Thursday, February 18, 2016

முன்னெச்சரிக்கை (குட்டிக்கதை)

”ஏங்க... ஸ்கூல் பஸ் இன்னும் வரல.. ட்ரைவர் ஃபோன் நம்பர் தாங்க...நான் ஃபோன் செய்து கேட்கிறேன்.”

அலுவலகம் சென்றுவிட்டிருந்த கணவனிடம் ஃபோனில், கையில் குழந்தையுடனும் கால்களில் வலியுடனும், கேட்டாள்.

‘என்னது.. யார்னு தெரியாதவன் நம்பர் எல்லாம் மனைவியிடம் கொடுக்கிறதா.. அவசியமில்லை... இந்த காலத்தில் எவனையும் நம்ப முடியாது. பெண்ணின் நம்பர்னு தெரிஞ்சுது.... அப்புறம் தேவையில்லாத ஃபோன்கால்களும் மெசேஜ்களும் அனுப்புவானுங்க. தேவையில்லாத டென்ஷன்...நாமளே ட்ரைவருக்கு ஃபோன் செய்து கேட்டு இவளுக்குத் தகவல் சொல்வோம்’ என எண்ணியவனாய்

“கொஞ்சம் வெய்ட் பண்ணு.. நானே கேட்டு சொல்றேன்”

“நீங்க ட்ரைவர்கிட்ட பேசிட்டு அப்புறம் எனக்குத் தகவல் சொல்ற வரை நான் இங்க நிக்கணுமா? நம்பரைத் தாங்க.. நான் பேசிக்கறேன்”

“நீ ஃபோன் பண்ணா பேலன்ஸ் குறையும்.. நானே ஆஃபீஸ் நம்பரில் இருந்து கேட்டு சொல்றேன்... ரெண்டு நிமிஷம் வெய்ட் பண்ண முடியாதா உனக்கு?”

“ரொம்ப அறிவாளின்னு நினைப்பு..”

குரலைச் சிறிது உயர்த்தினால் மனைவி கொஞ்சம் இறங்குவாள் என இவன் போட்ட கணக்குத் தோற்றாலும் கவலையை வெளிக்காட்டாமல் ட்ரைவருக்கு ஃபோன் செய்தான்.

ம்ஹூம்..ட்ரைவர் எடுக்கவில்லை.

‘ம்ம்.. என்ன பண்றது.. இதை அவளிடம் சொன்னால் அதுக்கும் கத்துவா.. பேசாம ஸ்கூலுக்கே ஃபோன் செய்து கேட்போம்’

ஸ்கூல் ரிசப்ஷனிஸ்ட் ஃபோனை எடுத்தாள் “குட் மார்னிங்... --------- ஸ்கூல்.. ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ”

ட்ரைவர் இன்னும் வராததையும் ஃபோன் செய்தும் அவர் எடுக்காததையும் தெரிவித்து பதிலை எதிர்பார்த்தான். நல்ல வேளை.. ரிசப்ஷனிஸ்டின் கணவன் யாரென தெரியாதவர்களிடம் அவசியமிருந்தும் பேசக்கூடாது என்று கண்டிஷன் போடாததால் பொறுப்பான தெளிவான பதில் அவனுக்குக் கிடைத்தது.

No comments: