Thursday, June 11, 2015

எங்க வீட்டுக்கதை!

வீடு மாறும் வேலைகள் துவங்கியதில் இண்டர்நெட் கட் பண்ணியாச்சு.... எஃப்பி, வாட்சப், ப்ளாக் என்று வெளி உலகமே மறந்து வீடு மாறிய பிறகு ஐந்து நாட்கள் கழிந்து நெட் கனக்‌ஷன் கிடைத்தது. 

வாட்சப் திறந்தால் ஸ்ட்ரக் ஆகும் அளவிற்கு மெசேஜ் நிரம்பி வழிகிறது. 3 முறை திறந்தும் எந்த மெசேஜும் பார்க்க முடியவில்லை. ஹேங்க் ஆனதால், பொறுமை தொலைந்து ப்ளாக், எஃப்பி ஓபன் செய்தாச்சு. இனி மொக்கைகள் தொடரும். ஹி ஹி..

பல வாரங்கள் தேடி அலைந்து, பல வீடுகள் தேர்ந்தெடுத்து முடிவு செய்து, ஒரு வீட்டிற்கு அட்வான்ஸ் கூட கொடுத்த பின்பு கேன்சல் ஆனது. பல சமயங்களில் இருவரும் சேர்ந்தே வீடு தேடினோம். ஆனால் அந்த நாள் என் கணவர் மட்டும் வீடு பார்க்க சென்றார். மாலை பல வீடுகள் பார்த்து, ஒன்றுமே சரிவராமல், இரவு 12 மணிக்கு இந்த வீட்டைப் பார்த்து ஐந்தே நிமிடங்களில் முடிவு செய்து அட்வான்ஸ் கொடுத்தார் என் கணவர். அட்வான்ஸ் கொடுத்த பின் தான் எனக்கு வாட்சப்பில் வீட்டின் ஃபோட்டோக்கள் அனுப்பி வைத்தார். இரவு ஒரு மணிக்கு அந்த வீட்டில் அது சரியில்லை, இது சரியில்லை என்று சொன்னால் ரணகளம் ஆகிவிடும் என்பதால் வேறு வழியில்லாமல் நல்லாயிருக்கு என்று சொல்லியாச்சு. நான் வைத்த கோரிக்கைகள், பெரிய கிச்சன், கடைகள், பள்ளிக்கூடங்களின் அருகாமை என அனைத்தும் இந்த வீட்டில் இருப்பது உண்மை. எனினும் நான் உடன் சென்றிருந்தால் இந்த வீட்டை முடிவு செய்திருப்பேனா என்பது சந்தேகமே.  

பல வீடுகள் பார்த்து முடிவு செய்தும் அவையெல்லாம் தவறி, இறுதி 5 நிமிடங்களில் இந்த வீடு முடிவானதில் இறைவன் ஏதோ ஒரு பெரும் நன்மை வைத்திருக்கிறான் அல்லது முடிவு செய்துவிட்ட அந்த வீடுகளில் இருந்த ஏதோ ஒரு பெரும் ஆபத்தில் இருந்து பாதுகாத்து விட்டதாகப் பலத்த நம்பிக்கை இப்பொழுது எப்படி என்னுள் ஏற்பட்டது என்று என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. 

இதே ஏரியாவில் வீடு பார்ப்போம்; வேறு ஏரியாவில் வேண்டாம் என்று தினமும் அழுத பெரியத்துரை, அந்த வீட்டு வாசலில் இருந்த பூனைக்குட்டிகளிடம் தினமும் கதை பேசிய சின்னத்துரை வரை வீடு பிடித்துவிட்டது. 

பாதுகாப்பதிலும் உதவி புரிவதிலும் அவனே சிறந்தவன். அல்ஹம்துலில்லாஹ். 

வீடு மாறிய டென்ஷன்கள் பல இருந்தும் சமாளிக்க முடியாத கவலை என்னவென்றால் மகன், பழைய ஏரியா நண்பர்களை அதிகம் மிஸ் செய்வது. பார்ட்டி, அன்பளிப்புகள் என்று பிரியாவிடை கொடுத்து அனுப்பிவைத்துள்ளனர் அவனது நண்பர்கள் :). இவன் தான் வரைந்த ஓவியங்களைப் பரிசாகக் கொடுத்துவிட்டான்.

புதிய வீட்டிலிருந்து முதல் நாள் இந்த ஏரியாவிற்கான பஸ்ஸில் பள்ளிக்குச் சென்றவன், மதியம் வீட்டிற்கு வந்ததும், தொண்டைக்குழி அடைக்க, ஒரு கதை சொன்னான். கதை முடித்ததும் தான் புரிந்தது. அவன், பழைய பஸ் நண்பர்களை மிஸ் செய்வது. ஸ்ஸப்பா.... அவனுக்கு ஆறுதல் சொல்லியே நேரம் போகிறது.. முடீல...

(அப்ப எங்க பக்கத்து வீட்டு தோழிகளை நான் மிஸ் பண்ணலையான்னு தானே நினைக்கிறீங்க?? பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் அரபிகள்... சோ, அவர்களைப் பார்த்தால் சிரித்துக் கொள்வதோடு சரி... :) )



ஆனாலும், ஒரு கவலை மனசை ஆட்டிப்படைக்குது... ரமழான் வந்தால், ஹரீஸ், பிரியாணி, சமோசா, டம்ப்ளிங் என்று எண்ணற்ற உணவுவகைகள் தினமும் வந்து கொண்டேயிருக்கும். பக்கத்துப் பள்ளிவாசலில் பிரியாணி தினமும் வழங்குவதுண்டு. சில சமயங்களில் அதுவும் வாங்குவதுண்டு. அவற்றை எல்லாம் இந்த ரமழானில் நிச்சயம் மிஸ் பண்ணுவேன். பின்னே... அதை வைத்தே நோன்பு காலத்தில் அதிகம் சமைக்காமல் சமாளித்து வந்தேனே.. ஹ்ம்ம்ம்... :( 

ஆமா.. புது வீடு வந்ததும் பால் தான் காய்ச்சணுமோ? நான் இங்கு அடுப்பு பற்ற வைத்த நேரம், டின்னர் சமயமாதலால், முதலில் சாதம் தான் வைத்தேன்.. தெய்வக்குத்தம் இல்லையே??? :O

Thursday, June 4, 2015

God is Yummy...?????

எங்க வீட்டு சின்னத்துரை ஸ்கூல் போக ஆரம்பிச்சாச்சு... வீட்டில் இருக்கும்வரை எழுத்துகளும் எண்களும் எண்ணிக்கையும் மட்டுமே சொல்லிக்கொடுத்தேன். ரைம்ஸ் நெட்டில் பார்ப்பதோடு சரி. அவன் விரும்பும் நேரங்களில் தானாகப் படித்துக்கொண்டிருப்பான். ஸ்கூல் சேர்ந்த புதிதில் சில புதிய ரைம்ஸ் சொல்லிக்கொடுத்ததில் அவனுக்கு அதிக சந்தோஷம்... எப்பொழுதும் வாயில் ஏதேனும் ஒரு ரைம்ஸ்... நானே சில நேரங்களில் ரைம்ஸ் படிக்கும் அளவுக்கு... ... அதனைக் கண்ட பெரியத்துரை.... என்னை பேபி என்று கிண்டல் அடிக்கும் அளவிற்கு...அவ்வ்வ்...

ஒரு சமயம் ப்ளா ப்ளா ப்ளேக்‌ஷீப் என்று படிக்க... சிரிப்புடன் அது ப்ளா ப்ளா இல்லை.. பா பா என்றேன்... இல்லை .. அது ப்ளா ப்ளாதான் என்றான்.. முடீல. ஒகே என்று கூறி அத்தோடு விட்டாச்சு...

திடீரென்று ஒரு நாள் புது ரைம்ஸ் படித்தான். காட் இஸ் யம்மி.. காட் இஸ் யம்மி...என்று ஒரு ரைம்ஸ் படிக்க... அதிர்ந்து போய், அவனுடைய புக்கைத் திறந்தால்... அது காட் இஸ் நியர் மி.. காட் இஸ் நியர் மி...என்றிருந்தது... கிர்ர்ர்... இதையும் மாற்ற முடியாமல் தோற்றேன்... என்ன கொடுமை இது.. காட் இஸ் யம்மி... உண்மையிலேயே வீட்டில் நடக்கும் இந்த கொடுமையைக் கூட தட்டிக்கேட்க முடியவில்லை.... நாமெல்லாம் பர்மாஆஆவில் நடக்கும் கொடுமைகளுக்கெதிராகக் குரல் கொடுத்து... கஷ்டம் என்று தோன்றியது.



ஒரு நாள் அவனிடம் “நான் சொன்ன வேலையை நீ செய்யவில்லை.. நான் உன்னுடன் பேச மாட்டேன்” என்றேன்.

அவனது வாப்பாவும் “ம்மா.. இனி உன்னுடன் பேச மாட்டாங்க.. இனிமேல் நான் தான் உன் ஃப்ரெண்ட்” என்றார்.

சிறிது நேரம் மவுனம் காத்துவிட்டு, “ம்மா.. தண்ணீர் தா... தாகமா இருக்கு” என்றான்.

கொஞ்சமும் யோசிக்காமல், தண்ணீர் கொடுத்தேன். வாங்கிக் குடிக்கும் முன், “வாப்பா... ம்மா நான் சொன்னதைக் கேட்டு தண்ணி தந்துட்டாங்க.. ம்மா தான் என் ஃப்ரெண்ட்.. நீங்க இல்லை” என்றான்.

அம்மா... பசிக்குது என்றவுடன் அம்மாவுடன் போட்ட சண்டை முடிந்துவிடும் என்று ஃபேஸ்புக்கில் எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது. மாஷா அல்லாஹ்... பிள்ளைகள் எப்படியெல்லாம் யோசித்து காய் நகர்த்துகிறார்கள். பாசத்தில் தோற்பது என்பது இதுதானோ?

ஒரு நாள் ஸ்கூலில் இருந்து வந்ததும்... “ம்மா.. இன்னைக்கு ஸ்கூலில் ஐஸ்கிரீம் பார்த்தேன்” என்றான்.

போச்சு.. ஸ்கூலில் ஐஸ்கிரீம் எல்லாம் விற்க ஆரம்பித்துவிட்டார்களா.. இனி ஐஸ்கிரீம் வாங்க காசு கேட்பானோ என்று படபடவென்று என்னவெல்லாமோ யோசனைகள்...

எங்க பார்த்தே... க்ளாசிலா.. க்ளாசிற்கு வெளியேவா..

வெளியே...

ஐஸ்கிரீம் கடையிலா... (காண்டீன் என்பதற்குப் பதில்.. கடையா என்று கேட்டேன்)

கடை எல்லாம் இல்லை...

அப்போ ஸ்கூலுக்கு வெளியே பார்த்தாயா..

இல்லை...

அப்போ ஃப்ரெண்ட் சாப்பிட்டுக்கொண்டிருந்தானா...

ஒட்டியிருப்பதை எல்லாம் சாப்பிட முடியாது...

அவ்வ்வ்... ஐஸ்கிரீம் படத்தை ஒட்டியிருப்பதைப் பார்த்தியா...

ஆமா...

(கிர்ர்ர்ர்....இதை முதல்லயே சொல்லியிருக்கலாமேடா.... ஷப்பா....முடீல...)