Monday, July 13, 2015

என் வால்; என் உரிமை (My Wall; My Rights) - சரியா?

இன்று முகநூலில் சிலர் ஒரு தத்துவத்தைக் (?) கடைபிடிக்கின்றனர். அதாவது என் வால்’ என் உரிமை. என் முகநூல் பக்கத்தில் எதை வேண்டுமானாலும் எழுதுவேன்; பகிர்வேன். இது தவறு என்று யாரும் சொல்லக்கூடாது என்பதன் சுருக்கமே என் வால், என் உரிமை.

இத்தத்துவம் யாருக்குப் பொருந்துதோ இல்லையோ முஸ்லிம்களுக்குச் சற்றும் பொருந்தாது என்பது என் கருத்து.

உலகில் எந்த மூலைக்குச் சென்றாலும் எவ்வளவு வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்தாலும் நம் சொந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தவுடன் போடும் தூக்கம் தரும் நிம்மதி நமக்கு எந்த மூலையிலும் கிடைக்காது. அதுவரை சென்ற இடங்களில் சில கட்டுப்பாடுகள் நிச்சயம் நம் கைகளைச் சில விஷயங்களிலேனும் கட்டிப்போட்டிருக்கும். அவையனைத்தையும் “சரி… எல்லாம் நம் வீட்டிற்குச் செல்லும்வரை சில நாட்களுக்காகப் பொறுத்துக்கொள்வோம்” என்ற மனோபாவத்துடனேயே கழிப்போம்.

இந்த அளவில் சுதந்திரத்துடன் வாழும் நம் சொந்த வீட்டிற்கே இஸ்லாம் சில நிபந்தனைகளுடன் வாழுமாறு போதிக்கிறது.
(ஹதீஸ்)
75. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தமது அண்டைவீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம்.அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்.அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பியவர் ஒன்று நல்லதை பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 


ஆம். இஸ்லாத்தில் அண்டை வீட்டினருக்குத் தொல்லை தருவது மிகவும் வெறுக்கத்தக்க விஷயமாகும். அண்டை வீட்டினர் என்பவர்கள் நாமாக விரும்பி அமைத்துக்கொள்வதில்லை. தானாக அமைவது. அவர்களது குணநலன்கள், பழக்கவழக்கங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் இந்த ஹதீஸ் தான். இந்த ஹதீஸைத் தான் நாம் பின்பற்ற வேண்டும். தம் வீட்டிற்கருகே வீடுகள் கொண்டவர்கள் ஒவ்வொருவரும் இதனையே பின்பற்ற வேண்டும். இதுவே அவருக்கு நல்லது.
முகநூலில் ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் நமக்கு அனுப்பப்பட்டாலும் நாம் தேர்ந்தெடுத்த பின்பே நண்பர்களாகிறார்கள் ஆக, அண்டை வீட்டினருக்கே இந்த நிபந்தனை என்றால், நாமாகத் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள், மனவருத்தம் கொள்ளும் அல்லது முகஞ்சுழிக்கும் வகையில் உள்ள பதிவுகளைப் பதிவது ஒரு போதும் நியாயமாகாது. 

ஒவ்வொரு கருத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணத்தில் உள்ள பார்வைகளை ஆணித்தரமாக, நேர்மையான முறையில் பகிர்வதில் தவறில்லை. ஆரோக்கியமான கோணத்தில் சிந்தனையைத் தூண்டும் வித்தியாசமான கருத்துகளுக்கு வரும் எதிர்ப்பை இங்கு கூறவில்லை. ஆனால், அருவருப்பான, சிந்தனையைக் குலைக்கும் கருத்துகளை மீண்டும் மீண்டும் மீண்டும் எதிர்ப்புகளையும் மீறி தற்பெருமைக்காகவும் புகழுக்காகவும் பகிரும்போதுதான் அவ்விடத்தில் தொல்லை உருவாகிறது.

உங்கள் தொல்லை தாளாமல் உங்கள் அண்டை வீட்டினர் தம் வீட்டைக் காலி செய்வதற்கும் உங்கள் பதிவுகளின் நாகரீகக் குறைபாட்டால் உங்களை அன்ஃப்ரண்ட் செய்வதற்கும் அதிக வித்தியாசமில்லை.

என் வால் என் உரிமை என்பவர்கள், பிறர் வாலில் இருக்கும் குறைகளைக் கண்களை மூடிக்கொண்டு கடந்துவிடுவதைத் தவிர வேறு வழியில்லை. 

No comments: