Tuesday, January 11, 2011

ஒரு தாயின் டைரி

ஆமினா 2010 டைரி தொடர்பதிவு எழுத அழைத்திருந்தாங்க.. கொஞ்ஞ்ஞ்சம் லேட்டாயிடுச்சு... உண்மையைச் சொல்லணும்னா போன வருஷம் எனக்கு என்ன நடந்துச்சுன்னு யோசிக்கத்தான் இவ்வளவு காலமாச்சுன்னு வச்சுக்கலாம்.

ஜனவரி:

மகனுக்கு பள்ளி அட்மிஷன் கிடைக்க கேட்ட ப்ரார்த்தனைக்கு நல்லாவே பலன் இருந்தது... அதிகம் சிரமப்படாமல் அப்ளை செய்திருந்த முதல் மற்றும் ஒரே பள்ளியிலேயே அனுமதி கிடைத்தது. நேர்முகத்தேர்வில் எல்லா கேள்விகளுக்கும் அழகாக பதில் சொல்லிக் கொண்டிருந்தவனிடம் அத்தோடு விட்டிருக்கலாம்; அந்த பள்ளியின் பெயரென்ன என்று பள்ளி முதல்வர் அவனிடம் கேட்க கொஞ்சமும் யோசிக்காமல் அழகாக வேறு பள்ளியின் பெயரைச் சொல்லியது மறக்க முடியாதது. பெற்றோர் பெயருக்கு முன்னால் Mr & Mrs. சேர்த்து கூறிய ஒரே மாணவன் நீதான் என்று அவர் கூறியதும் நினைவிலிருந்து நீங்காதது.

பிப்ரவர் & மார்ச்:

இந்த இரண்டு மாதங்களும் ஒரு பெரிய கண்டமாகவும் இப்ப் நினைத்தாலும் கலக்கத்தை உண்டாக்குவதுமாக அமைந்துவிட்டன. 'கவலைப்படாதே..நான் உனக்காக, உன் வலியை லேசாசாக்கி வைக்க இறைவனிடம் துஆ செய்தேன். தைரியமாக இரு' என்று என் கணவர் சொன்னபோது அவருடைய ஆறுதல் எனக்கு கொஞ்சம் பயம் நீக்கியது. அம்மாவிடம் போன் செய்து கவலைப்பட்டு அவரும் ஆறுதலளித்தது இன்னும் கொஞ்சம் பயத்தை விலக்கியது. மேட்டர் இதுதான்... ஒரு பல்லுக்கு வேர் சிகிச்சைக்குச் (Root canal) செல்லவேண்டியிருந்தது. ஒவ்வொரு அமர்தலுக்கும் நாள் நெருங்க நெருங்க மூடு மாறும். மற்ற வேலைகள் எப்பவும் போல் செய்து கொண்டிருந்தாலும் முகத்திலும் மனதிலும் வருத்தம் மேலோங்கியிருக்கும்...ஹ்.ம்..எவ்வளவோ பேருக்கு எவ்வளவோ கஷ்டம் இருக்கு...நம் கஷ்டம் அவையெல்லாவற்றையும் விட தூசு என்று நினைத்ததுண்டு.. ச்ச ..ச்ச..வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவங்க நான்..ஹி..ஹி..

ஏப்ரல்:

மகனுக்கு பள்ளி ஆரம்பமானது. அத்தனை நாளும் இஷ்டம் போல் தூங்கி எழுந்து விளையாடி இருந்தவனுக்கு அதிகாலையில் எழுந்து கிளம்புவது அவ்வளவு கஷ்டமாயிருந்தது..அவனைக் கிளப்புவது எனக்கு அதை விட கஷ்டமாயிருந்தது. நிறைய அம்மாமார்கள் மகன்/மகள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததும் வீடே வெறிச்சொடி இருப்பதாக உணர்வதாக சொல்வார்கள். எனக்கு அப்படியொன்றும் தோணவில்லை. ஆனால் என் மகன் என்னை ரொம்பவே மிஸ் பண்ணியது அவனுடைய பேச்சிலிருந்து தெரிந்தது. முதல் நாள் பள்ளி சென்று வந்தவனிடம் இன்னிக்கு எல்லா பிள்ளைகளும் என்ன செய்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவன் ' எல்லாரும் அழுதோம்' என்று அவ்வளவு சோகத்துடன் சொல்லியது சிரிப்பை வரவழைத்தாலும் என்னைப் பிரிந்ததில் அவனுக்கு இருந்த வருத்தம் எனக்கும் கொஞ்சம் தொற்றியது.

மே:

சொல்லும்படியா எதுவும் நடந்ததா ஞாபகமில்லை... உறவினரது திருமணம் நடந்தது... மகிழ்ச்சியாக கழிந்தது.

ஜூன்:

அடுத்த மாதம் கோடை விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் திட்டமிருந்ததால் அந்த 'ஊருக்கு போகும் மூடு' வந்துவிட்டது. வீட்டில் எதுவுமே செய்ய ஓடாது. ஊருக்கு பெட்டி கட்டுவதிலேயே (முக்கியமா ஷாப்பிங்) மனமிருக்கும். என்ன வாங்குவது...அதைப் பெட்டியில் வைத்து கட்டுவது (அடைப்பது) என்று 10,20 நாள் ஓடிவிடும். அப்படியே நாமளும் புதுசா உடை வாங்கிக்கலாம்.  ஷாப்பிங்கைக் காரணம் காட்டி உணவகத்தில் சாப்பிடுவது என்று நாட்கள் பறந்துவிடும்.

ஜூலை:

ஊருக்குப் போய் இறங்கியாச்சு. ஊருக்கு போவது என்றாலே என் ரத்த சொந்தங்களைப் பார்ப்பதில் தான் எனக்கு அதிகம் மகிழ்ச்சி. சித்தி வீடு, மாமா வீடு என்று நல்ல அரட்டை. பள்ளி, கல்லுரி தோழிகளுடன் நேரில் மற்றும் போனில் சந்திப்பு. பல நல்ல விஷயங்கள் நிறைவேறின. ஜூலையில் இங்கிருக்கும் கொளுத்தும் வெயிலுக்கு நேரெதிராக ஊரில் நல்ல வானிலை. வெயிலுமில்லாத, மழையுமில்லாத நல்ல குளு குளு வானிலைக்காவே இனி ஊருக்கு ஜூலை, ஆகஸ்ட்டில் தான் செல்ல வேண்டுமென நினைத்து கொண்டேன்.

ஆகஸ்ட்:

ஊரிலிருந்து வந்த களைப்பு. (ஊரில என்னவோ செங்கல் தூக்கி கட்டுமான வேலை பார்த்த மாதிரி கொஞ்சம் அல்டாப்பு பண்ணிக்கறது). இங்கு வந்ததும் ஊரில் உள்ள நினைவுகள் ரொம்ப அதிகமாக இருக்கும்.
ஊரிலிருந்த வானிலையில் இவ்வளவு நாள் இருந்துவிட்டு இங்குள்ள கொளுத்தும் வெயிலுக்கும் உடலும் மனமும் ஒத்துழைக்க கொஞ்ச நாளாகின. அப்படியே ரமழான் ஆரம்பமாகிவிட்டது. கொஞ்சம் தூக்கம், குரான் ஓதுதல், தொழுகை, சமையல், தராவீஹ் என ரமழான் கழிந்தது.

செப்டம்பர்:

நோன்பு தொடர்ந்து பெருநாள் வந்தது. வழக்கம்போல் இந்த பெருநாளும் நல்லபடியாக அமைந்தது. அடுத்த நான்கு நாட்களில் பள்ளி ஆரம்பம். மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்து மகனை பள்ளி செல்லும் மூடிற்கு கொண்டு வந்தாயிற்று.

அக்டோபர்:

ம்.ம்..அல் அய்னிலிருக்கும் ஹிலி ஃபன் சிட்டி சென்றிருந்தோம். இதுபோல் சுற்றுலா செல்லுவதில் மொத்த உற்சாகத்தில் நமக்கு 25% என்றால் மகனுக்கு 75%. இவ்வளவு என்று சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷமாக அனுபவித்தான். அன்று எடுத்த படங்களையும் வீடியோக்களையும் எத்தனை முறை பார்த்தான் என்று சொல்ல முடியாது. அந்த வீடியோக்களிலுள்ள வசனங்களனைத்தும் எனக்கும் என் கணவருக்கும் மனப்பாடமாகிற அளவுக்கு பார்த்தும் அவனுக்கு சலிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் புதியதாய்ப் பார்ப்பது போல் வீடியோக்களைப் பார்க்கும் போது சில நேரங்களில் கோபம் வந்தாலும் அவனை ஓரளவுக்கு மேல் கண்டிக்க முடியவில்லை. அவனுக்காவே இது போல் சுற்றுலா அடிக்கடி செல்ல வேண்டுமென நினைக்கிறேன்.

நவம்பர்:

ஹஜ்ஜு பெருநாளை வழக்கம் போல் உறவினர்களுடன் சந்தோஷமாக கொண்டாடியாயிற்று.

அதுவரை ப்ளாக்குகளுக்குச் சென்று பின்னூட்டம் மட்டுமளித்து கொண்டிருந்தேன். நாமும் ஒன்று துவங்கலாம் என தோன்றியது இந்த மாதத்தில்தான். என் ப்ளாக்கை நினைத்து என்னைத் திட்ட நினைத்தால் இந்த மாதத்தைத் திட்டிக்கொள்ளவும். ப்ளாக் தொடங்குவது எப்படி என்று நெட்டில் தேடுவேன். ஆனால் அந்த வேலையைச் செய்யாமல் பிறரது ப்ளாக் சென்று படிப்பதற்கும் பின்னூட்டமிடுவதற்குமே நேரம் சரியாக இருந்தது. சரி..நாளை பார்க்கலாம்..நாளை பார்க்கலாம் என்று கழிந்தது.

டிசம்பர்:

ஒரு வழியாக ப்ளாக் ஆரம்பித்தேன். என்ன எழுதுவது என்று ஒரு நிர்ணயமெல்லாம் செய்யவில்லை. உபயோகமான தகவல்கள் எழுதிக்கலாம்னு ஒரு ஒரு...என்ன சொல்வது...ஒரு நல்லெண்ணத்தில் தொடங்கியாச்சு. ப்ளாக் ஆரம்பிக்க கொஞ்சம் திணறினேன் (இதெல்லாம் வெளியே சொல்லக்கூடாதோ?). blogger.com திறந்தால் முழுவதும் அரபியில் இருந்தது. திக்கித் திணறி முழுவதும் தமிழில் தொடங்கியாச்சு. இப்ப என்னடான்னா டாஷ்போர்டில் சில தமிழ் வார்த்தைகளும் புரியாமல் ப்ளாக் அந்தரத்தில் தொங்கிக்கிட்டிருக்கு. கூடிய சீக்கிரத்தில் இழுத்துப் பிடித்து வைக்கணும். அதுக்கு உங்க எல்லாரோட உதவி வேண்டும்.

11 comments:

ஸாதிகா said...

சுவாரஸ்யம்

ஆமினா said...

பல்லுகு தான் இவ்வளவு பெரிய பிலப்பா??

ஹா...ஹா...ஹா.... நான் என்னமோ நெனச்சுட்டேன் போங்க ;))

நகைச்சுவையா எழுதியிருக்கீங்க!!

வாழ்த்துக்கள்

Mahi said...

12 மாத நிகழ்வுகளையும் இன்ட்ரஸ்டிங்கா சொல்லிட்டீங்க பானு!

எம் அப்துல் காதர் said...

உங்கள் பகிர்தல் அருமையா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க சகோ. இண்டிலி யில், தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கலையா?? நிறைய பேர் படிக்க வருவார்கள்!!

enrenrum16 said...

வாங்க ஸாதிகா அக்கா...உங்க கருத்துக்கு மிக்க நன்றி.

enrenrum16 said...

வாங்க ஆமினா.. நீங்க வேற.. எந்த வலியையும் பொறுத்துக்கலாம்.. அந்த இடத்தில் நம் கையை வைத்தால் கொஞ்சம் வலி குறைவது போலிருக்கும்..ஆனால் இந்த பல்வலியிருக்குதே... வலியைத் தாங்கிக் கொள்வதைத் தவிர வேறு ஒண்ணுமே செய்ய முடியாது...

உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி.

enrenrum16 said...

வாங்க மஹி.. என் டைரியை என்னால் முடிந்த அளவு யோசிச்சு எழுதினேன்.. இன்டெரெஸ்டிங்காக அமைந்ததது என்று நீங்கள் சொன்னதில் ரொம்பவும் மகிழ்ச்சி...நன்றி.

enrenrum16 said...

பாராட்டுக்கு மிக்க நன்றி அப்துல்காதர்... தமிழ்மணத்தில் இன்றுதான் இணைத்தேன். இன்ட்லியில் ஒவ்வொரு முறையும் இணைக்கணுமோ? முதல் ஃபாலோவராக ஆனதற்கு நன்றி.

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ...
கொஞ்சம் டிலே..ஆயிருச்சு...(பரவா இல்லன்னு நீங்க சொல்ரது கேக்குது..)
கடந்த ஆண்டின் டைரிக்குறிப்புகள நல்லாவே அங்கங்க சுவாரஸ்யமா சொல்லி முடிச்சுருக்கீங்க...

//@ஆமினா - பல்லுகு தான் இவ்வளவு பெரிய பிலப்பா??//

ரிப்பீட்டு...

நீங்களும் அமீரக வாழ் தமிழ்நெஞ்சங்கள் தானா??

வாழ்த்துக்கள் அருமையான வாழ்வை அளித்த வல்லோனுக்கு நன்றி நவிழ மறவாதீர்கள்...

அன்புடன்
ரஜின்

Jaleela Kamal said...

ஆஹா ஒரு தாயின் டைரி சூப்பர்

னெட் கனெக்‌ஷென் சரியா இல்லாததால் ஒரு பதிவுக்கும் கமெண்ட் போட முடியல.
இங்கு எந்த பதிவுக்கும் கமெண்ட் ஆப்ஷன் வொர்க் ஆகல,
டைரி மட்டும் தான் ஓப்பன் ஆச்சு

பல்ரூட் கெனால் படிக்கும் முன் என்ன வோ ஏதோன்னு பயந்துட்டேன்.
.
பையன் வீடியோவ எத்தனை முறை பார்த்தாலும் சலினன்றீஙக்லே

என் பையன் பிற்ந்து முதல் வருடம் மட்டும் நல்ல் போட்டோக்கள் எடுத்து எல்லாரையும் கூப்பிட்டு சாப்பாடு வைத்தோம்,
அவன் இப்ப எடுத்து பார்த்தாலும் புதுசா இப்ப தான் பார்ப்பது போல் ரொம்ப நேரமா பார்த்து கொண்டே இருப்பான்.

12 மாதமும் போரடிக்கா போட்டு இருக்கீங்க

enrenrum16 said...

வாங்க ஜலீலாக்கா.... உங்க பின்னூட்டத்தை நான் பார்க்கவேயில்லை... இப்பதான் பார்த்தேன்...ரொம்ப சந்தோஷம்.... அவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவிலயும் என் ப்ளாக்கிற்கு வந்து கருத்து சொன்னதற்கு ரொம்ப நன்றி...

சலிக்காம போட்டோ பார்க்கிறது உங்க வீட்லயும் உண்டா... அதுல என்னதான் கிடைக்குதோ தெரியலைக்கா இந்த பசங்களுக்கு...:(

தொடர்ந்து வாங்கக்கா...