Sunday, January 30, 2011

பெண்ணுரிமை!


ஹ்க்கும்... வலைப்பூ ஆரம்பிச்சு எண்ணி மூணு மாசம் ஆகலை (அதென்ன மூணு மாசக்கணக்கு...முளச்சு மூணு இலை விடலைன்னு சொல்றதுல உள்ள அதே கணக்கு தான்...;)), அதுக்குள்ள பெண்ணுரிமை பேசற அளவுக்கு வந்தாச்சான்னு நீங்க நினைக்கிறத நானும் நினச்சேன்... அதுனால பெண்ணுரிமைப் பற்றி நான் எழுதப்போறதில்லை. ஏன்னா உலகத்தில் பெண்ணுரிமை பற்றி பெண்களுக்குத் தெரிந்ததை விட ஆண்கள் அதிகம் தெரிஞ்சு வச்சிருக்காங்க...

பெண்ணுரிமையைப் பற்றி பெண்கள் எதுக்கு தெரிஞ்சு வச்சிருக்காங்கன்னா அதை சமயத்துக்கு தற்காப்பு ஆயுதமா பயன்படுத்திக்கிறதுக்கு...
அதிகம் படிக்காத கிராமத்து பெண்கள் கூட பஞ்சாயத்து தலைவிகளாகவும் மகளிர் சுய உதவிக் குழு அமைத்தும்,இன்னும் பல நல்ல முன்னுதாரணங்களாகவும்  தங்களையும் தாம் சார்ந்த ஊரையும் ஓரளவுக்காவது முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்றாங்க... நகரங்கள்ல பிறந்து வளர்ற பெண்கள் கூட ஒரு ஸ்டேட்டஸ்ஸுக்காக பொறியியலோ மருத்துவமோ படிச்சுட்டு அதைப் பயன்படுத்திக்காம குழந்தைகுட்டி சமையல்னு செட்டிலாயிடுறாங்க... அவங்களுக்கு அப்படி வேலைக்குப் போற எண்ணம் இல்லைன்னா ஆர்ட்ஸ் அல்லது சயின்ஸ் டிகிரி படிச்சிருந்தா அந்த பொறியியல்,மருத்துவ படிப்பு கஷ்டப்பட்டு படிச்சு தாங்கள் சேர்ந்த கிராமத்தின் மற்ற மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமா இருக்க நினைக்கும் மாணவர்களுக்கு அதிகம் பயன்பட்டிருக்கும். ஏட்டுக்கல்வி கிடச்சிட்டா ஒரு பெண்ணுக்கு முழு சுதந்திரமும் தைரியமும் கிடச்சுடுமான்னா அதுவுமில்ல... அப்படியிருந்திருந்தா "பட்டதாரிப் பெண் தற்கொலை" போன்ற செய்திகளுக்கு இடமில்லையே!நகரத்தில் வாழ்றவங்களுக்கு பத்தோட பதிணொண்ணா தெரியுற அதே கல்லூரி படிப்பு கிராமத்தில் இருக்கிறவங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுக்கிறது. அதே அடையாளம் அவர்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் தைரியத்துடன் எதிர்கொள்ள உதவுகிறது. அதனால நான் என்ன சொல்ல வர்றேன்னா ...இருங்க இதையும் சொல்லி முடிச்சுடறேன்...

ஆண்கள் எதுக்கு பெண்ணுரிமையைப் பற்றி தெரிஞ்சுக்கறாங்கன்னா பெண்களிடம் தங்களோட எல்லை இதுவரைதான்..இதுக்கு மேல பேசினா அர்ச்சனை செயல்மூலமாவோ சொல்மூலமாவோ ஆரம்பிச்சுடும்னு அவங்க ஒதுங்கி தங்களுக்கு ஒரு தற்காப்பு ஆயுதமா பயன்படுத்திக்கிறாங்க... ;)

அதனால நான் என்ன சொல்ல வர்றேன்னா... என்னோட ஏட்டுக்கல்வி நம் நாட்டோட பெண்கல்வி சதிவீதத்தை உயர்த்திக்க மட்டுந்தாங்க உதவியிருக்கு:(... என் ஆ.கா. அவ்வளவு மோசமானவரான்னெல்லாம் நினச்சுடாதீங்க... யாருக்காக இல்லையோ, அடுத்த வேளை தைரியமா வீட்டுச் சாப்பாடு சாப்பிடணுன்றதுக்காகவாவது என்னோட உரிமைகள்ல மூக்கை நீட்டுறது கிடையாது... அப்பறம் என்னன்னு கேக்கறீங்களா? விஷயம் இதுதான்... என்னோட அஞ்சு வயசு பையன் கேக்கிற கேள்விகளுக்கு பதில் சொல்றதுக்கு நான் படிச்ச ஏட்டுக்கல்வி உதவலைன்னு சொல்ல வந்தேன்:(

போன தடவை ஊருக்கு போயிருந்தப்போ எங்க வீட்டுக்கு வந்தவங்க என் பையனைக் காட்டி 'இது உன் பையனா'ன்னு கேட்டாங்களாம்..நானும் 'ஆமா'ன்னு சொன்னேனாம்... 'நீ ஏன் ஆமான்னு சொன்னே... பாய்ஸ்செல்லாம் அப்பா பசங்க...கேர்ள்ஸ்தான் அம்மா பிள்ளைங்க'ன்னு அவன் பண்ண ஆராய்ச்சியைப் பார்த்து ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்...  என்னடா இது... பத்து மாசம் கஷ்டப்பட்டு சுமந்து பெற்று ராத்திரி பகல்னு பார்க்காம வளர்க்கிறோம்... ஆனா புகழெல்லாம அப்பாவுக்கா...பெண்ணுரிமை என்னாவறது:( ...எப்படி இவனை வழிக்கு கொண்டு வர்றது... அப்படீன்னு பயங்கரமா (அடிக்க வரக்கூடாது;)) யோசிச்சேன்... அப்பதான் தோணுச்சு... அவன்கிட்ட கேட்டேன்... எல்லா பேபீஸும் யார் வயிற்றிலிருந்து வற்றாங்க'ன்னு..அவன் 'அம்மா வயித்திலயிருந்து'ன்னு சொன்னான்... 'அப்ப பாய்ஸும் அம்மா பிள்ளைங்க தானே'ன்னு கேட்டேன்... திருப்தியான பதில் கிடைச்சதுனால அமைதியாயிட்டான்... அவங்க அப்பாவுக்குத்தான் கொஞ்சம் வருத்தம்;).

எனக்கு விடை தெரியாத ஒரு கேள்வி அவன் இன்னும் கேட்டுக்கிட்டு இருக்கான்... உதவுங்க.. பொதுவா அவன் வாங்கிக் கேக்கிற பொருள் அவசியமில்லாதது எதுவும் பிங்க் நிறத்தில் இருந்துச்சுன்னா 'அதெல்லாம் கேர்ள்ஸுக்குரியது'ன்னு சொன்னா திரும்பிக்கூட பார்க்க மாட்டான். சமீபத்துல பிங்க் நிறத்தில் ஒரு பென்சில் பாக்ஸ் அவனுக்கு ரொம்ப பிடிச்சுபோயிடுச்சு... அது கேர்ள்ஸுக்குரியதுன்னு சொல்லியும் 'அப்ப லேடீஸ் மட்டும் ஏன் ஜென்ட்ஸ் காரை ஓட்டுறாங்க'ன்னு ஒரு கேள்வி கேட்டான்... நானும் 'ஹலோ.. லேடீஸ் கார்,ஜென்ட்ஸ் கார்னு ஒண்ணும் கிடையாது... யார் வேணா எந்த கார் வேணா ஓட்டலாம்'னு சமளிச்சேன். அதுக்கு அவன் சொல்றான் ' அப்ப லேடீஸ் ஜென்ட்ஸோட பேண்ட்,ஷர்ட் போடுறாங்கள்ல... எனக்கும் இந்த கேர்ள்ஸ் பென்சில் பாக்ஸ் வாங்கித் தா'....அவ்வ்வ்... முடியலை...என்னை யாராச்சும்  காப்பாத்துங்களேன்...:(....அதாவது பெண்ணுரிமையைக் காப்பாத்துங்க....

29 comments:

அரபுத்தமிழன் said...

பேரை மாத்துனதுக்கு மிக்க நன்றி. ஆமாம் இந்தப் புன்னகை என்ன விலை :)
பேரு நல்லாருக்கு. ஒவ்வொரு பதிவும் புலம்பல்களாக அமையாமல் புன்னகை தரக்கூடியதாக அமையட்டும்.

அரபுத்தமிழன் said...

//பாய்ஸ்செல்லாம் அப்பா பசங்க...கேர்ள்ஸ்தான் அம்மா பிள்ளைங்க'//
சரியான விஷயத்தைக் கண்டுபிடித்த பையனுக்கு சபாஷ்.

ஆமினா said...

பையன் ரொம்ப புத்திசாலியா உங்க ஆ.கா மாதிரி ;)

அந்நியன் 2 said...

ஹா...ஹா..உங்கள் பதிவை படித்து விட்டு அழுவதா அல்லது சிரிப்பதா என்றுதான் நினைக்க தோணுது ஆனால் சில சில விசயங்கள் சிந்திக்கவும் வைக்கின்றது.

பெண்ணுரிமையைப் பற்றி பேசுனோம் என்றால் எங்களை எதிர்ப்பதற்கே மகளிர் மன்றம் முன்னுருமை கொடுக்கும்.

வெறும் ஏட்டிலும்,பாட்டிலும் நம் நாட்டிலும் மட்டும்தான் பெண்ணுரிமையை பார்க்க முடியும் சட்டத்தில் பார்க்க முடியாது ! அது போல கண்ட கழிவறையிலும் நீண்ட பஸ் இருக்கைகளிலும் பெண்ணுரிமை தெரிகின்றது பொழிவரையில் (சட்டமன்றம்) தெரிய வில்லை.

முடிவா... யாரோ சொன்னது என் காதில் விழுந்த மாதுரி தெரியுது..!!!

அதுக்காக் பெண்கள் எல்லாம் குடத்தை எடுத்துக் கொண்டு என் வீட்டிற்கு வந்திட வேண்டாம்.

பெண்கள் சம உரிமை பற்றி காலம் காலமாக பேசி வருகிறோம். ஆனால் இன்னும் முழு அளவில் பெண்கள் சம உரிமை பெறவில்லை.

பெண்களை பெற்ற பெற்றோர்களே அவர்களை வெருக்கிறார்கள்,அதற்கு உதாரணம்,போன மாத தினத்தந்தி செய்தித்தாளில் ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளை பெற்று எடுத்து,அனாதையாக விட்டுவிட்டு ஓடி
விட்ட தாயும் ஒரு பெண் தான்.

இப்படி பெண்களுக்கு பெண்களே துரோகம் செய்தால் பெண்கள் சம உரிமை எப்படி நிறைவேறும் ???

இன்னும் சொல்ல போனால் பெண்களுக்கு திருமணம் செய்து விட்டால் நமக்கும் அவர்களுக்கும் எந்த உறவும் இல்லை என்று சொல்லும் பெற்றோர்கள் இன்னும் இருக்கிரார்கள்,ஆண்கள்தான் நமக்கு வாரிசு,பெண்கள் வாரிசு இல்லை மற்றும் அவர்களுக்கு எதிலும் உரிமை இல்லை என்று கூறும் பெற்றோர்கள் இருக்கும் பட்சத்தில்...

இந்த பெண்கள் சம உரிமை எப்படி முழு அளவில் நிறைவேறும். ???

உங்கள் ஐந்து வயது மகனின் கேள்விகள் விந்தையாக இருக்கின்றது சகோ..வாழ்த்துக்கள் !

Ram said...

எல்லோருக்கும்எழ கூடிய சந்தேகம் தான்.. உங்க பையனுக்கு 5 வயசாச்சா இத கேக்க.??? ஆச்சர்யமா இருக்கே.!! இப்ப எல்லா குழந்தையும் 3 வயசிலே கேக்குதே.!!

பென்சில் பாக்ஸ் தானே கேட்டான்.. அது என்ன அவசியமில்லாததா.??? வாங்கி கொடுத்துட்டு போங்களேன்..

அப்படி நீங்க விடாபிடியா இருந்தா சொல்லுங்க ஆண்களுக்காக தயாரிக்கப்பட்டதில்ல பேண்ட், சட்டை.. பொதுவா ஆடைங்கறது மனிதனுக்காக மனிதனே உருவாக்கியது.. அவன் அவனுக்கு புடிச்சத எடுத்து மாட்டிகிட்டாங்க.. அப்ப அவங்களுக்கு அது புடிச்சிருந்தது இப்போ இத புடிச்சிருக்கு.. ஆடை மனிதனுக்காக அதில் வேறுபாடில்லை.. இத சொல்லுங்க.. ஆனா பிங்க் கலர் பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிச்சது.. தயாரிப்பு நிறுவனம் அத செய்யறதே பொண்ணுங்களுக்காக தான்.. இப்படி சொல்லி பாருங்க.. என்ன பையன் அதுல இருந்தும் வேற எடக்குமொடக்கா கேள்வி கேப்பான்.. அதுக்கு நான் பொறுப்பில்ல..

enrenrum16 said...

@ அரபுத்தமிழன்

வலைப்பூ பெயர் மாற்ற நீங்கள் சொல்லவில்லையென்றால் இவ்வளவு சீக்கிரத்தில் என் வலையில் புன்னகை தவழ்திருக்காது.... அதுக்காக நாந்தான் உங்களுக்கு நன்றி சொல்லோணும்.... (சரி...இப்படியே மாத்தி மாத்தி நன்றி சொல்லிக்கிட்டேயிருந்தா எப்டி?)

உலகில் விலைசொல்ல முடியாதது புன்னகை ஒன்றுதானே?!:)

புலம்பல்கள் புன்னகை தரக்கூடியதாக இருந்தால் தவறொன்றுமில்லையே...(ஆனாலும் என் புலம்பல் கொஞ்சம் ஓவராத்தான் போச்சு இல்ல...);)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

enrenrum16 said...

ஆமினா..என்னை நல்லா புரிஞ்சிக்கிட்டீங்களேன்னு நான் நினச்சு முடிக்கிறதுக்குள்ள கடைசி வரியில இப்டி என்னை கவிழ்த்திட்டீங்களே!:( அவ்வ்வ்வ்.....

enrenrum16 said...

@அந்நியன்

//சில சில விசயங்கள் சிந்திக்கவும் வைக்கின்றது//
அப்பாடா..கஷ்டப்பட்டு டைப் பண்ணிய ஒரு பத்தி வேஸ்டாயிடுச்சோன்னு நினச்சேன்...:)

//எங்களை எதிர்ப்பதற்கே மகளிர் மன்றம் முன்னுருமை கொடுக்கும்.//எங்களை என்றால் ஆண்களை என்று சொல்கிறீர்களா? பொத்தாம் பொதுவாக ஆண்களை எதிர்த்து ம.மன்றங்களுக்கு கிடைக்கப்போவதென்ன? பெண்களுக்கெதிராக அதாவது அவர்கள் உரிமையைப் பறிக்கும் ஆண்களுக்குத்தான் எதிர்ப்பு இருக்கும்.

//இன்னும் முழு அளவில் பெண்கள் சம உரிமை பெறவில்லை// வேதனையான உண்மைதான்... அது பெண்களின் கையில் மட்டுமல்ல் ஆண்களும் சேர்ந்தே பாடுபட வேண்டும்.

//அனாதையாக விட்டுவிட்டு ஓடி விட்ட தாயும் ஒரு பெண் தான். // வெட்கத்தை விட வேதனையையே அதிகம் தரும் நிகழ்வு இது... அந்த குழந்தைகளை விட்டுச் சென்ற அந்த தாய் எத்தனை நாள் தூக்கமின்றி தவித்தாளோ நமக்கு தெரியாது. அவள் அப்படி செய்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம்... அவளது வறுமை அல்லது பெண்குழந்தைகளை வெறுக்கும் அவளது கணவரை எதிர்க்கும் துணிவின்மை போன்று பல காரணங்களைச் சொல்லலாம்...எனக்கு இதே போல் பல பெண் குழந்தைகள் இருந்து,ஒரு வேளை என் கணவர் எதிர்த்திருந்தால் கண்டிப்பாக நான் சுயமாக என் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவேன்...பெண்குழந்தைகளை வளர்ப்பது பெரிய சாதனை..அதை நான் செய்வேன் என்று சொல்லவில்லை... நானும் அந்த பெண்ணும் வளர்ந்த சூழ்நிலையில் உள்ள வேறுபாட்டை தான் சொல்கிறேன்.

//இந்த பெண்கள் சம உரிமை எப்படி முழு அளவில் நிறைவேறும். ???// பெண்கள் சமவுரிமையில் நீங்களும் அக்கறை எடுத்துள்ளதே ஒரு முன்னேற்றமல்லவா? இது ஒவ்வொரு வீட்டின் ஆண்களுக்கும் தோன்றினாலே பெண்களே வேண்டாமென்று சொன்னால் கூட எங்களுக்கு எதிலும் சமவுரிமை விரைவில் கிடைத்துவிடும்.

கருத்துக்கு மிக்க நன்றி.
தொடர்ந்து பின்னுட்டமிடுங்கள்.

enrenrum16 said...

@தம்பி கூர்மதியன்

//இப்ப எல்லா குழந்தையும் 3 வயசிலே கேக்குதே.!!// அந்த குழந்தைங்க மூணு வயசிலேயே எல்கேஜியில சேர்ந்திருப்பாங்க... என் பையனை 4 வயசில தான் சேர்த்தேன்...;) அவன்கிட்ட ஏற்கனவே 4 பென்சில் பாக்ஸ் இருக்கு... வகுப்பில் ஒவ்வொருத்தரோட பாக்ஸையும் பார்த்துட்டு அதுமாதிரி வாங்கிக் கேப்பான்... இப்போ ஐந்தாவதுக்கு வேட்டை நடக்குது...:(

நீங்க சொன்னதெல்லாம் சொல்லி எனக்கு நானே ஆப்பு வச்சுக்க சொல்றீங்க..:0... உங்க அட்ரஸ சொல்லுங்க...ப்ளைட் டிக்கட் எடுத்து அவனை உங்ககிட்ட அனுப்பி வைக்கிறேன்..நீங்களே நல்ல்ல்ல்லா விளக்கமா சொல்லிடுங்களேன்... (சாருக்கு இனிதான் குழந்தைகுட்டி வரணுமோ?);)

கோலா பூரி. said...

இன்னிக்குத்தான் உங்கபக்கம் வரேன்னு
நினைக்கிரேன். நல்லா இருக்கு. இனிமேலா அடிக்கடிவருவேன்.

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ...

ஆகா பேர மாத்தியாச்சா?? நல்லா இருக்கு...

பெண்ணுரிமைன்னு டைடில பாத்த ஒடன அடடா நீங்களும் ஆரம்பிச்சுடீங்களோன்னு நெனச்சேன்..

இந்த காலத்து பசங்க கேக்குர கேள்விக்கு பதில் சொல்ல நாம Phd படிக்க வேண்டி இருக்கும் போல..

வளர வளர பிள்ளைகள் அதிகம் கேள்வி கேட்பது ஆரோக்கியமான,மற்றும் சுவாரஸ்யமான ஒன்று..

ஆனால் கேட்க்கும் கேள்விகளுக்கு,சமாளிப்புகளை விட,தெளிவான அறிவுப்பூர்வமான பதில்களை சொல்லி அவர்களின் சிந்தனையை தூண்டுவது நல்லது(இது எல்லா கேள்விகளுக்கும் பொருந்தாது)

ஆண் எதற்காக பெண்ணுரிமை பற்றி தெரிந்துள்ளான் என்பதற்கு,நீங்கள் சொன்ன காரணம் ஒரு வகையில் உண்மைதான்,..

ம்ம்ஹும் உங்கள இது போன்ற கேள்விகளில் இருந்து யாரும் காப்பாத்த வேண்டாம்.அது ஓர் அற்புதமான அனுபவம்..அனுபவியுங்கள்...

அன்புடன்
ரஜின்

Ram said...

குழந்தைகள் செல்லமான இம்சைகள்.. திருமணம் முன்பு ஆயிரம் ஆயிரம் கவிதைகளை காதலிக்கு கொட்டும் ஒருவன் அக்காதலியைவிட அவனுக்கு பெருமையையும், முக்கியத்துவமும் வாய்ந்த குழந்தையை பற்றி அதிகமா எழுதுறதில்ல..

//(சாருக்கு இனிதான் குழந்தைகுட்டி வரணுமோ?);)//

சாருக்கு அதுக்கு முதல்ல எல்லோர் வாழ்க்கையிலும் நடக்குற விபத்து நடக்கணும்ங்க.. ஆனா அந்த விபத்து எனக்கு ஏற்படாம முடிஞ்ச அளவுக்கு தடுத்துவருகிறேன்..

enrenrum16 said...

@ கோமு

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...அடிக்கடி வாங்க.

enrenrum16 said...

@ரஜின்

/கேட்க்கும் கேள்விகளுக்கு,சமாளிப்புகளை விட,தெளிவான அறிவுப்பூர்வமான பதில்களை சொல்லி அவர்களின் சிந்தனையை தூண்டுவது நல்லது/ கரெக்ட்தான்... சில நேரங்கள்ல நானும் பொறுமையா மட்டுமில்ல...அவனுக்கு புரியுற மாதிரியும்(இது தான் கஷ்டமானது:() விளக்கம் கொடுக்கிறேன். (ஹ்ம்..முன்னயெல்லாம் நான் என்ன சொன்னேன்னு அம்மா மறுபடி கேட்டா இரண்டாவது தடவை சொல்றதுக்கு கூட அவ்வளவு எரிச்சல் பட்டிருக்கேன்..இப்ப என்னடான்னா அவனுக்கு ஒவ்வொரு விளக்கத்தையும் தினமும் அவனுக்கு தோணும்போதெல்லாம் சொல்லவேண்டியிருக்கு...:(..அதுவும் முதல் தடவை என்ன விளக்கம் கொடுத்தோமோ அதையே சொல்லணும்:( அதனால் முதல்ல சொல்லும்போதே சரியான விளக்கத்தை கொடுக்கிறது நமக்கும் நல்லது..அவனுக்கும் நல்லது...(சரி...சரி...ஆரம்பிச்சுட்டாய்யா புலம்பலைன்னு நீங்க சொல்றதுக்குள்ள முடிச்சுக்கறேன்)

/அது ஓர் அற்புதமான அனுபவம்..அனுபவியுங்கள்...\ என்னே ஒரு நல்லெண்ணம்!
கருத்துக்கு மிக்க நன்றி ரஜின்.

enrenrum16 said...

@ தம்பி கூர்மதியன்

ஆமா... குழந்தைகளைப் பற்றிய கவிதைகள் பெரும்பாலும் பெண்கள் தான் எழுதுகிறார்கள்.

பொதுவா யாருக்கும் எந்த விபத்தும் நடக்கக்கூடாதுன்னு சொல்லணும். ஆனா நீங்க சொல்லியிருக்கிற விபத்து உங்களுக்கு கூடிய சீக்கிரத்தில் நடக்க வாழ்த்துக்கள்.

வலையுகம் said...

இந்த இடுகை எப்ப போட்டீங்க இப்பதான் பார்க்கிறேன் சொல்லுறதுயில்லையா?

பலோவராக இருந்தும் இந்த இடுகை எனக்கு வரவில்லையே ஏன்?

சரி விஷயத்துக்கு வர்ரேன்

”நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள்.தீமையை தடுப்பார்கள்”(அல்குர்ஆன் 9:71)

அந்த வகையில் உற்ற நண்பனாக இருந்து பெண்ணுரிமைக்கு குரல் கொடுப்போம்.

அப்புறம் இந்த பதிவிற்கு ஒட்டு போட்டுயிருக்கிறேன்

ஜெய்லானி said...

எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க ...நானும் சின்ன வயசில இப்படித்தான் இருந்தேன் :-))

enrenrum16 said...

/பலோவராக இருந்தும் இந்த இடுகை எனக்கு வரவில்லையே ஏன்?/ ஏன்னு எனக்கும் தெரியலையே..:(

கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி. :)

enrenrum16 said...

/எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க ...நானும் சின்ன வயசில இப்படித்தான் இருந்தேன் :-))/

நீங்களும் இப்டித்தான் இருந்தீங்களா...அப்ப நான் ரொம்பவே ஜாக்கிரதையா தான் இருக்கணும் ;)

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து ஆதரவு தாங்க.

Mahi said...

:)
பையன் வளரவளர நிறைய கேள்வி கேக்கறான்.நல்ல பதிவுங்க பானு!

புன்னகை வலை--அழகா இருக்கு!

Unknown said...

வந்துட்டேன் அக்கா...
நாட்டாமை தீர்ப்பை மாதி சொல்லு...

அன்புடன் மலிக்கா said...

நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள் பையனுக்கும் உங்களுக்கும்..

enrenrum16 said...

@ மஹி

சில நேரங்கள்ல அவனுடைய கேள்விகள் அலுத்துப் போனவையாக இருந்தாலும் பல நேரங்களில் சிரிப்பாக இருக்கும்...இறையருளால் இப்படியே வாழ்க்கை நலமாக போகிறது. ;)

புன்னகை வலைன்ற பேர் சட்டென்று ஃப்ளாஷ் அடித்த ஒன்று... உங்களுக்கும் பிடிச்சிருக்கா...நன்றி.

enrenrum16 said...

@ சிவா

/வந்துட்டேன் அக்கா...
நாட்டாமை தீர்ப்பை மாதி சொல்லு.../

தம்பி...நாட்டாமை அளவுக்கெல்லாம் நம்ம தீர்ர்ப்பு இருக்காது:(...ஏதோ என்னை காப்பாத்திக்கிறதுக்கு நானே ஏதோ சொல்லி எஸ்கேப்பாயிட்டுருக்கேன்... அதைக் கெடுத்துடாதீங்க தம்பீ...;) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

enrenrum16 said...

ஸலாம் மலிக்கா... உங்க வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...;)

ஸாதிகா said...

நல்ல பதிவு.அருமையா சொல்லி இருக்கீங்க.

enrenrum16 said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிகா அக்கா.

Anonymous said...

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

இராஜராஜேஸ்வரி said...

புன்னகை வலை!விரித்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..