Tuesday, April 21, 2015

புகைப்பவர்களே.. இதோ உங்கள் முன்மாதிரி!

2009ல் முகேஷ் ஹரனே என்ற 24 வயதே ஆன இளைஞர் புகையிலை உபயோகத்தால் வாயில் புற்றுநோய் உருவாகி அவதிப்பட்டார். சிறு வயதிலேயே குடும்பத்திற்காக உழைப்பதற்காக நகரத்தினுள் வந்தவருக்குக் குட்கா சுவைக்கும் பழக்கம் ஏற்பட்டது. குட்கா முகேஷ் என்று அதிகம் அறியப்பட்டார். அதிகமில்லை. ஒரே ஒரு வருடப் புகைப்பழக்கம் வாய்ப்புற்றுநோயை அளித்தது. அறிந்தோ அறியாமலோ தான் செய்த ஒரு செயலால் தன் வாழ்வை அழித்த புற்றுநோய், தன் எதிரிக்குக்கூட நிகழக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், அறுவை சிகிச்சைக்குச் சிறிது நேரத்திற்கு முன் உலக மக்கள் நலனுக்காக, தொண்டையில் பொருத்தப்பட்ட உணவுக்குழாயுடன் புகையிலையால் தான் சந்தித்த இன்னல்களைத் திக்கித்திணறிக் கூறி முடித்தார். அறுவைசிகிச்சைக்குப் பிறகு அவரது குரலைத் தொடர்ந்து உயிரும் பறிபோனது.


இந்த விழிப்புணர்வு வீடியோவை இந்தியாவின் எதிர்காலம் (இளைஞர்கள்) அதிகம் சூழும் சினிமா தியேட்டர்களில் ஒளிபரப்பப்பட்டது. இன, மொழி பேதமின்றி மக்களின் கண்ணீர் சுரப்பிகளைத் தூண்டிவிடும் முகேஷின் அவ்வார்த்தைகளுக்கு அவர்கள் அளித்த பதில் என்ன தெரியுமா? விசிலடித்தது. முகேஷிற்கு இத்தகையவர்கள் மீதிருந்த அக்கறைக்கு, அவர்கள் அளித்த மதிப்பு இதுதான். ஓர் உயிர் மீது இவர்களுக்கு இருக்கும் கரிசனம் இதுதான். இவர்களிடம் மதிப்பையும் கரிசனத்தையும் எதிர்பார்த்தது முகேஷின் தவறுதான். 

தம் குடும்பத்தின் ஒரே வருமானத்தையும் இழந்த முகேஷ் குடும்பத்தினர், இந்திய சுகாதாரத்துறை தயாரித்த இந்த வீடியோவை உலகம் முழுவதும் ஒளிபரப்புவதற்கு எந்தப் பிரதிபலனும் பெற்றுக்கொள்ளாதது, அவரது குடும்பத்தினரின் பெருந்தன்மையையும் சமூக அக்கறையையும் பிரதிபலிக்கிறது.

புகையிலைப் பழக்கத்தால் வருடத்தில் மில்லியன் கணக்கில் இந்திய மக்கள் உயிரிழக்கின்றனர். அதிலும் 90% மரணங்கள் (புகை வராத) குட்கா, பான் போன்றவற்றால் ஏற்படுகின்றன. சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியர்கள் அதிகளவில் புகையிலையால் விளையும் மரணம் எய்துகின்றனர். 

புகையிலை கிடைக்கும் வடிவங்களில் சில

முகேஷைத் தொடர்ந்து, 22 வயதில் அதே புகையிலையின் அகோர வாயினுள் அகப்பட்டார் சுனிதா தோமார். 22 வயதில் புகையிலை புற்றுநோயை வரவழைக்குமென்று அவருக்கிருந்த அறியாமை, இந்திய அரசு மக்களுக்கு அளிக்கும் விழிப்புணர்வின் அளவைத் தான் எடுத்துக்காட்டுகிறது. நான்கு வருடங்களுக்குப் பிறகு வாய்ப் புற்றுநோயாளி ஆனார். தன் புகையிலைப் பழக்கம் இப்படி பூதாகாரமாகி நின்றதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். தன் ஒரு பக்கக் கன்னமும் தாடையும் நீக்கப்படவேண்டிய நிலைக்குக் காரணம், புகையிலைப் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை, மனிதக்கண்களுக்குப் புலப்படாத நிலையில் இருப்பது தான் என்று குரல் கொடுத்தார். 

அபாயகரமான வேதியியல் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகள் அளிக்கப்பட்டார். இரண்டே ரூபாயில் கிடைக்கும் புகையிலையின் பாதிப்புகள் கோடி ரூபாய் அளவில் இருப்பதைக் கண்டு வெதும்பினார்.

தான் அனுபவித்த வேதனைகள் இனியும் யாருக்கும் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற உயர் நோக்கில், தன் முகத்தையே இந்தியாவில் புகையிலைக்கான முகமாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார் சுனிதா. புகையிலைக்குப் பிறகான இவரது வாழ்க்கையைப் படமாக்கி இந்திய அரசு வெளியிட்டது. பார்ப்பதற்குப் பகீரென இருந்த இவரது முகம், புகையிலை உபயோகப்படுத்தும் ஒருவர் உள்ளதையேனும் அசைத்தாலே சுனிதா வெற்றியடைந்துவிடுவார். 

கடுமையான போராட்டங்களின் பிறகு, கடந்த ஏப்ரல் 1, 2015 அன்று உயிர் நீத்தார். அத்தனை உடல், மன வேதனைகளின் இடையிலும் மரணத்திற்கு ஒரு சில தினங்கள் முன்பு, மத்திய அமைச்சர் திலிப் காந்தி  வெளியிட்ட “புகையிலைக்கு புற்றுநோய்க்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை” என்ற அபத்தமான அறிக்கையினை எதிர்த்துத் தக்க பதிலடி கொடுத்து இந்தியப் பிரதமருக்குக் கடிதம் அனுப்பினார் சுனிதா.

புகையிலைப் பாக்கெட்டுகளில் இருக்கும் கண்ணுக்குப் புலப்படாத எச்சரிக்கை வாசகங்கள் இன்னும் பெரிதாகவும் வலிமை வாய்ந்ததாகவும் பொறிக்கப்பட நாடு முழுதும் 38, 740 கையெழுத்துகளைத் திரட்டினார் இச்சாதனைப் பெண்மணி. 

தன்னைப் பற்றி சிறிதும் வருந்தாமல் சுற்றி வாழ்பவர்களின் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு துணிச்சலுடன் தம்மை அடையாளப்படுத்தி சுனிதாவும் முகேஷும் குரல் கொடுத்தனர். தன்னை ஒருவரேனும் பின்பற்றினால் மனமகிழ்ந்து பேருவகைக் கொள்ளும் இவ்வுலகில் தன்னைப் போல் யாரும் வாழ்ந்திடக்கூடாது என்ற எண்ணம் கொண்டு மக்கள் நலத்தையே பெரிதாகக் கருதும் சுனிதாக்கள், முகேஷ்களின் இடையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

எந்த ஒரு துறையிலும் அதிகபட்ச எல்லையைத் தொட்டு சாதனை புரிந்த ஒரு முன்னோடி இருப்பார். அத்துறையைச் சார்ந்த பலருக்கும் அவர் பெற்ற இடமே குறிக்கோளாக இருக்கும். அதை நோக்கியே அவர்களது திட்டமிடுதல் இருக்கும். புகையிலையை (எந்த வடிவிலும்) புகைப்பவர்களுக்கு முன்னோடி யார்? அவர்களது குறிக்கோள் என்ன? அவர்கள் அடைய விரும்பும் இடம் என்ன? தம் சந்ததிகளுக்கு விட்டுச்செல்லும் சொத்து என்ன? நாடு எனக்கென்ன செய்தது என்று கேட்கும் இவர்கள் நாட்டு மக்களுக்கு அளிப்பது என்ன?

சிந்திப்போம்..மாறுவோம். மாற்றுவோம்.

முகேஷ் ஹரனே பிரச்சார வீடியோ
சுனிதா தோமர் பிரச்சார வீடியோ

தகவல்: இணையம்

No comments: