Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Tuesday, February 17, 2015

நான் முஸ்லிமல்ல... ஆனால் குர் ஆனை நம்புகிறேன்: விஞ்ஞானி (1)


மாரீஸ் புகைல் ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு அறுவை சிகிச்சை மருத்துவராவார். புகழ்பெற்ற அறிஞரும் ஆவார். அவரது நாட்டினர், எகிப்திய அரசிடமிருந்து ’மம்மியாகப் பாதுகாக்கப்பட்ட ஃபிரவ்னின் உடலை பரிசோதனை செய்வதற்காகப் பெற்றனர்.


ஃபிரவ்னின் உடலில் மீது காணப்பட்ட மிகுதியான உப்பு அவன் மூழ்கி இறந்ததைத் தெளிவாக எடுத்துரைத்தது. ஆராய்ச்சிக்குழுவினர் மேற்கொண்டும் தமது பணியினை செய்துகொண்டிருக்க, அக்குழுவின் தலைவரான மருத்துவர் மாரீஸ் புகைலுக்கோ ஃபிரவ்ன் எப்படி மூழ்கினான் என்று வியப்பு மேலிட்டது. இது பற்றி இஸ்லாமியர்களின் வேதமான குர் ஆனில் இருப்பதாக அறிய வந்தார். 18ம் நூற்றாண்டில் தான்  ‘மம்மிகள்’ கண்டெடுக்கப்பட்டன. ஆனால் அவற்றைப் பற்றி 14ம் நூற்றாண்டிலேயே குர் ஆனில் குறிப்பிடப்பட்டதை அறிந்த மருத்துவர் குர் ஆனைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு தமது 50வது வயதில் அரபி கற்க சவூதி அரேபியா சென்றார்.


ஃபிரவ்ன் குறித்த குர் ஆனின் கீழ்வரும் வசனங்களைக் கண்டு ஸ்தம்பித்து நின்றார். ஏக இறைவனின் ஒரு எழுத்தைக் கூட மறுக்கவியலாதவராக ஏற்றுக்கொண்டார்.



10:90. மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.

10:91. “இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.

10:92. எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது).





தான் கற்றுணர்ந்த குர் ஆனின் முதல் வசனம் அவரைப் பெரிதும் ஈர்க்க இன்னுமின்னும் தன் தேடலைத் துவங்கினார். இஸ்லாம் மீதிருந்த தமது தவறான கண்ணோட்டங்களைத் தம்மை மருத்துவத்திற்காகக் காணவந்த முஸ்லிம்கள் மூலம் அறிந்து களைய முயற்சிகளை மேற்கொண்டார். அவருக்கு அதுவரை தகவல் களஞ்சியமாக விளங்கியவை வானொலியும் தொலைக்காட்சியும் சில நூல்களுமேயாகும். அவற்றைத் தவிரவும் இஸ்லாம் மீதான தன் பார்வையை விரிவுபடுத்தினார். தாம் முன்பு கண்டெடுத்த, இஸ்லாம் என்பது முஹம்மது என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட மதம் என்னும், ஆராய்ச்சி முடிவுகளை மீளாய்வு செய்தார். இப்பொழுது அவருக்கு குர் ஆனைக் குறித்து கிடைத்திருந்த மேலதிக தகவல்களையும் விரிவான கண்ணோட்டங்களையும் கொண்டு தமது முன் முடிவுகள் தவறாக இருப்பதையும் முழுமையாக உணர்ந்தார்.


1976ல் Quran, Bible, and Science என்ற புத்தகம் எழுதி புகழடைந்தார் மருத்துவர். அதன் பின் குர் ஆனை நன்கு ஊன்றிப்படித்த மருத்துவர் (மனிதனின் தோற்றம்) The Origin of Man என்ற புத்தகம் எழுதி வெளியிட்டார். இப்புத்தகம் இஸ்லாத்தையும் மருத்துவரையும் உலகின் பலதரப்பட்ட மக்களுக்கும் அறிமுகப்படுத்தியது. அன்றைய தினம், உலகைக் குறித்த விடைகிடைக்காத பல கேள்விகளுக்கும் ஆதாரப்பூர்வமாகத் தம் விடைகளை குர் ஆனின் ஒளியில் பதிந்தார். அவரது ஆராய்ச்சிகளையும் முடிவுகளையும் தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருமனதுடன் ஏற்றுக்கொண்டனர். குர் ஆன் மீதான தமக்கிருந்த   ஆழ்ந்த அறிவால் பல அறிஞர்களுக்கும் உண்மையை எடுத்துரைத்தார். டார்வினின் தத்துவத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக்கொண்டார். ஒரு கட்டத்தில் குர் ஆன் ஏக இறைவன் த்னது தூதரின் வாயிலாக உலகுக்கு வழங்கிய இறைவேதமே என்று தான் ஆய்ந்தறிந்த முடிவினை வெளியிட்டார். 


இருப்பினும் ஒரு முஸ்லிமின் ஆராய்ச்சிகள் இஸ்லாத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்று பலரும் குற்றம் சுமத்தி அவரது கருத்துகளை உலகம் ஒதுக்கியபோது ஒரு சுயவிளக்கம் அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வாயடைக்கச் செய்தார். அந்த சுயவிளக்கம் இதுதான்:


”என் ஆராய்ச்சிகளின் முடிவுகள் அனைத்தும் இஸ்லாத்தையும் அதன் ஏக இறைவனையும் மெய்ப்படுத்துகின்றன என்பது முழுக்க முழுக்க உண்மையாகும். ஆனால் இதனை ஒரு முஸ்லிமாக நான் கூறவில்லை. அவ்வாறு இஸ்லாம் என்ற ஒரு வட்டத்தில் இருந்து கொண்டு என் ஆய்வறிக்கைகளை நான் வெளியிட்டால் உலகம் ஏற்கத்தயங்கும். நான் அந்த வட்டத்தை விட்டும் வெளியே இருந்தே இஸ்லாம் என்பது உண்மை; அதன் வேதம் மெய்யானது என்று ஒப்புக்கொள்கிறேன்” என்று அறிவித்தார்.


இவ்வாறு முஸ்லிம்களுக்கு ஆதரவாகத் தம் வாழ்வைக் கழித்த அவர் இஸ்லாத்தினை ஏற்றிருந்தால் அவருக்கும் நன்மையாக அமைந்திருக்கும்.


Reference:

http://www.islam.ru/

Tuesday, July 31, 2012

சுட்டி...சுட்டி....


ஐடி கார்ட் of பெரியத்துரை:

பள்ளியிலிருந்து வரும்போது பெரியத்துரை அன்னிக்கு புது ஐடி கார்ட் மாட்டியிருந்தான்.

நான்: அட...ஐடி கார்ட் நல்லாருக்கே....

அவன்: ம்மா..... இத ஸ்கூல் ஆஃபீஸ்ல கொடுக்கணுமாம்....

நான்: ஐடி கார்டுக்கு காசு வாங்கி மூணு மாசம் கழிச்சுத்தான் தந்துருக்காங்க... அத ஏன் அங்க குடுக்கணுமாம்?!

அவன்: இங்க பாரு... இதுல போட்டிருக்கு.... If found, please return to school office.


----------------------------------------------------------------------------------------------------

இதயத்தை திருடவில்லை..வில்லை...வில்லை...

தலைப்பைப் பார்த்து என்ன திடீர்னு கவிதை மாதிரி ஏதோ எழுதறாளேன்னு கனவிலயும் நினைக்காதிங்க. இப்போதைக்கு  அப்படியெல்லாம் பண்ற மாதிரி ஐடியா எதுவும் இல்ல....  :-(..... நம்புங்க இது ஒரு உண்மையான சம்பவம்... இதயம் காணாமல் போன நிகழ்வு...காலத்தின் முன்னேற்றத்தைப் பாருங்க... ஒரு ஆஸ்பத்திரியிலிருந்து ஒருவருடைய இதயத்தை எடுத்து இன்னொரு ஆஸ்பத்திரிக்குக்  கொண்டு போகும் வழியில் இதயம் கீழே  (?) விழுந்து விட்டது... அதை மறுபடியும் வந்து எடுத்துச  செல்லும் காட்சி இதோ  உங்கள் பார்வைக்கு...  நல்ல வேளை யாரும் சைக்கிள் கேப்பில் அந்த இதயத்தைத் திருடிச  செல்லவில்லை. ;))


------------------------------------------------------------------------------------------------

 பெட்ரோலின் நிறம் பிங்க்

ஒரு முறை காரில் வெளியே போய்விட்டு வரும் வழியில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட காத்திருந்தோம் (பெட்ரோல் பங்கிற்கு எல்லாரும் பெட்ரோல் போடத்தான் போறோம்னு  யாரோட மைன்ட் வாய்ஸோ கேட்குது  .... அது வந்து...... குறுக்க பேசினா சொல்ல வந்தது மறந்து போயிடுதுல்ல..... என்ன சொல்ல வந்தேன்.....அப்பாடா ஞாபகம் வந்துடுச்சு....) அப்ப நம்ம பெரியத்துரை:

ம்மா... பெட்ரோல் எங்கிருந்து வருது?

எர்த்துக்கு அடியிலிருந்து வ.....

நாம பாத்ரூம் போறதிலருந்தா ?

இல்லடா  அது வந் ......

அப்ப நாம எல்லாரும் பீட்ருட் சாப்பிட்டா பெட்ரோல் பிங்க் கலர்ல வருமா

டேஏஏஏஏ....

இனிமே பெட்ரோலைப் பார்த்து பீட்ருட் ஞாபகம் வந்தாலோ  இல்ல பீற்றுட்டைப் பார்த்து பெட்ரோல் ஞாபகம் வந்தாலோ   நான் பொறுப்பில்ல.... பெரியத்துரைதான் காரணம். என்னைக் கேட்கக்கூடாது...ஆமா .....


-------------------------------------------------------------------------------------------------
உலகம் உங்கள் கண்சிமிட்டலில்!!

முன்னொரு காலத்தில் கம்ப்யுட்டர் வந்த காலத்தில் அதை வாய்பிளந்து பார்க்காதவர் இல்லை.... ஆனால் பார்வை இல்லாதோருக்கு அது ஒரு எட்டாக்கனியாகவே  இருந்து வந்தது. விரைவில் அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்கள். கணினியில் பதியப்பட்ட குரல் மூலம் அவர்கள் கைகளால்  டைப் செய்வதையும்  க்ளிக் செய்வதையும்  அவர்களால் தெரிந்து கொள்ள முடிந்தது. 

அப்படீன்னா, கண்களைத்  தவிர மற்ற அனைத்து உறுப்புகளும் பக்கவாதத்தால் (லாக்ட்-இன் சின்றோம் ) பாதிக்கப்பட்டவர்கள்  மட்டும் என்ன தவறு செய்தார்கள்? அவர்களும் கணினி உபயோகப்படுத்துவது ஏன் இந்த ஒரு(?) காரணத்தால் தடுக்கப்பட வேண்டும்?! என்ன சொன்னீங்க.... கண்கள் செயல்படுகின்றனவா? அது போதுமே என்கின்றனர் லண்டனைச  சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். அவர்களுடைய கருவிழி தான் மௌஸ்..... விருப்பத்தைத் தேர்வு செய்த பின் க்ளிக் பண்ணவேண்டுமா? கண்ணைச்சிமிட்டுங்கள்.  அவ்வளவுதான். அதாவது நினைத்ததைப் பார்த்தால் போதும் என்கின்றனர் இக்கணிணியைக் கண்டுபிடித்தவர்கள்.

இதே  லாக்ட்-இன் சின்றோமால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் கணினியில்லாத காலத்திலேயே  சாதனைகள் பல புரிந்திருக்கின்றனர். தன நினைவுகளைப் புத்தகமாகப் பதிவுசெய்ய ஜீன் டொமினிக் பாபருக்குத தன கண்களே போதுமானதாகயிருன்தது.

பின்குறிப்பு:  
லாக்ட்-இன் சின்றோமால் பாதிக்கப்பட்டவர்களுக்குகே குரல் தசைகள் பாதிப்புக்குள்ளகாது என்றாலும் குரலுக்கும் மூச்சிற்கும்  இடையே தொடர்பு பாதிக்கப்படுவதால் அவர்களால் சரியாக பேசமுடியாது.

(இவ்வனைத்து நோய்களிலிருந்தும் என்னையும் என் உற்றார்,உறவினர்களையும் பாதுகாத்த இறைவா உனக்கே புகழ் அனைத்தும். பாதிக்கப்பட்டவர்களையும் விரைவில் குணப்படுத்தித்தருவாயாக!!)

Sunday, April 15, 2012

என்றென்றும் வற்றாக் கிணறு - 2

என்றென்றும் வற்றாக் கிணறு - 1

(புஹாரி 3364) இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறை ஆணையின் படி தமது இரண்டாவது மனைவி ஹாஜரையும் சிலமாதங்களேயான கைக்குழந்தை இஸ்மாயீலையும் தனியே ஆளரவமற்ற பாலைவனத்தில் கஃபாவின் அருகே ஓரிடத்தில் விட்டுவிட்டுச் செல்கிறார். இறைவனின் உத்தரவென்பதால் இப்ராஹீம் (அ.ஸ) அவர்களும் வேறுவழியின்றி திரும்பிப் பார்க்காமல் சென்றுவிடுகிறார். ஹாஜர் (அ.ஸ) அவர்களும் இறை உத்தரவை மனதார ஏற்றுக்கொள்கிறார். குழந்தை பசியில் அழும்போது தான் கையில் கொண்டுவந்த தண்ணீரைக் குடித்து குடித்து குழந்தைக்கு பாலூட்டுகிறார். சிறிது நேரத்தில் அத்தண்ணீரும் தீர்ந்துவிடுகிறது. தண்ணீருக்காக இருபக்கங்களிலுமிருக்கும் மலைகுன்றுகளான சஃபா மற்றும் மர்வா ஆகியவற்றின் மீதேறி யாரும் தென்படுகிறார்களா என்று நடந்தும் ஓடியும் தேடுகிறார். இடையிடையில் குழந்தையின் நிலையையும் ஒரு எட்டு பார்த்துச் செல்கிறார்.(இரு குன்றுகளின் தூரம் 450மீ. அப்படிப் பார்த்தால் மொத்தம் 3.15 கி.மீ. அவர் கடந்திருக்கிறார். மாஷா அல்லாஹ்... இறைவன் தான் அவருக்கு அந்த உறுதியைத் தந்திருக்க வேண்டும்.) இதையே ஹஜ்/உம்ரா செய்யும்போது இவ்விரு மலைக்குன்றுகளினிடையே நடந்தும் ஓடியும் செல்ல கடமையாக்கப்பட்டுள்ளது.

சஃபா மலைக்குன்று

மர்வா மலைக்குன்று


               
(ஏன் ஓடவும் நடக்கவும் செய்யவேண்டும்? ஏனென்றால் ஹாஜர் (அ.ஸ). மலைகுன்றின்மீதேறும்போது குழந்தையின் நிலையை அவர்களால் காணமுடிந்தது. நிலத்தில் செல்லும்போது குழந்தையைக் காண முடியவில்லை. அதனால் நிலத்தில் ஓடியும் மலைகுன்றுகலில் நடந்தும் தன் தேடுதலைத் தொடர்கிறார்.)

இவ்வாறு ஏழாவது முறை தேடிவிட்டு குழந்தையைப் பார்க்க குழந்தையின் அருகே வந்தவர் ஒரு குரலைக் கேட்கிறார்.அது வானவர் ஜிப்ரீல் (அ.ஸ.) அவர்களுடையதே. ஹாஜர் அ.ஸ. அவர்களுக்கு அல்லாஹ் தன்னைச் சார்ந்தோரைக் கைவிட மாட்டான் என்று நம்பிக்கையும் இக்குழந்தையும் இக்குழந்தையின் தந்தையும்  பின்னாளில் இறையில்லத்தை மேம்படுத்துவதில் ஆற்றவிருக்கும் பங்கு பற்றி நற்செய்தியும் தெரிவித்தவர் தம் இறக்கையால் மணலை தோண்ட நீர் தோன்றுகிறது. நீர் பெருக்கெடுத்து ஓடவே ஹாஜர்(அ.ஸ.) அவர்கள் தன்னையும் அறியாமல் நில் நில் (அரபியில் ஸம்ஸம்) எனக் கூறிக்கொண்டே தமது கையால் அதைச் சுற்றி ஒரு தடுப்பும் எழுப்புகிறார்.

(இதையே பிற்காலத்தில் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஹாஜர் (அ.ஸ.) அவர்கள் மட்டும் தடுப்பு எழுப்பவில்லையாயின் ஸம்ஸம் கிணறாக இல்லாமல் ஒரு ஓடுகிற நீரோடையாக நமக்குக் கிடைத்திருக்கும் என்று நவின்றுள்ளார்கள். (புஹாரி 2368).)

பின்னர் அத்தண்ணீரைக் குடித்த ஹாஜர் (அ.ஸ.) அவர்கள் குழந்தைக்கு அதன் வயிறு நிறைய பாலூட்டுகிறார். சில நாட்கள் கழித்து அவ்வழியில் வந்த ஜுர்ஹும் எனும் குழுவினர் அங்கே இருக்கும் கதா எனும் கணவாயினருகே தங்கலானார்கள். அந்த ஆளரவமற்ற பாலைவனத்திலும் தண்ணீரைச் சுற்றியே வட்டமடிக்கும் பறவைகள் பறப்பதைக் கண்டு அவ்விடத்தில் நீர்நிலை இருப்பதை அறிந்து கொள்கிறார்கள். ஸம்ஸம் கிணற்றையும் அருகில் ஹாஜர் (அ.ஸ.) அவர்களையும் காண்கிறார்கள். அவர்களிடம் வந்து அவ்விடத்தில் தங்கிக்கொள்ள அனுமதி கேட்கிறார்கள். அனுமதியளித்த ஹாஜர் (அ.ஸ.) அவர்கள் ஸம்ஸம் கிணற்றின் மீது உங்களுக்கு உரிமையில்லை என்று சொன்னதையும் ஏற்ற ஜுர்ஹும் கூட்டத்தினர் அவ்விடத்திலேயே தங்களது இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். (புஹாரி. 3364)

பின்னாளில் ஜுர்ஹும் கூட்டத்தினரினிடத்தில் ஏற்பட்ட நேர்மையற்ற தன்மையினால், ஸம்ஸம் கிணற்றின் அருமைகளையும் அவசியத்தையும் அறிந்தவர்களாகவே, அக்கிணற்றையே மூடிவிட்டார்கள். பின்னர் சில காலங்களாக ஸம்ஸம் கிணறு மறக்கப்பட்டதாகவே இருந்துள்ளது.

முஹம்மது (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களின் காலம் வரை அக்கிணற்றைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இறையில்லம் கஃபாவிற்கு புனிதப்பயணம் வரும் மக்களுக்கு தேவையான தண்ணிரை கொடுக்கும் பொறுப்பு மூதாதையர்களிடமிருந்து அப்துல் முத்தலிப் அவர்களிடம் வந்தது. அருகில் நீர்நிலை ஏதுமில்லாத நிலையில் அப்பணி மிகவும் சிரமமாகயிருந்தது. அச்சமயத்தில் அப்துல் முத்தலிப் அவர்கள் ஒரு கனவு கண்டார்கள். அக்கனவில் முதல் இரண்டு நாட்களுக்கு 'இனிமையானதைத் தோண்டு' எனவும் 'அருளுக்காகத் தோண்டு' எனவும் அறிவிக்கப்பட்டதே தவிர ஸம்ஸம் கிணற்றின் இடம் சரியாக அறிவிக்கப்படவில்லை. மூன்றாம் நாள் கனவில் அக்கிணற்றின் இடமும் பெயரும் தெளிவாக அறிவிக்கப்பட்டதும் மறுநாள் காலையில் தன் மகன் அல் ஹாரிதுடன் அக்கிணற்றை புணரமைத்தார்கள். இதையறிந்த மற்ற மக்காவாசிகள் ஸம்ஸம் கிணற்றின் மீது உரிமை கொண்டாடினார்கள். அதற்கு அப்துல் முத்தலிப் அவர்கள் மறுக்கவே தங்களிடையே நியாயமான தீர்ப்பு வழங்க ஒருவரைக் காண இரு குழுவினரும் பயணம் மேற்கொள்கின்றனர். அந்த காலத்தில் ஒட்டக பயணம் பல நாட்கள் நீளும். அப்படி செல்லும்போது அவர்களிடையே இருந்த தண்ணிர் தீர்ந்தது. கடுமையான தாகத்தால் மரணத்தை அவர்கள் அஞ்சிய அச்சமயம் அப்துல் முத்தலிப் அவர்களின் ஒட்டகத்தின் காலடியில் நீர்ரூற்று தோன்றவே இது இறைவனின் பக்கமிருந்து அப்துல் முத்தலிபிற்கு சாதகமான தீர்ப்பு வந்ததாக இரு குழுவினரும் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு ஸம்ஸம் கிணற்றின் பொறுப்பு, அதாவது புனித பயணமாக கஃபாவிற்கு வரும் மக்களுக்கு ஸம்ஸம் கிணற்றிலிருந்து நீர் புகட்டும் பொறுப்பு அப்துல் முத்தலிபிடமே ஒப்படைக்கப்பட்டது. மற்ற மக்கவாசிகளும் ஸம்ஸம் தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

பின்குறிப்புகள்:

1.  இப்ராஹிம் (அ.ஸ.) அவர்கள் தமது இரண்டாம் மனைவியையும் குழந்தையையும் பாலைவனத்தில் விட்டு வந்தாலும் அவர்கள் மனம் அவர்களைச் சுற்றியே வந்தது. அவர்களுக்காக மிகவும் கவலையுடன் இறைவனிடம் துஆ செய்தவர்களாகவே இருந்தார்கள். அத்துஆவானது:

14:37. “எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!”

2. ஸம்ஸம் கிணறு உருவான வரலாறு மட்டுமே புகாரியில் காணப்படுகிறது. அதன் பின்னர் வரும் வரலாறு இப்னு கதிரில் இடம்பெற்றுள்ளது.

3. ஸம்ஸம் தண்ணீரின் அதிசய குணங்களை அறிந்த எத்தனையோ முஸ்லிமல்லாத சகோதர,சகோதரிகளும் முஸ்லிம்களிடமிருந்து ஸம்ஸம் தண்ணீரைக் கேட்டு பெற்று குடிக்கிறார்கள். ஆனால், கபட வேஷமிடுபவர்களால் ஸம்ஸம் தண்ணீரை ஓரளவிற்கு மேல் அருந்தமுடிவதில்லை. (இப்னு மாஜா 1017)

4. சஹீஹ் முஸ்லிம் எண். 2473 யில் முஹம்மது (ஸல்) அவர்களிடம் கஃபாவின் அருகில் தொடர்ந்து தங்கியிருந்த அபு தர் என்பவர் முப்பது நாட்களுக்கு வேறு எந்த உணவுமின்றி ஸம்ஸம் தண்ணீரை மட்டுமே அருந்தியதாகத் தெரிவிக்கிறார்.

Thursday, April 5, 2012

என்றென்றும் வற்றாக் கிணறு

நாட்டின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும் அரை-வறண்ட பாலைவனமும் பரப்பளவில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே வேளாண்மைக்கு உகந்த நிலமாக காணப்படும் மற்றும் குளிகாலங்களில் 0 டிகிரிக்கும் குறைவாக வானிலை நிலவும் (ஆதாரம் - விக்கி) சவூதி அரேபியாவில் என்றுமே வற்றாத என்றுமே உறையாத கிணறு ஒன்று உண்டென்றால் அது இறைவனின் அற்புதமேயல்லாமல் வேறென்னவாக இருக்கும்?! ஆம்...அது ஸம்ஸம் கிணறேதான்.
ஸம்ஸம் கிணறு உற்பத்தியாகுமிடம்
வருடந்தோறும் மில்லியன் கணக்கில் மக்காவிற்கு புனித பயணம் வந்து செல்லும் உலக முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் அள்ள அள்ள குறையாமல் ஊறிக்கொண்டிருக்கும் அந்த கிணறுதான் எத்தனை உண்மைகளைச் சொல்கிறது?!

67:30. (நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்).

மழையும் இயற்கை குடிதண்ணீரும் இல்லாத பாலைவனத்தில் வற்றாத நீரூற்றைக் கொண்டு வர எல்லாம் வல்ல இறைவனைத் தவிர வேறு யாரால் முடியும்?!

ஸம்ஸம் கிணற்றின் ஆழம்

சுவையிலும் குணத்திலும் என்றும் மாறாத த்ண்ணீரைக் கொண்ட அக்கிணறு 98 அடி ஆழமுள்ளதாகவும் 3 அடி 7" லிருந்து 8 அடி 9" வரை அகலமுள்ளதாகவும் இருக்கிறது.

ஒரு நொடிக்கு பதினொன்றிலிருந்து 18 லிட்டர் வரை தண்ணீர் கிடைக்கிறது. சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 660 லிட்டரும் ஒரு நாளைக்கு 950,000 லிட்டரும் கிடைக்கும் கிடைத்துக் கொண்டேயிருக்கும் ஒரே கிணறும் ஸம்ஸம் கிணறு மட்டும்தான். அது மட்டுமல்ல, புனிதப்பயணத்திற்கு வருபவர்கள் தானும் குடித்து ஒவ்வொருவரும் அவரவர் இடத்திற்குத் திரும்பிச்செல்லுகையில் குறைந்தது 10 லிட்டராவது எடுத்துச்செல்லும் அதிசயமும் நடைபெறுகிறது.

பொதுவாக எந்த இடத்திலும் தண்ணீர் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் பாசி படிவது இயற்கையானதே. ஆனால் ஸம்ஸம் கிணற்றில் பாசியோ பாக்டீரியாவோ உருவாகவேயில்லை. சுத்தமான குடிதண்ணீராக விளங்கும் இக்கிணற்றின் தண்ணீர்  பலவித சத்துக்கள் நிறைந்ததாகவும் விளங்குகிறது. கால்ஷியமும் மக்னீஷியமும் அபரிமிதமாக இருக்கும் ஸம்ஸம் தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவல்லதாகவும் பலநாட்களுக்கு பசி தீர்க்கவல்லதாகவும் இறை நாடினால் நோய் தீர்க்க வல்லதாகவும்  நிரூபிக்கப்பட்டுள்ளது.

உலகில் கிடைக்கும் எந்த நிலத்தடி நீரை விடவும் ஸம்ஸம் கிணற்று நீருக்கு அதிக சோடியம், பொட்டாஷியம், ஐயோடின் சத்துக்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. உப்புத்தன்மையும் காரத்தன்மையும் அதிகமாக இருக்கிறது. பல ரசாயனங்கள் கலந்திருந்தாலும் இவ்வளவுகள் அனைத்தும் உலக நல அமைப்பு குடிநீருக்கென வகுத்து வைத்திருப்பதற்கும் குறைவாகவே இருக்கிறது.

பாதுகாப்பு கருதி இக்கிணறு கண்ணாடிக் கதவுகளால் மூடப்பட்டிருக்கிறது. இக்கிணற்றின் நீர் பம்ப் செய்யப்பட்டு ஆங்காங்கே மக்காவிற்கு வருபவர்கள் எடுத்துச் செல்லவும் உபயோகிக்கவும்  வசதியாக dispenserல் சேமிக்கப்படுகிறது. இக்கிணற்றில் பொருத்தப்பட்டிருக்கும் கருவியால் அதன் நீரினளவு, மின்சார கடத்துந்திறன், போன்ற பல தன்மைகளின் இலக்கமுறைத் தரவுகளை (அதொண்ணுமில்லை...digital values)நேரடியாக இணையத்தின் மூலமே அறிந்து கொள்ளலாம். இக்கிணற்றின் அடியில் இருக்கும் நீர்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.நிலத்தடி நீரை இதே அளவில் தொடர்ந்து பராமரிக்க, இக்கிணறு அமைந்திருக்கும் இப்ராஹிம் பள்ளத்தாக்கில் கிடைக்கப்பெறும், மழைநீரை வீணாக்காமல் சேமித்துவைப்பது, சுற்றத்தில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு கடுமையான விதிமுறைகள் வகுத்து பின்பற்றப்படுவது போன்ற நடவடிக்கைகளும் சீராக கடைப்பிடிக்கப்படுகின்றன.


எந்த ஒரு மத சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் அது அந்த குறிப்பிட்ட மதத்தவர்கள் மட்டுமே நம்பும்படியாகவும் மற்ற மதத்தவர்களுக்கு சந்தேகத்திற்குரியதாகவுமே இருக்கிறது. அது இஸ்லாத்தின் மற்ற எந்த நம்பிக்கையான சம்பவமுமேயானாலும் மற்ற மதத்தினருக்கு நாம் விளக்கினாலே அன்றி புரியவைக்க முடியாது.

ஆனால் ஸம்ஸம் கிணறும் அதன் தண்ணீரும் அப்படிப்பட்ட விவாதங்களுக்கு இடமளிக்காதவைகளில் ஒன்று. ஸம்ஸம் தண்ணீரின் நற்குணங்களை உலகின் அனைத்து மக்களும் சந்தேகத்திற்கிடமின்றி ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் மூலம் ஸம்ஸம் கிணறு உருவான இஸ்லாமிய வரலாறும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.

ஸம்ஸம் கிணறு உருவான விதம், அதைக் கண்டெடுத்த கனவு பற்றிய விபரங்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் காண்போம்.

Sunday, February 5, 2012

ஆஷா இருக்கிறா பேஷா..!

பூமியில் கிடைக்கும் அமுது என்ற தலைப்பில் தாய்ப்பாலின் அருமை பெருமை சிலவற்றை உங்களோடு பகிர்ந்திருந்தேன். சில மாதங்களுக்கு முன் விகடனில் இடம்பெற்ற உண்மைச் சம்பவத்தையும் உங்களோடு பகிர நினைத்தே இவ்விடுகை.

என்னதான் நம்ம அதை இதை பேசினாலும் ஊர்க்கதை ஓண்ணு சொன்னா அது மூலமா கிடைக்கிற படிப்பினையே வேறுதான்.

'தாய்ப் பாலுக்கு ஈடு இணையில்லை’ என்பது உலகறிந்த விஷயமே! அதற்கு மகுடம் சூட்டுவதுபோல... பல தாய்களிடம் இருந்து பெறப்பட்ட பால் மூலமாக... ஒரு குழந்தையை மறுபிறவி எடுக்க வைத்து, தாய்ப்பாலின் பெருமையை மேலும் ஒரு படி உயர்த்திப் பிடித்திருக்கின்றனர் திண்டுக்கல், அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவக் குழுவினர்!
 
திண்டுக்கல் மாவட்டம், தவசிமேடை கிராமத்தைச் சேர்ந்தவர் நீதிமேரி. கூலி வேலை செய்துவரும் இவருக்கு, கொசவபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. ஆஷா என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை, தாய்ப்பால் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளால் பிறந்ததிலிருந்தே நோய்களால் தாக்கப்பட்டு, சாவின் விளிம்புக்கே சென்றுவிட... கடைசிக் கட்டத்தில் ஆஷாவைக் காப்பாற்றியிருக்கிறது, தாய்(களின்) பால்!
 
ஏழு மாதக் குழந்தை ஆஷாவை கைகளுக்குள் அடைக்கலப்படுத்தியபடி   அமர்ந்திருந்த நீதிமேரி, ''தாய்ப்பால் போதாதால, ஆறாவது நாள்ல இருந்தே புட்டிப்பால் கொடுக்க ஆரம்பிச்சுட்டோம். நாப்பத்தி ரெண்டாவது நாள்ல வயித்துப் போக்கு ஆரம்பிக்க, திண்டுக்கல், கெவருமென்ட் ஆஸ்பத்திரியில சேர்த்தோம். ரத்தம், குளுகோஸ்னு ஏத்தியும் ஒண்ணும் சரியாகல. என்ன ஆகப்போகுதோனு தவியா தவிச்சுக்கிடந்தேன்.
 
என் நிலையைப் பார்த்து ரொம்பவும் பரிதாபப்பட்ட டாக்டர் ஜெயின்லால் பிரகாஷ், 'பக்கத்து பெட்கள்ல குழந்தை பெத்திருந்தவங்ககிட்ட இருந்து தாய்ப்பாலை வாங்கிக் கொடுக்கலாம்'னு சொன்னார். இப்போ குழந்தை உயிர் பிழைச்சுக் கிடக்கறதுக்கு அவர்தான் முக்கிய காரணம்! வெவரமெல்லாம் அவர்கிட்டயே கேட்டுக்கோங்க'' என்றார் கண்கள் கலங்கியபடி.
அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நல தலைமை மருத்துவர் ஜெயின்லால் பிரகாஷிடம் பேசினோம். ''நீதிமேரி, ரொம்ப கஷ்டப்படற குடும்பம். ஊட்டம் பத்தாததால அவங்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்கல. குழந்தைக்கு அடிக்கடி வயித்துப் போக்கும் ஏற்பட, குழந்தை பத்தின கவலையால தாய்ப்பால் ரொம்பவும் சுண்டிப் போச்சு. தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஆகவே... நோய்க்கிருமிகளோட தாக்கம் அதிகமாகி, ரத்தத்துல கலந்து 'செப்டிமீசியா ஸ்டேஜு'க்கு வந்துடுச்சு குழந்தை. இறுதியா, 'மராஸ்மிக் ஸ்டேஜ்'ல, உடம்புல உயிர் ஒட்டிக்கிட்டு இருந்ததுனுதான் சொல்லணும்.
 
குளுக்கோஸ், ரத்தம் எல்லாம் ஏத்தினோம்... ஏகப்பட்ட மருந்துகளையும் கொடுத்தோம். பொதுவா அரசு மருத்துவமனையில வெளியில இருந்து மருந்துகளை வாங்கிக் கொடுக்கக் கூடாது. இந்தக் குழந்தைக்காக மேலிடத்துல ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி, அரசு செலவுலேயே வெளியில இருந்து மருந்துகள வாங்கிக் கொடுத்தோம். ஆனாலும், குழந்தையோட உடம்புல முன்னேற்றம் இல்லை. இறுதியா, அந்த சிசுவை எப்படியும் காப்பாத்தியே ஆகணும்ங்கற பொறுப்போட ஜூனியர் டாக்டர்ஸ், ஸ்டாஃப் நர்ஸ்கள், டிரெய்னிங் நர்ஸ்கள்னு எங்க டீம் போட்ட மீட்டிங்லதன்... 'தாய்ப்பாலை இரவல் வாங்கிக் கொடுக்கலாம்'ங்கற முடிவுக்கு வந்தோம்.
வார்டுல குழந்தை பெற்றிருந்த எல்லா தாய்மார்கள்கிட்டயும் குழந்தை ஆஷாவோட நிலையையும், தாய்ப்பாலோட மகத்துவத்தையும் எடுத்துச் சொல்லி புரிய வெச்சோம். சிசேரியன் பண்ணினவங்க, குழந்தை சரியா பால் குடிக்காம இருக்கிற தாய்மார்கள், போதுமான அளவைவிட அதிகமா பால் சுரக்கிற தாய்மார்கள்னு எல்லாரும் சந்தோஷமா பாலை எடுத்துத் தர ஆரம்பிச்சாங்க. ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை தாய்ப்பாலை கொடுக்க ஆரம்பிச்சோம். நாலஞ்சு நாள்லயே குழந்தை தேறிடுச்சு! பல தாய்களோட பால் மூலமா... வைட்டமின், புரோட்டீன்னு எல்லாச் சத்தும் கிடைச்சதுல... இப்ப முழுசா குணமாகி நல்ல ஆரோக்கியமா இருக்கு குழந்தை'' என்று நிம்மதி பெருமூச்சு விட்டபடி சொன்ன டாக்டர் ஜெயின்லால் பிரகாஷ், நிறைவாகச் சொன்னது... ஒவ்வொரு பெண்ணும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம். அது...
''இந்தக் குழந்தை பிழைச்ச விஷயத்தை 'மிராக்கிள் ஆஃப் பிரெஸ்ட் மில்க்’னுதான் சொல்லணும். 'தாய்ப்பால், இத்தனை சக்தி வாய்ந்ததா!'னு மத்த தாய்மார்கள் எல்லாம் அதோட அற்புதத்தை நேரடியா பார்த்து முழுமையா உணர்ந்தாங்க. இப்போ இருக்கிற இளம் தாய்மார்களும், அமிர்தமா இருக்கற தாய்ப்பாலோட மகிமையைப் புரிஞ்சு, உயிர் காக்கும் அந்த விலையில்லாத மருந்தை வீணாக்காம கொடுத்து, குழந்தைகள நோயில்லாமலும், புத்திசாலியாவும் வளர்க்கணும்!''

Monday, January 17, 2011

பூமியில் கிடைக்கும் அமுது


யம்மா... தலை இடிக்குதும்மா!
 உலகில் கிடைக்கும் எந்த வித பாலுக்கும் ஈடிணையில்லாததென்றால் அது தாய்ப்பால்தான். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதைக் குடிக்காமல் வளரும் குழந்தைகளை விட அறிவாளிகளாக வளருவதாக் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்(ஐ..அப்ப நானும் அறிவாளிதான்னு விஞ்ஞானிகளே சொல்றாங்க...). பல வித நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறுகிறார்கள். எதிர்காலத்தில் எடை அதிகரிப்பதும்(reduces obesity) ஓரளவு மட்டுப்படுகிறது. ஆரம்பம் முதலே எனக்கு இந்த தாய்ப்பாலைப் பற்றிய வியப்பு அதிகமுண்டு. எப்படி ஒரு பெண்ணின் உடலில்  இத்தனை அதிசயங்களை உள்ளடக்கிய தாய்ப்பால் உண்டாகிறது; எந்த சக்தியுமில்லாத பச்சிளங்குழந்தையை அது எப்படி இவ்வளவு பலமுள்ளதாக மாற்றுகிறது; இப்படியெல்லாம் விஞ்ஞானிகள் செஞ்சு வச்ச ஆராய்ச்சியை நாம மேலும் ஆயலாமேனு ஸாரி (இன்னிக்கு மீன் ஆய்ஞ்ச ஞாபகத்தில சொல்லிட்டேன்)... ஆய்வு பண்ணலாமேன்னு தோணுச்சு..

குழந்தை வயிற்றில் உருவாகும்போதே அதற்கு உணவாகிய தாய்ப்பால் உருவாகத் தேவையான மாற்றங்கள் தாயின் உடலில் ஆரம்பிக்கின்றன. சொல்லப்போனால் இது எப்போ ஆரம்பிக்கிறது தெரியுமா? பெண் தன் தாயின் வயிற்றில் ஆறு மாதமல்ல...ஆறு வாரக் கருவாக இருக்கும்போதே கருவின் மார்பில் பால் சுரப்பிகள் உருவாகிவிடுகின்றன. எவ்வளவு பெரிய அற்புதம்! பெண்ணை இறைவன் எப்படி, எப்பொதே தாய்மைக்கு தயார்படுத்துகிறான்?!

தாயின் உடலில் பால் சுரப்பிகளின் அமைப்பு கருவுற்ற ஆறேழு மாதங்களில் முழுமையடைந்து விடுகின்றது.  இது எதற்கெனில் குறை மாதத்தில் குழந்தை பிறந்தால் சமாளிப்பதற்காக!

மார்பகத்தின் நிறம் மாறுதல், அதைச் சுற்றிலும் ஒரு வித வழுவழுத்தன்மை ஏற்படுதல் போன்றவை வெளியே தெரியும் மாற்றங்கள். மார்பகத்தில் ஏற்படும் அந்த சிறு நிறமாற்றத்திற்குக் கூட காரணம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.(பிறந்த சில நாட்களான) குழந்தைக்கு பாலூட்ட மார்பின் அரியோலா எனப்படும் (குழந்தையின் வாயும் இந்த அரியோலாவும் நேருக்கு நேராக இருக்க வேண்டும்)இடத்திற்கருகே கொண்டு செல்லும் போது மார்பின் நிறத்தைக் கண்டவுடன் அது தன் கண்களை மூடி பந்திக்குத் தயாராகிறது. வழுவழுப்புத்தன்மை மார்பகத்தில் வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

இனி மார்பகத்தின் உள்ளே ஏற்படும் மாற்றங்கள்:
குழந்தைக்கும் தாய்க்கும் பாலமாகச் செயல்படும் ப்ளசெண்டா உருவாகும்போதே தாயின் ஹார்மோன்களாகிய எஸ்ட்ரஜன் மற்றூம் ப்ரஜஸ்ட்ரான் ஆகியவற்றின் அளவு மாறுகிறது. தாய்ப்பால் சுரப்பதில் இவ்விரு ஹார்மோன்கள் பெரும் பங்காற்றுகின்றன. குழந்தை வயிற்றிலிருக்கும்போது கடுமையாக உழைக்கும் எஸ்ட்ரஜன் மற்றும் ப்ரஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள்  குழந்தை பிறந்தவுடன் தங்களது பணியை ஆக்ஸிடாக்ஸின் மற்றும் ப்ரோலாக்டினிடம் ஒப்படைத்து ஒதுங்கிக் கொள்ள ஆரம்பிக்கின்றன. ப்ரோலாக்டின் அதிகளவில் மார்பில் பால் சுரக்கச் செய்கிறது. ஆக்ஸிடாக்ஸின் அதை குழந்தைக்கு ஏதுவாக மார்பகத்திற்கு கொண்டு வந்து "let-down" reflex எனப்படும் பாலூட்டியே ஆக வேண்டும் எனும் உணர்வைத் தாய்க்குத் தருகிறது.

கொலஸ்ட்ரம்:
தாய்ப்பால் என்றாலே மஞ்சள் நிற அடர்த்தி மிகுந்த கொலஸ்ட்ரம் பற்றி சொல்லாமலா? குழந்தை பிறந்த முதல் மூன்று நாட்களுக்கு சுரக்கும் இந்த கொலஸ்ட்ரத்தில் இருக்கும் சத்துக்களைச் சொல்லி முடியாது. அதிகளவு ப்ரோட்டின் கொண்ட கொலஸ்ட்ரம் குறைந்த அளவு கொழுப்பும் சர்க்கரைஉம் கொண்டது.குழந்தை தன் சுய எதிர்ப்பு சக்தியில் முழுமையடையும் வரை பலப் பல வித நோய்களிலிருந்து இந்த கொலஸ்ட்ரமே பாதுகாக்கிறது. மெகோனியம் எனப்படும் குழந்தையின் முதன்முதல் கழிவு (அதாங்க...ஆய்) வெளியேற உதவுகிறது. பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை வராமல் தடுக்க அல்லது குறைக்கவும் செரிமான உறுப்புகள் நன்கு வளர்ச்சியடையவும் உதவுகிறது.

வேறென்ன இருக்கு?!:
தாய்ப்பாலில் 0.8% -0.9% ப்ரோட்டினும் 4.5% கொழுப்பும் 7.1% கார்பொஹைட்ரேட்டும் 0.2% மினரல்களும் இருக்கின்றன.
ப்ரோட்டின் குழந்தைக்கு எதிர்காலத்தில் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

நினைத்தாலே இனிக்கும்:
குழந்தைக்குப் பசிக்குமோ என்று தாய் நினைத்தாலே பால் சுரக்க ஆரம்பிக்கிறது. குழந்தைக்கு எவ்வளவு பாலூட்டப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு பால் சுரக்கிறது. சிலர் பால் சுரக்கவில்லை... என்றெல்லாம் சொல்வார்கள்...அதற்குரிய காரணம் நாம் செய்யும் தவறில்தான் இருக்கிறதே ஒழிய இயற்கையின் மீது எந்த தவறுமில்லை. பால் சரியாக சுரக்காததற்கு காரணங்களாக பாலூட்டும்போது குழந்தையைச் சரியாக ஏந்தாமலிருப்பது, குழந்தை சரியாக குடிக்காமலிருப்பது, தாய் ஏதாவது அதிக வீரியமுள்ள மருந்து உட்கொள்வதின் அல்லது உட்கொண்டதின் பக்கவிளைவு ஆகியவையே தவிர, பால் சுரக்க உதவும் அமைப்பு குறையில்லாமலேயே படைக்கப்பட்டிருக்கிறது.

சும்மா வச்சு வச்சு குடிக்கலாம்:
தாய்ப்பலில் என்னை ஈர்த்த மற்றொரு சாராம்சம் அதை பம்ப் செய்து குளிரூட்டியில் சேமித்து வைத்து உபயோகப்படுத்தலாம் என்பது தான்.
அறை வெப்பத்தில் ஆறிலிருந்து எட்டு மணிநேரமும் குளிரூட்டியில் 4°C என்றால் ஐந்து நாட்களும் -15°C என்றால் இரண்டு வாரங்களும் இரண்டு கதவுகள் கொண்ட குளிரூட்டியில் -18°C என்றால் மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை வைத்திருந்து உபயோகப்படுத்தலாம்.
எப்பொழுதும் ஃப்ரெஷ்:
தாய்ப்பால் மட்டுமே ஊட்டப்படும் குழந்தைக்கு தாகமெடுக்காது. அதனால் தண்ணீர் புகட்ட தேவையில்லை. குழந்தைக்கு எந்தவித உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் தாய்ப்பாலை நிறுத்தக்கூடாது. அதிலேயே அந்த நோய்க்கான மருந்திருக்கலாம். அப்படியே குழந்தை சிறிது நாள்களுக்கு பால் குடிக்கவில்லையென்றால் தாய்ப்பால் சுரப்பது நின்றுவிடாது. மறுபடி தாய்ப்பாலூட்ட ஆரம்பிக்கும்போது மீண்டும் ஃப்ரெஷாகவே தரும் ஆற்றலுடையது தாயின் உடல். எந்த ஆறும் வற்றலாம் தாய்ப்பாலாறு குழந்தை குடிக்க குடிக்க வற்றாத ஆறு என்றே சொல்லலாம்.

இங்கு கூறப்பட்ட தகவல்கள் பெரும்பாலும் தாய்ப்பால் மட்டுமே புகட்டப்படும் குழந்தைகளுக்கே பொருந்தும்.

ஷ்..அப்பா.... இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்... குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் புற்றுநோயிலுருந்து பாதுகாப்பு போன்ற பல நன்மைகளைக் கொடுக்கும்  தாய்ப்பால் பற்றி நிறைய கண்டுபிடிச்சு வச்சிருக்காங்க... நான் முழு நேர விஞ்ஞானியாகும்போது அவங்களோட ஆராய்ச்சி முடிவுகளை இன்னும் கொஞ்சம் துருவிக்கலாம்னு (அட.. ஆமா..தேங்காய் துருவணும்..:( ) இத்தோட முடிச்சுக்கறேன்.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது தாய்ப்பாலுக்கு மட்டும் பொருந்தாதோ?!