலையில்லை. அவர்கள் நன்னடத்தையும் இஸ்லாத்தைப் பற்றி அவர்களுக்கு இருக்கும் அறிவும் உலகில் முஸ்லிம்களின் நிலை குறித்த அவர்களது அக்கறையும் இஸ்லாமிய சமூகத்தின் மீதான கரிசனமும் மட்டுமே முழுக்க முழுக்க கவனத்தில் கொள்ளப்படும். பரிசாகக் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து அவர்களைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்று வழிகெடுக்கும் எண்ணங்களின்றி அளவான பரிசுத்தொகையாக ஒரு தங்கக் கைக்கடிகாரமும் தங்க தினாரும் மக்காவிற்குப் புனிதப்பயணத்திற்கான வாய்ப்பு ஆகியவை மட்டுமே வழங்கப்படுகின்றன. 

2013 உலக முஸ்லிமாஹ்

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில், உலக அழகிப்போட்டியினை வெறுமனே வாய்வார்த்தையில் எதிர்த்துப் போராட்டம் நடத்துபவர்கள் தமது கொள்கையில் நிலையாக இருந்தால், தத்தமது மதக்கோட்பாடுகளைக் கொண்டவாறு அறிவுக்கும் ஒழுக்கத்திற்கும் திறமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அழகிப்போட்டிகள் நடத்தலாம். அத்தகைய போட்டிகளின் வெற்றிக்கு உலக முஸ்லிமாஹ் போட்டி ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் முன்னுதாரணமாகவும் நம்முன் வீர நடை போடுகிறது.

Source:

Wikipedia.org
http://www.france24.com

Sunday, January 30, 2011

பெண்ணுரிமை!


ஹ்க்கும்... வலைப்பூ ஆரம்பிச்சு எண்ணி மூணு மாசம் ஆகலை (அதென்ன மூணு மாசக்கணக்கு...முளச்சு மூணு இலை விடலைன்னு சொல்றதுல உள்ள அதே கணக்கு தான்...;)), அதுக்குள்ள பெண்ணுரிமை பேசற அளவுக்கு வந்தாச்சான்னு நீங்க நினைக்கிறத நானும் நினச்சேன்... அதுனால பெண்ணுரிமைப் பற்றி நான் எழுதப்போறதில்லை. ஏன்னா உலகத்தில் பெண்ணுரிமை பற்றி பெண்களுக்குத் தெரிந்ததை விட ஆண்கள் அதிகம் தெரிஞ்சு வச்சிருக்காங்க...

பெண்ணுரிமையைப் பற்றி பெண்கள் எதுக்கு தெரிஞ்சு வச்சிருக்காங்கன்னா அதை சமயத்துக்கு தற்காப்பு ஆயுதமா பயன்படுத்திக்கிறதுக்கு...
அதிகம் படிக்காத கிராமத்து பெண்கள் கூட பஞ்சாயத்து தலைவிகளாகவும் மகளிர் சுய உதவிக் குழு அமைத்தும்,இன்னும் பல நல்ல முன்னுதாரணங்களாகவும்  தங்களையும் தாம் சார்ந்த ஊரையும் ஓரளவுக்காவது முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்றாங்க... நகரங்கள்ல பிறந்து வளர்ற பெண்கள் கூட ஒரு ஸ்டேட்டஸ்ஸுக்காக பொறியியலோ மருத்துவமோ படிச்சுட்டு அதைப் பயன்படுத்திக்காம குழந்தைகுட்டி சமையல்னு செட்டிலாயிடுறாங்க... அவங்களுக்கு அப்படி வேலைக்குப் போற எண்ணம் இல்லைன்னா ஆர்ட்ஸ் அல்லது சயின்ஸ் டிகிரி படிச்சிருந்தா அந்த பொறியியல்,மருத்துவ படிப்பு கஷ்டப்பட்டு படிச்சு தாங்கள் சேர்ந்த கிராமத்தின் மற்ற மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமா இருக்க நினைக்கும் மாணவர்களுக்கு அதிகம் பயன்பட்டிருக்கும். ஏட்டுக்கல்வி கிடச்சிட்டா ஒரு பெண்ணுக்கு முழு சுதந்திரமும் தைரியமும் கிடச்சுடுமான்னா அதுவுமில்ல... அப்படியிருந்திருந்தா "பட்டதாரிப் பெண் தற்கொலை" போன்ற செய்திகளுக்கு இடமில்லையே!நகரத்தில் வாழ்றவங்களுக்கு பத்தோட பதிணொண்ணா தெரியுற அதே கல்லூரி படிப்பு கிராமத்தில் இருக்கிறவங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுக்கிறது. அதே அடையாளம் அவர்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் தைரியத்துடன் எதிர்கொள்ள உதவுகிறது. அதனால நான் என்ன சொல்ல வர்றேன்னா ...இருங்க இதையும் சொல்லி முடிச்சுடறேன்...

ஆண்கள் எதுக்கு பெண்ணுரிமையைப் பற்றி தெரிஞ்சுக்கறாங்கன்னா பெண்களிடம் தங்களோட எல்லை இதுவரைதான்..இதுக்கு மேல பேசினா அர்ச்சனை செயல்மூலமாவோ சொல்மூலமாவோ ஆரம்பிச்சுடும்னு அவங்க ஒதுங்கி தங்களுக்கு ஒரு தற்காப்பு ஆயுதமா பயன்படுத்திக்கிறாங்க... ;)

அதனால நான் என்ன சொல்ல வர்றேன்னா... என்னோட ஏட்டுக்கல்வி நம் நாட்டோட பெண்கல்வி சதிவீதத்தை உயர்த்திக்க மட்டுந்தாங்க உதவியிருக்கு:(... என் ஆ.கா. அவ்வளவு மோசமானவரான்னெல்லாம் நினச்சுடாதீங்க... யாருக்காக இல்லையோ, அடுத்த வேளை தைரியமா வீட்டுச் சாப்பாடு சாப்பிடணுன்றதுக்காகவாவது என்னோட உரிமைகள்ல மூக்கை நீட்டுறது கிடையாது... அப்பறம் என்னன்னு கேக்கறீங்களா? விஷயம் இதுதான்... என்னோட அஞ்சு வயசு பையன் கேக்கிற கேள்விகளுக்கு பதில் சொல்றதுக்கு நான் படிச்ச ஏட்டுக்கல்வி உதவலைன்னு சொல்ல வந்தேன்:(

போன தடவை ஊருக்கு போயிருந்தப்போ எங்க வீட்டுக்கு வந்தவங்க என் பையனைக் காட்டி 'இது உன் பையனா'ன்னு கேட்டாங்களாம்..நானும் 'ஆமா'ன்னு சொன்னேனாம்... 'நீ ஏன் ஆமான்னு சொன்னே... பாய்ஸ்செல்லாம் அப்பா பசங்க...கேர்ள்ஸ்தான் அம்மா பிள்ளைங்க'ன்னு அவன் பண்ண ஆராய்ச்சியைப் பார்த்து ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்...  என்னடா இது... பத்து மாசம் கஷ்டப்பட்டு சுமந்து பெற்று ராத்திரி பகல்னு பார்க்காம வளர்க்கிறோம்... ஆனா புகழெல்லாம அப்பாவுக்கா...பெண்ணுரிமை என்னாவறது:( ...எப்படி இவனை வழிக்கு கொண்டு வர்றது... அப்படீன்னு பயங்கரமா (அடிக்க வரக்கூடாது;)) யோசிச்சேன்... அப்பதான் தோணுச்சு... அவன்கிட்ட கேட்டேன்... எல்லா பேபீஸும் யார் வயிற்றிலிருந்து வற்றாங்க'ன்னு..அவன் 'அம்மா வயித்திலயிருந்து'ன்னு சொன்னான்... 'அப்ப பாய்ஸும் அம்மா பிள்ளைங்க தானே'ன்னு கேட்டேன்... திருப்தியான பதில் கிடைச்சதுனால அமைதியாயிட்டான்... அவங்க அப்பாவுக்குத்தான் கொஞ்சம் வருத்தம்;).

எனக்கு விடை தெரியாத ஒரு கேள்வி அவன் இன்னும் கேட்டுக்கிட்டு இருக்கான்... உதவுங்க.. பொதுவா அவன் வாங்கிக் கேக்கிற பொருள் அவசியமில்லாதது எதுவும் பிங்க் நிறத்தில் இருந்துச்சுன்னா 'அதெல்லாம் கேர்ள்ஸுக்குரியது'ன்னு சொன்னா திரும்பிக்கூட பார்க்க மாட்டான். சமீபத்துல பிங்க் நிறத்தில் ஒரு பென்சில் பாக்ஸ் அவனுக்கு ரொம்ப பிடிச்சுபோயிடுச்சு... அது கேர்ள்ஸுக்குரியதுன்னு சொல்லியும் 'அப்ப லேடீஸ் மட்டும் ஏன் ஜென்ட்ஸ் காரை ஓட்டுறாங்க'ன்னு ஒரு கேள்வி கேட்டான்... நானும் 'ஹலோ.. லேடீஸ் கார்,ஜென்ட்ஸ் கார்னு ஒண்ணும் கிடையாது... யார் வேணா எந்த கார் வேணா ஓட்டலாம்'னு சமளிச்சேன். அதுக்கு அவன் சொல்றான் ' அப்ப லேடீஸ் ஜென்ட்ஸோட பேண்ட்,ஷர்ட் போடுறாங்கள்ல... எனக்கும் இந்த கேர்ள்ஸ் பென்சில் பாக்ஸ் வாங்கித் தா'....அவ்வ்வ்... முடியலை...என்னை யாராச்சும்  காப்பாத்துங்களேன்...:(....அதாவது பெண்ணுரிமையைக் காப்பாத்துங்க....