அண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 3
அண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 2
அண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 1
நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் யார் கலீஃபாவாகப் பொறுப்பேற்பது குறித்து ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது, முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் இடையில். இஸ்லாத்தின் ஆரம்பம் முதல் இறைவனுக்காகவும் அவனது தூதருக்காகவும் அனைத்துக் கஷ்டங்களையும் எதிரிகளிடம் சொல்லொணா துயரங்களையும் அனுபவித்த காரணத்தினால் முஹாஜிர்களுள் ஒருவருக்கே கலீஃபா பதவி அளிக்கப்பட வேண்டுமென்ற முஹாஜிர்களின் வாதமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் , மக்காவிலிருந்து முற்றும் துறந்தவர்களாக மதீனாவிற்குள் தஞ்சம் புகுந்தவர்களுக்கு அவர்களே எதிர்பாராவண்ணம் அனைத்து உதவிகளையும் புரிந்து நபி(ஸல்) அவர்களின் வியப்பையும் இறைவனின் மகிழ்வையும் பெற்றுக்கொண்ட மதீனத்து அன்சாரிகள் தம்மில் ஒருவர் கலீஃபாவாக வர விரும்பியதும் மறுப்பதற்கிடமின்றி அமைந்திருந்தன.
அண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 2
அண்ணல் நபியின் வழியில் அபுபக்ர் (ரழி) - 1
நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் யார் கலீஃபாவாகப் பொறுப்பேற்பது குறித்து ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது, முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் இடையில். இஸ்லாத்தின் ஆரம்பம் முதல் இறைவனுக்காகவும் அவனது தூதருக்காகவும் அனைத்துக் கஷ்டங்களையும் எதிரிகளிடம் சொல்லொணா துயரங்களையும் அனுபவித்த காரணத்தினால் முஹாஜிர்களுள் ஒருவருக்கே கலீஃபா பதவி அளிக்கப்பட வேண்டுமென்ற முஹாஜிர்களின் வாதமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் , மக்காவிலிருந்து முற்றும் துறந்தவர்களாக மதீனாவிற்குள் தஞ்சம் புகுந்தவர்களுக்கு அவர்களே எதிர்பாராவண்ணம் அனைத்து உதவிகளையும் புரிந்து நபி(ஸல்) அவர்களின் வியப்பையும் இறைவனின் மகிழ்வையும் பெற்றுக்கொண்ட மதீனத்து அன்சாரிகள் தம்மில் ஒருவர் கலீஃபாவாக வர விரும்பியதும் மறுப்பதற்கிடமின்றி அமைந்திருந்தன.
நபி(ஸல்) அவர்கள் தமக்குப்பிறகு கலீஃபாவாக இன்னார்தான் வர வேண்டும் என யாரிடமும் உறுதியான முடிவேதும் சொல்லியிருக்கவில்லை. ஆகையினால் இந்த விவாதம் நெடுநேரம் தொடர்ந்த வண்ணம் அமைந்திருந்து. முஹாஜிர்களில் முக்கியமாக அபூபக்ர், உமர் மற்றும் அபூ உபைதா (ரலியல்லாஹூ அன்ஹுமா) மற்றும் அன்சாரிகளில் ஸாயித் இப்னு தாபித், அன்சாரிகளின் தலைவர் ஸ’அத் இப்னு உபாதா மற்றும் பலர் இடம்பெற்றிருந்தனர். கலீபாவாகப் பதவியேற்க அவரவர் தத்தமது நியாயங்களை எடுத்துரைத்த வண்ணம் நெடுநேரம் இருந்தனர். முடிவாக, “நபி(ஸல்) அவர்கள் ஒரு முஹாஜிர். எனவே முஹாஜிர்களுள் ஒருவரே நமக்குத் தலைவராகப் பதவி ஏற்க வேண்டும். அன்சாரி என்பதன் பொருளே உதவுபவர்கள். அதனால் அன்சாரிகள் என்றும் பிறருக்கு உதவுபவர்களாக இருப்பதே சிறந்தது” என ஒரு முஹாஜிர் ஒருவர் கூறுவதை விட ஸாயித் இப்னு தாயித் (ரலி) எனும் அன்சாரி ஒருவரைக் கூற வைத்து சுமுகமான முடிவைக் கொடுத்தான் இறைவன். இதன்மூலம் அன்சாரிகள் இதுவரை முஹாஜிர்களுக்குச் செய்து வந்த உதவிகள் பிரதிபலன் எதிர்பாராதவையாகவும் இறைவன் ஒருவனுக்காகவே செய்தவை எனவும் நிரூபிக்கப்பட்டது.
முஹாஜிர்களுள் உமர் (ரலி) மற்றும் அபூ உபைதா (ரலி) ஆகியோரை வழிமொழிந்தார்கள் அபூபக்ர்(ரலி) அவர்கள். ஆனால் இறைவனால் குர் ஆனிலும் நபி(ஸல்) அவர்களால் உயர்ந்த விதத்தில் பல இடங்களில் பாராட்டப்பட்டவர்களாகவும் பெயர் பெற்ற அபூபக்ர்(ரலி) அவர்களைத் தவிர தம்மில் அடுத்த தலைவராக வர யாருக்கும் தகுதியில்லை என அவர்கள் இருவரும் கூற, அபூபக்ர்(ரலி) அவர்கள் மறுக்க இயலாதவர்களாக முதல் கலீபாவாகத் தலைமையேற்றார்கள். அதன்பின் அங்கிருந்த அனைவரும் அபூபக்ர்(ரலி) அவர்களிடம் பைஅத் செய்துகொண்டார்கள். பதவியேற்றதும் அபூபக்ர்(ரலி) அவர்களது உரை அவர்களது வரலாற்றில் பெரும்பங்கு வகிக்கிறது. அதாவது:
“ஆட்சிகு வர வேண்டும் என நான் கனவிலும் எதிர்பார்த்ததில்லை. இதற்காக எந்த வித முயற்சியும் நான் இதுவரை செய்ததுமில்லை. மார்க்கப்படி எடுக்கப்படும் என் அனைத்து முடிவிற்கும் ஆதரவு தாருங்கள். மார்க்கத்தில் இல்லாத எந்த புதிய விஷயத்திற்கும் எதிர்ப்பு தெரிவியுங்கள். உங்களில் பலவீனமானவர்கள் என் மீது கடுமை காட்டுங்கள்;பலம் வாய்ந்தவர்கள் என்மீது இரக்கம் காட்டுங்கள்." என்று தமது உரையை அமைத்திருந்தார்கள்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தின் பிறகு தலைமைப் பொறுபேற்ற பிறகு அபூபக்ர்(ரலி) அவர்கள் பல சமுதாய சீர்கேடுகளையும் பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. அவற்றுள் சிலவற்றையும் அவற்றில் அவர்கள் வெற்றிகரமான முடிவைக் கண்ட விதங்களும்:
1. மக்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறுதல்
நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் முஸ்லிம்கள் சிலர் இஸ்லாத்திற்கே முடிவு ஏற்பட்டதாக எண்ணம் கொண்டனர். தமது முந்தைய இணைவைப்பு வணக்கத்திற்கே மாறலாயினர். இது அவர்களது பலகீனமான ஈமான் (இறைபக்தியினால்) உண்டானதாகும். அவர்களுக்கு நேர்வழி காட்டும் பணிகளை அபூபக்ர்(ரலி) அவர்கள் ஒருபுறம் வெற்றிகரமாக நிகழ்த்தி வந்தார்கள்.
2. பொய்த்தூதர்களின் பிரச்சாரங்கள் முறியடிப்பு
இறைத்தூதரின் காலத்திலேயே பல பொய்யர்கள் தாமும் இறைத்தூதர்களென பிரகடப்படுத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர்(ரலி) அவர்களின் காலத்திலும் இவர்களின் பொய்ப்பிரச்சாரங்கள் முறியடிக்கப்பட்டன; இவர்களில் முக்கியமானவர்கள் அஸ்வத் அல் அனஸி, முஸைலமா மற்றும் துலைஹா ஆவர். அஸ்வத் அல் அனஸீ நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே கொல்லப்பட்டான். துலைஹாவுடன் நடந்த போரில் அவன் சிரியாவுக்குத் தப்பிவிட்டான். (பின்பு அங்கேயே முஸ்லிமாகிவிட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது).
நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே பொய்யன் முஸைலமாவின் கடிதத்திற்குத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இவனுடைய செயல்பாடுகள் அனைத்தும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தன. தன்னுடைய சொந்த கற்பனைச் சட்டங்கள் மூலம் சிறிது சிறிதாக மக்களிடையே பிரபலமடைந்த முஸைலமா, நபி(ஸல்) அவர்களின் மரணத்தின் பிறகு தன் பகுதியான யமாமாவை முழுதும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தான். அபூபக்ர்(ரலி) அவர்களின் காலத்தில், மது அருந்துவதையும் விபச்சாரத்தையும் ஆகுமானதாக்கிய, முஸைலமாவுடன் ஏற்பட்ட கடும்போர் பேரிழப்புகளையும் சிறந்த வெற்றியையும் தந்தது. போரின் ஆரம்பத்தில் தோல்வியைச் சந்தித்த முஸ்லிம்கள் புறமுதுகிட்டு ஓடலானார்கள்.அவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க சக வீரர்கள் வீரமுழக்கங்களைக் கூறி நம்பிக்கையூட்டினார்கள். முஸைலமாவைக் கொன்றவர்களில் வஹ்ஷி என்பவரும் ஒருவர். (இவர் நபி(ஸல்) அவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா(ரலி) அவர்களை உஹதுப் போரில் கொன்றவராவார். பிற்காலத்தில் இஸ்லாத்தைத் தழுவி நபி(ஸல்) அவர்களிடம் மன்னிப்பும் கோரினார்.) இப்போரில் பல்வேறு தலைமைகளுடன் படைகளை வெவ்வேறு இடங்களிலிருந்து தாக்கும்படி உத்தரவிட்ட அபூபக்ர்(ரலி) அவர்களின் போர்த்தந்திரமும் காலித் பின் வலீத் அவர்களின் போர்த்திறமைகளும் இவ்வெற்றிக்குப் பெரிதும் உதவின.இந்த போர்களின் மூலம் பொய்யான இறைத்தூதுவர்கள் அனைவரின் செயல்களும் முறீயடிக்கப்பட்டன. இறுதியாக ஹிஜிரி 11லிருந்து அரபுலகம் முழுமையாக முஸ்லிம்களின் ஆட்சிக்குக் கீழ் வந்தது.
3. உஸாமா (ரலி) அவர்களின் படையெடுப்பு
முஅத்தா போரில் ரோம அரசனால் கொல்லப்பட்ட தம் தந்தைக்காகப் பழிவாங்கும் நோக்கில் உஸாமா (ரலி) அவர்கள் தலைமையில் படை தயாராக்கப்பட்டு இருந்தது. இறைத்தூதரின் உடல்நலக் குறைவினால் படை புறப்படுவது தாமதாமாகிக் கொண்டே வந்தது. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் உஸாமா(ரலி) அவர்களின் தலைமையிலான இப்படை புறப்படும் உத்தரவை அபூபக்ர்(ரலி) அவர்கள் பிறப்பித்தபோது பிறரிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
- நபி(ஸல்) அவர்களின் மரணத்தினால் மிகப்பெரும் கவலை மக்களை ஆட்கொண்டிருந்த நேரத்தில் இப்போரில் வெற்றியடைவது என்பது கேள்விக்குறியாக இருப்பதாகப் பலர் தெரிவித்தனர்.
- இறைத்தூதரை இழந்த மதீனாவின் மீது பல எதிரிகள் போர்த்தொடுக்கலாம். இச்சமயத்தில் போர்வீரர்கள் மதீனாவில் இருப்பது அவசியமாகிறது.
- உஸாமா (ரலி) அவர்கள் மிக இளவயதினராக இருப்பதால் அவருக்குப் பதில் வேறொருவரைத் தலைவராக நியமிக்க வேண்டும்.
என்பன போன்ற பல மாற்றுக்கருத்துக்கள் அபூபக்ர்(ரலி) அவர்களிடையே எடுத்துரைக்கப்பட்டன. இப்படை முழுக்க இறைத்தூதரால் உருவாக்கப்பட்டது. இதில் எவ்வித மாற்றமும் செய்ய விரும்பவில்லை என அபூபக்ர்(ரலி) அவர்கள் மிகவும் மனதைரியத்துடன் இப்படையை வழியனுப்பிவைத்தார்கள். இவ்வாறு செய்ததினால் ஏற்பட்ட விளைவுகளோ யாரும் எதிர்பாராவண்ணம் அமைந்தன. அதாவது:
- தமது இறைத்தூதரை இழந்து நிற்கும் இம்முஸ்லிம்கள் மனவருத்தத்தில் இருப்பார்கள் எனவும் முன்பிருந்த போர்த்தைரியம் இவர்களிடையே இனி காணப்படாது என்ற எதிரிகளின் கனவு தீயிட்டுக் கொளுத்தப்ப்ட்டது.
- நபி(ஸல்) அவர்கள் அறிவுரைகள் முஸ்லிம்களால் இனி பின்பற்றப்படாமல் போகும் என்ற எதிரிகளின் ஆசையும் கானல் நீராகியது.
- முஸ்லிம்களின் இந்த அதிரடி நடவடிக்கையினால் அவர்களின் மீது போர்த்தொடுக்கும் தமது எண்ணத்திலிருந்து எதிரிகள் சற்று பின்வாங்கலானார்கள்.
நபி(ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட இப்படை,அபூபக்ர்(ரலி) அவர்களின் மன உறுதியால் பெரும் வெற்றியுடன் உஸாமா(ரலி) அவர்கள் தலைமையில் போரிலிருந்து மதீனாவிற்குத் திரும்பி வந்தது. இறைவனுக்கே புகழனைத்தும்.
4.ஸகாத்
இஸ்லாத்தின் அனைத்துக் கடமைகளையும் செய்தாலும் எளியவர்களின் கஷ்டம் போக்கும் ஸகாத்தைக் கொடுக்கச் சில கோத்திரத்தில் இருந்த வலியவர்கள் பலரும் முன்வரவில்லை. எளியவர்களின் உரிமையான ஸகாத்தை மக்கள் கடைபிடிப்பதில் எக்காரணத்தைக் கொண்டும் பராமுகமாக இருக்க அபூபக்ர்(ரலி) அவர்கள் தயாராக இருக்கவில்லை. அதனை மக்கள் பெறும் விஷயத்திலும் கொடுக்கும் விஷயத்திலும் கடுமையான நடவடிக்கைகளையே மேற்கொண்டார்கள். இறைவனின் கட்டளையை நிறைவேற்ற எதனையும் தடையாக அவர்கள் நினைக்கவுமில்லை. பல குலத்தினர் ஸகாத்தை நீக்கினால் இஸ்லாத்தில் தாம் நீடிப்போம் என மறைமுகமாகச் சொல்லிப் பார்த்தார்கள். இது போன்ற அச்சுறுத்தல்களுக்குச் சிறிதும் அஞ்சாமல் தமது நிலையிலிருந்து சிறிதும் பின்வாங்காமல் இருந்ததால் ஸகாத்தை எதிர்த்த அப்ஸ், ஸப்யான், அஸத் மற்றும் தோய் ஆகிய குலத்தவர்கள் போர் மூட்டினார்கள்.இப்போரினை அபூபக்ர்(ரலி) அவர்கள் முன்பே எதிர்பார்த்துத் தயாராக இருந்ததால் போரில் வெற்றி அபூபக்ர்(ரலி) அவர்களின் படைக்குக் கிடைத்தது. இதன் மூலம் நபி(ஸல்) அவர்கள் கற்பித்துத் தந்த அல்லாஹ்வின் சட்டங்களில் எந்தவொரு குறைவோ மாற்றமோ செய்பவர்களிடம் அபூபக்ர்(ரலி) அவர்கள் எந்த தயவுதாட்சண்யமும் காட்டவில்லை என்பது நிரூபணமானது.
5. அரபு நாட்டின் எல்லைப்பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தல்
ஈராக், பைஸாந்தியம் (தற்போதைய சிரியா, ஜோர்டான், இஸ்ரேல்,பாலஸ்தீன், லெபனான் மற்றும் துருக்கி) ஆகிய அரபு எல்லையில் இருந்த இந்நாடுகளிலிருந்த முஸ்லிம்களுக்கு அவர்களது அன்றைய ஆட்சியாளர்களால் பெரும் தொல்லைகளும் அச்சுறுத்தல்களும் ஏற்பட்டன. அதிகப்படியான வரி ஏய்ப்புகளுக்கும் இம்மக்கள் ஆளாயினர். ஆகையினால் இந்நாடுகளை எதிர்த்து போர்த்தொடுத்து அதில் வெற்றியும் அடைந்தனர்.இப்போர்கள் நடைபெற்றிருக்கும்போதே மதீனாவில் அபூபக்ர்(ரலி) அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
ஹிஜ்ரி 13ல் அபூபக்ர்(ரலி) அவர்களின் உடல்நிலை காய்ச்சலால் மிகவும் பாதிக்கப்ப்ட்டது. தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்த அபூபக்ர்(ரலி) அவர்கள் தமக்குப் பிறகு ஆட்சிப்பொறுப்பினை உமர்(ரலி) அவர்களிடம் ஒப்படைக்க விரும்பினார்கள். உமர்(ரலி) அவர்களின் கண்டிப்பும் கோபமும் மக்களிடையே கவலையை உண்டாக்கியது. இஸ்லாமியச் சட்டங்களைக் கடுமையாகப் பின்பற்றுபவரே தன் மக்களுக்கு ஒரு நல்ல தலைவனாக அமைய முடியும் என மக்களுக்கு அறிவுறுத்தினார்கள். தன் நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல கலீஃபாவைத் தாம் தேர்ந்தெடுத்ததில் மிகவும் திருப்தியுற்றார்கள். உமர்(ரலி) அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் பலவற்றை எடுத்துரைத்தார்கள். அவர்களின் தேர்வு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றது.
நபி(ஸல்) அவர்களைக் கபனிட (இறந்தவர் மீது போர்த்தப்பட) உபயோகப்படுத்தியதைப் போலவே மூன்று துணிகளைத் தம் மரணத்திற்கு முன்னதாகவே தயாராக்கினார்கள். அபூபக்ர்(ரலி) அவர்களின் மகளான ஆயிஷா(ரலி) அவர்கள் அத்துணி மிகவும் பழையதாக இருப்பதாகவும் புதுத்துணி ஏற்பாடு செய்யுமாறும் கூறினார்கள். அதற்கு ‘உயிருடன் இருப்பவரே புதுத்துணி உடுத்த தகுதியானவர்கள்’ என்று பதிலளித்தார்கள்.இவ்வாறாகத் தம் மரணத்தைத் தாம் எதிர்பார்த்த வண்ணம் தன் நாட்களைக் கழித்த அபூபக்ர்(ரலி) அவர்கள் தமது 63ம் வயதில் தம் இன்னுயிர் நீத்தார்கள் (இன்னாலில்லாஹி...).
இரண்டு வருடங்கள் கலீஃபாவாக ஆட்சி செய்த அபூபக்ர்(ரலி) அவர்கள் தமது சமுதாயத்தில் நிலவிய இஸ்லாத்திற்கு எதிரான எந்தவொரு நிலையையும் எதற்காகவும் ஈடு செய்துகொள்ளத் தயாராக இருந்ததில்லை. இறைவனின் சட்டங்களையும் மார்க்கத்தையும் தம்மால் இயன்றவரை உறுதியான நிலையில் எத்திவைத்தார்கள். நபி(ஸல்) அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் உடன் இருந்ததால், இஸ்லாம் மக்களை அடைவதற்கு இறைத்தூதர் எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையையும் அவர்கள் நன்கு உணர்ந்திருந்ததால், தம் ஆட்சியில் அதற்கு எதிராக எந்தவொரு நிலையையும் அவர்கள் ஏற்படாதவாறு அதிக கண்டிப்பு என்பதைவிட அதிகமான அச்சத்தில் இருந்ததை அவர்கள் பதவியேற்ற பின் ஆற்றிய உரையிலேயே புரிந்து கொள்ளலாம்.
ஆட்சியாளராக இருந்தும் தமது வியாபாரத் தொழிலைத் தொடர்ந்து செய்துவந்தார்கள். தமது வணிகத்தின் மூலம் கிடைத்த வருமானத்தை மட்டுமே தமக்காகவும் தமது குடும்பத்தினருக்காகவும் செலவு செய்து வந்தார்கள். மற்ற சஹாபாக்களின் வற்புறுத்தலினால் தமது தொழிலை விட்டுவிட்டு ஓர் அரசு ஊழியருக்கான வருமானத்தைத் தாம் பெற்று அதில் வாழ்க்கை நடத்தினார்கள். எந்தவொரு சிக்கலான சூழ்நிலையிலும் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளைச் சிந்தித்து அதன்படி, அவ்வழிகாட்டுதலின் மூலமாகவே தம் ஆட்சியிலும் தீர்வுகளைக் கண்டார்கள். இறைவனின் மீதும் அவனது தூதரின் மீதும் அவர்களுக்கிருந்த அளவிலா இணக்கமும் அன்பும் இருந்ததே அவருடைய ஆட்சி மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் அமைந்ததற்குக் காரணமாகும்.
இனிதே நிறைவுற்றது.
முஹாஜிர் - மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தவர்கள்
கலீஃபா - இறைத்தூதரின் பிரதிநிதி (இஸ்லாத்தின் சட்டங்களுக்கு உட்பட்டு ஆட்சி செய்பவர்)
பைஅத் - உறுதிப்பிரமாணம்
15 comments:
மிகவும் பிரயோசனமான வரலாற்றுத் தகவல்கள் பகிர்வுக்கு நன்றி சகோ
// ஆட்சிகு வர வேண்டும் என நான் கனவிலும் எதிர்பார்த்ததில்லை. இதற்காக எந்த வித முயற்சியும் நான் இதுவரை செய்ததுமில்லை. மார்க்கப்படி எடுக்கப்படும் என் அனைத்து முடிவிற்கும் ஆதரவு தாருங்கள். மார்க்கத்தில் இல்லாத எந்த புதிய விஷயத்திற்கும் எதிர்ப்பு தெரிவியுங்கள். உங்களில் பலவீனமானவர்கள் என் மீது கடுமை காட்டுங்கள்;பலம் வாய்ந்தவர்கள் என்மீது இரக்கம் காட்டுங்கள்// படிக்கையிலே புல்லரிக்கிறது.. எவ்வளவு தெளிவான பேச்சு???? அழகான பதிவுக்கு நன்றி ...
எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு.. அருமையான எழுத்துநடை. வாழ்த்துகள் பானு
சலாம் சகோ.
இன்றைய நமது வாழ்வியல் அறிவை ஒப்பு நோக்கினால்... நபி ஸல்... அவர்களுடன் வாழ்ந்தவர்கள் ஏறக்குறைய எல்லாருமே, வாழ்வியலில் இமாலய அறிவு பெற்றவர்களாகவே அந்தக்காலத்தில் இருப்பதை நான் ஹதீஸ் வரலாற்றில் பார்க்கிறேன். ஏகப்பட்ட படிப்பினை தரும் போற்றத்தக்க சிறப்பான பதிவுத்தொடர் ஆக்கத்திற்கு ஜசாக்கல்லாஹ் ஹ்கைர்.
அஸ்ஸலாமு அலைக்கும் பானு.
முதல் பாகத்திலிருந்து படிக்கவேண்டும் என்று இன்னும் படிக்காமலே இறுதிப் பாகத்திற்கு வந்து எட்டிப் பார்க்கிறேன் :( ஸாரிமா.
தலைப்பே அருமையான தொடர் என்பதைக் காட்டுகிறது! ஜஸாகல்லாஹ் ஹைரா. முழுவதும் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன், இன்ஷா அல்லாஹ்.
நல்ல பதிவு. பல செய்திகளைத் தெரிந்துகொள்ள முடிந்தது.
//‘உயிருடன் இருப்பவரே புதுத்துணி உடுத்த தகுதியானவர்கள்’ //
அப்படியா! பொதுவாக, கபன் துணி புதிதாகப் பயன்படுத்துவதைத்தான் பார்த்திருக்கிறேன். புதிய தகவல்.
உங்க ப்ளாக் பேக்ரவுண்ட், வாசிப்பதற்கு இடையூறாக இருக்கிறது. எழுத்துகள் இருக்கும் இடத்தில் டிஸைன்கள் இல்லாத டெம்ப்ளேட்டாக இருந்தால் (என்னைப் போன்ற வயதானவர்களுக்கு) வசதியாக இருக்கும். :-)
மிகச்சிறப்பான பகிர்வு.
//ஹுஸைனம்மாவுக்கே வாசிக்க முடியலன்ன நான் எப்படி வாசித்து இருப்பேன்.//
ஆமாம் பேக்ரவுண்ட் மாற்று வது நல்லது.
அஸ்ஸலாமு அலைக்கும்,
மிக அருமையான, நெகிழவைக்கும் தொடர். அல்ஹம்துலில்லாஹ். நடையும் மிக எளிதாக இருப்பது சிறப்பு.
பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்
ஸலாம் மூஸா, சிராஜ், ஸ்டார்ஜன
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
ஸலாம் ஆஷிக்
நபி ஸல்... அவர்களுடன் வாழ்ந்தவர்கள் ஏறக்குறைய எல்லாருமே, வாழ்வியலில் இமாலய அறிவு பெற்றவர்களாகவே அந்தக்காலத்தில் இருப்பதை நான் ஹதீஸ் வரலாற்றில் பார்க்கிறேன்/
உண்மைதான்... கல்வியறிவு என்ற ஒன்றை நாம் தேடிப்போவது அன்று அவர்களைத் தேடி வந்ததோ எனத் தோன்றுகிறது. கருத்திற்கு மிக்க நன்றி.
வ அலைக்கும் ஸலாம் அஸ்மாக்கா
நேரம் கிடைக்கும்போது வாசியுங்கள்...கருத்து சொல்லுங்க... :)....
ஸலாம் ஹுஸைனம்மா
/கபன் துணி புதிதாகப் பயன்படுத்துவதைத்தான் பார்த்திருக்கிறேன்/ ஒரு மரியாதைக்காக அப்படி செய்கிறோம் என நினைக்கிறேன். புதுத்துணிதான் உபயோகிக்கவேண்டும் என எந்த கட்டாயமுமில்லை.
/உங்க ப்ளாக் பேக்ரவுண்ட், வாசிப்பதற்கு இடையூறாக இருக்கிறது./ ப்ளாக் ஆரம்பித்ததில் இருந்து எதையுமே மாற்றியதில்ல... மாற்றணும்னு நினைத்தாலும் நேரம் கிடைக்கவில்லை.... இன்ஷா அல்லாஹ் மாற்றிவிடுகிறேன்.
ஸலாம் ஜலீலாக்கா
/ஆமாம் பேக்ரவுண்ட் மாற்று வது நல்லது./ விரைவில் மாற்றிவிடுகிறேன்...
அனைத்துப் பகுதிகளையும் ஒரு சேர படித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றிக்கா.
வ அலைக்கும் ஸலாம் ஆஷிக்
உங்கள் துஆவிற்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றி.ஜஸாக்கல்லாஹ்.
எல்லோரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு.
வாழ்த்துகள் பானு..
Post a Comment