Wednesday, July 1, 2015

இப்பயமின்றி எப்பெண்ணுமில்லை!

காலையில் எழுந்து
குளிக்கச் செல்ல பயம் -
குளியறையில் கேமரா இருக்குமோ?!

வாசலில் தண்ணீர் தெளித்து
கோலமிட பயம் - 
ஈவ்டீசர்கள் நிற்பரோ?!

பள்ளி/கல்லூரிக்குச்
செல்ல பயம் -
உயிர்,மானத்துடன் வீடு திரும்புவேனா?

கிடைத்த வேலைக்குச் 
செல்ல பயம் - 
உடன் பணிபுரிபவரின்
சில்மிஷங்கள் இருக்குமோ?

குற்றவாளிகள் வீதிஉலாவிலும்
குற்றுயிர்ப் பெண்களோ
தானும் செத்து
உங்கள் பெண்களையும்
ஒடுக்கியும் புதைத்தும்
விட்டுச்செல்வதை
உணர்ந்தீர்களா ஆண்களே?

எங்கோ ஒரு சரிகா
எங்கோ ஒரு வித்தியா
எங்கோ ஓர் இசைப்ப்ரியா
எங்கோ ஒரு நிர்பயா
எங்கோ ஓர் அருணா
என்பதல்ல - 
எங்கே நானும் அருணா ஆகிவிடுவேனா
இங்கே நானும் சரிகா ஆகிவிடுவேனா
என்று ஒவ்வொரு வீட்டிலும்
ஒவ்வொரு பெண்ணும்
தெனாலி ஆகிவிட்டிருப்பது
யாருக்கேனும் புரிந்ததா?

உங்கள் தாயின்
உங்கள் சகோதரியின்
உங்கள் மனைவி மகள்களின்
தூக்கம் தொலைக்கும் துயர்
கண்களில் வழியும் அந்த பீதி
தொண்டைக்குழியை அடைக்கும் உருண்டை
வயிற்றில் கரைக்கும் கிலி
உங்கள் உள்ளத்திற்குள்
ஊடுருவியதுண்டா என்றேனும்?

அச்சம் களைந்து செயலில் நுழை
பலியாகும் பெண்ணிடம்
யாரிடமும் பேசாதே!
எங்கும் போகாதே!
எதையும் கற்காதே!
படி தாண்டா பத்தினியாயிரு!
என மூளையை மிஞ்சும் அறிவுரைகள்!

குளியலறைக்கும் செல்லாதே
என்றாலும் வியப்பில்லை;
இவர்கள் கூற்றைக் காதில்
போட நாம் முட்டாளுமில்லை

பலியிடும் ஆணுக்கோ
அடுத்த வேட்டைக்கான
அனுபவ அறிவு!

உங்கள் பெண்களின்
அச்சம் தீர்க்க நேரமில்லை - வீண்
அரட்டைகளிலும்
அடக்குமுறைகளிலும்
அறிவுரைகளிலும்
வாழ்க்கையைக் கழிக்கும்
உங்களது சொந்தங்களாய்
வாழ வெட்கின்றோம்.

எங்கள் வாழ்க்கைக்கான விளக்கை
நாங்களே சுமந்துகொண்டு......!!!

7 comments:

Yaathoramani.blogspot.com said...

அற்புதம்
கருத்தும் சொல்லிப்போனவிதமும்
வெகு வெகு அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

பானு said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி ஐயா!

Anonymous said...

உண்மைதான். இந்தியக் கலாச்சாரம், பண்பாடு பெண்களை மதிக்கிறது என்பதெல்லாம் வெறும் கதைதான். மேற்கு உலக நாடுகளில் பெண்கள் பல மடங்கு பாதுகாப்புடன் வாழ்கிறார்கள். இந்தியாவில் அவர்களது வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் பாலியல் தொந்திரவுகள் பற்றிய கவலைகளுடனே நகர்கிறது.

Unknown said...

Nachunnu irukku Thahira. Vaazhthukkal

Unknown said...

Nachunnu irukku Thahira. Vaazhthukkal

பானு said...

மிகச்சரியான கருத்து அனானி சகோ. தெய்வங்களாக மதிக்கப்பட வேண்டாம்... ஒரு ஜீவனாக மிதிக்கப்படாமல் இருந்தாலே போதும்.

பானு said...

சர்ப்ரைஸ் வாழ்த்திற்கு நன்றி ஆபிதா... :) :)