Showing posts with label அரேபியப்போர். Show all posts
Showing posts with label அரேபியப்போர். Show all posts

Wednesday, October 10, 2012

எங்கிருந்தாலும் வாழ்க!!


இப்பல்லாம் எங்க பார்த்தாலும் புரட்சி...கலவரம்.... தடியடி... எல்லாவற்றுக்கும் காரணமானவர்கள் பாதுகாப்பா இருந்துக்கறாங்க... ஆனா பொதுமக்கள் தான் பாதிப்படையறாங்க... கடையடைப்பினால் சரியான சாப்பாடு கிடைக்காது.... பள்ளிக்குச் செல்ல முடியாது... பணிக்கும் செல்ல முடியாது.... தேவைக்கு மருத்துவமனைக்கும் போக முடியாது.... இப்படி பொதுமக்களாகிய நாம் படுற அவதி தாங்க முடியாது.....

அதிலயும் அரபு நாடுகள்ல நடந்த, நடந்து கொண்டிருக்கும் Arab  Uprising  எனப்படும் அரேபிய கலகம் என்ற வார்த்தையைக் கேட்டாலே பொது மக்களுக்கும் பீதியாகுது.... பதிவியில் இருக்கிறவங்களுக்கும் ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கு. டுனீஷியா எனும் சிறிய நாட்டில் 17 டிசம்பர் 2010 அன்று அப்போதைய அதிபர் ஜைனுல் ஆபிதீன் பென் அலியின் 23 வருட கொடுங்கோலாட்சியை எதிர்த்து  முஹம்மது பூஅஸீஸி என்பவரின் உயிரிழப்பினால் ஆரம்பித்தது இந்த அரேபிய கலகம். 14 ஜனவரி 2011 அன்று பென் அலி பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதால் நல்லவேளையாக (?) இருபத்தட்டே நாட்களில்  கலகம் முடிவடைந்தது. ஒரு வேளை அரேபிய கலகத்தின் ஆரம்பமாகயிருந்ததால் அவர் சரியான  ப்ப்ப்ப்ளான் பண்ணலையோ என்னவோ?! அந்த 28 நாட்களில் ஏற்பட்ட உயிரிழப்பு 338 , 2147 பேர் காயமடைந்தனர்.
----------------------------
எகிப்தின் நவீன பிர் அவ்ன் என்று அழைக்கப்பட்ட ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி கவிழ துனிஷிய கலகம் முன்மாதிரியாக இருந்தது. முபாரக்கின் ஆட்சியை கவிழ்க்க சதி தீட்டுவதில் சமூக வலைத்தளமான ட்விட்டர் பெரும்பங்கு வகித்தது. இப்படியாக முபாரக்கின் முப்ப்ப்ப்ப்ப்பது ஆண்டுகால கொடுங்கோலாட்சியை எதிர்க்க முக்கிய காரணமாக இருந்தவை அவர் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஆதரித்தது தான். .

25 ஜனவரி 2011 அன்று வெடித்த புரட்சியினால் சரியாக 18வது நாளில் 11 .02.2011  அன்று அதிபர் முபாரக் பதவி விலகினார். இந்த 18 நாட்களில் உயிரிழந்தவர்கள் 846, காயமடந்தவர்கள் - 6467.
-----------------------
கிட்டத்தட்ட தெற்கு ஏமனிலும் இதே கதை தான். தனது முப்பத்து மூஊஊஊன்று ஆண்டு கால பதவியிலிருந்து விலகினார் அலி அப்துல்லாஹ் சாலஹ். 27 ஜனவரி 2011ல் ஆரம்பித்த ஏமனிய புரட்சி ஒரு வருட காலம் நீடித்தது. அப்துல்லாஹ்வின் ஆட்சியை கடுமையாக எதிர்த்து, அதே வருடம் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, தவக்குல் கர்மன் எனும் பெண்மணி நடத்திய புரட்சி ஏமனிய புரட்சியில் பெரும்பங்கு வகித்தது. இந்த ஓராண்டு கால புரட்சியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000, காயமடைந்தோர் 22000.
-----------------
ஏமனுக்குப் பிறகு தொடங்கிய லிபிய கலகம்தான் ஏதோ சினிமா மாதிரி இருந்தது. 15 பிப்ரவரி 2011 அன்று அந்நாட்டு அதிபர் முஅம்மர் கடாஃபிக்கு எதிராக வெடித்த புரட்சியால் 20 அக்டோபர் 2011 அன்று நாட்டை விட்டு தப்ப முயன்ற கடாஃபி  சுட்டு கொல்லப்பட்டார். அவரது மகன் சிறையில் அடைக்கப்பட்டார்.  8 மாதங்கள் நீடித்த இக்கலகத்தில் 30000 உயிரிழந்தனர், 50000 காயமடைந்தனர். (முந்நாள் அதிபர் கடாஃபியைப் பற்றி நிறைய எழுதலாம். தன் சொந்த எண்ணங்களையே சட்டங்களாக்கி தன் நாட்டில் நாஆஆஆற்பத்தியிரண்டு ஆண்டுகள் ராணுவ ஆட்சி நடத்தியவர். அவருடைய வாரிசாக யாரையும் யாரும் கைகாட்டிவிடாதபடி அனைவரையும், தன் மகன்கள் உள்பட, தன் கட்டுக்குள் வைத்திருந்தார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்)
--------------------------
மேற்சொன்ன நாடுகளில் கலகங்கள் வெடித்ததன் தொடர்ச்சியாக 15 மார்ச் 2011ல் சிரியாவிலும் கலம் வெடித்தது. இன்னும் நடந்துகிட்டேயிருக்கு.... அந்த படுபாவி பஷார் அல் ஆஸாத் பதவிய விட்டு இறங்கவும் மாட்டேங்கறார்.... தன்னோட அமைச்சரவையில இருந்தே எத்தனையோ பேர் தனக்கெதிரா திரும்பினதுக்கப்புறமும் அவரோட பதவி வெறி அடங்கவில்லை.... தன் மக்களைத் தானே கொன்று குவிக்கிற தவறும் புரியவில்லை... உலகம் பூரா இருந்தும் எதிர்ப்பு வந்தும் சிறிய சிரிய நாட்டோடு தோழமையா பழகிட்டிருந்த எத்தனையோ நாடுகள் அவரோட எதிராளிகளுக்கே ஆதரவு மட்டுமல்ல ஆயுதமும் வழங்குவோம்னு பகிரங்கமா தெரிவித்த பின்பும் மண்டையில உறைக்க மாட்டேங்குது.... நானும் இந்த பதிவு எழுத இவ்ளோ நாளாகுதே.... நாம எழுதறதுக்குள்ள கலகம் முடிந்த நல்ல செய்தியோடு பதிவு போடலாம்னு காத்திட்டிருந்தேன்.(அப்பாடா... பதிவு போட தாமதமானதை சமாளிச்சாச்சு ;)))...
 
இந்த ஒன்றரை வருடங்களில் சுமர் 40,000 பேர் உயிரிழந்துள்ளனர்.:(((((
 
என்ன இவ, அடுத்த பதிவில் இஸ்ராவைப் பற்றி சொல்றேன்னுட்டு இப்ப இவ இஷ்டத்துக்கு ஏதோ எழுதறாளேன்னு நினைக்கிறீங்களா.... இதோ மேட்டருக்கு வந்துட்டேன் (அப்பாடா)...'உன்னோட தாய் நாடு எது' என அவளிடம் நான் கேட்டதுக்கு அவளோட பதில் 'சிரியா'. (இத முதல்லயே சொல்ல வேண்டியது தானே...)... பின் ஒரு நாள் அவளது வீட்டிற்குச் சென்று அவளுக்குப் பிரியாவிடையளித்து வந்தேன். அப்பொழுது தன் மேற்படிப்பு பற்றி என்ன்னிடமும் ஆலோசனை கேட்டாள் (இதிலேயே தெரிஞ்சிருக்குமே...அவள் எவ்ளோ அப்பாஆஆஆவின்னு :))). நானும் எனக்குத் தெரிந்ததை(?) எடுத்துச் சொல்லிவிட்டு, நினைவுப் பரிசு ஒன்றையும் கொடுத்துவிட்டு வந்தேன்.
 
மற்ற நாடுகளில் போர் முடிந்து தேர்தலும் நடந்து ஏதோ ஒரு வழியா கலகமெல்லாம் ஓரளவிற்கு முடிந்து விட்டது. ஆனால் என் இனிய இஸ்ராவின் நாட்டில் மட்டும் இன்னும் போர் முடியல...:(((  மற்ற நாடுகளில் நடந்தப்போ இருந்தத விட இப்ப ரொம்ப கவலையாக இருக்கு..... இஸ்ரா எங்க இருக்கிறாளோ....அவள் குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்களோ...எங்கே இருக்கிறார்களோ....செய்திதாளைப் பார்க்கும் போதெல்லாம் அவள் நினைவு தான்.... சிரிய நாட்டுப் போர் விரைவில் முடிவு பெற நீங்கள் செய்யும் துஆவில் இஸ்ராவிற்காகவும் அவள் குடும்பத்தினருக்காகவும் ஒரு வரி சேர்த்துக் கொள்ளுங்கள்.

நானும் இன்று முடியும்...நாளை முடியும் என்று எதிர்பார்க்கிறேன்... ஆனால் ஹிட்லர் சாகவில்லை.... இதோ இருக்கிறேன் என்று சொல்வது போல் ஆஸாத் நடத்தும் ஈவிரக்கமில்லாத போரின் பாதிப்பால் தம் சொந்த நாட்டை,வீட்டை விட்டு அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள 1.5 மில்லியன் மக்களில் ஒருத்தியாக அவள் இருப்பாளா... அப்படியாவது அவள் உயிரோடு இருக்க வேண்டும்...

யா அல்லாஹ்.... நீ அதிகம் விரும்பும் தொழுகையாளிகளின், இமாமாக வாழ்க்கை நடத்தும் அம்மனிதரின் குடும்பத்தினரை எல்லா வளமும் பெற்று வாழ செய்வாயாக..... அவர்கள் நாட்டில் நடந்தேறும் குழப்பங்கள் அனைத்திற்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பாயாக! ஆமீன்.

ஆதாரங்களனைத்திற்கும் விக்கிக்கு நன்றி. பதிவில் தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்க சகோஸ்!!

Sunday, September 23, 2012

இஸ்ரா !!

தலைப்பைப் பார்த்ததும இது இஸ்ராவா இஸ்ரோவா .... இஸ்ரோ பற்றி இவுக  என்ன எழுதப் போறாக ன்னெல்லாம் யோசிக்காதீங்க ... அது பத்தி எழுத -ஹுசைனம்மா இருக்காங்க.... ஆக்கப்பூர்வமா என்ன எழுதன்னு தலைப்பு யோசிக்கிறாங்களே ... நம்ம சிராஜன்னே இருக்காக.. ஏன் நீங்களும் எழுதலாம்...ஆனா என் தோழி  இஸ்ராவைப் பற்றி நான் மட்டுமே எழுத முடியும்.... (ஹி ..ஹி ... இத மட்டும் தான் நான் எழுத முடியும் ;))


பெயரைச   சொல்லும்போதே மனதின் மகிழ்ச்சி  முகத்தில் புன்னகையாக வெளிப்படும்... அவளுடன் பேசிய தருணங்கள் ஒவ்வொன்றாக ஆழ்  மனதிலிருந்து நினைவில் எட்டிப்பார்க்கும்...  அந்த சிறிய பெண்ணின் கள்ளங்கபடமற்ற பேச்சுக்கள் என் கவலையைப் போக்கும்  ... அவளை நினைத்தாலே 'smiling beauty' என்று சொல்வார்களே அச்சொல்லாடல் தான் நினைவிற்கு வரும். அவளுடன் பேசுபவருக்குத் தவிர மற்றவருக்கு அவள் பேசுவது கேட்காது. அவ்வப்போது நாளை பரீட்சை இருக்கிறது என்று  சொன்னாலும் அவளது படிப்பு சம்பந்தமான எந்த வித அழுத்தத்தையும் முகத்தில் காட்டிவிட மாட்டாள். தன சந்தோஷத்தை மட்டுமே மற்றவருடன்  பகிர்ந்து தன கவலைகளை மறைக்கும் ம்ன்முதிர்ச்சியை இந்த வயதிலேயே பெற்றவள். அவள் தான் எனதருமைத் தோழி இஸ்ரா...





முதன் முதலில் அவளை சந்தித்த தருணம் இப்பொழுதும் என் நினைவில் இருக்கிறது.... வெள்ளிகிழமை தொழுகை முடிந்ததும் பள்ளியில் ஒரு அறிவிப்பு வர அதகுண்டான விளக்கத்தை என் அருகில் இருந்த பெண்ணிடம் கேட்டேன். பொறுமையாக தாழ்ந்த குரலில் விளக்கியவளின் முகத்தை அதுவரை பார்த்திராததால் ' புதிதாக அருகில் குடி வந்திருக்கிறிர்களா இதுவரை உங்களை இங்கு நான் பார்த்ததில்லையே' என்ற என் கேள்விக்கு 'நான் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதால் அடிக்கடி வர முடியவில்லை' எனத தெரிவித்தாள். அதன் பிறகு தான் அப்பள்ளி வாசலின் இமாமின் (தொழுகை நடத்துபவரின்) மகள் எனவும் தெரிவித்தாள் .  



அவ்வறிமுகத்திற்குப் பிறகு அடிக்கடி சந்திப்பு தொடர்ந்தது. அங்கு நடத்தப்படும் வெள்ளிக்கிழமை குத்பா (உரை) பற்றிய விளக்கங்கள் பலவற்றை என்னிடம் விவரித்தாள். இதற்காக தொழுகை முடிந்த பின்பும் எனக்காக நேரம் ஒதுக்கி எனக்கு உதவினாள். இஸ்லாத்தைப் பற்றி அவளிடமிருந்து நானும் என்னிடமிருந்து அவளும் பகிர்ந்து கொண்டோம்.


இச்சந்திப்பிற்காகவே மதிய உணவு தயாரிப்பை  பள்ளிக்கு வரும் முன்பே ஓரளவு முடித்துவிட்டு கிளம்புவதற்காக காலையில் கொஞ்சம் சீக்கிரம் :(( எழும்ப வேண்டியிருந்தது .. பின்பு அதுவே நல்ல பழக்கமாக மாறிவிட்டிருந்தது (அதாவது இப்ப இல்லை....ஹி ஹி )...ஆனா ..... நல்ல வேளை ..சாப்பாடு....சாப்பாடுன்னு கிச்சனிலேயே  கிடக்காமல் இஸ்லாத்திற்காக நேரம் ஒதுக்க இறைவன் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தியதை நினைத்து இப்ப மனதிற்கு திருப்தியாக இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ் !


நான் பள்ளிக்கு செல்ல முடியாத போதும் அவள் எனக்காக வந்து காத்திருந்ததை என்னிடம் தெரிவித்தபோது மனம் வருந்தினேன். அவள் சொல்லும்போது சிறிதேனும் கோபப்பட்டிருந்தால் வருத்தப்பட்டிருக்கமாட்டேன். ஆனா வருத்தத்துடன்  சொன்னபோது என் தலையில் 'நங் நங்' நு கொட்டனும்போல இருந்துச்சு... ( உங்களுக்கு சந்தோஷமா இருக்குமே?!) ஆனா செய்யலை.... (எப்பூடி ?)அதன் பிறகு நான் செல்லாத நாட்களில் அவளுக்கு sms அனுப்பிவிடுவேன்.


கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆன பின் அவள் அந்த தகவலை  சொன்னாள் . அவளது தந்தைக்கு பணி ஒப்பந்தம் முடிந்துவிட்டதாகவும் அதனால் அவள் குடும்பத்தினர் அனைவரும் அவளது தாய் நாட்டிற்குத திரும்பி செல்லவிருப்பதாகவும் தெரிவித்தாள். அதைக் கேட்டதும் மனதிற்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. நெடுநாள் தொடர்ந்த நட்பில் பிரிவேற்படப்போவதை எண்ணி இருவருக்கும் மனம் கனத்து விட்டது. 


இந்த பிரிவு அவள் ஏற்கனவே எதிர்பார்த்து இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு உடனே நம்பமுடிவதாக இல்லை. சொல்லப்போனால் இந்நாட்பில் பிரிவு ஒன்று இருக்குமானால் அது நாங்கள் இந்தியா திரும்பும்போதுதான் அமையும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் என்றேனும் ஒருநாள் நான் சொல்லவிருந்த  அவ்வார்த்தைகள் அவளிடமிருந்து வந்தது எனக்கு ஏற்றுக்கொள்ள சிரமமாக இருந்தது ஏனெனில் அவள் வேற்று நாட்டை சேர்ந்தவள் என்பதே எனக்கு அப்போதுதான் தெரியவந்தது.   சிறிது நேரம் என்ன பேசுவது என்றே எனக்குத் தோன்றவில்லை. பிறகு சுதாரித்து உனது தாய் நாடு எது எனக் கேட்டேன்.. அது....


இன்ஷாஅல்லாஹ், அடுத்த பதிவில்....

படங்கள்  கஊகிளில் கிடைத்தவை