Thursday, January 5, 2012

என்றென்றும்16 உருவான கதை

முன்பொரு காலத்தில் (ச்ச... நிலம இப்படி ஆகிடுச்சே :(..) பெயர்க்காரணம்னு ஒரு தொடர்பதிவுல கோர்த்துவிட்டது மஹி உங்களுக்காவது ஞாபகம் இருக்கும்னு (இல்லன்னாலும் பரவாயில்ல...ஹி..ஹி..)  நம்பி இந்த பதிவு போடுறேன்.

மஹி என் புனைப்பெயரைத் தேர்ந்தெடுத்ததுக்கான காரணத்தை சொல்லச் சொல்லியிருந்தாங்க... அது ஒண்ணும் பெரிய காரணமெல்லாம் இல்லீங்க... என் சொந்த பெயரில் எழுதாம வேறு பெயரில் எழுதலாமுன்னு யோசிச்சப்போ இந்த பெயர் தேர்ந்தெடுத்தேன்... விதவிதமான பெயர்கள் வலைப்பூக்களுக்கு இருந்ததப் பார்த்து ஆசப்பட்டு நமக்கும் அதாவது நம்ம வலைப்பூவுக்கும் என்ன பெயர் வைக்கலாமுன்னு கொஞ்சம் யோசிச்சப்ப ஒரு பழைய வரலாறு ஒண்ணு ஞாபகம் வந்துச்சு. நமக்குத்தான் ஒண்ணத் தொட்டா ஒண்ணு ஞாபகம் வருமே..ஹி..ஹி...

ஆறாம் வகுப்பு படிக்கும்போது (அப்படியெல்லாம் தலையில அடிச்சுக்கக்கூடாது... வலிக்கும்ல) தமிழ்ல ஒரு கதை வந்துச்சு. கதையின் பெயர் 'பெயரில் என்ன இருக்கிறது?'. அதாவது அந்த கதையின் ஹீரோ பெயர் மண்ணாங்கட்டி... அவனுக்கு அவன் பேரைப் பத்தி ரொம்ப கவலை. இப்டி ஒரு பேர் வச்சிட்டாங்களேன்னு... அப்ப இரண்டு கண்களையும் இழந்த கண்ணாயிரத்தையும் கோடீஸ்வரன் என்ற பிச்சைக்காரனையும் சந்திப்பான். அப்ப தான் நம்ம ஹீரோவுக்கு தெளிவு பிறக்கும் வெச்சுக்கிட்ட பெயர்ல ஒண்ணுமில்ல... வாங்குற பேர்ல இருக்கு வாழ்க்கை அப்ப்டீன்னு. அத மாதிரி ஏதாவது நம்ம வலைக்கு வக்கலாமான்னு யோசிசேன்... ம்ஹூம்... நம்ம பதிவ படிக்கிறவங்க வேற அப்படித்தான் திட்டப்போறாங்க... அத நாமளே ஏன் சொல்லிக்கொடுக்கணும். அதனால வச்சுக்கிர பேராவது உருப்படியான நல்ல பெயரா வப்போம்னு முடிவு பண்ணேன்.

அப்புறம் இன்னொரு ஃப்ளாஷ்பேக் (ஓடறதுதான் ஓடறீங்க.. முழுசா படிச்சுட்டு ஓடுங்க..ஹி..ஹி..):

உறவினர் வீட்டில் சில வருடங்களுக்கு முன்ன தங்கியிருந்தப்போ அந்த வீட்டம்மா அவங்க வீட்டு காலண்டரில் இன்னாருக்கு இன்னின்ன தேதியில் பிறந்த நாள், கல்யாண நாள்னு,குழந்தைக்கு பரீச்சை மாதிரி விஷயங்களை குறிச்சு வச்சிருந்தாங்க... அவங்க பிறந்ததேதி பக்கத்தில் என்றும்16ன்னு எழுதியிருந்தாங்க.... அதாவது Ever16 அப்டின்னு எழுதியிருந்தாங்க... நான் யாருக்கும் தெரியாம ஒரேயொரு N சேர்த்துவிட்டேன்.... EVER16  NEVER16 ஆகிடுச்சு.... அந்த நிகழ்வு ஞாபகம் வந்துடுச்சு.(நல்லவேளை.. இரண்டாவது ஃப்ளாஷ்பாக்லயாவது முடிவு பண்ணினாயே மகராசின்னு  நினச்சீங்கதானே?!)

அந்த என்றும்16-ஐ என்றென்றும்16 அப்டீன்னு கொஞ்சம் மாத்தி ரகசியமா நான் மட்டும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு நானே எனக்கு பெயர்சூட்டு விழா நடத்தியாச்சு. ரொம்ப பந்தாவா என்றென்றும்16 ஆக வலையுலகத்தில் நுழஞ்சாச்சு. ஆனா சில பதிவுகள் கொடுத்த பிறகு நம்ம வாசகர்களிடமிருந்து  ஒரு வேண்டுகோள் வந்துச்சு(கம்ப்ளெயின்ட்ட இப்டி வேற சொல்லலாமோ  ;-)) ). என்றென்றும்16 அப்டீன்னு டைப் பண்றதுக்குள்ள எழுத வந்த மேட்டரே மறந்துடுதுன்னு....  அவ்வ்வ்வ்வ்வ்வ்.... என்னடாது கஷ்டப்பட்டு யோசிச்சு வரலாறு, பொரியல்  ச்ச... புவியியல் எல்லாத்தையும் கிளறி கண்டுபிடிச்ச அழகான அர்த்தம் வாய்ந்த பேருக்கு இப்படி ஒரு சோதனையான்னு நொந்து போய் வேற வழியில்லாம என்னோட அழகுபெயரில் ஒரு பாதியைச் சொல்ல வேண்டியதாயிடுச்சு.... இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா அவ்வளவு கஷ்டப்பட்டு முளையை உபயோகப்படித்தி இருந்திருக்க வேண்டாமேன்னு இப்பவும் கொஞ்ச கவலையா இருக்கு.... (ஷ்ஷூ.....மூளையை யூஸ் பண்ண விடமாட்டேங்கிறாங்கப்பா)....

என் நல்ல நேரம் இந்த பெயரை இதுக்கு முன்ன யாரும் செலக்ட் பண்ணியிருக்கலை.... நம்மள மாதிரி அறிவுஜீவி இன்னும் பிறக்கலன்னு ஒரு அல்ப சந்தோஷம் வேற.... ஹி..ஹி...

மஹி சொன்னது //உங்க புனைப்பெயருக்கான காரணத்தை சொல்லுங்க,அப்படியே உங்க சொந்தப்பேரையும் சொல்லிடுங்க.;)
நன்றி!//
என்ன... உண்மையான பேரை சொல்லணுமா.... அஸ்கு புஸ்கு.... அவ்வளவு சீக்கிரத்தில் சொல்லிட மாடோம்ல... பதிவெழுத மேட்டர் கிடைக்கலன்னா சொந்தப் பெயர் உருவான கதைன்னு ஒரு பதிவு தேத்திடலாம்ல...... ம்ம்ம்.... அது அடுத்த பதிவா கூட இருக்கலாம்...ஹி...ஹி...ஹி...
-----------------------------------------------------------------------------------------------


நம்ம சின்னத்துரை கட்டிலோட ஓரத்தில் தவழ்ந்து வந்துட்டிருக்கான்.... நான் பயத்தில் பெரியத்துரையிடம் " டேய்... அவன் ஓரத்துக்கு வந்துட்டான் பாரு...அவன புடீ" கத்துறேன்.... அவன் சர்வசாதாரணமா "ம்மா...வெய்ட் பண்ணும்மா... அவன் கீழ விழுறானா இல்லையான்னு பார்ப்போம்"... அவ்வ்வ்வ்..... அவன் விழலன்னாலும் இவனே தள்ளிவிட்ருவான் போல... அண்ணனிடம் தம்பி படுற பாடு பார்த்தா........முடீல...

 -------------------------------------------------------------------------------------------------
 எங்கிருந்து
எந்நேரம்
வா
எனச்சொல்லி முடியும்முன்
என்னிடம் ஓடி வருபவன்
அன்று
பாதி தூரத்தில் நிற்கிறான்
என்னருகே வரத் தயங்குகிறான்
ஏன்?
ஓ..என் கையில் சாப்பாட்டு கிண்ணம்.


என் சின்னத்துரையைப் பத்திதான் சொல்றேன்... நம்ம எழுத்துக்கு நாமளே விளக்கம் கொடுத்துடறதுதான் நமக்கு safe. ஹி..ஹி..அப்புறம் த.பு., க.பு. ன்னு பின்னூட்டத்துக்கு படாத பாடு படவேண்டாம் பாருங்க... ஷ்.... அப்பா.. இதத்தான் அனுபவம்னு சொல்றாங்களோ?! ;))  அப்பப்ப இந்த மாதிரியெல்லாம் வரும்... உங்களுக்கு உடனே 'எங்கேயும் எப்போதும்' படத்தில் வர்ற மாதிரி வேப்பிலை அடிக்கணும்னு தோணுமே... யூ ஆர் மோஸ்ட் வெல்கம்...அதைப்பத்தியும் எழுதிடுவோம்ல... எப்பூடீ?