Monday, February 7, 2011

கேட்டதும் கிடைத்ததும்

ஹுனைன் யுத்தத்தில் கிடைத்த போர் பொருட்களை மிக அதிகமாக இஸ்லாத்தில் இணைவதற்காகவும், இஸ்லாத்தில் இணைந்த புதிய முஸ்லிம்களுமான குரைஷி மக்களுக்கு சூரத்து தவ்பாவின் 60வது வசனத்திற்கு ஒப்ப அல்லாஹுடைய தூதர் அவர்கள் பிரித்துக் கொடுத்தார்கள். ஆனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அன்சாரிகளுக்கு 4 ஒட்டகங்கள் அல்லது அதற்கு சமமான ஆடுகள் கொடுக்கப்பட்டன. இதனால் அன்சாரி ஸஹாபிகள் மிகுந்த மன வேதனையடைந்தார்கள். “யுத்தங்கள் ஏற்படும் போது நாம்தான் அவரது தோழர்கள். யுத்தப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் பொழுது அவரது குடும்பத்தினரும் அவரது மக்களும் ஆவார். இது அல்லாஹ்வின் கட்டளையாக இருந்தால் நாம் ஏற்றுக் கொள்வோம், அது அல்லாது இது தூதருடைய உள்ளத்தில் எழுந்த எண்ணமாக இருந்தால், நமக்கும் சலுகை செய்யுமாறு நாம் அவரை வேண்டுவோம்” என்றனர் அன்ஸாரிகள்.

இதை அன்ஸாரிகளின் பிரதிநிதியான ஸஅத் இப்னு உபாதா (ரழி) அவர்கள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றார்கள். இதை கேட்ட நபி (ஸல்) “ஸஅதே! இந்த விடயத்தில் உங்கள் நிலை என்ன? என கேட்டப் பொழுது, அதற்கு ஸஅத் (ரழி) அவர்கள், நானும் அன்ஸாரிகளின் கருத்துடன் ஒத்து இருக்கிறேன்” என சொன்னார்கள். அதை கேட்ட முஹம்மது (ஸல்) அவர்கள் அவர்களை கைதிகளை அடைத்து வைத்திருந்த இடத்தில் அன்ஸாரிகளை ஒன்று கூட்டினார்கள்.

அவர்களிடம் வந்த நபி (ஸல்) அவர்கள், ஓ! அன்ஸாரிகளே! எனக்கெதிரான எண்ணங்கள் உங்கள் உள்ளங்களில் எழுந்துள்ளன என்பதை நான் அறிகிறேன் என்றவர்கள். உங்களை நான் தவறியவர்களாகக் கண்ட போது இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டவில்லையா? நீங்கள் ஏழைகளை இருந்தப் பொழுது இறைவன் உங்களை செல்வந்தராக்கவில்லையா? நீங்கள் ஒருவருக்கு ஒருவர் பகைமை பாராட்டியவர்களாக இருந்த உங்களை அல்லாஹ் உங்கள் இதய்ங்களை ஒன்றுபடுத்தவில்லையா? என கேட்டதும், அங்கு குழுமி இருந்த அன்ஸாரிகள். நிச்சயமாக அவ்வாறே! அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அன்பும் கருணையும் மிக்கவர்கள் என்றார்கள்.

அதை தொடர்ந்து அல்லாஹுடைய தூதர் கண்ணியமிக்க முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிகளை பார்த்து, என்னை எதிர்த்து பேசமாட்டீர்களா? என கேட்டார்கள். அதைக் கேட்டதும் அன்ஸாரிகள் கலக்கமுற்றனர். உங்களை எதிர்த்து நாங்கள் எப்படி பேச முடியும்? என்றார்கள்.

அதை கேட்ட நாயகம் (ஸல்) அவர்கள், நிச்சயமாக நீங்கள் விரும்பினால் உண்மையாகவே என்னைப் பார்த்து நீங்கள் இவ்வாறு கேட்கலாம்? அவமதிக்கப்பட்டவராக நீர் எங்களை வந்து சேர்ந்தீர், நாங்கள் உம்மை கவுரவித்தோம். துணையின்றி தனித்தவராக நீர் வந்தீர், நாங்கள் உமக்கு உதவி செய்தோம். வெளியேற்றப்பட்டவராக நீர் வந்தீர், நாம் உமக்கு அடைக்கலம் தந்தோம். நாம் உமக்கு ஆறுதல் தந்தோம் என நீங்கள் கேட்கலாம்.

மேலும் தொடர்ந்த அல்லாஹுடைய தூதர் அவர்கள், “ஓ! அன்ஸாரிகளே! நான் உங்களை உங்களது இஸ்லாத்தின் பொறுப்பில் விட்டுள்ள நிலையில், அல்லாஹ்வை அடிபணிய அவர்களது உள்ளங்களை இணங்கச் செய்யப் பயன்படுத்திய இவ்வுலகத்தின் அற்பப் பொருட்களுக்காக உங்கள் உள்ளங்கள் சஞ்சலப்படுகிறதா?

ஓ! அன்ஸாரிகளே! மக்கள் ஒட்டகங்களையும், செம்மறி ஆடுகளையும் அவர்களது வீட்டிற்கு எடுத்துச் செல்ல, நீங்கள் உங்கள் வீட்டிற்கு அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எடுத்துச் செல்வதில் திருப்தி இல்லையா? அன்ஸார்கள் ஒரு வழியிலும், மற்றவர்கள் வேறு ஒரு வழியிலும் சென்றால், உங்கள் நபியாகிய நான் அன்ஸாரிக்ள் செல்லும் வழியில்தான் செல்வேன். அன்ஸாரிகள் மீதும், அன்ஸாரிகள் மக்கள் மீதும், அவர்களது மக்களின் மக்கள் மீதும் அல்லாஹ் அருள் பாலிப்பானாக! என துஆச் செய்ததும், அங்கு கூடி இருந்த அன்ஸாரி ஸஹாபிகள் தம் தாடிகள் நனையும் வரை கண்ணீர் விட்டு அழுதார்கள். எங்களது பங்காகவும், எமது உடமையாகவும் அல்லாஹ்வின் தூதரைப் பெற்றுக் கொள்வதில் நம் முழு திருப்தி கொள்கிறோம் என்றார்கள். (ஆதாரம் இப்னு இஸ்ஹாக்)

சுப்ஹானல்லாஹ்..எப்படிப்பட்ட சூழ்நிலையை நபியவர்கள் எளிதில் சுமுகமாக்கிவிட்டார்கள்!.. இந்த ஹதீஸைப் படித்தவுடன் என் கண்களும் பனித்து விட்டன... இம்மையை விட மறுமையில் அதிக நன்மை கிடைக்க வேண்டும் என் நாம் விரும்பினாலும் நாம் துஆ செய்யும்போது இம்மையிலும் மறுமையிலும் நல்வாழ்விற்காக சேர்த்துத்தானே கேட்கிறோம்... ஆனால் அந்த அருமை அன்சாரிகள் மறுமையில் கிடைக்கும் நன்மை ஒன்றிற்காக நபியவர்கள் சொன்ன ஒரே காரணத்தை முழுமனதுடன்  ஏற்றுகொண்டார்கள்!... அவர்கள் கேட்டதோ இம்மைப் பொருட்களில் சலுகை.... ஆனால் கிடைக்கப்பெற்றதோ ஈடிணையில்லா மறுமையில் நற்பேறு... அவர்களை நினைத்தால் கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது.;)

கைகளில் எந்த வித உடைமையுமின்றி ஹிஜ்ரத் செய்த மக்கா வாசிகளுக்கு தாமாக மனமுவந்து இருக்க இடமும் உடுக்க உடையும் உண்ண உணவும் தந்து பேருதவி செய்தவர்கள் மதீனாவாசிகள்.

உலக வாழ்க்கைக்காக ஹராமான பொருட்களைகூட ஹலாலாக்க நினைக்கும் மக்கள் மத்தியில் ஹலாலான பொருட்களைக்கூட அல்லாஹ்விற்காகவும் அவனது தூதருக்காக விட்டுக் கொடுத்த அன்ஸாரிகள் மிக மிக சிறப்புகுரியவர்கள். அல்லாஹ் அவர்களுக்கு நல்லருள் பாலிக்கட்டும்.

இன்றைய உலகில் ஒருவருக்கு நாம் சிறு உதவி செய்தாலும் அதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யப்பட்டவரிடமிருந்தோ அல்லது அவர் மூலமாக மூன்றாவது நபரிடமிருந்தோ பிரதிபலன் எதிர்பார்ப்பது நம் அனைவர் மத்தியிலும் இயற்கையானது. அதையே கொஞ்சம் மாற்றி அந்த மூன்றாவது நபராக நாம் இறைவனையும் அவனிடமிருந்து நமக்கு கிடைக்கவிருக்கும் நன்மையையும் பிரதிபலனாக எதிர்பார்ப்போமாக! மதீனத்து அன்சாரிகளைப் போல் இஸ்லாத்திற்காக எதையும் துறக்கும் மனதை நமக்கு இறைவன் தருவானாக! ஆமீன்!

ஸஹீஹ் புகாரியில் : 3778, 3147

17 comments:

அரபுத்தமிழன் said...

நிச்சயமாகக் கண்ணீர் வரவழைக்கும் தருணம்தான் அது. எங்களுக்குச் செல்வமெல்லாம் தேவையில்லை, கருணை மிக்க ரசூலுல்லாஹ் எங்களுடன்
இருப்பதே போதும் என்று மகிழ்ந்த பொழுது அது.

அரபுத்தமிழன் said...

மக்கா வெற்றிக்குப் பின் நடந்த இந்தப் போரில் ரசூலுல்லாஹ் நினைத்திருந்தால் அவர்கள் பிறந்த பூமியான மக்காவிலேயே தங்கியிருக்கலாம்.

அரபுத்தமிழன் said...

மதினாவாசிகள் மிக விசித்திரமானவர். இஸ்லாத்திற்கு முன்பே யத்ரிபுடன் சண்டை செய்ய வந்தவர்களுடன் பகலில் சண்டை செய்தாலும் இரவில் அவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்ததைப் பார்த்து எதிரி மன்னனே வியந்து போரைத் தவிர்த்து விட்டுச் சென்றதைப் பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன்

அரபுத்தமிழன் said...

அந்தப் புனித யுகத்திற்கு எம்மை அழைத்துச் சென்ற புன்னகையரசிக்கு நன்றியும் துஆவும்.

RAZIN ABDUL RAHMAN said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
சிறப்பான வரலாற்று நிகழ்வை,ஆதாரத்துடன்,கோர்வையாக தந்து,தியாகங்களை நினைவு கூற செய்தமைக்கு நன்றிகள்.

அன்சாரிகள் என்றுமே மதிப்பிற்குரியவர்கள்.அல்லாஹ் அவர்களின் மீது பேரருளை பொழிய போதுமானவன்

வாழ்த்துக்கள்

அன்புடன்
ரஜின்

எல் கே said...

இதை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது

enrenrum16 said...

ஸலாம் அரபுத்தமிழன்

எப்போதும் போல் முதல் மறுமொழி வழங்கி என்னை உற்சாகப்படுத்தியதற்கும் இந்த ஹதீஸுக்கு உங்கள் மேலதிக விளக்கத்திற்கும் துஆவிற்கும் மிக்க நன்றி. :)

enrenrum16 said...

வ அலைக்கும் ஸலாம் ரஜின்

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

/அன்சாரிகள் என்றுமே மதிப்பிற்குரியவர்கள்.அல்லாஹ் அவர்களின் மீது பேரருளை பொழிய போதுமானவன்/ ஆமீன்.

enrenrum16 said...

வாங்க எல்கே
/இதை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது/

பரவாயில்லை எல்கே... முஸ்லிமல்லாத ஒருவருக்கு இதை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு தெரிந்து கொள்ள விருப்பமிருந்தால் சிறியதாக விளக்குகிறேன்.

முஹம்மது நபியவர்கள் உலகில் இஸ்லாமியப்பணியில் இருந்த காலத்தில் பலர் மனந்திருந்தி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். நிராகரிப்பாளர்களோ சும்மா இருக்கவில்லை.அவர்களுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் நபியவர்கள் போட்டாலும் அதை நிறைவேற்றாமல் முஸ்லிம்கள் மீது அவ்வப்போது போர் தொடுத்து வந்தார்கள்.

அவ்வகையான போர்கள் எல்லாவற்றிலும் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. வெற்றியடைந்த சில போர்களில் கிடைத்த பொருட்களை (ஒட்டகங்கள், எதிரிகள் விட்டுச்சென்ற மற்றபல பொருட்கள்) எங்கனம் பங்கிடுவது என்பது (எல்லாருக்கும் சம்மாகப் பிரிப்பதில்) தொடர்பான இறைவசனம் நபியவர்களுக்குக் கிட்டியது. அதன்படி, குறிப்பிட்ட யுத்தத்தில் கிடைத்த வெற்றிப்பொருட்களை இஸ்லாத்தில் புதிதாக இணைந்தவர்களுக்கு, ஒரு ஊக்குவிப்பாக, அதிகமாக நபி பங்கிட்டு கொடுத்தார்கள்.

இதில் மனம் வருந்திய மதீனா எனும் நகரவாசிகள் (அன்ஸாரிகள்-இஸ்லாமிய வரலாற்றில் இவர்களின் தொண்டு சொல்லி மாளாது) நபியவர்களிடம் நேரடியாக கேட்க தயங்கி நிற்க, நபியவர்கள் அவர்களின் உள்ளக்கிடக்கையை அறிந்து, "இறைவனும் நானும உங்களுடனிருக்க இந்த அற்ப பொருட்களுக்காகவா நீங்கள் ஆசை கொண்டீர்கள்" எனக் கேட்டுவிட்டு அவர்களுக்காக உருக்கமான ப்ரார்த்தனை செய்ய அன்சாரிகள் தங்கள் தவறை உணர்ந்து நபிகளுடைய ப்ரார்த்தனையைக் கேட்டு கண்ணீர் வடிக்கிறார்கள். (விளக்கம் கொஞ்சம் பெரிசாயிடுச்ச்;))

ஹுஸைனம்மா said...

அட, புதுப்பேரெல்லாம் வச்சுட்டீங்க போல பிளாக்குக்கு!! சொல்லவே இல்லை!! (ஸாரி, நாந்தான் மிஸ் பண்ணிட்டேன். என் ரீடர்ல அப்-டேட் ஆகவேயில்லை; ஏன்னு தெரியலை. அதான் லேட்!!)

அப்புறம், ஹதீஸ் சொல்லும் சேதி அருமை.

ஹுஸைனம்மா said...

அப்புறம் சொல்ல மறந்துட்டேன்: இந்த மாதிரி இஸ்லாமிய சம்பவங்களை எழுதும்போது, எளிய வார்த்தைகளில், சரளமான நடையில் எழுதினால், எல்லாத் தரப்பினரையும் சென்றடையும். இந்த முழு பதிவையும் எல்.கே.வுக்காக எப்படி தெளிவாக(!!) எழுதிருக்கீங்க பாருங்க, அதுபோல எழுதுங்க.

நான் சொல்ல வந்ததைச் சரியாச் சொல்லிருக்கேனா? :-)))))

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அருமை.வாழ்த்துக்கள்.

enrenrum16 said...

வாங்க ஹுஸைனம்மா...வாராதவுக வந்திருக்கீக... அனுபவசாலி சொல்லிட்டீக... இனி அப்படியே ஆகட்டுங்க... எல்லாஞ் சரி... தெளிவா சொல்லியிருக்கேன்னு சொல்லிட்டு ரெண்டு ஆச்சரியக்குறி போட்டுட்டீங்களே...அது எதுக்குன்னு தெரியலேன்னாலும் என்னமோ நல்லதுக்குன்னு எடுத்துக்கறேன்;)... என் வலையை மெறுகேற்ற உங்க கருத்துக்கள் கண்டிப்பாக உதவும். ரீடர்ல அப்-டேட் ஆகலைன்னாலும் ஞாபகம் வச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க...

enrenrum16 said...

வ அலைக்கும் ஸலாம் ஆயிஷா... உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...தொடர்ந்து ஆதரவு தாங்க.

ஸாதிகா said...

நல்ல இடுகை.அன்ஸாரிகள்,குறைஷிகள என்பதற்கான அர்த்தங்களை குறிப்பிட்டு இருந்தீர்களானால் அனைவருக்கும் எளிதில் புரியும்.

ஸாதிகா said...

நல்ல இடுகை.அன்ஸாரிகள்,குறைஷிகள என்பதற்கான அர்த்தங்களை குறிப்பிட்டு இருந்தீர்களானால் அனைவருக்கும் எளிதில் புரியும்.

enrenrum16 said...

ஸலாம் ஸாதிகா அக்கா.... ஆமா...அதையும் சொல்லியிருக்கலாம்... இங்கு முக்கியமான படிப்பினையாக மறுமையில் கிடைக்கும் நன்மைகளை நான் கருதியதால் எனக்கு இது தோன்றவே இல்லை அக்கா... உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.தொடர்ந்து ஆதரவு தாங்க.