Monday, February 14, 2011

கேள்விக்கென்ன பதில்?!

என் மகன் அடிக்கடி கேள்விகள் கேட்டுக்கிட்டு இருப்பான்னும் அதுக்கு சான்றா ரெண்டே ரென்டே கேள்விகளையும் தான் பதிவில் சொல்லியிருந்தேன்... மக்கா .... நீங்கள்லாம் என்ன நினைச்சீங்களோ...அதும் ரஜின் நல்லா அனுபவிங்கன்னு வேற சொல்லியிருந்தார்... இதெல்லாம் என் மகன் காதில் விழுந்துடுச்சோ என்னன்னு தெரியலை... அந்த பதிவை போட்ட அடுத்த வாரமே ஒரு நாளில் என்னை கேள்வி கேட்டு துளைச்சுட்டான்... நான் இந்த கேள்விகளை அவனிடமிருந்து எதிர்பார்த்தது தான்..ஆனால் அதுக்கு இன்னும் சில வருடங்கள் போகும்னும் சுலபமா அவனுக்கு புரியவச்சிடலாம்னும் ஒரு நம்பிக்கையோடு இருந்தேன்... ஆனா அவன் இப்பவே இந்த அஞ்சு வயசுலயே ... கேட்டுட்டான்யா... கேட்டுட்டான்யா :(

ம்மா... அல்லாஹ் கேர்ளா (girl) பாயா(boy)? (நான் அவனுக்கு அல்லாஹ்வை ஒருமையில் அல்லாது அவங்க,இவங்கன்னு பன்மையில் அறிமுகப்படுத்தி இருந்ததுதான் அவனுடைய இந்த சந்தேகத்துக்கு காரணமாயிடுச்சு :(  )

அல்லாஹ் கேர்ளும் கிடையாது... பாயும் கிடையாது... நம்மளைத்தான் அல்லாஹ் ஆண் பெண்ணா வச்சிருக்காங்க...

அல்லாஹ் மேலயிருந்து பாக்கிறாங்கன்னு சொன்னியே, பில்டிங் மேலயா இருப்பாங்க...

(என்னே ஒரு கற்பனை..அவ்வ்வ்.)இல்லமா... ஸ்கைல இருந்து பார்ப்பாங்க..அப்பதானே எல்லாரையும் பார்க்க முடியும்?!

அப்ப ஸ்கையிலயிருந்து கீழ விழுந்துட மாட்டாங்களா?

இல்ல..சேர் போட்டு உக்காந்திருப்பாங்க...

சேரை கயிறு போட்டு கட்டியிருப்பாங்களா?

(அவ்வ்வ்..) ஆமா...

அப்ப நாம ஸ்கைக்கு போகணும்னா ஏணி போட்டா ஏறிடலாமா?

இல்லமா.. ஏணி போட்டாலும் ஸ்கை எட்டாது...ரொம்ப தூரத்தில இருக்கு.

அப்ப எப்டி போறது...?

நாமல்லாம் தாத்தா,பாட்டி ஆனதுக்கப்புறம் அல்லாஹ் நம்மளை எடுத்துப்பாங்க...

எப்டி எடுப்பாங்க..அல்லாஹ்க்கு பெரிய கையா?

(ம்ம்...என்ன சொல்றது..முழிக்கிறேன்)

அல்லாஹ்க்கு பெரிய கையா?

அது வந்து...அல்லாஹ்கிட்ட நிறைய பேர் இருக்காங்க..அவங்க பேர் மலக்குகள்..அல்லாஹ் அவங்ககிட்ட யாரை எடுக்க சொல்றானோ அவங்க இங்க வந்து அவங்களை எடுத்துட்டு அல்லாஹ்கிட்ட போய்டுவாங்க...

எப்டி?

அது தெரியலை..அல்லாஹ்வுக்குத் தான் தெரியும்.

சரி..ஸ்கைல என்ன இருக்கும்?

எல்லாம் இருக்கும்..

பெரிய ரைட்டிங் போர்டு, ஸ்கெட்ச் எல்லாம் இருக்குமா?

நீ இப்ப சின்ன பையனா இருக்கிறதுனால இதெல்லாம் உனக்கு பிடிச்சிருக்கு...ஆனா ஸ்கைக்குப் போகும்போது நீ தாத்தா ஆகிடுவல்ல..அப்ப உனக்கு என்ன தேவையோ அதெல்லாம் ஸ்கைல அல்லாஹ் வச்சிருப்பாங்க...

அப்ப டீவியெல்லாம் இருக்குமா...

இங்க நமக்கு போரடிக்குது...அதனால டீவி கொஞ்ச நேரம் பார்க்கிறோம்..ஸ்கைல எப்பவும் நாம் தொழுதுட்டு ஓதிட்டு தான் இருப்போம்...அதனால் டீவியெல்லாம் இருக்காது.

அப்ப நான் மட்டும் தனியாவா போகணும்? (லேசா விசும்பல்)

நீ ஸ்கைக்கு வரும்போது நானும் வாப்பாவும் அங்க இருப்போம்... (ஆமீன்)

அப்ப சரி. ஸ்கைல வேற என்ன இருக்கும்?

நாம இப்ப நல்ல தொழுது ஓதிட்டு இருந்தா அல்லாஹ் நமக்காக ஸ்கைல வீடு தருவாங்க...

அது பெரிய வீடா இருக்குமா? மாடி இருக்குமா? பன்க் பெட்டெல்லாம்(bunk bed) இருக்குமா?

ஆமா எல்லாம் இருக்கும். நமக்கு என்ன வேணுமோ நாம அல்லாஹ்கிட்ட கேட்டா உடனே தருவாங்க.

அப்ப நாம இங்கிருந்து ஒண்ணும் கொண்டு போக வேண்டாமா?

(அவ்வ்)வேண்டாம்... எல்லாமே அங்க புதுசா இருக்கும். அங்க தூசி கிடையாது. மழை, வெயில் கிடையாது...அதனால அங்க எல்லாமே புதுசா இருக்கும். நமக்கு என்ன வேணுமோ அத சாப்பிடலாம். எல்லாமே அங்க சூப்பர் டேஸ்டா இருக்கும்.

ம்ம்ம்...

அல்லாஹ் நமக்கு இதெல்லாம் செய்யணும்னா நாம நல்லா தொழணும்..ஓதணும்..நல்ல பிள்ளையா இருக்கணும்..(சைடு கேப்பில் ஒரு பிட்டு போட்டாச்சு)

ம்ம்...

இதுக்கெல்லாம் தான் நான் உன்கிட்ட எப்பவும் ஓதணும்,தொழணும்னு சொல்றேன். நீ நல்லா தொழுவியாம்மா?

ம்ம்ம்..(அப்புறம் என்னால் முடிஞ்ச அளவு பிட்டு போட்டாச்சு... அல்லாஹ்வால் முடியாதது எதுவுமே இல்லைன்னு என்னால முடிஞ்ச அளவுக்கு அவனுக்கு புரிய வச்சேன்.சரி..சரின்னு தலையாட்டிட்டு இருந்தான்.).
அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு ராத்திரி தூக்கத்தில் என்னவோ சொன்னான்.

என்னமா?

(தூங்கிட்டே) அல்லாஹ் ஏம்மா முடிச்சாங்க?

(என்ன..அல்லாஹ்வா?அல்லாஹ்வையா சொல்றான். ஆஹா பிள்ளை தூக்கத்தில கூட அல்லாஹ்வைப் பத்தி நினைக்கிறானேன்னு பெருமை பிடிபடலை எனக்கு)என்னமா?

(தூங்கிட்டே) அல்லாஹ் ஏம்மா முடிச்சாங்க?

அல்லாஹ் என்ன முடிச்சாங்க?

அல்லாஹ் ஏம்மா ஹோம்வொர்க் முடிச்சாங்க?

(அவ்வ்... எனக்கு அழறதா சிரிக்கிறதானு தெரியலை. அல்லாஹ்வைப் பத்தி அவனுக்கு புரியுற மாதிரி நான் சொல்லலையோ...இல்ல நான் சொன்னதை அவன் வயசுக்கு ஏத்த மாதிரி அவன் புரிஞ்சிக்கிட்டானா..அவன் பெரியவனாகும்போது நான் சொன்னதை சரியா புரிஞ்சிக்குவானா? ஹ்..ம்...யா அல்லாஹ்...உதவி செய்.

இப்பவும் அப்பப்ப அல்லாஹ்வைப் பற்றி ஏதாவது அவனுக்கு தோணினதைக் கேட்டுட்டு இருக்கிறான்..இங்கு ஸ்கை என்று அவனுக்கு நான் சொல்லியிருப்பது சொர்க்கம் ஒன்றைத்தான்... அவனுக்கு நரகத்தை இன்னும் சிறிது நாள் கழித்து அறிமுகப்படுத்தலாம்னு நினச்சிருக்கேன்.இப்போதைக்கு நல்ல பிள்ளையா இருந்தா அல்லாஹ் நமக்கு உதவி செய்வாங்கன்னும் சேட்டை பண்ணினா பூச்சாண்டி வந்து பிடிச்சுட்டு போய்டுவாங்கன்னும் சொல்லி வச்சிருகேன்... இது எவ்வளவு நாள் ஓடுதோ ஓடட்டும். ;)  இன்ஷா அல்லாஹ் என் மகன் பெரியவனாகும்போது இதைப் படிக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை .

28 comments:

அரபுத்தமிழன் said...

கலக்குறீங்க தாயும் பிள்ளையும்.

பிள்ளையின் கேள்விக்கு ஏதேதோ சொல்லி வைக்காமல் சரியானதையே
சொல்ல வேண்டும். ஒரு விஷயம் சுவனத்தில் தொழுகையோ மற்ற வணக்கமோ கிடையாது. Only Prizes and Rewards தான்.

நானும் என் மகளிடம் சுவனத்தைப் பற்றி அதிகமாக சிலாகித்த போது
'வாப்பா நான் இப்பவே சுவர்க்கத்திற்குப் போவதற்கு என்ன செய்ய வேண்டும்
என்று கேட்டதால் பிறகு அடக்கி வாசித்தேன். :)

ஹுஸைனம்மா said...

ஹப்பாடா... நான் இந்த இன்னிங்ஸெல்லாம் கிட்டத்தட்ட முடிஞ்சு இப்பத்தான் ஃப்ரீயா ஆகிருக்கேன்!! உங்க turn இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கு போல!! எஞ்சாய்!! :-)))))

Mahi said...

கேள்விகளால் வேள்வி செய்யும் பானுவின் மகன் வாழ்க! :) ;)

enrenrum16 said...

ஸலாம் அரபுத்தமிழன்... /சுவனத்தில் தொழுகையோ மற்ற வணக்கமோ கிடையாது/.. 'இறைவனுக்கு செய்யும் துதியைத் தவிர அவர்கள் வேறெதையும் செவியேற்கமாட்டார்கள்' என்று வாசித்த ஞாபகம்.. அதனால் அங்கும் வணக்கம் இருக்கும் என்று நினைத்திருந்தேன்... அப்படி கிடையாதா?

/'வாப்பா நான் இப்பவே சுவர்க்கத்திற்குப் போவதற்கு என்ன செய்ய வேண்டும்'/.. என்ன இப்டி டெரரா கேள்வி கேக்கிறாங்க... என் மகன் தேவலையோ?:(.. இருந்தாலும் அந்த ஆர்வம் அவர்களை என்றும் நல்ல வழியில் செல்ல மோடிவேட் செய்யும், இன்ஷா அல்லாஹ்.

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

enrenrum16 said...

ஸலாம் ஹுஸைனம்மா.. /நான் இந்த இன்னிங்ஸெல்லாம் கிட்டத்தட்ட முடிஞ்சு இப்பத்தான் ஃப்ரீயா ஆகிருக்கேன்/.. முடிஞ்சிருச்ச்ச்சாஆ?... எங்க வீட்ல பெரியத்துரையே இப்பத்தான் ஸ்டார்ட் பண்ணியிருக்கார்...இவர் எப்ப முடிச்சு அடுத்து சின்னத்துரைக்கும் சேம் இன்னிங்க்ஸ் ஆரம்பிச்சு,முடிக்க... :) இதையெல்லாம் எஞ்சாய் பண்றதுக்காகவாவது இறைவன் எனக்கு நல்ல உடல் நலத்தை கொடுக்கணும்... உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி ;)

enrenrum16 said...

உங்க வருகைக்கும் வாழ்த்திற்கும் ரொம்ப நன்றி மஹி.. அடிக்கடி வாங்க...;)

ஸாதிகா said...

உங்கள்,மகனது சம்பாஷனை மிகவும் சுவாரஸ்யமாக இருந்த்து .மகன் தெளிவுதான் மாஷாஅல்லாஹ்

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ...
என்ன? அனுபவிக்கிறீங்க போல...

ஆரம்பிச்சுட்டானா பையன்...மாஷா அல்லாஹ்..
அல்லாஹ்வை பற்றிய சிந்தனையும்,அதன் விளைவாக கேள்விகளும்,அருமை சகோ..

அல்லாஹ்வை பற்றிய தெளிவான அறிமுகத்தை ஆரம்பத்திலே கொடுத்துவிடுங்கள்..அவன் என்றே சொல்லி பழக்கலாம்.

ஆணா பெண்ணா உள்பட எல்லா கேள்விகளுக்கும்,அல்லாஹ் எல்லாத்துலையுமே யுனீக்,ஸ்பெஷல்,அவன் மனிதனை போல் அல்லாதவன்,அனைத்திலும் சிறந்தவன்,அனைத்தையும் அறிந்தவன்,மேலானவன்,கனிவானவன்,கண்ணியமானவன்..கடுமையானவன்னு,தேவைக்கேற்ப அவனது குணங்களை சொல்லிக்கொண்டே இருங்கள்..

குழந்தைகளுக்கு சில விஷயங்கள் புரியாதுதான்..இருந்தாலும் அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்தது நல்லதுதான்..ஏனெனில் கேள்வி கேள்வியாகவே மனதில் தங்கிவிடக்கூடாது..

பெற்றோருக்கு இதைவிட வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும்..

அல்லாஹ் உங்களின்,உங்கள் பிள்ளையின் அறிவை விசாலமாக்க போதுமானவன்..

அன்புடன்
ரஜின்

அன்புடன் மலிக்கா said...

இங்கேயுமா!!!!!.
கேள்விமேல கேள்வி கேட்கும்போதுதான் நமக்கும் நல்லபதில் நமக்குள்ளிருந்து பிறக்கும்..

மாஷா அல்லாஹ்..
இறைவன் நல்ல அறிவையும் தெளிவையும் வழங்குவானாக.

அந்நியன் 2 said...

கேள்வி கேட்க்கும் மகனும் அதற்க்கு பதில் சொல்லும் தாயும் கொஞ்சம் புதிராகத்தான் தெரிகிறார்கள் வலை உலகத்தில்.

அண்ணன் அரபு தமிழன் சொன்ன மாதுரி சொர்க்கத்தில் இறை வணக்கம் இல்லை என்று நானும் கேட்டிருக்கேன்.

சிறு வயதிலியே கேள்வி கேட்டுப் பழகுவது நல்லதுதான் வாழ்க வளமுடன் !

பனி அழுத்தம் காரணமாக ஒரு வாரம் எந்த வலைப் பூவிற்கும் போக முடியவில்லை வருகையின் தாமதத்திற்கு காரணம் இது.

enrenrum16 said...

ஸலாம் ஸாதிகா அக்கா... உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி;)...

enrenrum16 said...

ஸலாம் ரஜின்... /அவன் என்றே சொல்லி பழக்கலாம்./ மரியாதைக்குறைவாக எடுத்துக் கொள்வானோ என்ற பயத்தினாலேயே இப்படி சொல்லியிருந்தேன்... கூடிய சீக்கிரத்தில் இதை மாற்றிவிடுகிறேன்;).

அல்லாஹ்வைப் பற்றியும் அவனது குணாதிசயங்களைப் பற்றியும் அவனிடம் எந்நேரமும் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டுமென எனக்கு ரொம்ப ஆசை... இறையருளால் அதன் மூலம் அவன் சிறந்த முஃமினாகத் திகழ வேண்டுமென்பதே என்னுடைய லட்சியம் என்றே சொல்லலாம்... கண்டிப்பாக உங்கள் அறிவுரையை மெல்ல மெல்ல செயலாற்றுகிறேன் :)

உங்கள் துஆவிற்கும் வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றி.

enrenrum16 said...

ஸலாம் மலிக்கா.. /கேள்விமேல கேள்வி கேட்கும்போதுதான் நமக்கும் நல்லபதில் நமக்குள்ளிருந்து பிறக்கும்../... ரொம்ப சரி மலிக்கா... நாம் புரிந்து வைத்திருப்பதை பிள்ளைகளுக்குப் புரியும்படி சொல்வதின் மூலம் நம் பார்வையும் விரிகிறது...

உங்கள் துஆவிற்கு எனது மனமார்ந்த நன்றி

enrenrum16 said...

ஸலாம் ஐயூப் (இதுதானே உங்கள் பெயர்?)

/கேள்வி கேட்க்கும் மகனும் அதற்க்கு பதில் சொல்லும் தாயும் கொஞ்சம் புதிராகத்தான் தெரிகிறார்கள் வலை உலகத்தில்./... எனக்கு புரியவில்லை... பொதுவாக சொல்கிறீர்களா? அல்லது எங்களிருவரை சொல்கிறீர்களா? :-?

/சொர்க்கத்தில் இறை வணக்கம் இல்லை என்று நானும் கேட்டிருக்கேன்./..அப்படியா? எனக்கு தெளியப்படுத்தியதற்கு உங்களிருவருக்கும் நன்றி.

/பனி அழுத்தம் காரணமாக ஒரு வாரம் எந்த வலைப் பூவிற்கும் போக முடியவில்லை வருகையின் தாமதத்திற்கு காரணம் இது./... பணிக்குத் தானே முதலிடம் எப்பவும் எல்லாருக்குமே;)... வேலைப்பழுவின் நடுவேயும் பின்னூட்டமளித்ததுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

Aashiq Ahamed said...

அன்பு சகோதரி அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

மாஷா அல்லாஹ்...அருமையான பகிர்வு.

இஸ்லாமிய வழியில் குழந்தைகளை வளர்க்க பெற்றோர்களுக்கு உதவுவதற்கென்றே பல தளங்கள் இயங்குகின்றன. அவற்றில் நான் அறிந்த சில,

ISLAM FOR PARENTS
ISLAM FOR KIDS

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Anisha Yunus said...

அல்ஹம்துலில்லாஹ்.
ரெம்ப நல்லா இருக்கு பானு(பேர் சரியா??)

எல்லாரும் ம்சொல்வதைத்தான் நானும் சொல்ல விரும்பினேன். அல்லாஹ் பற்றிய தெளிவான அறிமுகத்தை கொடுத்து விடுங்கள். என பையனுக்கு அல்லாஹ் மேலே இருக்கிறார் என்றுதான் சொல்லித் தந்துள்ளேன். இன்னமும் கெஏள்வி கேட்கும் காலம் ஆரம்பிக்கவில்லை. ஹி ஹி.. அதனால் தப்பித்தேன்.

அவன் செய்யும் தவறுகளுக்கு, நான் கேட்கும் கேள்வி இதுதான்,
“இந்த பொருள் உனக்கு யார் கொடுத்தது?”
“அல்லாஹ்”
“அப்ப நீ கீழே போட்டு உடைச்சா அல்லாஹ் என்ன சொல்வாங்க?”
“bad boy"
”அப்ப நீ bad boyயா goodயா"
"good boy"
”அப்ப ஒடைக்கக்கூடாது சரியா?
இந்த ரீதியில் போகும்.

அண்ணன் அரபுத்தமிழன் கூறியது போல, சுவர்க்கத்தில் எந்த அமலும் இல்லை. செய்த் அமல்களுக்கு கூலியே சுவர்க்கம்தான். இங்கு இருக்கும் என் தோழியின் பெண்ணுக்கு பின்க் நிறம் மிக மிக பிடிக்கும். எல்லாமே பின்க்கில்தான் வேண்டும் என்பாள். அவளின் அண்ணனும், ஏதேனும் வேலை செய்வ்க்க வேண்டுமென்றால், இந்த செயலை செய்தால் அல்லாஹ் உனக்கு சுவர்க்கத்தில் பின்க் நிற வீடு கொடுப்பார் என்றே ஆட்டுவிப்பான். மகிழ்ச்சியாய் போகும். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் உங்களின் பிள்ளையை உங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாய், நீங்கள் சுவர்க்கம் செல்லும் பாதையாய் ஆக்கி வைப்பானாக. ஆமீன்.

enrenrum16 said...

வஅலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு ஆஷிக்...

நீங்கள் அறிமுகப்படுத்திய தளங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... என்னுடைய மற்ற சந்தேகங்களுக்கும் எளிதாக விடை கண்டேன்...

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து கருத்து தெரிவியுங்கள்.

enrenrum16 said...

ஸலாம் அன்னு.
/என பையனுக்கு அல்லாஹ் மேலே இருக்கிறார் என்றுதான் சொல்லித் தந்துள்ளேன். இன்னமும் கெஏள்வி கேட்கும் காலம் ஆரம்பிக்கவில்லை. ஹி ஹி.. அதனால் தப்பித்தேன்./

யாம் பெற்ற இன்பம் பெறுக விரைவில் ;)

/இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் உங்களின் பிள்ளையை உங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாய், நீங்கள் சுவர்க்கம் செல்லும் பாதையாய் ஆக்கி வைப்பானாக. ஆமீன்./...நம் அனைவருக்குமே இந்த துஆவை இறைவன் நிறைவேற்றுவானாக.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து கருத்து தெரிவியுங்கள்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹ்...
உங்களை பாராட்டுவதா அல்லது உங்கள் மகனை புகழ்வதா என தெரியவில்லை சகோ.
மாஷாஅல்லாஹ்.

இறையச்சத்துடன் குழந்தைகளை வளர்ப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி.

ஒரே ஒரு விஷயம் சொல்லியாக வேண்டும்...

//நான் அவனுக்கு அல்லாஹ்வை ஒருமையில் அல்லாது அவங்க,இவங்கன்னு பன்மையில் அறிமுகப்படுத்தி இருந்ததுதான் அவனுடைய இந்த சந்தேகத்துக்கு காரணமாயிடுச்சு//---பையன் தெளிவாக ஒருமையில்தான் புரிந்திருக்கிறார். ஆதலால், நீங்கள் பன்மையில் (அஸ்தஹ்ஃபிருல்லாஹ்...) அறிமுகப்படுத்தவில்லை எனபதும் உரையாடலில் புரிகிறது.உயர்விகுதியில் மரியாதையாக சொல்லி இருக்கிறீர்கள். எழுதியதில்தான் சிறு பிழை. சரிதானே சகோ?

நல்ல இறை உணர்வூட்டும் ஒரு பதிவு.
அல்ஹம்துலில்லாஹ்.

FARHAN said...

மாஷா அல்லாஹ்
திற்கும் மகனிற்குமான சிறந்த உரையாடல் (ஆனால் பிள்ளைகளுக்கான உரையாடல்கள் என்ற போதிலும் பூட்சாண்டிகளை தவிர்த்து கொள்ளவும் )

அந்நியன் 2 said...

மழலையில் கேள்வி கேட்க்கும் தலை மகனுக்கு தலை இலையில் சோறு போட்டு பதில் கூறும் அதிசிய தாயின் பதிலைத்தான் பெருமிததுடன் கூறினேனே தவிர,குற்றமாய் ஒன்னும் எழுத வில்லை என்பதே வெளிச்சம்.

அந்நியன் 2 said...

enrenrum16 கூறியது...
ஸலாம் ஐயூப் (இதுதானே உங்கள் பெயர்?)

வ அலைக்கும் வஸ்ஸலாம்.

ஆமாம் முஹம்மது அயுப்.கே என்பதே என் பெயர்.

enrenrum16 said...

@ முஹம்மது ஆஷிக்
வஅலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு
நீங்கள் சொல்வது சரிதான்... இறைவனை அவன் என்று அறிமுகப்படுத்தினால் இறைவனையும் தன்னைப் போல் சிறுவனாக நினைத்துவிடக்கூடாது என்றே பன்மையில் அறிமுகப்படுத்தினேன்... இறைவனுக்கு மாறு செய்யும் நோக்கோடு இல்லை (இறைவன் நம் மனதை நன்கறிந்தவன், இல்லையா?)

உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி. தொடர்ந்து கருத்து தெரிவியுங்கள்.

இறைவனே புகழுக்குரியவன்.

enrenrum16 said...

ஸலாம் ஃபர்ஹான்... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

enrenrum16 said...

அய்யூப்.. நானும் தவறாக நினைக்கவில்லை ;)... முதல்ல எனக்கு புரியவேயில்ல... புரிந்தால்தானே நினைக்கிறதுக்கு ;) இப்ப புரிந்தது... நன்றி ;) ஆனாலும் ரொம்ப புகழ்ந்துட்டீங்க..ஹி..ஹி

Jaleela Kamal said...

மாஷா அல்லா மகன் கேட்கும் கேள்விக்கு அழகான முறையும் எடுத்துரைத்து இருக்கீஙக்.
எல்லா பிள்ளைகளும் இப்படி தான்

enrenrum16 said...

ஸலாம் ஜலீலாக்கா... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... உங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் நிறைய இருக்கும்... விரைவில் பதிவு போடுங்க ;))

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.
இந்த காலத்து பிள்ளைங்க எவ்வளவு அறிவா யோசிக்கிறாங்க.நமக்கு பெருமையாக இருக்குல்ல...
நாமெல்லாம் நம்ம அம்மா,அத்தா இதை செய்ய கூடாதுன்னா ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்க்காம அப்படியே ஃபாலொ பண்ணுவோம்.
ஆனல் நம்ம குழந்தைங்க அதற்க்கான காரணத்தையும்,விளக்கத்தையும் கேட்டு தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வத்தை காட்டுறாங்க...
இந்த சூழ்நிலைகளில் நாம் நல்ல விஷய்னக்களை(உங்களை போன்று )சொல்லும்போது அதை பிஞ்சிலேயெ மனதில் பதித்து விடலாம்.
நானும் முடிந்தவரை பதில் சொல்ல அலுப்பதில்லை.
அல்ஹம்துலில்லாஹ்.... நல்ல பகிர்வு சகோதரி.

அன்புடன்,
அப்சரா.