Thursday, January 31, 2013

அண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 3

அண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 2
அண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 1

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது நபி(ஸல்) அவர்கள் குறைஷிகளின் விருப்பங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்கள். அவ்வாறே ஒப்பந்தமும் தயாரானது. இதனைக் கண்ட சஹாபாக்கள் பலருக்கும் "நாம் ஏன் இந்த அளவிற்குக் குறைஷிகளிடம்  தாழ்ந்து போக வேண்டும்" என வருத்தமடைந்தார்கள். இதனைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டும் திருப்தியடையாத வீரத்திற்கும் கோபத்திற்கும் விவேகத்திற்கும் பெயர் பெற்ற உமர்(ரலி) அவர்கள் கூறுவதாக இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள கருத்தாவது:


புகாரி 2731 - பிறகு நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்று, அபூ பக்ரே, இவர்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் துதரல்லவா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்; இறைத்தூதர் தான்" என்று சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்" என்றார்கள். நான், 'அப்படியென்றால் இதை ஒப்புக் கொண்டு நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நண்பரே! இறைத்தூதர், தம் இறைவனுக்கு மாறு செய்ய முடியாது. அவனே அவர்களுக்கு உதவக் கூடியவன். அவர்களின் சுவட்டையே நீங்கள் பின்பற்றுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் சத்திய வழியில் தான் இருக்கிறார்கள்" என்று கூறினார்கள். நான், 'அவர்கள் நம்மிடம், 'நாம் இறையில்லத்திற்குச் சென்று அதை வலம்வந்தோம்" என்று சொல்லவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்; (சொன்னார்கள்.) ஆனால், 'நீங்கள் இந்த ஆண்டே அங்கு செல்வீர்கள்' என்று உங்களிடம் சொன்னார்களா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை (அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை)" என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'நீங்கள் நிச்சயம் அங்கு சென்று இறையில்லத்தை வலம்வரத்தான் போகிறீர்கள்" என்று கூறினார்கள்.
(ஸுஹ்ரீ(ரஹ்) உமர்(ரலி) தொடர்ந்து சொன்னதாகக் கூறுகிறார்கள்:)
..நான் இப்படி (அதிருப்தியுடன் நபி(ஸல்) அவர்களிடம்) பேசியதற்குப் பரிகாரமாக பல வணக்கங்களைப் புரிந்தேன். ....


சுபுஹானல்லாஹ்..... குறைஷிகள் மேலிருந்த கோபத்தையும் அவர்களிடம் தாழ்த்து போய்விட்டதாகக் கருதிய சஹாபாக்களின் விரக்தியையும் சாந்தமான சில வார்த்தைகளால் அமைதிப்படுத்திவிட்டார்கள் அபூபக்ர்(ரலி). நபி(ஸல்) அவர்களின் எந்தவொரு செயலையும் காரணமின்றி இறைவன் நிறைவேற்றமாட்டான் எனும் அபார நம்பிக்கையில் நன்கு ஊன்றியிருந்ததாலேயே இத்தகைய தெளிவு அபூபக்ர்(ரலி) அவர்களிடம் அமையப்பெற்றிருந்தது.

ரோமப் பேரரசன் ஹிராக்ளியஸ் மதீனாவின் மீது போர்த்தொடுக்கத் தயாரான போது மதீனாவின் நிலைமையோ மிகவும் பலகீனமாக இருந்தது; பஞ்சத்தினால் மக்கள் மிகவும் வருந்திய சமயத்தில் போரில் பங்கு பெற இயலாதவர்களாக இருந்தனர். இந்நிலையிலும் ஸஹாபாக்கள் தமது இறையச்சத்தை நிலைநாட்டியவர்களாக இருந்தனர். பொருள் வசதி படைத்தவர்கள் தம்மாலான செல்வங்களைப் போருக்காகக் கொடுக்க முன்வந்தார்கள். பல சமயம் இத்தகைய அன்பளிப்புகள் வழங்குவதில் அபூ பக்ர்(ரலி) அவர்களே முன்னோடியாக இருந்திருக்கிறார்கள். இம்முறை அவர்களை மிஞ்சிவிட எண்ணிய உமர்(ரலி) அவர்கள் தமது சொத்தில் பாதியினை நபி(ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் முறை வந்த போது அவர்களது அன்பளிப்பைப் பெற்றுக்கொண்ட நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் செல்வமனைத்தையும் கொடுத்து விட்டீர்களே.... உமது குடும்பத்தினருக்காக எதை விட்டு வந்திருக்கிறீர்கள்’ என வினவினார்கள். ‘அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விட்டு வந்திருக்கிறேன்’ என்றார்கள். இதனைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள் ‘இனி எப்போதும் அபூ பக்ர்(ரலி) அவர்களை நான் மிஞ்சவே முடியாது’ என்றார்கள். (இப்போர் உஸ்ராப்போர் எனவும் தபூக் போர் எனவும் அழைக்கப்படுகிறது. இப்போர் சமாதானப் பேச்சுவார்த்தையினால் தவிர்க்கப்பட்டது.)
ஹுதைபிய்யா உடன்படிக்கை நிறைவேறிய அடுத்த வருடம் முதல் ஹஜ் நிறைவேற்றப்பட்டது. நபிகளாரின் உடல்நலக்குறைவினால் அபு பகர்(ரழி) அவர்கள் இம்முதல் ஹஜ்ஜுக்கு தலைமை தாங்கினார்கள்.இஸ்லாமிய வரலாற்றில் இப்புனித பயணம் ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்) என இறைவனால் அடையாளம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹஜ்ஜின்போது அபூபக்ர்(ரலி) அவர்களுடைய உரையின் முக்கிய அம்சங்களாவன பின்வருமாறு :

1.இணைவைப்பாளர்களுடன் ஏற்படுத்திய ஒப்பந்தங்களை (நான்கு மாதங்களுக்குப் பிறகு)  முறித்தல் (9:3)
2. இணை வைப்பவர்கள் ஹஜ் செய்வதை விட்டும் தடுத்தல்
3.இஸ்லாத்திற்கு முன் செய்ததைப் போல் நிர்வாணமாக இறையில்லத்தை வலம் வருவதை தடை செய்தல்
(புகாரி 4657, 369 )

ஒரு நாள் நபியவர்கள் உடல் மிகவும் பலவீனமடைந்த நிலையில் தன தோழர்களுடன் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். "இறைவன் தன அடியான் ஒருவனிடம் இவ்வுலகம் வேண்டுமா அல்லது தன்னிடம் உள்ளது வேண்டுமா எனக் கேட்டபோது இறைவனிடம் உள்ளதையே அவ்வடியான் தேர்ந்தெடுத்துக் கொண்டான்" என அவர்கள் சொன்னபோது அபூபக்ர் அவர்கள் துக்கத்தினால் அழலானார்கள். அவ்வடியான் முஹம்மது நபிஎன்பதையும் அவர்கள் விரும்பிக்கேட்டது மரணத்தை என்பதையும் மற்ற சஹாபாக்கள் பின்னர்தான் தெரிந்து கொண்டார்கள். ஆனால் அபூபக்ர அவர்களோ அறிவில் சிறந்தவர்களாக விளங்கினார்கள்.(புகாரி 466). நபிகளாரின் வார்த்தைகளை எளிதில் புரிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களது நட்பு ஆழமாகயிருந்தது.

தமது நண்பரை ஆசுவாசப்படுத்திய நபி(ஸல்) அவர்கள் "அபூபக்ர அவர்களை விட  உதவிகரமாக இருந்த ஒருவரை நான் அறிய மாட்டேன்" என்றும் கூறினார்கள். இதன்பின் முஹாஜிர்களுக்கு அன்சாரிகள் செய்த உபகாரங்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காகத் துஆ செய்தார்கள்.

மதீனாவில் கட்டப்பட்ட மஸ்ஜிதுன் நபி என அழைக்கப்படும் நபியின் பள்ளியின் நபியவர்கள் மட்டுமே இமாமாக (தொழுகையைத் தலைமை தாங்கி நடத்துபவராக) இருந்து வந்தார்கள். நபியவர்கள் நோய்வாய்ப்பட்ட போது அபூபக்ர்(ரலி) அவர்கள் இமாமாக இருப்பதையே பெரிதும் விரும்பினார்கள். இச்சமயத்தில் நபி(ஸல்) அவர்களின் மனைவியும் அபூபக்ர்(ரலி) அவர்களது மகளுமாகிய ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் பின்வருமாறு கூறுவது புகாரி-712 ல் இடம்பெற்றுள்ளது. 

712. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் நோய்வாய்ப் பட்டிருந்தபோது பிலால்(ரலி) வந்து தொழுகை பற்றி அவர்களிடம் அறிவித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அபூ பக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்" என்றார்கள். அதற்கு நான் அவர் இளகிய மனம் படைத்தவர். உங்கள் இடத்தில் அவர் நின்றால அழுதுவிடுவார். அவரால் ஓத இயலாது என்று கூறினேன். 'அபூ பக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்" என்று மீண்டும் கூறினார்கள். நானும் முன் போன்றே கூறினேன். நானும் முன் போன்றே கூறினேன். மூன்றாவது அல்லது நான்காவது முறை 'நீங்கள் யூஸுஃப் நபியின்தோழியராக இருக்கிறீர்கள். அபூ பக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்" என்றனர். (அதன்பின்னர்) அபூ பக்ர் தொழுகை நடத்தினார். நபி(ஸல்) அவர்கள் கால்கள் தரையில் இழுபடுமாறு இரண்டு  மனிதர்களுக்கிடையே தொங்கியவ்ர்களாக (ப்பள்ளிக்குச்) சென்றனர். அவர்களைக் கண்ட அபூ பக்ர்(ரலி) பின்வாங்க முயன்றார்கள். தொழுகையை நடத்துமாறு அவருக்கு நபி(ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். அபூ பக்ர்(ரலி)யின் வலப்புறமாக நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்தனர். நபி(ஸல்) அவர்கள் கூறும் தக்பீரை அபூ பக்ர்(ரலி) மற்றவர்களுக்குக் கேட்கச் செய்தார்கள். 


அபூ பக்ர்(ரலி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற பல தொழுகைகளின் ஒன்றிற்குப் பின் நபியவர்கள் பலத்த குரலில் உரையாற்றுகையில்         "அனைவரையும் விட அதிகமாக அபூபக்ர்(ரலி) அவர்களுடைய செல்வத்திற்கும் நட்பிற்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். எவரேனும் ஒருவரை என்    நண்பராக ஆக்கிக்கொள்ள முடியுமென்றால் அபூபக்ரையே எடுத்துக்கொள்வேன். ஆனால் இஸ்லாத்தின் உறவே நம் நட்பிற்குப் போதுமானதாகும்" என கூறினார்கள்.

ஹிஜ்ரி 11 ரபியுல் அவ்வல் மாதத்தில் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையேயான அந்த அழகிய நட்பும் நபிகளாரின் மரணத்தினால்  முடிவுக்கு வந்தது. (இன்னாலில்லாஹி ....) இத்தருணத்தில் அபூபக்ர் (ரழி) அவர்கள் வெளியூரில் இருந்தார்கள். இச்செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அவர்கள் மனம் இதை நம்ப மறுத்தது. தாங்க முடியாத மனவேதனையுடன்  உடனடியாக நபியின் மனைவியும் தனது மகளுமாகிய ஆயிஷா(ரழி) அவர்களது வீட்டிற்குச் சென்று செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். கண்களில் நீர்ப்  பெருக்கெடுத்து ஓட செய்வதறியாது திகைத்து நின்றார்கள்.

‘இறைத்தூதர் (ஸல்) அவர்களே! என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும். உங்களது வாழ்வும் மரணமும் புனிதமானவை ஆகும்’ எனத் தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியவர்களாக வெளிவந்தார்கள்.

இச்செய்தியைக் கேள்விப்பட்ட உமர் (ரழி) அவர்கள் துக்கம் தாளாமல் மிகவும் கவலையடைந்தார்கள். அவர்களுக்கு எத்தனை சமாதானம் சொல்லியும் உமர்(ரழி) அவர்கள் இதை நம்ப மறுத்துக்கொண்டிருந்தார்கள் அப்பொழுது அபூபக்ர் (ரழி) அவர்கள் மனிதர்கள் அனைவரும், முஹம்மது நபி(ஸல் உள்பட, மரணத்தை சுவைத்தே தீருவார்கள் எனும் இறைவசனத்தை ஓதலானார்கள்:

3:144. முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.

‘இவ்வசனத்தை நேற்றுதான் நபியவர்கள் ஓதிக்காண்பித்தது போல் இருக்கிறது’ எனக் கருத்துத் தெரிவித்தவர்களாக உமர்(ரலி) அவர்கள் மற்றும் அனைவரும் நபியவர்களின் மரணச்செய்தியை ஏற்றுக்கொண்டார்கள்.

 அபூபக்ர்(ரழி) அவர்கள் கலீஃபாவாக ஆற்றிய சேவைகளை இன்ஷா அல்லாஹ் விரைவில் பார்ப்போம்.

1 comment:

Jaleela Kamal said...

அபுபக்கர் (ரலி ) அவர்களின் தொகுப்புகள் அனைத்தும் அருமையாக தொகுத்த அளித்து இருக்கிறீர்கள்.
இறைவன் நம் அனைவருக்கும் நல் கிருபை புரிவானாக.