Sunday, January 4, 2015

அழகிப்போட்டியும் அழகிப்போட்டியும்

1951வது வருடத்திலிருந்து நடைபெற்று வரும், பெண்மைக்கு இழுக்கை அழைக்கும், உலக அழகிப் போட்டிக்கு எதிராக உருவாக்கப்பட்ட போட்டியே உலக முஸ்லிமாஹ் அழகிப்போட்டி.


உலக அழகிப்போட்டியை எதிர்த்து பெண்கள் முன்னேற்றக்க்குழுக்கள் நடத்திய போராட்டத்தினால் 1970ல்  இப்போட்டியில் சில தடங்கல்கள் ஏற்பட்டன. பின்பு எவ்வித தடைகளுமின்றி நிகழ்த்தப்பட்டு வருகிறது. துவக்கப்பட்டு கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகே இப்போட்டியில் புத்திக்கூர்மைக்கென தனி சங்கேத முழக்கம் ஒன்று " Beauty With a Purpose" சேர்க்கப்பட்டது. அதுவரை, பெண்களுக்கு அறிவு என்ற ஒன்று இருப்பது புலப்படவில்லை போலும்.  2002ல் நைஜீரியாவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு நிகழ்ந்த போராட்ட்ங்களினாலும் அதன் விளைவாய் பல உயிரிழப்புகளாலும் லண்டனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு நடத்தப்பட்டது. 


ஆக, உலக அழகிப்போட்டியினால் உலகில் எந்த அளவு எதிர்ப்புகளும் இழப்புகளும் போராட்டங்களும் நிகழ்ந்தாலும் அவை கண்டுகொள்ளப்படாமல் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் இன்னும் உறுதி கொண்டு அதிக உத்வேதகத்துடனேயே நடத்தப்பட்டு வருகிறது இவ்வுலக அழகிப்போட்டி.  இந்த விவேகத்தையும் உற்சாகத்தையும் பெண்கள் அறிவுசார்ந்த போட்டிகளில் உட்படுத்தியிருந்தால் எண்ணற்ற நல்விளைவுகள் ஏற்பட்டிருக்கும். அவர்களைச் சிந்திப்பதிலிருந்தும் கட்டுப்படுத்தி அடக்கி ஒடுக்க விரிக்கப்பட்டது தானே இந்த போட்டி வலை. அதில் பெண்கள், பணத்திற்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு தாமாகப் போய் சிக்கிக் கொள்வது வேதனையிலும் வேதனை.


அழகுப்போட்டியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு துவங்கப்பட்டு பின்பு குழந்தைகளின் மேம்பாட்டினையும் போகிற போக்கில் தமது இலக்காகச் சேர்த்துக்கொண்டது. உண்மையிலேயே குழந்தைகளின் மேம்பாடு எனும் அதன் இலக்கில் உறுதியாக இருந்திருந்தால் இந்த அளவிற்கு ஆடம்பரம்.. அதுவும் இறுதிச்சுற்றிற்கு மட்டும் கோடிக் கோடியாகச் செலவழிக்க எந்த காரணமும் நிர்வாகத்தினருக்குக் கிடைத்திருக்காது.


உலக அழகிப்போட்டியில் உடல் அழகுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது நாம் அனைவரும் அறிவோம். இல்லை.. இல்லை... இறுதிச்சுற்றில் மிகவும் சிரமமான மூளைக்கு வேலை கொடுக்கும் கேள்வி கேட்கப்படுகிறது. அதில் கூறப்படும் பதிலை வைத்துத்தான் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்றெல்லாம் கூறினால் அதை விட பெரிய முட்டாள்தனமான கூற்று இருக்கமுடியாது. போட்டி துவங்கும் முன்பே எந்த நாட்டின் போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற முன் முடிவு கூட இல்லாமலா இவ்வளவு பிரம்மாண்டமான போட்டியை ஏற்பாடு செய்வார்கள்? இவர்கள் எடுத்த முடிவை யாரும் எதிர்த்து கேட்கவா போகிறார்கள்?

அவர்களால் முன்முடிவு செய்யப்பட்ட போட்டியாளர் இறுதிச்சுற்றில் எவ்வளவு மட்டமான பதிலைக்கூறினாலும் அவரே வெற்றியாளர். இடையிடையே அவர் தன் பதிலில் அன்னை தெரசா, இளவரசி டயானா, போன்றோரின் பெயர்களைச் சேர்த்துக் கொண்டால் போதுமானது. அவர் தான் உலக அழகி.. அவர்தான் உலகின் மிகச்சிறந்த அறிவாளி. 


வெறுமனே எதிர்ப்பு தெரிவிப்பதாலும் போராட்டங்கள் நடத்துவதாலும் இப்போட்டிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மக்களின் கவனத்தை இப்போட்டியை விட்டும் திருப்புவதற்கு ஒரே மாற்று வழி..... முள்ளை முள்ளால் அகற்றுவது. உலக அழகிப்போட்டிக்கு அந்த வகையில் உருவானது தான் உலக முஸ்லிமாஹ் போட்டி. பெண்கள் தம் அறிவீனத்தால் இழந்த கண்ணியத்தைப் பெண்களாலேயே மீட்டெடுக்கும் வழிகளுள் ஒன்றே உலக முஸ்லிமாஹ் போட்டி.  2011ல் இந்தோனேஷியாவில் துவங்கப்பட்டது. உலக அழகிப்போட்டியின் விதிமுறைகளுக்கு மாற்றாகவும் உலகிலுள்ள முஸ்லிம் பெண்களுக்கான மேம்பாட்டினை நோக்கமாகக் கொண்டும் உலக முஸ்லிமாஹ் அமைப்பு (World Muslimah Foundation) அமைக்கப்பட்டது. அழகிப்போட்டிகள் மூலமாக உலகம் முழுவதும் அறிவும் திறமையுமிருந்தும் வாய்ப்பின்றி தவிக்கும் பெண்களுக்கும், அவர்களது கல்விக்காகவும், திக்குத் தெரியாமல் அனாதரவாக நிற்கும் பெண்களுக்கும் வழிகாட்டியாகத் துவங்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

பாலஸ்தீனுக்காகவும் சிரியாவிற்காகவும் கண்ணீருடன் குரல் கொடுக்கும் 
2014 உலக முஸ்லிமாஹ்

முஸ்லிமாஹ் போட்டிகளில் உடல் அழகுக்கு வேலையில்லை. அவர்கள் நன்னடத்தையும் இஸ்லாத்தைப் பற்றி அவர்களுக்கு இருக்கும் அறிவும் உலகில் முஸ்லிம்களின் நிலை குறித்த அவர்களது அக்கறையும் இஸ்லாமிய சமூகத்தின் மீதான கரிசனமும் மட்டுமே முழுக்க முழுக்க கவனத்தில் கொள்ளப்படும். பரிசாகக் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து அவர்களைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்று வழிகெடுக்கும் எண்ணங்களின்றி அளவான பரிசுத்தொகையாக ஒரு தங்கக் கைக்கடிகாரமும் தங்க தினாரும் மக்காவிற்குப் புனிதப்பயணத்திற்கான வாய்ப்பு ஆகியவை மட்டுமே வழங்கப்படுகின்றன. 

2013 உலக முஸ்லிமாஹ்

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில், உலக அழகிப்போட்டியினை வெறுமனே வாய்வார்த்தையில் எதிர்த்துப் போராட்டம் நடத்துபவர்கள் தமது கொள்கையில் நிலையாக இருந்தால், தத்தமது மதக்கோட்பாடுகளைக் கொண்டவாறு அறிவுக்கும் ஒழுக்கத்திற்கும் திறமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அழகிப்போட்டிகள் நடத்தலாம். அத்தகைய போட்டிகளின் வெற்றிக்கு உலக முஸ்லிமாஹ் போட்டி ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் முன்னுதாரணமாகவும் நம்முன் வீர நடை போடுகிறது.

Source:

Wikipedia.org
http://www.france24.com

No comments: