Saturday, March 26, 2011

வந்துட்டேன்..ஆனா வரலை ;)

என் வலைப்பூவில் புதிய பதிவுகள் தேடித் தேடி உங்க எல்லாரோட கண்களும் பூத்துப் போனதைப் பார்த்து எனக்கு மனசே கேட்கலை (?)...ம்ஹும்..அப்படியெல்லாம் சொல்லக்கூடாது... நீங்க தேடினது எனக்குத் தெரியும்...அதான் பதிவு போட ஓடி வந்தேன். (ஹி..ஹி..சமாளிப்பு எப்பூடி..?);)

எங்க வீட்டு பெரியதுரையைப் பற்றி சில பதிவுகள் போட்டிருக்கிறேன்..(இருக்கிற பதிவுகளே சிலதுதான்னு நீங்க சொல்றது எனக்கு கேட்கலை ;)) ...இனிமே சின்னத்துரையைப் பற்றியும் பதிவுகள் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ்... அதென்ன இவ்வளவு நாள் போட முடியாத பதிவு இனிமேல் மட்டும்? இறைவன் அருளால் என் சின்னத்துரை பூமியில் காலடி எடுத்து வைத்து இன்றோடு இரண்டு வாரங்கள் ஆகிறது(சின்னத்துரைதான்னு ஸ்கேன்ல பார்த்துட்டோம்ல;)). அவனுடைய ஈருலகு நல்வாழ்விற்கும் துஆ செய்யுங்கள்.

ஆகையினால் புன்னகை வலைக்கு தற்காலிக ஓய்வு கொடுக்கப்படுகிறது. ரொம்ப நல்லதுன்னு நீங்க நினைக்கிறதுக்குள்ள இன்னொன்னு சொல்லிடறேன்...என் வலையை மூட்டை கட்டி வைத்தாலும் உங்கள் வலைப்பூக்களுக்கு மட்டுமாவது அப்பப்ப வந்து பின்னூட்டி அட்டன்டன்ஸ் கொடுப்பேன் (ஏதோ சமூகத்துக்கு என்னாலான தொண்டு);)

இன்ஷா அல்லாஹ், கடையை...சாரி..வலையை மீண்டும் திறக்கும்போது மஹியோட தொடர்பதிவோடு தொடர்கிறேன்.

Wednesday, March 2, 2011

அவனா?இவனா?

படிக்கும் பருவத்தில்
பதக்கங்கள் குவித்த போதும்
கைநிறைந்த சம்பளத்தில்-பல
கண்களை விரியச் செய்த போதும்
மனதிற்கேற்ற மங்கை
மனைவியாய் வாய்த்த போதும்
அவளளித்த தேவதையால்
எண்ணிலடங்கா இன்பங்களை
எளிதாய் எட்டிய போதும்
இறைவனை மறந்தான்;
தன்னையே மகிழ்ந்தான்;
பிஞ்சு உடலில் அனல்
வலிப்பாய் வெளியான போது
'கடவுளேஏஏஏஏஏஏஏஏஏ' என்ற
தன் அலறலால்
தன்னை உணர்ந்தான் முதன்முதலாய்.


மக்கா...இத கவிதைன்னெல்லாம் சொல்லி உங்களை நோகடிக்க மாட்டேன்... அப்புறம் மலிக்கா சண்டைக்கு வந்துடுவாங்க... இதையெல்லாம் கவிதைன்னு சொன்னா நாங்கள்லாம் ரூம் போட்டு யோசிச்சு எழுதறமே அது என்னன்னு கேட்டுடுவாங்க... அதுக்காக 'கட்டுரையை ஏன் இப்படி பிச்சு பிச்சு எழுதியிருக்க'ன்னுலாம் கேட்கக்கூடாது.. :( 

Monday, February 21, 2011

காப்பாற்றும் தாழ்ப்பாள்!

தினமும் செய்திதாளைப் பார்த்தால் குறைந்தது ஒரு திருட்டு செய்தியோ அல்லது திருடனைப் பற்றி செய்தியோ வந்திருக்கும். அதைப் படித்ததும் எங்கே நமக்கும் அது போல் அனுபவம் (அதாவது நம் உடைமைக்கும் அது போல் திருட்டு) நடந்திடுமோன்ற பயத்தில் கொஞ்ச நாளைக்கு நம்ம நிம்மதி திருட்டு போய்டும் :( அதுவும் நம் கற்பனை குதிரைக்கு கேட்கவே வேண்டாம்... வீட்டில் தனியா இருக்கும்போது ஒரு சின்ன சத்தம் கேட்டுச்சு...அவ்வளவுதான்... அந்த மாதிரி சமயங்கள்ல கொஞ்சம் தைரியத்தை வரவழச்சுட்டு எல்லா அறைகளையும் செக் பண்ணிட்டு நேரா போனை எடுத்து (தெரிஞ்சவங்க) யாருக்காவது ப்ளேடு போட ஆரம்பிச்சுடுவேன் ;)... பயம் பறந்துடும்... நாலு நல்ல விஷயங்களை அவங்களோட பகிர்ந்திட்ட மாதிரியும் இருக்கும் ;)

எல்லாரும்
நல்லாருக்கணும்!!
 சில நாட்களுக்கு முன் நாளிதழில் வாசகர் கடிதத்தில் ஒருவர் தன் வீட்டில் நடந்த நூதன திருட்டைப் பற்றி எழுதியிருந்தார். அவருடைய மனைவி காலை 9 மணிக்கு வீட்டில் தனியே இருந்திருக்கிறார். நல்லா தூங்கிட்டு... தூக்கத்திலயும் அந்த அம்மா கொஞ்ச உஷாராத்தான் இருப்பாங்க போலிருக்கு... வீட்டில் யாரோ நடமாடுற சத்தம் கேட்டு முழிச்சிருக்காங்க... ஒரு ஆள் அவங்க இருந்த அறைக்கு எதிர் ஆறைக்குள்ள நுழையறத பார்த்திருக்காங்க... அப்பா... எனக்கு வாசிக்க வாசிக்க பக் பக்குனு ஆயிடுச்சு... அப்ப உங்களுக்கு?

அவங்க நல்ல நேரம் திருடன் அவங்க அறைக்குள்ள நுழையாம அவங்க குழந்தைகள் அறைக்குள் போயிருக்கான். அத பார்த்ததும் இந்த அம்மா தன் அறையைப் பூட்டிட்டு அவங்க பக்கத்தில இருந்த போனில் அவங்க கணவருக்கு விஷயத்த மெல்ல சொல்லியிருக்காங்க... அவர் உடனே போலீஸுக்கு தகவல் சொல்லியிருக்காங்க... அதுக்கப்புறம் இந்தம்மா சத்தம் போட்டாங்கன்னும் தன் கடிதத்தில் எழுதியிருந்தார். திருடனைப் பிடித்ததைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

திருடன் வீட்டு லாக்கை உடைத்துவிட்டு வந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். என்னைப் பொறுத்தவரை இந்த மாதிரி சமயத்தில் அந்த அம்மா அறையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குள் இருந்ததே கொஞ்சம் ஆபத்தானதுதான். வீட்டு லாக்கையே உடைத்தவனுக்கு அறையின் லாக்கை உடைக்க வெகு நேரம் ஆகாது.  அவன் அறியாதபடி அவர் வெளியே சென்றிருக்க வேண்டும்.

பில்டிங் செக்யூரிட்டியின் கவனக்குறைபாடுதான் இதில் முதல் தவறு. புதியதாக ஒருவர் கட்டிடத்தில் நுழையும்போது அவனைக் கொஞ்சம் விசாரித்திருந்தால் அவன் வந்த வழியே சென்றிருப்பான்.

வாசகர் குறிப்பிட்டிருந்த காரணமும் கவனத்தில் வைக்க வேண்டிய ஒன்றுதான். அதாவது அவருடைய வீட்டில் டீவி சத்தமோ மற்ற பேச்சு சத்தமோ கேட்காததும் ஆளில்லாத வீடு என நினைத்து திருடனை வீட்டில் நுழையச் செய்திருக்கலாம்.

அனுபவம் தந்த பாடத்தில் அவர் தந்த தீர்வும் நல்லதாகப் படுகிறது. அதாவது வீட்டு கதவு லாக் தவிர்த்து ஒரு தாழ்ப்பாளும் வைத்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பில்லை என்றிருந்தார்.

ஆனால் இதிலும் என் மூளைக்கு ரெண்டு குறை தோணுது : (
1. அலுவலகம்/பள்ளி முடிந்து வரும் கணவர்/குழந்தையிடம் சாவி இருந்தாலும் வீட்டினுள் இருப்பவர் போய் கதவைத் திறக்கும் வரை அவர் வெளியே காத்திருக்க வேண்டும்.
2. தாழ்ப்பாள் போட்ட சமயத்தில் வீட்டினுள் தனியாக இருப்பவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் வெளியே இருந்து யாரும் காப்பாற்ற சிறிது சமயமெடுக்கும்.

என்ன பண்றது... கொலை, கொள்ளை போன்ற பெரிய இழப்புகளைத் தவிர்க்க இது போன்ற சின்ன சின்ன அசௌகரியங்களைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அதெல்லாம் சரி...வீட்டைப் பூட்டிட்டு குடும்பத்தோடு வெளியூர் போகும்போது என்ன பண்றதுன்னு தானே நினைக்கிறீங்க... வேறு வழியில்லை... வீட்டிலிருக்கும் நகை,பணத்தை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிவிட்டு செல்வதைத் தவிர வேறு ஒண்ணும் செய்ய முடியாது :(

என் சந்தேகம் தான் தீர்ந்த பாடில்லை. வீட்டு லாக்கை உடைக்கும் வரை அவன் யார் கண்ணிலும் படவேயில்லையா/யாருக்கும் கேட்கவேயில்லையா? :(

இந்த கடிதத்தைப் படித்ததும் செய்திதாளில் முன்பு படித்த மற்றொரு சம்பவமும் ஞாபகம் வந்துச்சு. பெண் ஒருவர் தன் குழந்தையுடன் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்க்கும் போது வீட்டு லாக் உடைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் உஷாராகி மெதுவாக வீட்டினுள் எட்டிப் பார்த்தால் ஒரு பெண் அவர் அறையிலிருந்த பீரோவை உடைத்து கொள்ளையடித்துக் கொண்டிருந்திருக்கிறாள். இவர் கொஞ்சமும் பயப்படாமல் அவளின் பின்னே சென்று அந்த பெண்ணைக் கையும் களவுமாக பிடித்திருக்கிறார். அந்த தைரியசாலியின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர். நல்ல குண்டுகுண்டுன்னு இருந்தார். கொஞ்சம் நோஞ்சானாக இருந்திருந்தால் திருடி இவரைத் தாக்கியிருக்கலாம். குண்டா இருக்கிறதிலயும் ஒரு நன்மை இருக்கு ;)

எங்கள் வீட்டிலும் இந்த தாழ்ப்பாள் உண்டு... ஒரு முறை வீட்டில் தனியாக இருந்த சமயம் வீட்டு கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. ஏற்கனவே பூட்டியிருந்த தாழ்ப்பாளை நன்றாக பூட்டிவிட்டு 'யாரது?' என்று கேட்டேன் (நாங்கள்லாம் படு உஷாருல்ல:) ) பதிலில்லை... இரண்டு மூன்று முறை கேட்டும் தட்டுவதைத் தவிர பதில் சொல்லவில்லை... நீங்க நினைக்கலாம்...லென்ஸ் வழியா பார்க்கலாமேஏன்னு... எங்க வீட்டுக் கதவுக்கு லென்ஸ் கிடையாது... ஹி..ஹி..ஒரு வேளை தமிழ் தெரியாத திருடனாயிருக்குமோ:( 'who's this' என்று கேட்டேன்.. 'it's me' என்றாள் கீழ் வீட்டிலிருக்கும், எங்கள் வீட்டிற்கு அவ்வப்போது வந்து விளையாடிச் செல்லும், அரபிச் சிறுமி...;)

Monday, February 14, 2011

கேள்விக்கென்ன பதில்?!

என் மகன் அடிக்கடி கேள்விகள் கேட்டுக்கிட்டு இருப்பான்னும் அதுக்கு சான்றா ரெண்டே ரென்டே கேள்விகளையும் தான் பதிவில் சொல்லியிருந்தேன்... மக்கா .... நீங்கள்லாம் என்ன நினைச்சீங்களோ...அதும் ரஜின் நல்லா அனுபவிங்கன்னு வேற சொல்லியிருந்தார்... இதெல்லாம் என் மகன் காதில் விழுந்துடுச்சோ என்னன்னு தெரியலை... அந்த பதிவை போட்ட அடுத்த வாரமே ஒரு நாளில் என்னை கேள்வி கேட்டு துளைச்சுட்டான்... நான் இந்த கேள்விகளை அவனிடமிருந்து எதிர்பார்த்தது தான்..ஆனால் அதுக்கு இன்னும் சில வருடங்கள் போகும்னும் சுலபமா அவனுக்கு புரியவச்சிடலாம்னும் ஒரு நம்பிக்கையோடு இருந்தேன்... ஆனா அவன் இப்பவே இந்த அஞ்சு வயசுலயே ... கேட்டுட்டான்யா... கேட்டுட்டான்யா :(

ம்மா... அல்லாஹ் கேர்ளா (girl) பாயா(boy)? (நான் அவனுக்கு அல்லாஹ்வை ஒருமையில் அல்லாது அவங்க,இவங்கன்னு பன்மையில் அறிமுகப்படுத்தி இருந்ததுதான் அவனுடைய இந்த சந்தேகத்துக்கு காரணமாயிடுச்சு :(  )

அல்லாஹ் கேர்ளும் கிடையாது... பாயும் கிடையாது... நம்மளைத்தான் அல்லாஹ் ஆண் பெண்ணா வச்சிருக்காங்க...

அல்லாஹ் மேலயிருந்து பாக்கிறாங்கன்னு சொன்னியே, பில்டிங் மேலயா இருப்பாங்க...

(என்னே ஒரு கற்பனை..அவ்வ்வ்.)இல்லமா... ஸ்கைல இருந்து பார்ப்பாங்க..அப்பதானே எல்லாரையும் பார்க்க முடியும்?!

அப்ப ஸ்கையிலயிருந்து கீழ விழுந்துட மாட்டாங்களா?

இல்ல..சேர் போட்டு உக்காந்திருப்பாங்க...

சேரை கயிறு போட்டு கட்டியிருப்பாங்களா?

(அவ்வ்வ்..) ஆமா...

அப்ப நாம ஸ்கைக்கு போகணும்னா ஏணி போட்டா ஏறிடலாமா?

இல்லமா.. ஏணி போட்டாலும் ஸ்கை எட்டாது...ரொம்ப தூரத்தில இருக்கு.

அப்ப எப்டி போறது...?

நாமல்லாம் தாத்தா,பாட்டி ஆனதுக்கப்புறம் அல்லாஹ் நம்மளை எடுத்துப்பாங்க...

எப்டி எடுப்பாங்க..அல்லாஹ்க்கு பெரிய கையா?

(ம்ம்...என்ன சொல்றது..முழிக்கிறேன்)

அல்லாஹ்க்கு பெரிய கையா?

அது வந்து...அல்லாஹ்கிட்ட நிறைய பேர் இருக்காங்க..அவங்க பேர் மலக்குகள்..அல்லாஹ் அவங்ககிட்ட யாரை எடுக்க சொல்றானோ அவங்க இங்க வந்து அவங்களை எடுத்துட்டு அல்லாஹ்கிட்ட போய்டுவாங்க...

எப்டி?

அது தெரியலை..அல்லாஹ்வுக்குத் தான் தெரியும்.

சரி..ஸ்கைல என்ன இருக்கும்?

எல்லாம் இருக்கும்..

பெரிய ரைட்டிங் போர்டு, ஸ்கெட்ச் எல்லாம் இருக்குமா?

நீ இப்ப சின்ன பையனா இருக்கிறதுனால இதெல்லாம் உனக்கு பிடிச்சிருக்கு...ஆனா ஸ்கைக்குப் போகும்போது நீ தாத்தா ஆகிடுவல்ல..அப்ப உனக்கு என்ன தேவையோ அதெல்லாம் ஸ்கைல அல்லாஹ் வச்சிருப்பாங்க...

அப்ப டீவியெல்லாம் இருக்குமா...

இங்க நமக்கு போரடிக்குது...அதனால டீவி கொஞ்ச நேரம் பார்க்கிறோம்..ஸ்கைல எப்பவும் நாம் தொழுதுட்டு ஓதிட்டு தான் இருப்போம்...அதனால் டீவியெல்லாம் இருக்காது.

அப்ப நான் மட்டும் தனியாவா போகணும்? (லேசா விசும்பல்)

நீ ஸ்கைக்கு வரும்போது நானும் வாப்பாவும் அங்க இருப்போம்... (ஆமீன்)

அப்ப சரி. ஸ்கைல வேற என்ன இருக்கும்?

நாம இப்ப நல்ல தொழுது ஓதிட்டு இருந்தா அல்லாஹ் நமக்காக ஸ்கைல வீடு தருவாங்க...

அது பெரிய வீடா இருக்குமா? மாடி இருக்குமா? பன்க் பெட்டெல்லாம்(bunk bed) இருக்குமா?

ஆமா எல்லாம் இருக்கும். நமக்கு என்ன வேணுமோ நாம அல்லாஹ்கிட்ட கேட்டா உடனே தருவாங்க.

அப்ப நாம இங்கிருந்து ஒண்ணும் கொண்டு போக வேண்டாமா?

(அவ்வ்)வேண்டாம்... எல்லாமே அங்க புதுசா இருக்கும். அங்க தூசி கிடையாது. மழை, வெயில் கிடையாது...அதனால அங்க எல்லாமே புதுசா இருக்கும். நமக்கு என்ன வேணுமோ அத சாப்பிடலாம். எல்லாமே அங்க சூப்பர் டேஸ்டா இருக்கும்.

ம்ம்ம்...

அல்லாஹ் நமக்கு இதெல்லாம் செய்யணும்னா நாம நல்லா தொழணும்..ஓதணும்..நல்ல பிள்ளையா இருக்கணும்..(சைடு கேப்பில் ஒரு பிட்டு போட்டாச்சு)

ம்ம்...

இதுக்கெல்லாம் தான் நான் உன்கிட்ட எப்பவும் ஓதணும்,தொழணும்னு சொல்றேன். நீ நல்லா தொழுவியாம்மா?

ம்ம்ம்..(அப்புறம் என்னால் முடிஞ்ச அளவு பிட்டு போட்டாச்சு... அல்லாஹ்வால் முடியாதது எதுவுமே இல்லைன்னு என்னால முடிஞ்ச அளவுக்கு அவனுக்கு புரிய வச்சேன்.சரி..சரின்னு தலையாட்டிட்டு இருந்தான்.).
அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு ராத்திரி தூக்கத்தில் என்னவோ சொன்னான்.

என்னமா?

(தூங்கிட்டே) அல்லாஹ் ஏம்மா முடிச்சாங்க?

(என்ன..அல்லாஹ்வா?அல்லாஹ்வையா சொல்றான். ஆஹா பிள்ளை தூக்கத்தில கூட அல்லாஹ்வைப் பத்தி நினைக்கிறானேன்னு பெருமை பிடிபடலை எனக்கு)என்னமா?

(தூங்கிட்டே) அல்லாஹ் ஏம்மா முடிச்சாங்க?

அல்லாஹ் என்ன முடிச்சாங்க?

அல்லாஹ் ஏம்மா ஹோம்வொர்க் முடிச்சாங்க?

(அவ்வ்... எனக்கு அழறதா சிரிக்கிறதானு தெரியலை. அல்லாஹ்வைப் பத்தி அவனுக்கு புரியுற மாதிரி நான் சொல்லலையோ...இல்ல நான் சொன்னதை அவன் வயசுக்கு ஏத்த மாதிரி அவன் புரிஞ்சிக்கிட்டானா..அவன் பெரியவனாகும்போது நான் சொன்னதை சரியா புரிஞ்சிக்குவானா? ஹ்..ம்...யா அல்லாஹ்...உதவி செய்.

இப்பவும் அப்பப்ப அல்லாஹ்வைப் பற்றி ஏதாவது அவனுக்கு தோணினதைக் கேட்டுட்டு இருக்கிறான்..இங்கு ஸ்கை என்று அவனுக்கு நான் சொல்லியிருப்பது சொர்க்கம் ஒன்றைத்தான்... அவனுக்கு நரகத்தை இன்னும் சிறிது நாள் கழித்து அறிமுகப்படுத்தலாம்னு நினச்சிருக்கேன்.இப்போதைக்கு நல்ல பிள்ளையா இருந்தா அல்லாஹ் நமக்கு உதவி செய்வாங்கன்னும் சேட்டை பண்ணினா பூச்சாண்டி வந்து பிடிச்சுட்டு போய்டுவாங்கன்னும் சொல்லி வச்சிருகேன்... இது எவ்வளவு நாள் ஓடுதோ ஓடட்டும். ;)  இன்ஷா அல்லாஹ் என் மகன் பெரியவனாகும்போது இதைப் படிக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை .

Monday, February 7, 2011

கேட்டதும் கிடைத்ததும்

ஹுனைன் யுத்தத்தில் கிடைத்த போர் பொருட்களை மிக அதிகமாக இஸ்லாத்தில் இணைவதற்காகவும், இஸ்லாத்தில் இணைந்த புதிய முஸ்லிம்களுமான குரைஷி மக்களுக்கு சூரத்து தவ்பாவின் 60வது வசனத்திற்கு ஒப்ப அல்லாஹுடைய தூதர் அவர்கள் பிரித்துக் கொடுத்தார்கள். ஆனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அன்சாரிகளுக்கு 4 ஒட்டகங்கள் அல்லது அதற்கு சமமான ஆடுகள் கொடுக்கப்பட்டன. இதனால் அன்சாரி ஸஹாபிகள் மிகுந்த மன வேதனையடைந்தார்கள். “யுத்தங்கள் ஏற்படும் போது நாம்தான் அவரது தோழர்கள். யுத்தப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் பொழுது அவரது குடும்பத்தினரும் அவரது மக்களும் ஆவார். இது அல்லாஹ்வின் கட்டளையாக இருந்தால் நாம் ஏற்றுக் கொள்வோம், அது அல்லாது இது தூதருடைய உள்ளத்தில் எழுந்த எண்ணமாக இருந்தால், நமக்கும் சலுகை செய்யுமாறு நாம் அவரை வேண்டுவோம்” என்றனர் அன்ஸாரிகள்.

இதை அன்ஸாரிகளின் பிரதிநிதியான ஸஅத் இப்னு உபாதா (ரழி) அவர்கள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றார்கள். இதை கேட்ட நபி (ஸல்) “ஸஅதே! இந்த விடயத்தில் உங்கள் நிலை என்ன? என கேட்டப் பொழுது, அதற்கு ஸஅத் (ரழி) அவர்கள், நானும் அன்ஸாரிகளின் கருத்துடன் ஒத்து இருக்கிறேன்” என சொன்னார்கள். அதை கேட்ட முஹம்மது (ஸல்) அவர்கள் அவர்களை கைதிகளை அடைத்து வைத்திருந்த இடத்தில் அன்ஸாரிகளை ஒன்று கூட்டினார்கள்.

அவர்களிடம் வந்த நபி (ஸல்) அவர்கள், ஓ! அன்ஸாரிகளே! எனக்கெதிரான எண்ணங்கள் உங்கள் உள்ளங்களில் எழுந்துள்ளன என்பதை நான் அறிகிறேன் என்றவர்கள். உங்களை நான் தவறியவர்களாகக் கண்ட போது இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டவில்லையா? நீங்கள் ஏழைகளை இருந்தப் பொழுது இறைவன் உங்களை செல்வந்தராக்கவில்லையா? நீங்கள் ஒருவருக்கு ஒருவர் பகைமை பாராட்டியவர்களாக இருந்த உங்களை அல்லாஹ் உங்கள் இதய்ங்களை ஒன்றுபடுத்தவில்லையா? என கேட்டதும், அங்கு குழுமி இருந்த அன்ஸாரிகள். நிச்சயமாக அவ்வாறே! அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அன்பும் கருணையும் மிக்கவர்கள் என்றார்கள்.

அதை தொடர்ந்து அல்லாஹுடைய தூதர் கண்ணியமிக்க முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிகளை பார்த்து, என்னை எதிர்த்து பேசமாட்டீர்களா? என கேட்டார்கள். அதைக் கேட்டதும் அன்ஸாரிகள் கலக்கமுற்றனர். உங்களை எதிர்த்து நாங்கள் எப்படி பேச முடியும்? என்றார்கள்.

அதை கேட்ட நாயகம் (ஸல்) அவர்கள், நிச்சயமாக நீங்கள் விரும்பினால் உண்மையாகவே என்னைப் பார்த்து நீங்கள் இவ்வாறு கேட்கலாம்? அவமதிக்கப்பட்டவராக நீர் எங்களை வந்து சேர்ந்தீர், நாங்கள் உம்மை கவுரவித்தோம். துணையின்றி தனித்தவராக நீர் வந்தீர், நாங்கள் உமக்கு உதவி செய்தோம். வெளியேற்றப்பட்டவராக நீர் வந்தீர், நாம் உமக்கு அடைக்கலம் தந்தோம். நாம் உமக்கு ஆறுதல் தந்தோம் என நீங்கள் கேட்கலாம்.

மேலும் தொடர்ந்த அல்லாஹுடைய தூதர் அவர்கள், “ஓ! அன்ஸாரிகளே! நான் உங்களை உங்களது இஸ்லாத்தின் பொறுப்பில் விட்டுள்ள நிலையில், அல்லாஹ்வை அடிபணிய அவர்களது உள்ளங்களை இணங்கச் செய்யப் பயன்படுத்திய இவ்வுலகத்தின் அற்பப் பொருட்களுக்காக உங்கள் உள்ளங்கள் சஞ்சலப்படுகிறதா?

ஓ! அன்ஸாரிகளே! மக்கள் ஒட்டகங்களையும், செம்மறி ஆடுகளையும் அவர்களது வீட்டிற்கு எடுத்துச் செல்ல, நீங்கள் உங்கள் வீட்டிற்கு அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எடுத்துச் செல்வதில் திருப்தி இல்லையா? அன்ஸார்கள் ஒரு வழியிலும், மற்றவர்கள் வேறு ஒரு வழியிலும் சென்றால், உங்கள் நபியாகிய நான் அன்ஸாரிக்ள் செல்லும் வழியில்தான் செல்வேன். அன்ஸாரிகள் மீதும், அன்ஸாரிகள் மக்கள் மீதும், அவர்களது மக்களின் மக்கள் மீதும் அல்லாஹ் அருள் பாலிப்பானாக! என துஆச் செய்ததும், அங்கு கூடி இருந்த அன்ஸாரி ஸஹாபிகள் தம் தாடிகள் நனையும் வரை கண்ணீர் விட்டு அழுதார்கள். எங்களது பங்காகவும், எமது உடமையாகவும் அல்லாஹ்வின் தூதரைப் பெற்றுக் கொள்வதில் நம் முழு திருப்தி கொள்கிறோம் என்றார்கள். (ஆதாரம் இப்னு இஸ்ஹாக்)

சுப்ஹானல்லாஹ்..எப்படிப்பட்ட சூழ்நிலையை நபியவர்கள் எளிதில் சுமுகமாக்கிவிட்டார்கள்!.. இந்த ஹதீஸைப் படித்தவுடன் என் கண்களும் பனித்து விட்டன... இம்மையை விட மறுமையில் அதிக நன்மை கிடைக்க வேண்டும் என் நாம் விரும்பினாலும் நாம் துஆ செய்யும்போது இம்மையிலும் மறுமையிலும் நல்வாழ்விற்காக சேர்த்துத்தானே கேட்கிறோம்... ஆனால் அந்த அருமை அன்சாரிகள் மறுமையில் கிடைக்கும் நன்மை ஒன்றிற்காக நபியவர்கள் சொன்ன ஒரே காரணத்தை முழுமனதுடன்  ஏற்றுகொண்டார்கள்!... அவர்கள் கேட்டதோ இம்மைப் பொருட்களில் சலுகை.... ஆனால் கிடைக்கப்பெற்றதோ ஈடிணையில்லா மறுமையில் நற்பேறு... அவர்களை நினைத்தால் கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது.;)

கைகளில் எந்த வித உடைமையுமின்றி ஹிஜ்ரத் செய்த மக்கா வாசிகளுக்கு தாமாக மனமுவந்து இருக்க இடமும் உடுக்க உடையும் உண்ண உணவும் தந்து பேருதவி செய்தவர்கள் மதீனாவாசிகள்.

உலக வாழ்க்கைக்காக ஹராமான பொருட்களைகூட ஹலாலாக்க நினைக்கும் மக்கள் மத்தியில் ஹலாலான பொருட்களைக்கூட அல்லாஹ்விற்காகவும் அவனது தூதருக்காக விட்டுக் கொடுத்த அன்ஸாரிகள் மிக மிக சிறப்புகுரியவர்கள். அல்லாஹ் அவர்களுக்கு நல்லருள் பாலிக்கட்டும்.

இன்றைய உலகில் ஒருவருக்கு நாம் சிறு உதவி செய்தாலும் அதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யப்பட்டவரிடமிருந்தோ அல்லது அவர் மூலமாக மூன்றாவது நபரிடமிருந்தோ பிரதிபலன் எதிர்பார்ப்பது நம் அனைவர் மத்தியிலும் இயற்கையானது. அதையே கொஞ்சம் மாற்றி அந்த மூன்றாவது நபராக நாம் இறைவனையும் அவனிடமிருந்து நமக்கு கிடைக்கவிருக்கும் நன்மையையும் பிரதிபலனாக எதிர்பார்ப்போமாக! மதீனத்து அன்சாரிகளைப் போல் இஸ்லாத்திற்காக எதையும் துறக்கும் மனதை நமக்கு இறைவன் தருவானாக! ஆமீன்!

ஸஹீஹ் புகாரியில் : 3778, 3147

Sunday, January 30, 2011

பெண்ணுரிமை!


ஹ்க்கும்... வலைப்பூ ஆரம்பிச்சு எண்ணி மூணு மாசம் ஆகலை (அதென்ன மூணு மாசக்கணக்கு...முளச்சு மூணு இலை விடலைன்னு சொல்றதுல உள்ள அதே கணக்கு தான்...;)), அதுக்குள்ள பெண்ணுரிமை பேசற அளவுக்கு வந்தாச்சான்னு நீங்க நினைக்கிறத நானும் நினச்சேன்... அதுனால பெண்ணுரிமைப் பற்றி நான் எழுதப்போறதில்லை. ஏன்னா உலகத்தில் பெண்ணுரிமை பற்றி பெண்களுக்குத் தெரிந்ததை விட ஆண்கள் அதிகம் தெரிஞ்சு வச்சிருக்காங்க...

பெண்ணுரிமையைப் பற்றி பெண்கள் எதுக்கு தெரிஞ்சு வச்சிருக்காங்கன்னா அதை சமயத்துக்கு தற்காப்பு ஆயுதமா பயன்படுத்திக்கிறதுக்கு...
அதிகம் படிக்காத கிராமத்து பெண்கள் கூட பஞ்சாயத்து தலைவிகளாகவும் மகளிர் சுய உதவிக் குழு அமைத்தும்,இன்னும் பல நல்ல முன்னுதாரணங்களாகவும்  தங்களையும் தாம் சார்ந்த ஊரையும் ஓரளவுக்காவது முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்றாங்க... நகரங்கள்ல பிறந்து வளர்ற பெண்கள் கூட ஒரு ஸ்டேட்டஸ்ஸுக்காக பொறியியலோ மருத்துவமோ படிச்சுட்டு அதைப் பயன்படுத்திக்காம குழந்தைகுட்டி சமையல்னு செட்டிலாயிடுறாங்க... அவங்களுக்கு அப்படி வேலைக்குப் போற எண்ணம் இல்லைன்னா ஆர்ட்ஸ் அல்லது சயின்ஸ் டிகிரி படிச்சிருந்தா அந்த பொறியியல்,மருத்துவ படிப்பு கஷ்டப்பட்டு படிச்சு தாங்கள் சேர்ந்த கிராமத்தின் மற்ற மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமா இருக்க நினைக்கும் மாணவர்களுக்கு அதிகம் பயன்பட்டிருக்கும். ஏட்டுக்கல்வி கிடச்சிட்டா ஒரு பெண்ணுக்கு முழு சுதந்திரமும் தைரியமும் கிடச்சுடுமான்னா அதுவுமில்ல... அப்படியிருந்திருந்தா "பட்டதாரிப் பெண் தற்கொலை" போன்ற செய்திகளுக்கு இடமில்லையே!நகரத்தில் வாழ்றவங்களுக்கு பத்தோட பதிணொண்ணா தெரியுற அதே கல்லூரி படிப்பு கிராமத்தில் இருக்கிறவங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுக்கிறது. அதே அடையாளம் அவர்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் தைரியத்துடன் எதிர்கொள்ள உதவுகிறது. அதனால நான் என்ன சொல்ல வர்றேன்னா ...இருங்க இதையும் சொல்லி முடிச்சுடறேன்...

ஆண்கள் எதுக்கு பெண்ணுரிமையைப் பற்றி தெரிஞ்சுக்கறாங்கன்னா பெண்களிடம் தங்களோட எல்லை இதுவரைதான்..இதுக்கு மேல பேசினா அர்ச்சனை செயல்மூலமாவோ சொல்மூலமாவோ ஆரம்பிச்சுடும்னு அவங்க ஒதுங்கி தங்களுக்கு ஒரு தற்காப்பு ஆயுதமா பயன்படுத்திக்கிறாங்க... ;)

அதனால நான் என்ன சொல்ல வர்றேன்னா... என்னோட ஏட்டுக்கல்வி நம் நாட்டோட பெண்கல்வி சதிவீதத்தை உயர்த்திக்க மட்டுந்தாங்க உதவியிருக்கு:(... என் ஆ.கா. அவ்வளவு மோசமானவரான்னெல்லாம் நினச்சுடாதீங்க... யாருக்காக இல்லையோ, அடுத்த வேளை தைரியமா வீட்டுச் சாப்பாடு சாப்பிடணுன்றதுக்காகவாவது என்னோட உரிமைகள்ல மூக்கை நீட்டுறது கிடையாது... அப்பறம் என்னன்னு கேக்கறீங்களா? விஷயம் இதுதான்... என்னோட அஞ்சு வயசு பையன் கேக்கிற கேள்விகளுக்கு பதில் சொல்றதுக்கு நான் படிச்ச ஏட்டுக்கல்வி உதவலைன்னு சொல்ல வந்தேன்:(

போன தடவை ஊருக்கு போயிருந்தப்போ எங்க வீட்டுக்கு வந்தவங்க என் பையனைக் காட்டி 'இது உன் பையனா'ன்னு கேட்டாங்களாம்..நானும் 'ஆமா'ன்னு சொன்னேனாம்... 'நீ ஏன் ஆமான்னு சொன்னே... பாய்ஸ்செல்லாம் அப்பா பசங்க...கேர்ள்ஸ்தான் அம்மா பிள்ளைங்க'ன்னு அவன் பண்ண ஆராய்ச்சியைப் பார்த்து ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்...  என்னடா இது... பத்து மாசம் கஷ்டப்பட்டு சுமந்து பெற்று ராத்திரி பகல்னு பார்க்காம வளர்க்கிறோம்... ஆனா புகழெல்லாம அப்பாவுக்கா...பெண்ணுரிமை என்னாவறது:( ...எப்படி இவனை வழிக்கு கொண்டு வர்றது... அப்படீன்னு பயங்கரமா (அடிக்க வரக்கூடாது;)) யோசிச்சேன்... அப்பதான் தோணுச்சு... அவன்கிட்ட கேட்டேன்... எல்லா பேபீஸும் யார் வயிற்றிலிருந்து வற்றாங்க'ன்னு..அவன் 'அம்மா வயித்திலயிருந்து'ன்னு சொன்னான்... 'அப்ப பாய்ஸும் அம்மா பிள்ளைங்க தானே'ன்னு கேட்டேன்... திருப்தியான பதில் கிடைச்சதுனால அமைதியாயிட்டான்... அவங்க அப்பாவுக்குத்தான் கொஞ்சம் வருத்தம்;).

எனக்கு விடை தெரியாத ஒரு கேள்வி அவன் இன்னும் கேட்டுக்கிட்டு இருக்கான்... உதவுங்க.. பொதுவா அவன் வாங்கிக் கேக்கிற பொருள் அவசியமில்லாதது எதுவும் பிங்க் நிறத்தில் இருந்துச்சுன்னா 'அதெல்லாம் கேர்ள்ஸுக்குரியது'ன்னு சொன்னா திரும்பிக்கூட பார்க்க மாட்டான். சமீபத்துல பிங்க் நிறத்தில் ஒரு பென்சில் பாக்ஸ் அவனுக்கு ரொம்ப பிடிச்சுபோயிடுச்சு... அது கேர்ள்ஸுக்குரியதுன்னு சொல்லியும் 'அப்ப லேடீஸ் மட்டும் ஏன் ஜென்ட்ஸ் காரை ஓட்டுறாங்க'ன்னு ஒரு கேள்வி கேட்டான்... நானும் 'ஹலோ.. லேடீஸ் கார்,ஜென்ட்ஸ் கார்னு ஒண்ணும் கிடையாது... யார் வேணா எந்த கார் வேணா ஓட்டலாம்'னு சமளிச்சேன். அதுக்கு அவன் சொல்றான் ' அப்ப லேடீஸ் ஜென்ட்ஸோட பேண்ட்,ஷர்ட் போடுறாங்கள்ல... எனக்கும் இந்த கேர்ள்ஸ் பென்சில் பாக்ஸ் வாங்கித் தா'....அவ்வ்வ்... முடியலை...என்னை யாராச்சும்  காப்பாத்துங்களேன்...:(....அதாவது பெண்ணுரிமையைக் காப்பாத்துங்க....

Monday, January 24, 2011

திறந்து பார்..

இந்த வலன்டைன்ஸ் வலன்டைன்ஸ் டே ஒண்ணு வருஷத்துக்கு ஒருநாள் வரும் பாருங்க.... அந்த நாளுக்கு கொஞ்ச முன்னாடியே பள்ளி, கல்லூரி மாணவிகள் (மாணவங்க என்ன பண்ணுவாங்க நிஜம்மா தெரியாது:( )ஒரு தினுசா நடக்க (நடக்கன்னா காலால நடக்கறதில்லீங்க... பிஹேவியர சொன்னேன்)ஆரம்பிப்பாங்க... அவங்களுக்குள்ளேயே கிசுகிசுன்னு ஏதாவது பேசி சிரிச்சுக்கறது... பல சமயங்கள்ல ஒண்ணும் பேசாமலேயே சிரிக்கிறது... கர்ர்ர்ர்ர்...இவங்க நடந்துக்கறத பார்த்தா நாம ஏதோ பேக்கு மாதிரி இருக்கோமோன்னு நமக்கே ஒரு ஃபீலிங்கா இருக்கும்... அவங்க சிரிக்கும்போது நாம சிரிக்காம பைத்தியக்காரி (நோட் பண்ணுங்க.. சிரிக்கிறவங்க நார்மலா தெரிவாங்க... சிரிக்காத நாம் பைத்தியக்காரி மாதிரி தெரிவோம்) மாதிரி ஒரு குற்றவுணர்ச்சியோட உக்காந்திருப்போம்.:(

அதுவும் அந்த வலன்டைன்ஸ் டே வந்துச்சு...அவ்வளவுதான்... உலகத்துல என்னமோ அவங்க மட்டுமே இருக்கிறா மாதிரி ஒரு நினப்புல மிதப்பாங்க... அன்னிக்கு அவங்ககிட்ட நாம பேசறதே வேஸ்ட்... என்ன சொன்னாலும் கேக்காது...கேட்டாலும் சம்பந்தா சம்பந்தமில்லாம எதையாவது உளர்றது...உதாரணத்துக்கு... 'எடி... இந்த ஆஸிட்ல எதை ஆட் பண்ணினா பச்ச கலர்ல மாறும்?'னு கேட்டொம்னு வைங்க... 'இல்லடி..இந்த பச்ச ட்ரஸ் எங்க அப்பா வாங்கிக் கொடுத்தாங்க... அதான் இன்னிக்கு போட்டுட்டு வந்தேன்'னு சொல்வாங்க... நமக்குத் தலையும் புரியாது..வாலும் புரியாது... நாம என்ன கேட்டோம்னே மறந்துடும்....:(

இப்படித்தான் நான் கல்லுரியில படிக்கும்போது அதே வலன்டைன்ஸ் டே வந்துச்சு... நாமளும் அதே வெகுளித்தனத்தோடயே (நம்புங்க...:)) இருந்தோம். ஆனா நம்மள மாதிரி எல்லாரும் பேக்காவே இருப்பாங்களா? எங்க குரூப்ல ஒரு பொண்ணுக்கு ஒரு ஸீனியர் பையன் கிஃப்ட் கொடுத்தான். எங்க காலேஜ் வாத்தியாரெல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்டு... ஸ்ட்ரிக்டு... பசங்க கூட பொண்ணுங்க பேசவே கூடாது.... வகுப்பு முடியுற சமயம் பெண்களுக்கு 5 நிமிஷம் முன்னாடியே பெல் அடிச்சுடுவாங்க... பொண்ணுங்க ரெஸ்ட் ரூமுக்குபோனதுக்கப்புறம் லாங் பெல் அடிப்பாங்க... அப்பதான் பசங்க வகுப்பறையை விட்டு வெளிய வரணும்.

அவ்வளவு கண்டிப்புக்கு நடுவுலயும் இந்த பரிமாற்றமெல்லாம் நடக்குது...:() எவ்வளவு தெனாவட்டு... இவங்கெல்லாம் செய்றத பார்த்தா நமக்குத்தான் பகீர்னு இருக்கும்.அதுனால கிஃப்ட் கொடுத்த பையன்கிட்ட அவ ஒண்ணும் சொல்ல முடியாம கொடுத்த வேகத்தில அவளும் வாங்கிட்டு வந்துட்டா...
முதல்ல ஆங்கிலப்பாடம்..வாத்தியார் எங்களுக்கு முன்னாடியே வந்து காத்திட்டிருக்காங்க... இந்த வாத்தியாருக்கு ஒரு பழக்கம்... வகுப்பு எடுக்க ஆரம்பிக்குமுன்ன கொஞ்சம் வாழ்க்கை தத்துவ வகுப்பெடுப்பாங்க... நமக்கு அந்த நேரம் ஏதோ ஓய்வு நேரம் மாதிரி... அடுத்த வகுப்புக்கு படிக்க வேண்டியத அப்பதான் படிக்கத் தோணும்... இந்த மாதிரி வேலைய செய்றதுக்கு அந்த 10 நிமிஷத்த உபயோகப்படுத்திக்குவோம்.

அன்னிக்கு எங்க தோழிக்கு வந்த கிஃப்ட் கையில இருந்ததால அந்த பொன்னான நேரத்தை அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க உபயோகப்;)படுத்திக்கலாம்னு முடிவு செஞ்சாச்சு... கிஃப்ட் வாங்கினவ வேற பெஞ்ச்... மீதி நாங்க அஞ்சு பேரும் கிஃப்ட கையில வச்சுக்கிட்டு திறக்கவா வேண்டாமான்னு பட்டிமன்றமே நடத்திட்டுருக்கோம்... ஒருத்தி திறக்கக்கூடாது..வாத்தியார்கிட்ட மாடினோம் தொலஞ்சோம்னு பூச்சாண்டி காட்றா... நானும் இன்னொரு தோழியும் திறந்தேயாகணும்னு ஒத்தக்காலில் பெஞ்சில (ஹி..ஹி) உக்காந்துட்டிருக்கோம்... ரெண்டு நிமிஷமாயிடுச்சு... இன்னும் கிஃப்டைத் திறந்த பாடில்லை.

திடீர்னு வாத்தியார் "திறந்து பார்..திறந்து பார்" னு சொல்றாங்க... நிமிர்ந்து பார்த்தா எங்க அஞ்சு பேரையும் பாத்துட்டிருக்காங்க... அப்பா.... பகீர்னு ஆயிடுச்சு... ஆகா... மாட்டிக்கிட்டோம்... இன்னிக்கு அவ்வளவுதான்... அஞ்சு பேரும் எந்திரிக்க எத்தனிக்கிறோம்...அவங்க கேஷுவலா அடுத்த பக்கமும் பார்த்து அதே "திறந்து பார்" னு கன்டின்யு பண்றாங்க... அப்பதான் ந்ம்ம மண்டைக்கு புரியுது... அவர் ஏதோ மனசைத் திறந்து பார்னு ஏதோ தத்துவத்தை பொழிஞ்சுட்டு இருந்திருக்கார்னு... அப்பா... போன உசுரு திரும்பி வந்துது... அந்த பிப்ரவரி 14 மட்டும் எந்த தப்புமே பண்ணாம பேயறஞ்ச மாதிரி நாங்க அஞ்சு பேரும் திரிஞ்சது வேற கதை... (நாங்கெல்லாம் ரொம்ப வெகுளி... சின்ன அதிர்ச்சியைக் கூட தாங்க முடியாத இதயம் படச்சவங்க...:() ...)


நல்லா யோசிச்சு  நல்ல
பதிலைச் சொல்லுங்க....
 (எவ்வளவு பெரிய அருவாளை உங்க கழுத்துல போட்டாலும் சரி... நாம கஷ்டப்பட்டு டைப் பண்ணினத மொக்கைனு நம்ம வாயால சொல்லிடக்கூடாதுன்னு ஒரு தீர்மானத்தோட தான் ப்ளாகுலகத்துக்கே வந்தோம்ல..;)))அப்பாடா...  இந்த பதிவைப் போட்டதுக்கப்புறந்தான் வலைப்பூல எழுதறதுக்கு எனக்கு தகுதி வந்தா மாதிரி ஒரு பீலிங்கு;)..நீங்க என்னா நினைக்கிறீங்க? ?? 

Monday, January 17, 2011

பூமியில் கிடைக்கும் அமுது


யம்மா... தலை இடிக்குதும்மா!
 உலகில் கிடைக்கும் எந்த வித பாலுக்கும் ஈடிணையில்லாததென்றால் அது தாய்ப்பால்தான். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதைக் குடிக்காமல் வளரும் குழந்தைகளை விட அறிவாளிகளாக வளருவதாக் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்(ஐ..அப்ப நானும் அறிவாளிதான்னு விஞ்ஞானிகளே சொல்றாங்க...). பல வித நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறுகிறார்கள். எதிர்காலத்தில் எடை அதிகரிப்பதும்(reduces obesity) ஓரளவு மட்டுப்படுகிறது. ஆரம்பம் முதலே எனக்கு இந்த தாய்ப்பாலைப் பற்றிய வியப்பு அதிகமுண்டு. எப்படி ஒரு பெண்ணின் உடலில்  இத்தனை அதிசயங்களை உள்ளடக்கிய தாய்ப்பால் உண்டாகிறது; எந்த சக்தியுமில்லாத பச்சிளங்குழந்தையை அது எப்படி இவ்வளவு பலமுள்ளதாக மாற்றுகிறது; இப்படியெல்லாம் விஞ்ஞானிகள் செஞ்சு வச்ச ஆராய்ச்சியை நாம மேலும் ஆயலாமேனு ஸாரி (இன்னிக்கு மீன் ஆய்ஞ்ச ஞாபகத்தில சொல்லிட்டேன்)... ஆய்வு பண்ணலாமேன்னு தோணுச்சு..

குழந்தை வயிற்றில் உருவாகும்போதே அதற்கு உணவாகிய தாய்ப்பால் உருவாகத் தேவையான மாற்றங்கள் தாயின் உடலில் ஆரம்பிக்கின்றன. சொல்லப்போனால் இது எப்போ ஆரம்பிக்கிறது தெரியுமா? பெண் தன் தாயின் வயிற்றில் ஆறு மாதமல்ல...ஆறு வாரக் கருவாக இருக்கும்போதே கருவின் மார்பில் பால் சுரப்பிகள் உருவாகிவிடுகின்றன. எவ்வளவு பெரிய அற்புதம்! பெண்ணை இறைவன் எப்படி, எப்பொதே தாய்மைக்கு தயார்படுத்துகிறான்?!

தாயின் உடலில் பால் சுரப்பிகளின் அமைப்பு கருவுற்ற ஆறேழு மாதங்களில் முழுமையடைந்து விடுகின்றது.  இது எதற்கெனில் குறை மாதத்தில் குழந்தை பிறந்தால் சமாளிப்பதற்காக!

மார்பகத்தின் நிறம் மாறுதல், அதைச் சுற்றிலும் ஒரு வித வழுவழுத்தன்மை ஏற்படுதல் போன்றவை வெளியே தெரியும் மாற்றங்கள். மார்பகத்தில் ஏற்படும் அந்த சிறு நிறமாற்றத்திற்குக் கூட காரணம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.(பிறந்த சில நாட்களான) குழந்தைக்கு பாலூட்ட மார்பின் அரியோலா எனப்படும் (குழந்தையின் வாயும் இந்த அரியோலாவும் நேருக்கு நேராக இருக்க வேண்டும்)இடத்திற்கருகே கொண்டு செல்லும் போது மார்பின் நிறத்தைக் கண்டவுடன் அது தன் கண்களை மூடி பந்திக்குத் தயாராகிறது. வழுவழுப்புத்தன்மை மார்பகத்தில் வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

இனி மார்பகத்தின் உள்ளே ஏற்படும் மாற்றங்கள்:
குழந்தைக்கும் தாய்க்கும் பாலமாகச் செயல்படும் ப்ளசெண்டா உருவாகும்போதே தாயின் ஹார்மோன்களாகிய எஸ்ட்ரஜன் மற்றூம் ப்ரஜஸ்ட்ரான் ஆகியவற்றின் அளவு மாறுகிறது. தாய்ப்பால் சுரப்பதில் இவ்விரு ஹார்மோன்கள் பெரும் பங்காற்றுகின்றன. குழந்தை வயிற்றிலிருக்கும்போது கடுமையாக உழைக்கும் எஸ்ட்ரஜன் மற்றும் ப்ரஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள்  குழந்தை பிறந்தவுடன் தங்களது பணியை ஆக்ஸிடாக்ஸின் மற்றும் ப்ரோலாக்டினிடம் ஒப்படைத்து ஒதுங்கிக் கொள்ள ஆரம்பிக்கின்றன. ப்ரோலாக்டின் அதிகளவில் மார்பில் பால் சுரக்கச் செய்கிறது. ஆக்ஸிடாக்ஸின் அதை குழந்தைக்கு ஏதுவாக மார்பகத்திற்கு கொண்டு வந்து "let-down" reflex எனப்படும் பாலூட்டியே ஆக வேண்டும் எனும் உணர்வைத் தாய்க்குத் தருகிறது.

கொலஸ்ட்ரம்:
தாய்ப்பால் என்றாலே மஞ்சள் நிற அடர்த்தி மிகுந்த கொலஸ்ட்ரம் பற்றி சொல்லாமலா? குழந்தை பிறந்த முதல் மூன்று நாட்களுக்கு சுரக்கும் இந்த கொலஸ்ட்ரத்தில் இருக்கும் சத்துக்களைச் சொல்லி முடியாது. அதிகளவு ப்ரோட்டின் கொண்ட கொலஸ்ட்ரம் குறைந்த அளவு கொழுப்பும் சர்க்கரைஉம் கொண்டது.குழந்தை தன் சுய எதிர்ப்பு சக்தியில் முழுமையடையும் வரை பலப் பல வித நோய்களிலிருந்து இந்த கொலஸ்ட்ரமே பாதுகாக்கிறது. மெகோனியம் எனப்படும் குழந்தையின் முதன்முதல் கழிவு (அதாங்க...ஆய்) வெளியேற உதவுகிறது. பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை வராமல் தடுக்க அல்லது குறைக்கவும் செரிமான உறுப்புகள் நன்கு வளர்ச்சியடையவும் உதவுகிறது.

வேறென்ன இருக்கு?!:
தாய்ப்பாலில் 0.8% -0.9% ப்ரோட்டினும் 4.5% கொழுப்பும் 7.1% கார்பொஹைட்ரேட்டும் 0.2% மினரல்களும் இருக்கின்றன.
ப்ரோட்டின் குழந்தைக்கு எதிர்காலத்தில் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

நினைத்தாலே இனிக்கும்:
குழந்தைக்குப் பசிக்குமோ என்று தாய் நினைத்தாலே பால் சுரக்க ஆரம்பிக்கிறது. குழந்தைக்கு எவ்வளவு பாலூட்டப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு பால் சுரக்கிறது. சிலர் பால் சுரக்கவில்லை... என்றெல்லாம் சொல்வார்கள்...அதற்குரிய காரணம் நாம் செய்யும் தவறில்தான் இருக்கிறதே ஒழிய இயற்கையின் மீது எந்த தவறுமில்லை. பால் சரியாக சுரக்காததற்கு காரணங்களாக பாலூட்டும்போது குழந்தையைச் சரியாக ஏந்தாமலிருப்பது, குழந்தை சரியாக குடிக்காமலிருப்பது, தாய் ஏதாவது அதிக வீரியமுள்ள மருந்து உட்கொள்வதின் அல்லது உட்கொண்டதின் பக்கவிளைவு ஆகியவையே தவிர, பால் சுரக்க உதவும் அமைப்பு குறையில்லாமலேயே படைக்கப்பட்டிருக்கிறது.

சும்மா வச்சு வச்சு குடிக்கலாம்:
தாய்ப்பலில் என்னை ஈர்த்த மற்றொரு சாராம்சம் அதை பம்ப் செய்து குளிரூட்டியில் சேமித்து வைத்து உபயோகப்படுத்தலாம் என்பது தான்.
அறை வெப்பத்தில் ஆறிலிருந்து எட்டு மணிநேரமும் குளிரூட்டியில் 4°C என்றால் ஐந்து நாட்களும் -15°C என்றால் இரண்டு வாரங்களும் இரண்டு கதவுகள் கொண்ட குளிரூட்டியில் -18°C என்றால் மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை வைத்திருந்து உபயோகப்படுத்தலாம்.
எப்பொழுதும் ஃப்ரெஷ்:
தாய்ப்பால் மட்டுமே ஊட்டப்படும் குழந்தைக்கு தாகமெடுக்காது. அதனால் தண்ணீர் புகட்ட தேவையில்லை. குழந்தைக்கு எந்தவித உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் தாய்ப்பாலை நிறுத்தக்கூடாது. அதிலேயே அந்த நோய்க்கான மருந்திருக்கலாம். அப்படியே குழந்தை சிறிது நாள்களுக்கு பால் குடிக்கவில்லையென்றால் தாய்ப்பால் சுரப்பது நின்றுவிடாது. மறுபடி தாய்ப்பாலூட்ட ஆரம்பிக்கும்போது மீண்டும் ஃப்ரெஷாகவே தரும் ஆற்றலுடையது தாயின் உடல். எந்த ஆறும் வற்றலாம் தாய்ப்பாலாறு குழந்தை குடிக்க குடிக்க வற்றாத ஆறு என்றே சொல்லலாம்.

இங்கு கூறப்பட்ட தகவல்கள் பெரும்பாலும் தாய்ப்பால் மட்டுமே புகட்டப்படும் குழந்தைகளுக்கே பொருந்தும்.

ஷ்..அப்பா.... இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்... குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் புற்றுநோயிலுருந்து பாதுகாப்பு போன்ற பல நன்மைகளைக் கொடுக்கும்  தாய்ப்பால் பற்றி நிறைய கண்டுபிடிச்சு வச்சிருக்காங்க... நான் முழு நேர விஞ்ஞானியாகும்போது அவங்களோட ஆராய்ச்சி முடிவுகளை இன்னும் கொஞ்சம் துருவிக்கலாம்னு (அட.. ஆமா..தேங்காய் துருவணும்..:( ) இத்தோட முடிச்சுக்கறேன்.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது தாய்ப்பாலுக்கு மட்டும் பொருந்தாதோ?!

Tuesday, January 11, 2011

ஒரு தாயின் டைரி

ஆமினா 2010 டைரி தொடர்பதிவு எழுத அழைத்திருந்தாங்க.. கொஞ்ஞ்ஞ்சம் லேட்டாயிடுச்சு... உண்மையைச் சொல்லணும்னா போன வருஷம் எனக்கு என்ன நடந்துச்சுன்னு யோசிக்கத்தான் இவ்வளவு காலமாச்சுன்னு வச்சுக்கலாம்.

ஜனவரி:

மகனுக்கு பள்ளி அட்மிஷன் கிடைக்க கேட்ட ப்ரார்த்தனைக்கு நல்லாவே பலன் இருந்தது... அதிகம் சிரமப்படாமல் அப்ளை செய்திருந்த முதல் மற்றும் ஒரே பள்ளியிலேயே அனுமதி கிடைத்தது. நேர்முகத்தேர்வில் எல்லா கேள்விகளுக்கும் அழகாக பதில் சொல்லிக் கொண்டிருந்தவனிடம் அத்தோடு விட்டிருக்கலாம்; அந்த பள்ளியின் பெயரென்ன என்று பள்ளி முதல்வர் அவனிடம் கேட்க கொஞ்சமும் யோசிக்காமல் அழகாக வேறு பள்ளியின் பெயரைச் சொல்லியது மறக்க முடியாதது. பெற்றோர் பெயருக்கு முன்னால் Mr & Mrs. சேர்த்து கூறிய ஒரே மாணவன் நீதான் என்று அவர் கூறியதும் நினைவிலிருந்து நீங்காதது.

பிப்ரவர் & மார்ச்:

இந்த இரண்டு மாதங்களும் ஒரு பெரிய கண்டமாகவும் இப்ப் நினைத்தாலும் கலக்கத்தை உண்டாக்குவதுமாக அமைந்துவிட்டன. 'கவலைப்படாதே..நான் உனக்காக, உன் வலியை லேசாசாக்கி வைக்க இறைவனிடம் துஆ செய்தேன். தைரியமாக இரு' என்று என் கணவர் சொன்னபோது அவருடைய ஆறுதல் எனக்கு கொஞ்சம் பயம் நீக்கியது. அம்மாவிடம் போன் செய்து கவலைப்பட்டு அவரும் ஆறுதலளித்தது இன்னும் கொஞ்சம் பயத்தை விலக்கியது. மேட்டர் இதுதான்... ஒரு பல்லுக்கு வேர் சிகிச்சைக்குச் (Root canal) செல்லவேண்டியிருந்தது. ஒவ்வொரு அமர்தலுக்கும் நாள் நெருங்க நெருங்க மூடு மாறும். மற்ற வேலைகள் எப்பவும் போல் செய்து கொண்டிருந்தாலும் முகத்திலும் மனதிலும் வருத்தம் மேலோங்கியிருக்கும்...ஹ்.ம்..எவ்வளவோ பேருக்கு எவ்வளவோ கஷ்டம் இருக்கு...நம் கஷ்டம் அவையெல்லாவற்றையும் விட தூசு என்று நினைத்ததுண்டு.. ச்ச ..ச்ச..வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவங்க நான்..ஹி..ஹி..

ஏப்ரல்:

மகனுக்கு பள்ளி ஆரம்பமானது. அத்தனை நாளும் இஷ்டம் போல் தூங்கி எழுந்து விளையாடி இருந்தவனுக்கு அதிகாலையில் எழுந்து கிளம்புவது அவ்வளவு கஷ்டமாயிருந்தது..அவனைக் கிளப்புவது எனக்கு அதை விட கஷ்டமாயிருந்தது. நிறைய அம்மாமார்கள் மகன்/மகள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததும் வீடே வெறிச்சொடி இருப்பதாக உணர்வதாக சொல்வார்கள். எனக்கு அப்படியொன்றும் தோணவில்லை. ஆனால் என் மகன் என்னை ரொம்பவே மிஸ் பண்ணியது அவனுடைய பேச்சிலிருந்து தெரிந்தது. முதல் நாள் பள்ளி சென்று வந்தவனிடம் இன்னிக்கு எல்லா பிள்ளைகளும் என்ன செய்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவன் ' எல்லாரும் அழுதோம்' என்று அவ்வளவு சோகத்துடன் சொல்லியது சிரிப்பை வரவழைத்தாலும் என்னைப் பிரிந்ததில் அவனுக்கு இருந்த வருத்தம் எனக்கும் கொஞ்சம் தொற்றியது.

மே:

சொல்லும்படியா எதுவும் நடந்ததா ஞாபகமில்லை... உறவினரது திருமணம் நடந்தது... மகிழ்ச்சியாக கழிந்தது.

ஜூன்:

அடுத்த மாதம் கோடை விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் திட்டமிருந்ததால் அந்த 'ஊருக்கு போகும் மூடு' வந்துவிட்டது. வீட்டில் எதுவுமே செய்ய ஓடாது. ஊருக்கு பெட்டி கட்டுவதிலேயே (முக்கியமா ஷாப்பிங்) மனமிருக்கும். என்ன வாங்குவது...அதைப் பெட்டியில் வைத்து கட்டுவது (அடைப்பது) என்று 10,20 நாள் ஓடிவிடும். அப்படியே நாமளும் புதுசா உடை வாங்கிக்கலாம்.  ஷாப்பிங்கைக் காரணம் காட்டி உணவகத்தில் சாப்பிடுவது என்று நாட்கள் பறந்துவிடும்.

ஜூலை:

ஊருக்குப் போய் இறங்கியாச்சு. ஊருக்கு போவது என்றாலே என் ரத்த சொந்தங்களைப் பார்ப்பதில் தான் எனக்கு அதிகம் மகிழ்ச்சி. சித்தி வீடு, மாமா வீடு என்று நல்ல அரட்டை. பள்ளி, கல்லுரி தோழிகளுடன் நேரில் மற்றும் போனில் சந்திப்பு. பல நல்ல விஷயங்கள் நிறைவேறின. ஜூலையில் இங்கிருக்கும் கொளுத்தும் வெயிலுக்கு நேரெதிராக ஊரில் நல்ல வானிலை. வெயிலுமில்லாத, மழையுமில்லாத நல்ல குளு குளு வானிலைக்காவே இனி ஊருக்கு ஜூலை, ஆகஸ்ட்டில் தான் செல்ல வேண்டுமென நினைத்து கொண்டேன்.

ஆகஸ்ட்:

ஊரிலிருந்து வந்த களைப்பு. (ஊரில என்னவோ செங்கல் தூக்கி கட்டுமான வேலை பார்த்த மாதிரி கொஞ்சம் அல்டாப்பு பண்ணிக்கறது). இங்கு வந்ததும் ஊரில் உள்ள நினைவுகள் ரொம்ப அதிகமாக இருக்கும்.
ஊரிலிருந்த வானிலையில் இவ்வளவு நாள் இருந்துவிட்டு இங்குள்ள கொளுத்தும் வெயிலுக்கும் உடலும் மனமும் ஒத்துழைக்க கொஞ்ச நாளாகின. அப்படியே ரமழான் ஆரம்பமாகிவிட்டது. கொஞ்சம் தூக்கம், குரான் ஓதுதல், தொழுகை, சமையல், தராவீஹ் என ரமழான் கழிந்தது.

செப்டம்பர்:

நோன்பு தொடர்ந்து பெருநாள் வந்தது. வழக்கம்போல் இந்த பெருநாளும் நல்லபடியாக அமைந்தது. அடுத்த நான்கு நாட்களில் பள்ளி ஆரம்பம். மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்து மகனை பள்ளி செல்லும் மூடிற்கு கொண்டு வந்தாயிற்று.

அக்டோபர்:

ம்.ம்..அல் அய்னிலிருக்கும் ஹிலி ஃபன் சிட்டி சென்றிருந்தோம். இதுபோல் சுற்றுலா செல்லுவதில் மொத்த உற்சாகத்தில் நமக்கு 25% என்றால் மகனுக்கு 75%. இவ்வளவு என்று சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷமாக அனுபவித்தான். அன்று எடுத்த படங்களையும் வீடியோக்களையும் எத்தனை முறை பார்த்தான் என்று சொல்ல முடியாது. அந்த வீடியோக்களிலுள்ள வசனங்களனைத்தும் எனக்கும் என் கணவருக்கும் மனப்பாடமாகிற அளவுக்கு பார்த்தும் அவனுக்கு சலிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் புதியதாய்ப் பார்ப்பது போல் வீடியோக்களைப் பார்க்கும் போது சில நேரங்களில் கோபம் வந்தாலும் அவனை ஓரளவுக்கு மேல் கண்டிக்க முடியவில்லை. அவனுக்காவே இது போல் சுற்றுலா அடிக்கடி செல்ல வேண்டுமென நினைக்கிறேன்.

நவம்பர்:

ஹஜ்ஜு பெருநாளை வழக்கம் போல் உறவினர்களுடன் சந்தோஷமாக கொண்டாடியாயிற்று.

அதுவரை ப்ளாக்குகளுக்குச் சென்று பின்னூட்டம் மட்டுமளித்து கொண்டிருந்தேன். நாமும் ஒன்று துவங்கலாம் என தோன்றியது இந்த மாதத்தில்தான். என் ப்ளாக்கை நினைத்து என்னைத் திட்ட நினைத்தால் இந்த மாதத்தைத் திட்டிக்கொள்ளவும். ப்ளாக் தொடங்குவது எப்படி என்று நெட்டில் தேடுவேன். ஆனால் அந்த வேலையைச் செய்யாமல் பிறரது ப்ளாக் சென்று படிப்பதற்கும் பின்னூட்டமிடுவதற்குமே நேரம் சரியாக இருந்தது. சரி..நாளை பார்க்கலாம்..நாளை பார்க்கலாம் என்று கழிந்தது.

டிசம்பர்:

ஒரு வழியாக ப்ளாக் ஆரம்பித்தேன். என்ன எழுதுவது என்று ஒரு நிர்ணயமெல்லாம் செய்யவில்லை. உபயோகமான தகவல்கள் எழுதிக்கலாம்னு ஒரு ஒரு...என்ன சொல்வது...ஒரு நல்லெண்ணத்தில் தொடங்கியாச்சு. ப்ளாக் ஆரம்பிக்க கொஞ்சம் திணறினேன் (இதெல்லாம் வெளியே சொல்லக்கூடாதோ?). blogger.com திறந்தால் முழுவதும் அரபியில் இருந்தது. திக்கித் திணறி முழுவதும் தமிழில் தொடங்கியாச்சு. இப்ப என்னடான்னா டாஷ்போர்டில் சில தமிழ் வார்த்தைகளும் புரியாமல் ப்ளாக் அந்தரத்தில் தொங்கிக்கிட்டிருக்கு. கூடிய சீக்கிரத்தில் இழுத்துப் பிடித்து வைக்கணும். அதுக்கு உங்க எல்லாரோட உதவி வேண்டும்.

Sunday, January 9, 2011

குழந்தைப் பேச்சு-2!

பிறந்த குழந்தைகள் பேசியதாக இஸ்லாமிய வரலாற்றில் கூறப்படும் இரண்டு ஆதாரங்களைப் பார்த்தோம். இப்போ மூன்றாவது ஆதாரம்:


ஒரு தாய் தன் குழந்தைக்கு பாலூட்டி கொண்டிருக்கும்போது ஒரு மனிதர் ப்ட்டாடையணிந்தவராக விலையுயர்ந்த ஒட்டகத்தில் செல்வதைப் பார்க்கிறாள். அப்பொழுது அவள் இவ்வாறு இறைவனிடம் ப்ரார்த்திக்கிறாள். 'இறைவா! என் குழந்தையையும் இவரைப்போல் ஆக்குவாயாக!'. அதைக் கேட்ட அக்குழந்தை பால் குடிப்பதை நிறுத்திவிட்டு 'இறைவா! தயவுசெய்து என்னை இம்மனிதனை போல் ஆக்கிவிடாதே' என்று சொல்லிவிட்டு பால் குடிப்பதைத் தொடர்கிறது.


அத்தாய் பின் சிறிது நேரத்தில் ஒரு அடிமைப்பெண் கொடுமைப்படுத்தப்பட்டு தெருவில் இழுத்துச் செல்லப்படுவதைக் காண்கிறாள். கண்டவுடன் 'இறைவா! என் குழந்தையை இவள் போல் ஆக்கிவிடாதெ!' என்று வேண்டுகிறாள். உடனே அக்குழந்தை பால் குடிப்பதைய நிறுத்திவிட்டு 'இறைவா! என்னை இந்த பெண்ணைப் போல் ஆக்குவாயாக!' என்று சொல்லிவிட்டு திரும்பவும் பால் குடிக்கிறது.


இதைக் கேட்ட அத்தாயானவள் ' உன்னைப் பணக்காரனாக ஆக்க இறைவனிடம் வேண்டும்போது மறுத்த நீ இந்த அடிமையைப் போல் ஆக வேண்டுகிறாயே! ஏன்' என்று தன் குழந்தையிடம் கேட்கிறாள். அதற்கு அக்குழந்தை ' பட்டாடை உடுத்தி வந்த மனிதன் மிகவும் மோசமான குணங்களைக் கொண்டவன். அதனால் இறைவனிடம் அந்த மனிதனைப் போல் ஆவதிலிருந்தும் பாதுகாவல் தேடினேன். அந்த அடிமைப் பெண் மேல் மக்கள் அவள் செய்யாத அவதூற்றைக் கூறினார்கள். அவள் மிகவும் நல்ல குணங்களைக் கொண்டவள். அதனால் அவளைப் போல் நல்ல குணங்களை எனக்குத் தருமாறு இறைவனிடம் வேண்டினேன்' என கூறுகிறது.

இந்த ஹதீஸின் மூலம் கிடைக்கப் பெறும் அறிவுரை:

மனிதர்களை அவர்களின் தோற்றத்தைக் கொண்டு எடைப் போடக்கூடாது.


இந்த மூன்று ஆதாரங்களுமே இஸ்ராயீல் மக்களிடையே நிகழ்ந்தவை என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Monday, January 3, 2011

குழந்தைப் பேச்சு!

சில நாட்களுக்கு முன் இந்த ஹதீஸை வாசிக்க நேர்ந்தது..அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

உலகில் மூன்று குழந்தைகள் பேசியதாக இஸ்லாமிய வரலாறு கூறுகிறது. அதில் முதலாவது ஆதாரம் ஈஸா நபி அவர்களைப் பற்றியது. மர்யம் நபி அவர்களுக்குப் பிறந்த குழந்தையை ஊரார் தூற்றியபோது ஈஸா நபி அவர்கள் அவர்களின் களங்கத்தைத் துடைக்கவும் அவர்களின் நபித்துவத்தை எடுத்துரைக்கவும் பேசிய வரலாறு அனைவரும் அறிந்ததே.

இரண்டாவது ஆதாரமானது ஜுரைஜ் என்பவரின் வாழ்வில் நடந்தது. இவர் தன் வாழ்வில் இறைவழிபாட்டை மட்டுமே எடுத்து கொண்டு அதிலேயே தன் வாழ்வைக் கழித்தவர்.

ஒரு நாள் அவரது தாயார் அவருடைய வீட்டுக்கு வந்து அவரை அழைக்கிறார். ஜுரைஜோ இறை வழிபாட்டில் இருக்கிறார். அதை அவரது தாய் அறியவில்லை.ஜுரைஜ் தன் மனதில் "என் இறைவா..நான் வழிபாட்டில் இருக்கும்போது என் தாய் அழைக்கிறாரே" என்று நினைத்துவிட்டு தன் தொழுகையைத் தொடர்கிறார். அவரது தாய் போய் விடுகிறார். மறுநாளும் வந்து அவரது தாயார் ஜுரைஜை அழைக்கிறார். அப்போதும் அவர் இறை வழிபாட்டில் இருக்கிறார். ஜுரைஜ் தன் மனதில் "என் இறைவா..நான் வழிபாட்டில் இருக்கும்போது என் தாய் அழைக்கிறாரே" என்று நினைத்துவிட்டு தன் தொழுகையைத் தொடர்கிறார். அவரது தாய் அறியவில்லை. அவர் போய் விடுகிறார்.

மூன்றாவது நாளும் வந்து ஜுரைஜை அழைக்கிறார். அப்போதும் அவர் இறை வழிபாட்டில் இருக்கிறார். அதை அவரது தாய் அறியவில்லை. ஜுரைஜ் தன் மனதில் "என் இறைவா..நான் வழிபாட்டில் இருக்கும்போது என் தாய் அழைக்கிறாரே" என்று நினைத்துவிட்டு தன் தொழுகையைத் தொடர்கிறார். இப்போது அவரது தாய் "என் இறைவா... விபச்சாரியின் முகத்தில் விழிக்காமல் இவனை மரணமடையச் செய்யாதே" என்று கூறுகிறார்.

பின் மெல்ல மெல்ல ஜுரைஜின் வழிபடுதல் இஸ்ராயீலின் மக்களின் மத்தியில் பரவுகிறது. அங்கு வசிக்கும் ஒரு விபச்சாரி அவ்வூர் மக்களிடம் ' நீங்கள் அனுமதித்தால் ஜுரைஜை என்னால் தீங்கின் பக்கம் அழைத்து காட்டுகிறேன்' என்று கூறுகிறாள். அவள் ஜுரைஜிடம் போய் அவரது கவனத்தைத் தொழுகையிலுருந்து திருப்ப எவ்வளவோ முயன்றும் தோற்கிறாள். அதற்குப் பின் அவளுக்கும் அங்கிருக்கும் ஒரு ஆடு மேய்ப்பாளனுக்கும் பிறந்த குழந்தையை ஊரார் முன் காட்டி அது தனக்கும் ஜுரைஜுக்கும் பிறந்த குழந்தை என கூறுகிறாள். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரது வழிபாட்டுத்தலத்தை அழித்து அவரையும் அடிக்க ஆரம்பிக்கின்றனர். அவர்களின் மாறுதலான நடவடிக்கைக்கு காரணமென்ன என்று அவர் மக்களிடம் கேட்கையில் அவர்கள் அவ்விபச்சாரி சொல்லியதை அவரிடம் சொல்கின்றனர். அவர் அகுழந்தையைக் கொண்டு வரச் சொல்கிறார். அகுழந்தை கொண்டுவரப்பட்டதும் அவர் இறைவனைத் தொழுது உதவி தேடுகிறார். பின்னர் அக்குழந்தையைத் தன் கையில் தூக்கி "குழந்தையே, உன் தகப்பன் யார்" என கேட்கிறார். அக்குழந்தையும் இன்னார் என அந்த ஆடு மேய்ப்பவனைப் பற்றி கூறுகிறது. இதைக் கேட்ட மக்கள் தங்கள் தவறை எண்ணி வருந்தி அவருடைய வழிபாட்டுத்தலத்தை மீண்டும் எழுப்புகின்றனர்.

இந்த ஹதீஸ் முஹம்மது நபியவர்களிடமிருந்து கூறப்பெற்றதாக அபு ஹுரைரா அவர்கள் பதிவு செய்தது.

இதன் மூலம் கிடைக்கப் பெறும் அறிவுரை:

1. கடமையில்லாத தொழுகையில் ஈடுபட்டிருக்கும்போது பெற்றோர் அழைத்தால் அவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.

2. எத்துணை பெரிய துன்பம் நேர்ந்தாலும் மனம் தவளாமல் இறைவனிடம் உதவி தேடினால் பலன் நிச்சயமே!

இந்த ஹதீஸில் ஜுரைஜின் தாய் அவருக்கு சாபம் விடும்போது 'என்னடா இது..அவர் நன்மை தானே செய்கிறார்..அந்த அம்மா ஏன் சாபமெல்லாம் கொடுக்கிறாங்க..அதுவும் பலிச்சிடுச்சேன்னு நினைச்சேன். அப்புறம் தான் (அதாவது கொஞ்சம் லேட்டா) புரிஞ்சது. அந்த அம்மா அவ்வளவு நல்லவங்களா இருந்திருக்காங்க... அதான் அவங்க கொடுத்த சாபம் பலிச்சிடுச்சு. அதுவும் அவங்க ஆழ் மனசின் படி அவங்க மகனுக்கு அந்த சாபம் எந்த தீங்கையும் விளைவிக்கவில்லை. அவருடைய இறை பக்தியின் காரணமாக அவருக்கு மேலும் புகழையே தேடித் தந்தது.

மூன்றாவது ஆதாரம் அடுத்த பதிவில்.