Sunday, April 15, 2012

என்றென்றும் வற்றாக் கிணறு - 2

என்றென்றும் வற்றாக் கிணறு - 1

(புஹாரி 3364) இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறை ஆணையின் படி தமது இரண்டாவது மனைவி ஹாஜரையும் சிலமாதங்களேயான கைக்குழந்தை இஸ்மாயீலையும் தனியே ஆளரவமற்ற பாலைவனத்தில் கஃபாவின் அருகே ஓரிடத்தில் விட்டுவிட்டுச் செல்கிறார். இறைவனின் உத்தரவென்பதால் இப்ராஹீம் (அ.ஸ) அவர்களும் வேறுவழியின்றி திரும்பிப் பார்க்காமல் சென்றுவிடுகிறார். ஹாஜர் (அ.ஸ) அவர்களும் இறை உத்தரவை மனதார ஏற்றுக்கொள்கிறார். குழந்தை பசியில் அழும்போது தான் கையில் கொண்டுவந்த தண்ணீரைக் குடித்து குடித்து குழந்தைக்கு பாலூட்டுகிறார். சிறிது நேரத்தில் அத்தண்ணீரும் தீர்ந்துவிடுகிறது. தண்ணீருக்காக இருபக்கங்களிலுமிருக்கும் மலைகுன்றுகளான சஃபா மற்றும் மர்வா ஆகியவற்றின் மீதேறி யாரும் தென்படுகிறார்களா என்று நடந்தும் ஓடியும் தேடுகிறார். இடையிடையில் குழந்தையின் நிலையையும் ஒரு எட்டு பார்த்துச் செல்கிறார்.(இரு குன்றுகளின் தூரம் 450மீ. அப்படிப் பார்த்தால் மொத்தம் 3.15 கி.மீ. அவர் கடந்திருக்கிறார். மாஷா அல்லாஹ்... இறைவன் தான் அவருக்கு அந்த உறுதியைத் தந்திருக்க வேண்டும்.) இதையே ஹஜ்/உம்ரா செய்யும்போது இவ்விரு மலைக்குன்றுகளினிடையே நடந்தும் ஓடியும் செல்ல கடமையாக்கப்பட்டுள்ளது.

சஃபா மலைக்குன்று

மர்வா மலைக்குன்று


               
(ஏன் ஓடவும் நடக்கவும் செய்யவேண்டும்? ஏனென்றால் ஹாஜர் (அ.ஸ). மலைகுன்றின்மீதேறும்போது குழந்தையின் நிலையை அவர்களால் காணமுடிந்தது. நிலத்தில் செல்லும்போது குழந்தையைக் காண முடியவில்லை. அதனால் நிலத்தில் ஓடியும் மலைகுன்றுகலில் நடந்தும் தன் தேடுதலைத் தொடர்கிறார்.)

இவ்வாறு ஏழாவது முறை தேடிவிட்டு குழந்தையைப் பார்க்க குழந்தையின் அருகே வந்தவர் ஒரு குரலைக் கேட்கிறார்.அது வானவர் ஜிப்ரீல் (அ.ஸ.) அவர்களுடையதே. ஹாஜர் அ.ஸ. அவர்களுக்கு அல்லாஹ் தன்னைச் சார்ந்தோரைக் கைவிட மாட்டான் என்று நம்பிக்கையும் இக்குழந்தையும் இக்குழந்தையின் தந்தையும்  பின்னாளில் இறையில்லத்தை மேம்படுத்துவதில் ஆற்றவிருக்கும் பங்கு பற்றி நற்செய்தியும் தெரிவித்தவர் தம் இறக்கையால் மணலை தோண்ட நீர் தோன்றுகிறது. நீர் பெருக்கெடுத்து ஓடவே ஹாஜர்(அ.ஸ.) அவர்கள் தன்னையும் அறியாமல் நில் நில் (அரபியில் ஸம்ஸம்) எனக் கூறிக்கொண்டே தமது கையால் அதைச் சுற்றி ஒரு தடுப்பும் எழுப்புகிறார்.

(இதையே பிற்காலத்தில் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஹாஜர் (அ.ஸ.) அவர்கள் மட்டும் தடுப்பு எழுப்பவில்லையாயின் ஸம்ஸம் கிணறாக இல்லாமல் ஒரு ஓடுகிற நீரோடையாக நமக்குக் கிடைத்திருக்கும் என்று நவின்றுள்ளார்கள். (புஹாரி 2368).)

பின்னர் அத்தண்ணீரைக் குடித்த ஹாஜர் (அ.ஸ.) அவர்கள் குழந்தைக்கு அதன் வயிறு நிறைய பாலூட்டுகிறார். சில நாட்கள் கழித்து அவ்வழியில் வந்த ஜுர்ஹும் எனும் குழுவினர் அங்கே இருக்கும் கதா எனும் கணவாயினருகே தங்கலானார்கள். அந்த ஆளரவமற்ற பாலைவனத்திலும் தண்ணீரைச் சுற்றியே வட்டமடிக்கும் பறவைகள் பறப்பதைக் கண்டு அவ்விடத்தில் நீர்நிலை இருப்பதை அறிந்து கொள்கிறார்கள். ஸம்ஸம் கிணற்றையும் அருகில் ஹாஜர் (அ.ஸ.) அவர்களையும் காண்கிறார்கள். அவர்களிடம் வந்து அவ்விடத்தில் தங்கிக்கொள்ள அனுமதி கேட்கிறார்கள். அனுமதியளித்த ஹாஜர் (அ.ஸ.) அவர்கள் ஸம்ஸம் கிணற்றின் மீது உங்களுக்கு உரிமையில்லை என்று சொன்னதையும் ஏற்ற ஜுர்ஹும் கூட்டத்தினர் அவ்விடத்திலேயே தங்களது இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். (புஹாரி. 3364)

பின்னாளில் ஜுர்ஹும் கூட்டத்தினரினிடத்தில் ஏற்பட்ட நேர்மையற்ற தன்மையினால், ஸம்ஸம் கிணற்றின் அருமைகளையும் அவசியத்தையும் அறிந்தவர்களாகவே, அக்கிணற்றையே மூடிவிட்டார்கள். பின்னர் சில காலங்களாக ஸம்ஸம் கிணறு மறக்கப்பட்டதாகவே இருந்துள்ளது.

முஹம்மது (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களின் காலம் வரை அக்கிணற்றைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இறையில்லம் கஃபாவிற்கு புனிதப்பயணம் வரும் மக்களுக்கு தேவையான தண்ணிரை கொடுக்கும் பொறுப்பு மூதாதையர்களிடமிருந்து அப்துல் முத்தலிப் அவர்களிடம் வந்தது. அருகில் நீர்நிலை ஏதுமில்லாத நிலையில் அப்பணி மிகவும் சிரமமாகயிருந்தது. அச்சமயத்தில் அப்துல் முத்தலிப் அவர்கள் ஒரு கனவு கண்டார்கள். அக்கனவில் முதல் இரண்டு நாட்களுக்கு 'இனிமையானதைத் தோண்டு' எனவும் 'அருளுக்காகத் தோண்டு' எனவும் அறிவிக்கப்பட்டதே தவிர ஸம்ஸம் கிணற்றின் இடம் சரியாக அறிவிக்கப்படவில்லை. மூன்றாம் நாள் கனவில் அக்கிணற்றின் இடமும் பெயரும் தெளிவாக அறிவிக்கப்பட்டதும் மறுநாள் காலையில் தன் மகன் அல் ஹாரிதுடன் அக்கிணற்றை புணரமைத்தார்கள். இதையறிந்த மற்ற மக்காவாசிகள் ஸம்ஸம் கிணற்றின் மீது உரிமை கொண்டாடினார்கள். அதற்கு அப்துல் முத்தலிப் அவர்கள் மறுக்கவே தங்களிடையே நியாயமான தீர்ப்பு வழங்க ஒருவரைக் காண இரு குழுவினரும் பயணம் மேற்கொள்கின்றனர். அந்த காலத்தில் ஒட்டக பயணம் பல நாட்கள் நீளும். அப்படி செல்லும்போது அவர்களிடையே இருந்த தண்ணிர் தீர்ந்தது. கடுமையான தாகத்தால் மரணத்தை அவர்கள் அஞ்சிய அச்சமயம் அப்துல் முத்தலிப் அவர்களின் ஒட்டகத்தின் காலடியில் நீர்ரூற்று தோன்றவே இது இறைவனின் பக்கமிருந்து அப்துல் முத்தலிபிற்கு சாதகமான தீர்ப்பு வந்ததாக இரு குழுவினரும் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு ஸம்ஸம் கிணற்றின் பொறுப்பு, அதாவது புனித பயணமாக கஃபாவிற்கு வரும் மக்களுக்கு ஸம்ஸம் கிணற்றிலிருந்து நீர் புகட்டும் பொறுப்பு அப்துல் முத்தலிபிடமே ஒப்படைக்கப்பட்டது. மற்ற மக்கவாசிகளும் ஸம்ஸம் தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

பின்குறிப்புகள்:

1.  இப்ராஹிம் (அ.ஸ.) அவர்கள் தமது இரண்டாம் மனைவியையும் குழந்தையையும் பாலைவனத்தில் விட்டு வந்தாலும் அவர்கள் மனம் அவர்களைச் சுற்றியே வந்தது. அவர்களுக்காக மிகவும் கவலையுடன் இறைவனிடம் துஆ செய்தவர்களாகவே இருந்தார்கள். அத்துஆவானது:

14:37. “எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!”

2. ஸம்ஸம் கிணறு உருவான வரலாறு மட்டுமே புகாரியில் காணப்படுகிறது. அதன் பின்னர் வரும் வரலாறு இப்னு கதிரில் இடம்பெற்றுள்ளது.

3. ஸம்ஸம் தண்ணீரின் அதிசய குணங்களை அறிந்த எத்தனையோ முஸ்லிமல்லாத சகோதர,சகோதரிகளும் முஸ்லிம்களிடமிருந்து ஸம்ஸம் தண்ணீரைக் கேட்டு பெற்று குடிக்கிறார்கள். ஆனால், கபட வேஷமிடுபவர்களால் ஸம்ஸம் தண்ணீரை ஓரளவிற்கு மேல் அருந்தமுடிவதில்லை. (இப்னு மாஜா 1017)

4. சஹீஹ் முஸ்லிம் எண். 2473 யில் முஹம்மது (ஸல்) அவர்களிடம் கஃபாவின் அருகில் தொடர்ந்து தங்கியிருந்த அபு தர் என்பவர் முப்பது நாட்களுக்கு வேறு எந்த உணவுமின்றி ஸம்ஸம் தண்ணீரை மட்டுமே அருந்தியதாகத் தெரிவிக்கிறார்.

7 comments:

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ்,

மாஷா அல்லாஹ் அத்துணையும் அருமையான தகவல்கள்.ஜம் ஜம் கிணறை பற்றி தெரியாத ஒரு சில விசயங்களையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.ஜஜாகல்லாஹ் ஹைர் சகோ.அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்தவனாக

உங்கள் சகோதரன் முஹமத் இக்பால்

enrenrum16 said...

வாலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ முஹம்மது இக்பால்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

enrenrum16 said...

என் ப்ளாக்கில் இருந்த பழைய பாலோவர்ஸ் கேஜட் கோளாறு ஆகிவிட்டதால் புதியதாக ஒரு கேஜட் சேர்த்திருக்கிறேன். ஏற்கனவே பினபற்றியவர்கள் மீண்டும் ஒருமுறை பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். புதியதாக பின்பற்றுபவர்களையும் அன்புடன் வரவேற்கிறேன்.

Jaleela Kamal said...

மிக அருமையான தகவலை பகிர்ந்து இருக்கீறீர்கள்

enrenrum16 said...

அலைக்கும் ஸலாம் ஜலீலாக்கா... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Anonymous said...

Muslim traditions say that Hagar ran seven times back and forth in the scorching heat between the two hills of Safa and Marwah, looking for water. Getting thirstier by the second, Ishmael scraped the land with his feet, where suddenly water sprang out. There are another concept stating God sending his angel, jibrel (a.s), who kicked the ground with his heel and the water rose.


Which one is correct could you pls clarify?

enrenrum16 said...

riddle.tom2010@yahoo.com

//பிறகு அவர்கள் மர்மாவின் மீது ஏறி நின்று கொண்டபோது ஒரு குரலைக் கேட்டார்கள். உடனே சும்மாயிரு என்று தமக்கே கூறிக்கொண்டார்கள். பிறகு காதைத் தீட்டிக் கொண்டு கேட்டார்கள். அப்போது (அதே போன்ற குரலைச்) செவியுற்றார்கள். உடனே (அல்லாஹ்வின் அடியாரே!) நீங்கள் சொன்னதை நான் செவியுற்றேன். உஙகளிடம் உதவியாளர் எவரேனும் இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்றுஙகள்) என்று சொன்னார்கள். அப்போது அங்கே தம் முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம் (கிணற்றின் அருகே கண்டார்கள். அந்த வானவர் தம் குதிகாலால் (மண்ணில்) தோண்டினார். ...அல்லது தமது இறக்கையினால் தோண்டினார்கள் என்று அறிவிப்பாளர் சொல்லியிருக்கலாம்... அதன் விளைவாக தண்ணீர் வெளிப்பட்டது. உடனே ஹாஜர் (அலை) அவர்கள் அதை ஒரு தடாகம் போல் (கையில்) அமைக்கலானார்கள் அதை தம் கையால் இப்படி (ஓடிவிடாதே! நில் என்று சைகை செய்து) சொன்னார்கள். இந்த தண்ணீரிலிருந்து அள்ளித் தம் தண்ணீர்ப் பையில் போட்டுக்கொள்ளத் தொடங்கினார்கள். அவர்கள் அள்ளியெடுக்க எடுக்க அது பொஙகியபடியே இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் இஸ்மாயீல் (அலை) அவர்களின் அன்னைக்கு கருணைபுரிவானாக! ஸம்ஸம் நீரை அவர் அப்படியே விட்டுவிட்டிருந்தால்... அல்லது அந்த தண்ணீரிலிருந்து அள்ளியிருக்காவிட்டால்... ஸம்ஸம் நீர் பூமியில் ஓடும் நீர் ஊற்றாக மாறிவிட்டிருக்கும் என்று சொன்னார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். பிறகு அன்னை ஹாஜர் அவர்கள் (ஸம்ஸம் தண்ணீரை) தாமும் அருந்தி தம் குழந்தைக்கும் ஊட்டினார்கள்.//

3364ம் எண் புகாரியின் இந்த ஹதீஸைப் பார்த்தால் வானவரின் குதிகால் அல்லது இறக்கை வைத்து மண்ணின் தோண்டியதானாலேயே ஸம்ஸம் நீரூற்று வெளிப்பட்டது என்பது நமக்குத் தெளிவாகிறது.

Hope your doubt has been clarified. Thanks for visiting.